நான்கு மத்ஹபுடைய இமாம்கள் என்று சொல்லப்படக்கூடிய அந்த நான்கு இமாம்களும் மார்க்க நிலைப்பாட்டில் சரியானவர்களாக இருந்தார்களா?
நான்கு மத்ஹபுகள் என்பதன் மூலம் நாடப்படுவது:-
▪ஹனபிய்யா:-
- இவர்கள் இமாம் அபூ ஹனிபா நுஃமான் இப்னு தாபித் றஹிமஹுல்லாஹு அவர்களைப் பின்பற்றக்கூடியவர்கள்.
- இந்த மத்ஹப் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டு காலப் பகுதியில் மக்களிடத்தில் அறியப்பட்டதாகவும் பிரபலமானதாகவும் மாறியது.
▪மாலிகிய்யா:-
- இவர்கள் இமாம் மாலிக் இப்னு அனஸ் றஹிமஹுல்லாஹு அவர்களைப் பின்பற்றுபவர்களாகும்.
- இந்த மத்ஹபும் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் பிரபலமானது.
▪ஷாபிஇய்யா:-
- இவர்கள் முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ் ஷாபிஈ ரஹிமகுல்லாஹ் அவர்களைப் பின்பற்றுபவர்களாகும்.
- இது ஹிஜ்ரி மூன்றாம் அதற்கு பிற்பட்ட நூற்றாண்டுகளில் தோற்றம் பெற்றது.
▪ஹன்பலிய்யா:
- இவர்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹிமகுல்லாஹ் அவர்களைப் பின்பற்றுபவர்களாவர்.
- இந்த மத்ஹபும் ஹிஜ்ரி மூன்றாம் அதற்கு பிற்பட்ட காலங்களில் பிரபலமானது.
இந்த இமாம்களது மார்க்க நிலைப்பாடுகள்:-
இந்த இமாம்கள் ஒவ்வொருவரும் சிறந்தவர்களாகவும் நேர்வழி பெற்றவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் சத்தியத்தில் இருந்தவர்களாகும். அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொண்டு இவர்கள் மீது அருள் புரிவானாக.
இவர்கள் தலை சிறந்த உலமாக்களாகும். என்றாலும் இவர்கள் பாவங்கள் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் கிடையாது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஸுன்னாவை பெற்றுக் கொள்கின்ற விடயத்தில் சிறு தவறுகள் ஏற்பட்டிருக்கக்கூடும். சில சந்தர்ப்பங்களில் இவர்கள் ஸுன்னாக்களைத் தேடுகின்ற போது அதிகமான உலமாக்களுக்கு தவற விடப்படுவது போல் இவர்களுக்கும் தவற விடப்பட்டிருக்கும். ஏனெனில் எல்லா விடயங்களையும் அறிந்து கொள்வதென்பது (ஊடகங்கள் இல்லாத அன்றைய காலத்தில்) கடினமான காரியமாகும்.
என்றாலும் இந்த இமாம்கள் அனைவரும் நேர்வழியில் வாழ்ந்தவர்களாகும். இவர்கள் மார்க்கத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களை எல்லாம் மத்ஹபுகளாக பரப்படுகின்ற அளவுக்கு அதிகமான பத்வாக்களாக தொகுத்தார்கள்.
மேலும் இந்த இமாம்கள் கருத்து வேறுபாடுகளுடன் சம்பந்தப்பட்ட சில மஸாஇல்களை ஒன்று சேர்த்து அவைகளுக்கும் பத்வாக்கள் வழங்கினார்கள். அவ்வாறு பத்வாக்கள் வழங்குகின்ற போது அவர்களிடம் சில தவறுகள் இடம் பெற்றும் இருக்கின்றன.
அந்த தவறுகள் இடம்பெற்றதற்கான காரணம் (அவர்களிடத்தில் இன்றைய காலத்தில் எம்மிடத்தில் இருப்பது போன்று ஊடகங்கள் எல்லாம் கிடையாது இதனால்) அவர்களிடத்தில் சில மஸாஇல்களுக்கான ஆதாரம் கிடைத்திருக்கமாட்டாது. எனவே இஜ்திஹாத் என்ற அடிப்படையில் சில விடயங்களுக்கு பத்வாக்கள் வழங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் சில நேரங்களில் அவர்களிடம் தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன.
எனவே பின்வந்த மற்றைய சாராருக்கு சில ஆதாரங்கள் கிடைக்கப்பெற்று அதன் மூலம் (அந்த தவறுகளைத் திருத்தி) சரியான பத்வாக்களை வழங்கினார்கள்.
அல்லாஹ் இந்த இமாம்கள் ஒவ்வொருவர் மீதும் அருள்புரிவானாக.
நன்றி:-
binbaz.org.sa எனும் இணையத்தில் இருந்து..
தமிழில்
பர்ஹான் அஹமட் ஸலபி (காத்தங்குடி – இலங்கை)