முதல் கட்டளை: வாசிப்பீராக!
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை
படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (திருக்குர்ஆன் 96:1&5)
இறுதித் தூதர் முஹம்மத் நபிக்கு முதன்முதலில் அருளப்பட்ட வேத வசனங்கள் இவைதான். “வாசிப்பீராக” என்ற கட்டளையுடன் வந்த வாழ்க்கை வசந்தமே இஸ்லாமாகும். முஹம்மத் நபி வாழ்ந்த காலம் ‘அய்யாமுல் ஜாஹிலிய்யா’அறியாமைக் காலம், இருண்ட யுகம் என்றெல்லாம் வரலாற்றில் வர்ணிக்கப்படுகின்றது. அறியாமை இருள் அகற்றி அறிவு தீபமாய் ஆன்மீக ஒளியும் பாய்ச்ச வந்தது இஸ்லாம்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எல்லாவகையான பாவங்களும் மலிந்து நிறைந்து காணப்பட்டன. இந்த சூழலில் அருளப்பட்ட வசனங்களில் அந்தப்
பாவங்கள் பற்றி பேசப்படவில்லை. வாசிப்பு, கற்றல், கற்பித்தல், பேனா என கல்வியுடன் சம்பந்தப்பட்ட விசயங்களே பேசப்பட்டன.
வாசிப்பு நம் வாசிப்பாகட்டும்:
முதல் ஐந்து வசனங்களிலும் ‘இக்ரஃ’ ஓதுவீராக & வாசிப்பீராக என்ற கட்டளை இருமுறை இடம் பெற்றுள்ளது! இது வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று இன்று சொல்வார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன் அன்றே சொன்னது இஸ்லாம்.
இன்று வளரும் சந்ததிகளிடம் வாசிப்புப் பழக்கம் குன்றிக் குறைந்து விட்டது. முன்பெல்லாம் வாசிக்க நல்ல நூற்கள் இருக்கவில்லை. இன்று ஏராளமான தமிழ் தர்ஜமாக்கள், நபிமொழி பேழைகள், அறிவும் செறிவும் மிக்க நூற்கள் நிறைந்துள்ளன. ஆனால் வாசிக்க ஆள் இல்லாமல் அவை வாடி வதங்கிப் போயுள்ளன.
பேஸ்புக் வாசிப்பு:
வாசிப்புப் பழக்கம் உள்ள சிலரும் முகநூலில் மூழ்கியுள்ளனர். முகநூலில் வாசிப்புக்கும் -அச்சக நூல் வாசிப்புக்குமிடையில் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. வாசிக்க நாம் நூலைத் தெரிவு செய்யும் போது நமக்குத் தேவையான தலைப்பைப் தேர்ந்தெடுப்போம். முகநூலில் கிடைக்கும் தகவலை வாசித்துக் காலத்தைக்
கடத்துவோம்.
நூல்களைத் தெரிவு செய்யும் போது நல்ல எழுத்தாளர்களின் ஆக்கத்தைத் தெரிவு செய்வோம். முகநூலில் யார், எவர், அவரின் தகுதி, தராதரம் அறியாமல் வாசித்துத் தொலைக்க வேண்டிய நிர்பந்த நிலை. எனவே முகநூலில் வாசிப்பில் மூழ்கியுள்ள நாம் அதில் இருந்து மீண்டு வந்து நல்ல வாசிப்புப் பழக்கத்தை
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அறிவும் ஆன்மீகமும்:
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. (திருக்குர்ஆன் 96:1) முதல் வசனம், “படைத்த உமது இறைவன் பெயரால் ஓதுவீராக” என்கிறது. எம்மைப் படைத்தவன் தான் எம் இறைவன். அவன் பெயர் கூறி வாசிக்க வேண்டும். இந்தவகையில் அறிவும் ஆன்மீகமும் இணைந்தே இருக்க வேண்டும். அறிவு இல்லாத ஆன்மீகத்திலும் ஆன்மீகம் இல்லாத அறிவிலும் ஆபத்துக்களே அதிகமாகும். ஓதுவீராக: உம் இறைவன் கண்ணியமானவன். (திருக்குர்ஆன் 96:3)
மீண்டும் அல்லாஹ் வாசிக்கும்படி ஏவும் போது, உனது இறைவன் மிக சங்கையானவன், கண்ணியமானவன் என்று கூறுகின்றான். உலகில் சிலர் சிலரை மரியாதைக்குரியவராகக் கருதி இறுதியில் அவரையே கடவுளாக்கிட முயற்சிக்கின்றனர். லெனினை வாசித்த சிலர் லெனினைக் கடவுளாக்குகின்றனர். பெரியாரை வாசித்த சிலர் பெரியாரைக் கடவுளாக்குகின்றனர். அவரவர் மீது கொண்ட மரியாதை தான் இந்த நிலைக்கு சராசரி மனிதனைத் தள்ளுகின்றது. இறைவன் என்பவன் மிகமிகச் சங்கையானவன் என்ற ஏகத்துவ சிந்தனையுடன் வாசிக்கும்படி குர்ஆன் கட்டளை இடுகின்றது.
பயனுள்ள கல்வி:
இறைவன் பெயர் கூறி வாசிக்கும் போது அசிங்கங்களையும் ஆபாசத்தையும் வாசிக்க முடியாதல்லவா? இறுதித் தூததர் முஹம்மத் நபி அவர்கள் அல்லாஹ்விடம் “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக இல்மன் நாபிஆ” யாஅல்லாஹ் உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கின்றேன் என்று பிரார்த்தித்தார்கள்.
அதேவேளை “அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக மின் இல்மின் லாயன்பஃ” யாஅல்லாஹ், பயனளிக்காத கல்வியை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்றும் பிரார்த்தனை செய்துள்ளார்கள். இந்த வகையில் மனித இனத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் எந்தக் கல்வியாக இருந்தாலும்
அதையும் கற்கலாம், உலகிற்கோ மறுமைக்கோ பயனளிக்காத கல்வியைக் கற்கக்கூடாது!
இன்றைய தமிழக இளைஞர்கள் சினிமாத் துறையை அறிந்து வைத்திருப்பது போல் வேறு எந்தத் துறையையும் அறியாதுள்ளனர். நட்சத்திங்களின் பிறந்த நாளை அறிந்து வைத்துக் கொண்டாடும் பலருக்கு தமது தாய் தந்தையின் பிறந்த தினம்கூடத் தெரியாது! தமது சுய இருப்பை இழந்துவிட்டு இவற்றுக்குப் பின்னால் எமது
இளைய தலைமுறை இழுபட்டுச் செல்கின்றது.
கல்வியும் எழுத்தும்:
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். (திருக்குர்ஆன் 96:4) எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பர்.
கல்விக்கு எழுத்து முக்கியம். எழுத்துக்கு பேனா முக்கியம். பேனா மூலம் கற்பித்தான் என்று கூறப்படுகின்றது. அல்கலம் என்றால் எழுதும் கருவி என்பதே அர்த்தமாகும். இன்று போன், கம்ப்யூட்டர் மூலமாகவும் மனிதன் எழுதுகின்றான். அன்று எழுத பேனா மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இன்று உலகம் பேனாவின்
வலிமையை நன்கு உணர்ந்து விட்டது. துப்பாக்கி முனையை விட பேனாமுனை பலம் வாய்ந்தது என்பதை உலகம் அறிந்துகொண்டது.
1400 ஆண்டுகளுக்கு முன்னர் பேனா பற்றி அல்குர்ஆன் கூறும்போது இந்த வசதியான பேனாக்கள் இருக்கவில்லை. பறவைகளின் இறகுகளையும் கரிக்கட்டைகளையுமே எழுதும் கருவியாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த சூழலில் தான் பேனா பற்றி இஸ்லாம் பேசியது.
கற்பித்தல்:
கல்வியை முழுமையாக ஒரு மனிதன் சுயமாகப் பெறமுடியாது. கல்வி வளர கற்பித்தல் அவசியமாகும். இந்த ஐந்து வசனங்களில் “அல்லம” கற்பித்தான் என்ற வினைச் சொல் இரண்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. கற்றலும் கற்பித்தலும் கல்வி வ- ளர அடிப்படையான விடயங்களாகும். எனவே கல்வி மூலம் நாட்டை
முன்னேற்றப் பாதையிலும் செலுத்த முனையும் அரசுகள் கற்றல் கற்பித்தல் விடயத்தில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.
முதல் பணி:
அல்லாஹ் மனிதனைப் படைத்தபின் செய்த முதல் பணியாக மனிதனுக்கு கற்பித்தது தான் இருந்தது என அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. (இறைவன்)
எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான். (திருக்குர்ஆன் 2:31) ஆதம் நபிக்கு பொருட்களின் பெயர்களை அல்லாஹ்வே கற்பித்தான். பின்னர் ஆதம் நபிக்கும் மலக்குகளுக்குமிடையில் ஒரு போட்டி வைக்கப்பட்டது.சில பொருட்களைக் காட்டி அவற்றின் பெயர்களைக் கூறுமாறு அல்லாஹ் மலக்குகளிடம் கூறினான். மலக்குகள் நீ கற்றுத்தந்ததைத் தவிர வேறு எதுவும் எமக்குத் தெரியாது எனக்கூறி தமது இயலாமையை ஒத்துக் கொண்டனர். அதன்பின் ஆதம்(அலை) அவர்களிடம் அவற்றின் பெயர்களைக் கூறுமாறு அல்லாஹ் கூறியபோது அவர் அவற்றின் பெயர்களைக் கூறினார். இதன்பின்னர் தான், ஆதம் நபிக்கு சுஜுது செய்யுமாறு மலக்குகள் பணிக்கப்பட்டனர். மனித இனத்தின் உயர்வுக்கு அடிப்படையாக கல்வி அவசியம் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. கல்விகளில் சிறந்த கல்வி அல்லாஹ் கற்றுத்தந்த கல்வியாகும்.
அல்லாஹ்வின் கல்வி இறைத்தூதர்கள் மூலம் மனித குலத்துக்குக் கற்பிக்கப்பட்டது. அவற்றில் இறுதியாக அமைந்ததே இறுதித்தூதருக்கு வழங்கப்பட்ட அல்குர்ஆன் எனும் வேதமும் அதற்கு விளக்கமாக வந்த அஸ்ஸுன்னா எனும் நபி வழியுமாகும்.
இந்த இரண்டுமே கல்வியில் சிறந்த கல்வியும் எல்லாவற்றுக்கும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது. குர்ஆன் சுன்னாவிற்கு முரணான கல்வி பயனற்ற கல்வியாகும். குர்ஆன் சுன்னாவுக்கு முரண்படாத அனைத்துக் கல்வியும் பயனுள்ள கல்வியாகும். சமூகம் வாசிப்பு = பேனா, எழுத்து, கற்பித்தல் போன்றவற்றின்
மூலமாக ஆன்மீகத்தின் துணையுடன் கல்வித் துறையில் முன்னேறினால் அது நாட்டுக்கும் வீட்டிற்கும் மறுமை வாழ்வுக்கும் நலனாக அமையும்.ஆன்மீகம் அற்ற முறையில் அல்லது தவறான ஆன்மீகத்துடன் கூடிய கல்வி மனித இனத்தை அழிவுக்கு இட்டுச் செல்லலாம்.
எனவே இஸ்லாம் கூறும் அடிப்படையில் பயனுள்ள கல்வியை ஆன்மீக உணர்வுடன் கற்று முன்னேற முயல்வோமாக!
(நன்றி மக்கள் உரிமை)