இறைமொழியும் தூதர் வழியும் – 2 | கற்றவரும் கல்லாதவரும் சமமாக மாட்டார்கள்
“(நிராகரிப்பவன் சிறந்தவனா?) அல்லது மறுமையைப்பயந்து, தனது இரட்சகனின் அருளை ஆதரவு வைத்து, சுஜூது செய்தவராகவும், நின்றவராகவும் இரவு நேரங்களில் அடிபணிந்து வழிபடுவரா? அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என(நபியே!) நீர் கேட்பீராக சிந்தனையுடையோர் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.” (39:9)
இந்தக்கேள்வி மூலம் கற்றவர்களும் கல்லாதவர்களும் சமமாக மாட்டார்கள் என்பதை அல்லாஹ் உணர்த்துகின்றான். “நரகவாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள். சுவர்க்கவாசிகளே வெற்றியாளர்களாவர்.” (59:20)
கற்றவர்களும் கல்லாதவர்களும் சமமாக மாட்டார்கள். அவ்வாறே சுவனவாதிகளும் நரகவாதிகளும் சமமாக மாட்டார்கள்.இந்த குர்ஆனின் அடிப்படை நமக்கு கற்றவர்களின் சிறப்பை தெளிவாக உணர்த்துகின்றது.
கற்றவர்களும் கல்லாதவர்களும் சமமாக மாட்டார்கள் என்று கூறும் அல்லாஹ், பார்வையுடையவனும் பார்வை அற்றவனும் சமமாக மாட்டார்கள் என்று பின்வரும் வசனங்களில் கூறுகின்றான். “என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன” என்று நான் உங்களுக்குக் கூற மாட்டேன்.
மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் உங்களுக்குக் கூற மாட்டேன். எனக்கு வஹியாக அறிவிக்கப் படுவதைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை என்று (நபியே!) நீர் கூறுவீராக! “பார்வையற்றனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக! ” (6:50)
“வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகன் யார்?” என்று நீர் கேட்டு, அல்லாஹ் என்று நீரே கூறுவீராக.அவனை அன்றி தமக்குத் தாமே எந்தவொரு நன்மையையோ, தீமையையோ செய்ய ஆற்றல் பெறாதவர்களைப் பாதுகாவலர்களாக நீங்கள் எடுத்துக் கொண்டீர்களா? என்றும் கேட்பீராக! பார்வையற்றவனும் பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும் ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திய இணை தெய்வங்கள், அவன் படைப்பது போன்று படைத்து, அப்படைப்புக்கள் இவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதா? என்று கேட்டு, அல்லாஹ்வே யாவற்றையும் படைத்தவன், அவனே தனித்தவனும் அடக்கி ஆளுபவனுமாவான் என்று கூறுவீராக!” (13:16)
இங்கே ஒளியும், இருளும் சமமாக மாட்டாது; பார்வை உடையவனும், பார்வை அற்றவனும் சமமாக மாட்டார்கள் என்பது போல், கற்றவனும் கல்லாதவனும் சமமாக மாட்டார்கள் என்பது உணர்த்தப் படுகின்றது. “உமது இரட்சகனிட மிருந்து உமக்கு இறக்கி வைக்கப் பட்டது உண்மையானது என அறிந்தவன். (எதுவும் அறியாத) குருடன் போன்றவனா? சிந்தனையுடையோரே நல்லுபதேசம் பெறுவர்.” (13:19)
இந்த வசனத்தில் சத்தியத்தை அறியாதவன் பார்வையற்றவனுக்கு ஒப்பிடப்படுவதைக் காணலாம். இந்த ஒப்பீடுகள் கற்றவர்களின் உயர்வைத் தெளிவாக உணர்த்துகின்றன.
உயரும் அந்தஸ்த்து:
“நம்பிக்கைக் கொண்டோரே! ‘சபைகளில் இடமளியுங்கள்’ என உங்களுக்குக் கூறப்பட்டால் நீங்கள் இடமளியுங்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு இடமளிப்பான். ‘நீங்கள் எழுந்து விடுங்கள்’ என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள்.
உங்களில் எவர்கள் நம்பிக்கைக் கொண்டு, அறிவும் வழங்கப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அந்தஸ்த்துக்களை உயர்த்துவான். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.” (58:11)
கற்றவர்களினதும் ஈமானுடையவர்களினதும் அந்தஸ்த்தை அல்லாஹ் உயர்த்துவதாக இந்த வசனம் கூறுகின்றது. கற்றவர்களுக்கு அல்லாஹ் அளித்த அந்த உயர்ந்த அந்தஸ்தை அளிக்க மறுப்பது உகந்த வழிமுறையாக இருக்காது.
அல்லாஹ்வை அஞ்சுவோர்:
கற்றறிந்தவர்கள் பற்றி அல்லாஹ் கூறும் போது இப்படிப் புகழ்ந்து கூறுகின்றான். “இன்னும் இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும் மாறுபட்ட பல நிறங்கள் உள்ளன.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்களே. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; மிக்க மன்னிப்பவன்.” (35:28)
இது கற்றவர்களுக்கு அல்லாஹ் அளித்திருக்கும் நற்சான்றாகும். இதேவேளை கல்வியைச் சுமந்து கொண்டு அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்றவர்கள் உலமா என்ற உயர்ந்த அந்தஸ்த்தை அடையவே தகுதியற்றவர்கள் என்பதையும் இந்த வசனத்தின் மூலம் உணரலாம்.
சாட்சியத்தில்…
“நிச்சயமாக (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் தன்னைத்தவிர வேறுயாருமில்லை என்று நீதியை நிலைநாட்டியவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான். மேலும், வானவர்களும் அறிவுடையோரும் (சாட்சி கூறுகின்றனர். உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவனும் ஞானமிக்கவனுமாவான்.” (3:18)
அல்லாஹ்வைத் தவிர வேறு இரட்சகன் இல்லையென்று அல்லாஹ்வும் சாட்சி சொல்கின்றான். மலக்குகளும் நீதமான கல்விமான்களும் சாட்சி கூறுகின்றனர் என அல்லாஹ் கூறுவதன் மூலம் நீதமான கல்விமான்களுக்கு அல்லாஹ் மகத்தான அந்தஸ்த்து அளித்திருப்பதை அறியலாம்.
இதுபற்றி இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறும்போது, இது கல்வியினதும் கற்றவர்களினதும் சிறப்பைப் பல வழிகளில் உணர்த்துகின்றது.
1. கற்றவர்களின் சாட்சியத்தை அல்லாஹ் இங்கு சிறப்பித்துக் குறிப்பிடவில்லை.
2. தனது சாட்சியத்துடன் கற்றவர்களின் சாட்சியத்தைச் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளான்.
3. மலக்குகளின் சாட்சியத்துடன் அவர்களது சாட்சியத்தை சேர்த்துக் கூறியுள்ளான்.
4. இதில் கற்றவர்கள் பரிசுத்தப் படுத்தப்படுகின்றனர்.
அவர்களது நீதமானவர்கள் என உறுதிப் படுத்தப்படுகின்றது. சாட்சி சொல்பவர் நீதமானவராக இருக்க வேண்டும். கற்றவர்களின் சாட்சியத்தை அல்லாஹ் எடுத்துக் காட்டுகின்றான். என்றால் அது அவர்கள் நீதமானவர்கள் என்பதற்கான சான்றாக அமைகின்றது” என்று குறிப்பிட்டார்கள். (மிப்தாஹு தாரிஸ் ஸஆதா: 1/48)
கற்றவர்களிடம் கேளுங்கள்:
“உமக்கு முன்னர் நாம் ஆண்களையே தூதர்களாக அனுப்பி, அவர்களுக்கு நாம் வஹி அறிவித்தோம். நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேத) அறிவுள்ளோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.” (16:43) தெரியாதவற்றைத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் எனக் கூறுவதன் மூலம் கற்றவர்களின் அந்தஸ்த்தை அல்லாஹ் உறுதிப்படுத்தும் அதேவேளை, பிரச்சினைகளின் போதும் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கும் போதும் உலமா பெருமக்களை அணுகி அவர்களினூடாக குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் விளக்கம் பெறப்பட வேண்டும் என்பதையும் அல்லாஹ் உணர்த்துகின்றான்.
அதிகம் பெற்றவர்கள்:
கற்றவர்கள்தான் அதிகம் அருள் பெற்றவர்கள் என அல்லாஹ் கூறுகின்றான். அந்த அருளை அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டுமே வழங்குவதாகவும் கூறுகின்றான்.”அவன் தான் நாடுவோருக்கு ஞானத்தை வழங்குகின்றான்.எவர் ஞானம் கொடுக்கப்படுகின்றாரோ அவர் நிச்சயமாக அதிக நன்மைகள் வழங்கப் பட்டவராவார். சிந்தயுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.” (2:269) கற்றவர்களுக்கு அல்லாஹ் அளித்த அந்த உயர்ந்த தர்ஜாவை அளிக்க மறுப்பது உகந்த வழிமுறையாக இருக்காது.
கல்வி கண் போன்றது:
கல்வி கண் போன்றது, கடமை பொன் போன்றது என்பர். இன்று நாம் கல்வியையும் இழந்து கடமையையும் மறந்து வாழ்கின்றோம். இஸ்லாம் கல்விக்கும் அதைக் கற்றவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கமாகும். கல்வி மூலம் மனிதன் உயர்ந்த அந்தஸ்த்தை அடைவதாக இஸ்லாம் கூறுகின்றது. இருப்பினும் கற்றவர்களினதும் கற்பிப்பவர்களினதும் உயரிய அந்தஸ்த்தை உரிய முறையில் உணராத சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறியுள்ளது. இதனால் கற்றவர்களை மதிக்காது அவர்களை மிதிக்கும் விதத்தில் நடந்து கொள்கின்றனர். இதனால் கல்வியாளர்கள் சமூகத்தை விட்டும் ஒதுங்க, முட்டாள்கள் முன்னிலை வகிக்கும் நிலை ஏற்படுகின்றது.
இஸ்லாமும் தொழில்நுட்பக் கல்வியும்:
இஸ்லாம் தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவித்துள்ளது. நூஹ் நபி கப்பல் கட்டினார் என்கின்றோம். ஒரு நபி கப்பல் கட்டக்கூடிய அளவுக்கு தொழில்நுட்ப அறிவுமிக்கவராக இருந்ததை ஏன் மறந்து விடுகின்றோம். தாவூத் நபி கேடயமும் கலசமும் செய்தார் என்றால் ஆபத்துக்களில் இருந்து மக்களைக் காக்கும் முக்கியத்துவத்தை ஏன் நாம் உணரக்கூடாது!
துல்கர்ணைன் மன்னர் யஃஜூன் மஃஜூஜ் கூட்டத்தை மறிந்து அணை கட்டினார் என்றால் அவரது அந்த தொழிநுட்ப அறிவின் முக்கியத்துவத்தை நாம் ஏன் உணரக்கூடாது. வறட்சியில் இருந்து மக்களைப் பாதுகாக்க யூசுப் நபி போட்ட பொருளாதாரத் திட்டத்தை ஏன் நாம் சிந்தித்துப் பார்க்கக் கூடாது. ஒரு நபிக்கு அல்லாஹ் பறவைகள் எறும்புகளின் மொழியைப் படித்துக் கொடுத்தான் என்றால் மொழி அறிவின் முக்கியத்துவத்தை நாம் ஏன் உணரக்கூடாது! சகலதுறை அறிவுவளத்தை வளர்த்துக் கொள்ளுமாறு இஸ்லாம் கூறுவதை நமது இளைய தலைமுறை கவனத்தில் எடுத்து கல்வித் துறைகளில் வலிமையாக கால்பதிக்க வேண்டும்.
நாயும் கற்றால் மதிக்கப்படும்:
பொதுவாக நாய் நஜீஸானது என்பதை முஸ்லிம்கள் அறிவர். நாய் வாய் வைத்த பொருளை எந்த முஸ்லிமும் உண்ண மாட்டான். ஆனால் வேட்டையாடப் பழக்கப்பட்ட நாய் வேட்டைப் பிராணியை கவ்விக் கொண்டு வந்தால் அதை உண்ணலாம் என குர்ஆனின் பின்வரும் வசனம் கூறுகின்றது.
“அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடியதை நீங்கள் புசியுங்கள்” (5:4)
நாயாக இருந்தாலும் ஒரு கல்வியைக் கற்றதால் அதற்கென தனியான ஒரு மரியாதை அளிக்கப்படும் போது கற்றவர்களை மதிக்காத சமுதாயம் ஜெயிக்குமா?
அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்:
அல்லாஹுதஆலா கல்வியை அதிகப்படுத்தித் தருமாறு தன்னிடம் பிரார்த்திக்கும்படி தனது நபிக்கே கட்டளையிடுகின்றான். “என் இரட்சகனே! அறிவை எனக்கு அதிகப்படுத்துவாயாக எனக் கூறுவீராக!” (20:114)
எனவே, நாமும் நல்ல கல்வியைத் தேடிக் கற்பதுடன் அல்லாஹ்விடம் கல்வியை அதிகரித்துத் தருமாறு பிரார்த்திப்போம். கல்வியையும் கற்றவர்களையும் மதிக்கக் கற்றுக் கொள்வோமாக!
(நன்றி மக்கள் உரிமை)