பெருநாள் தொழுகையை மஸ்ஜிதில் நடத்துவதா அல்லது திறந்த வெளியில் நடத்துவதா என்ற சர்ச்சை தற்போது பரவலாக உள்ளது. இலங்கையில் பரவலாக திறந்த வெளியில் பெருநாள் தொழும் நடைமுறை அதிகரித்தும் வருகின்றது.
பள்ளி சிறந்த இடம்:
பொதுவான இடங்களை விட மஸ்ஜித்கள் சிறப்பான, புனிதமான இடம். எனவே, மஸ்ஜிதில்தான் பெருநாள் தொழுகை தொழப்பட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர்.
மஸ்ஜித்கள் ‘புயூதுல்லாஹ்’ இறை இல்லங்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுவான இடத்தை விட மஸ்ஜித் சிறந்த இடம் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் சிறந்த இடத்தில் தொழுவதுதான் சிறந்தது என்று கூற முடியாது.
நமது வீடுகளை விட பள்ளி சிறந்த இடம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், சுன்னத்துத் தொழுகைக்கு மஸ்ஜிதை விட வீடே சிறந்ததாகும். அத்துடன் பெண்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்ததாகும். எனவே, பொது இடத்தை விட பள்ளி சிறந்த இடம். எனவே, பள்ளியில்தான் பெருநாள் தொழ வேண்டும் என்று கூற முடியாது.
நஜீஸான இடங்கள்:
பொது இடத்தில் திறந்த வெளியில் தொழும் போது அந்த இடத்தில் நாய்கள் சிறுநீர் கழித்திருக்கலாம், அசுத்தம் இருக்கலாம், தவறான நிகழ்வுகள் நடக்கும் இடமாக அந்த இடங்கள் இருக்கலாம். எனவே, பள்ளியில்தான் தொழ வேண்டும் என்றும் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர்.
இதுவும் தவறானதாகும். ஏனெனில், முழு பூமியும் நமக்குத் தொழ அனுமதிக்கப்பட்ட இடமாக ஆக்கப்பட்டுள்ளது.
“எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுது கொள்ளட்டும்! போரில் கிடைக்கின்ற பொருட்கள் எனக்கு ஹலாலாக்கப் பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப் பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு (ஷபாஅத்து) செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டார்கள். ஆனால், நான் மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்” என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(வ) அறிவித்தார்.”(நூல்: புகாரி- 335)
இது இந்த உம்மத்துக்காகவே வழங்கப்பட்ட ஒரு சிறப்பம்சமாகும். எனவே, பொது இடத்தில் தொழும் போது அந்த இடம் அசுத்தம் பட்டிருக்குமோ என அங்கலாய்க்க வேண்டியதில்லை. கண்ணுக்குத் தெரியும் அசுத்தம் இல்லாத போது அந்த இடம் சுத்தமானது என்பதே முடிவாகும். அத்துடன் திறந்த வெளியில் பெருநாள் தொழுவதற்கு முன்னர் அந்த இடம் சுத்தப்படுத்தப் பட்ட பின்னரே அங்கு பெருநாள் தொழுகை நடாத்தப்படுகின்றது என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.
நபிவழி:
மதீனா பள்ளி சிறப்பான மஸ்ஜிதாகும். அங்கு தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறப்பு வாய்ந்ததாகும். அப்படி இருந்தும் நபி(ச) அவர்கள் மதீனாவில் பெருநாள் தொழுகையைத் திறந்த வெளியில் தொழுதுள்ளார்கள். எனவே, மஸ்ஜிதில் தொழுhமல் திறந்த வெளியில் ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்றாகத் தொழுவதே சிறந்த நபிவழியாகும்.
சிலர், பள்ளியில் இடம் போதாமையாலேயே நபி(ச) அவர்கள் முஸல்லாவில் தொழுதார்கள் என்று கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால் கூட இன்றிருக்கும் மஸ்ஜித்கள் ஆண்கள், பெண்கள் அனைவரும் தொழும் அளவுக்குப் பெரிதாக இல்லை என்ற அடிப்படையிலும் திறந்த வெளியில் தொழுவதையே சரி காண வேண்டியுள்ளது. எனவே, மஸ்ஜிதுல் ஹராம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பள்ளியில் தொழாமல் திறந்த வெளியிலேயே தொழ வேண்டும். ஏதேனும் சங்கடங்கள் இருந்தால் அல்லது திறந்த வெளிக்குச் செல்வதில் ஏதேனும் ஆபத்துக்கள் இருந்தால் பள்ளியில் தொழுது கொள்ளலாம். இதற்கான ஆதாரங்களை முதலில் நோக்குவோம்.
01. ஸயீத்(வ) அறிவித்தார். “நபி(ச) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜூப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனை கள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.” (புகாரி: 956)
முஸல்லா எனும் திறந்த வெளியில் தொழுவது நபியவர்களது வழமையான நடவடிக்கையாக இருந்துள்ளது. நபி(ச) அவர்கள் பள்ளியில் பெருநாள் தொழுததாக உறுதியான ஆதாரபூர்வமான எந்த செய்தியும் இல்லை. எனவே, இது நபியவர்கள் தொடராகக் கடைப்பிடித்து வந்த சுன்னத்தாகும்.
02. நபி(ச) அவர்கள் பெருநாள் தினத்தில் தொழும் திடலுக்குச் செல்வார்கள். அவருக்கு முன்னால் ஈட்டி எடுத்துச் செல்லப்படும். தொழும் இடத்தை அடைந்ததும் அவருக்கு முன்னால் அது நடப்படும். அதை நோக்கி நபியவர்கள் தொழுவார்கள். ஏனெனில், தொழுமிடம் திறந்த வெளியாக இருந்தது. அதில் முன்னால் (தடுப்பு வைத்து) மறைப்பதற்கென்று எதுவும் இருக்கவில்லை” என இப்னு உமர்(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: இப்னுமாஜா 1304)
இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பை ஸஹீஹான அறிவிப்பு என்கின்றார்கள்.
இந்த அறிவிப்பும் பெருநாள் தொழுகையைத் திறந்த வெளியில் தொழுவது நபியவர்களின் தொடர்ச்சியான நடைமுறையாக இருந்து வந்துள்ளது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
03. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ் கூறினார்: நீங்கள் நபி(ச) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்ததுண்டா? என்று இப்னு அப்பாஸ்(வ) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஆம்! (நபி(ச) அவர்களுடன்) நெருக்கமான உறவு எனக்கு இல்லாவிட்டால் நான் சிறுவனாக இருந்த நிலையில் அதில் கலந்து கொண்டிருக்க முடியாது” என்று கூறிவிட்டு ‘நபி(ச) அவர்கள் கஸீர் இப்னு ஸல்த் என்பவரின் இல்லத்தினருகில் இருந்த அடையாளத்திற்கு வந்தார்கள். பிறகு தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்களிடம் வந்தார்கள். அவர்களுடன் பிலால்(வ) இருந்தார்கள். பெண்களும் குனிந்து தம் கைகளால் பிலாலுடைய துணியில் பொருட்களைப் போட்டதை பார்த்தேன். பிறகு நபி(ச) அவர்கள் பிலால்(வ) உடன் தம் இல்லத்திற்கு புறப்பட்டனர்’ என்றார்கள்.” (புகாரி: 977)
இந்த அறிவிப்பில் கதீர் இப்னு ஸல்த் என்பவரின் வீட்டுக்கு அருகில்தான் தொழுததற்கான அடையாளம் இருக்கும் என்பது கூறப்படுகின்றது. அத்துடன் ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் பெருநாள் தொழுகையைத் தொழுதுள்ளதையும் இதன் மூலம் அறியலாம்.
04. “இரண்டு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்கு) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டோம்.”
நபி(ச) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் “இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?” எனக் கேட்டதற்கு, “அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்’ என்று நபி(ச) அவர்கள் பதிலளித்தார்கள்” என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.”
(நூல்: புகாரி 351, 974, 981, முஸ்லிம்: 890-12, இப்னுமாஜா: 1307, அபூதாவூத்: 1136)
இந்த ஹதீஸில் திடலுக்குத் தொழ வருமாறு பெண்கள் ஏவப்பட்டுள்ளனர். அத்துடன் தொழ முடியாத நிலையில் உள்ள பெண்கள் கூட வர வேண்டும் என்றும் தொழும் இடத்தை விட்டும் அவர்கள் ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் ஏவப்பட்டுள்ளனர். இந்த ஹதீஸ§ம் இது போன்ற மற்றும் பல அறிவிப்புக்களும் திடலில் தொழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
பள்ளியில் பெருநாள் தொழுவதால் ஆண்களுக்கு வேறாகவும், பெண்களுக்கு வேறாகவும் பல முறை பெருநாள் தொழுவிக்கும் நிலை ஏற்படுகின்றது. தேவையற்ற நேர விரையம் ஏற்படுகின்றது. சில இடங்களில் இப்பெண்களுக்கு குத்பா நடைபெறுவதில்லை. அத்துடன் மாதத்தீட்டு, பிரசவத் தீட்டுடைய பெண்களுக்கு பள்ளியில் பெருநாள் தொழுகை தொழப்பட்டால் அதில் பங்கு கொள்ளும் வாய்ப்பும் கிடைக்காது. எனவே, பெருநாள் தினத்தில் வெளியில் தொழுவது இஸ்லாமிய அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். எனவே, அனைத்து முஸ்லிம்களும் இயக்க, மத்ஹபு பிடிவாதங்களைக் களைந்து விட்டு ஒரே திடலில் ஒன்றாகத் தொழுது இந்த சுன்னாவை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
இதே வேளை, பெருநாள் தொழுகையைப் பள்ளியில் தொழுதால் தொழுகை செல்லாது என்பது போல் செயற்படுவதும் பெருநாள் தொழுகையை திறந்த வெளியில் தொழுவதை குழப்பமாகப் பார்ப்பதும் தவறானதாகும்.
மக்காவில் பெருநாள் தொழுகை மஸ்ஜிதுல் ஹராமில் தொழப்பட்டு வந்துள்ளது. இது எதிர்க்கப்பட்டதும் இல்லை. நபியவர்கள் மதீனாவில் திறந்த வெளியில் பெருநாள் தொழுகையைத் தொடர்ந்தும் செயற்படுத்தி வந்துள்ளார்கள். பெருநாள் தொழுகையைத் திறந்த வெளியில் தொழுவது நபி (அவர்களின் சொல், செயலால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஸ்ஜிதுல் ஹராமில் மட்டும் பெருநாள் தொழுகையைப் பள்ளியில் தொழுவது நபியின் அங்கீகாரத்தின் மூலம் அனுமதியைப் பெற்றுள்ளது.
பெருநாள் தொழுகைக்கு சிறந்த இடம் பள்ளியா? திறந்த வெளியா? என்ற கேள்வி எழுந்தால் திறந்த வெளியே சிறந்த இடம் என்பதே ஏற்றமான கருத்தாகும் என்பதை உணர்ந்து செயற்படவேண்டியுள்ளது.
பெருநாள் தொழுகைக்குச் செல்வதன் ஒழுங்குகள்:
பெருநாள் தொழுகைக்குத் திடலுக்குச் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை அறிந்திருப்பது அவசியமாகும்.
01. குளித்தல்:
தொழுகைக்குச் செல்லும் முன்னர் குளிப்பது விருப்பத்திற்குரியதாகும். இது குறித்து நபித்தோழர்களின் நடைமுறைகள் பேசுகின்றன.
02. பெருநாளைக்காக அலங்கரித்துக் கொள்வதும் நல்ல ஆடைகளை அணிந்து கொள்வதும்,
அப்துல்லாஹ் இப்னு உமர்(வ) அறிவித்தார்: “கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(வ) எடுத்துக் கொண்டு நபி(ச) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். பெருநாளிலும் தூதுக் குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ச) அவர்கள், ‘இது (மறுமைப்)பேறு அற்றவர்களின் ஆடையாகும்’ எனக் கூறினார்கள். சிறிது காலம் கடந்தது. பிறகு நபி(ச) அவர்கள் பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(வ) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதை எடுத்துக் கொண்டு உமர்(வ) நபி(ச) அவர்களிடம் வந்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இது (மறுமைப்) பேறு பெறாதவர்களின் ஆடை எனக் கூறிவிட்டு இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே!’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ச) அவர்கள், ‘இதை நீர் விற்றுக் கொள்ளும்! அல்லது இதன் மூலம் உம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும்!'” என்று கூறினார்கள். (புகாரி: 948)
இந்த ஹதீஸின் முதல் பகுதி மூலம் பெருநாள் தினத்திற்காகவும், தூதுக்குழுக்களைச் சந்திப்பதற்காகவும் நல்ல ஆடைகளை அணிவதும் ஆகுமானது என்பதை அறியலாம்.
03. நோன்புப் பெருநாளில் காலையில் உண்டுவிட்டுச் செல்லுதல்
அனஸ்(வ) அறிவித்தார்: “சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ச) அவர்கள் புறப்பட மாட்டார்கள். மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.” (புகாரி: 953)
ஹஜ்ஜூப் பெருநாளாக இருந்தால் எதையும் உண்ணாமலேயே செல்ல வேண்டும்.
தொடரும்… இன்ஷா அல்லாஹ்.