Featured Posts

இபாதத்துக்களின் அஸ்திவாரம் இஹ்லாஸ்

ஏ.ஆர்.எம்.இர்ஷாட் (ஸலபி)

இறைவன் உலகைப் படைத்து அதில் தனது பிரதிநிதியாக மனிதனை படைத்துள்ளான். மனிதன் தனது பிரதிநிதித்துவத்தை இறைவனுக்கு சரியான முறையில் நிறைவேற்ற வேண்டுமென்றால் சில நிபந்தனைகள் அதற்குள் உள்வாங்கப்பட வேண்டும். அந்த வரிசையில் முதல் நிபந்தனையாக இஹ்லாஸ் காணப்படுகிறது. அல்லாஹூத்தஆலாவுக்கு அடியான் சரியான முறையில் சேவை செய்ய இபாதத்துக்கள் வழி அமைக்கின்றது. இபாதத்துக்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இஹ்லாஸ் என்ற கலப்பற்ற எண்ணம் அத்தியவசியமானதாகும்.

இஹ்லாஸ் என்றால் என்ன?
இஹ்லாஸ் என்ற சொல் அரபியில் ‘அஹ்லஸ’ என்ற பதத்திலிருந்து பிரிந்ததாகும். பொதுவாக ‘அஹ்லஸ’ என்றால் வடிகட்டுதல், தொலி நீக்குதல், தேவையில்லாதவற்றை அகற்றி விடுதல், களை நீக்குதல் போன்ற கருத்துக்களை கொண்டது. இஹ்லாஸ் என்பதற்கான அர்த்தத்தை அல்குர்ஆனே எமக்கு கற்றுத்தருகிறது. திருமறைக்குர்ஆனில் சூரதுந் நஹ்லில் 66வது வசனத்தில் அல்லாஹுத்தஆலா குறிப்பிடும் போது:

‘ هي بيي فرث ودم لب اٌ خالصا سائعا للشاربيي ‘

“இரத்தத்திற்கும், சமிபாடைந்த உணவிற்கும் (சாணம்) இடையிலிருந்து அருந்துவதற்கு சுவையான, சுத்தமான பாலை நாம் புகட்டுகிறோம்.”

அல்லாஹுத்தஆலா மேற்கண்ட வசனத்தில் கலப்பில்லாமல் தெளிவாக, சுத்தமாக இருப்பதற்கு ‘ஹாலிஸன்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். அப்படீயானால் இஹ்லாஸ் என்ற பதத்திற்கு எந்தவித உள்நோக்கமுமில்லாமல், கலப்புமில்லாமல் ஒரு நோக்கத்தோடு நிறைவேற்றப்படும் இபாதத்துக்கள் என்ற பொருள் எமக்கு கிடைக்கிறது. நாம் அருந்துகின்ற பாலில் சிறிய துளி இரத்தமோ அல்லது சாணமோ கலந்தால் அதை எமது உள்ளம் வெறுத்துவிடும். அதை அருந்தாமல் கழிவுப் பொருளாகத்தான் நாம் நோக்குவோம்.

அதேபோல் அல்லாஹுத்தஆலாவுக்கு என்று நிறைவேற்றப்படுகின்ற இபாதத்துக்கள், வணக்கங்கள், நற்செயல்கள் அல்லாஹ்வுக்கு என்ற நோக்கத்தோடு அமைய வேண்டும். இதைத்தான் இஹ்லாஸ் என்ற பதம் எமக்கு சுட்டிக்காட்டுகிறது.

உலகில் பொருளாலும், உடலாலும், ஏனைய செயற்பாடுகளாலும் அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்க்கின்ற முஸ்லிம்களாக வாழ்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். பொதுவாக தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற இபாதத்துக்களில் மட்டும்தான் இஹ்லாஸ் இருக்கவேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். இந்த எண்ணம் பிழையானதாகும். வாழ்வில் எதுவெல்லாம் இபாதத்தாக இருக்கிறதோஅவையனைத்திலும் இஹ்லாஸ் கட்டாயமானதாகும்.

‘நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ, உங்களின் தோற்றங்களையோ பார்க்க மாட்டான். எனினும் உங்களின் இதயங்களையும், உங்களின் செயல்களையுமே பார்ப்பான்’ என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு
நூல் : முஸ்லிம் – 2564)

எமது வாழ்க்கையில் இரண்டு நோக்கங்களோடு செயற்படும் மனிதர்களின் முயற்சி இறுதியில் தோல்வியில் முடிவடைவதை பல உதாரணங்களின் மூலம் செவியுற்றிருக்கிறோம். எடுத்துக்காட்டாக இரண்டு தோணியில் கால் வைத்து பிரயாணம் செய்பவனின் உதாரணத்தை போல. ஆக எம் இபாதத்துக்களிலும் இரண்டு நோக்கம் கலந்து விட்டால் அது பெறுமதியற்றது என்பதை உள்ளத்தில் ஆழமாக பதியவைத்துக் கொள்ள வேண்டும்.

இறைவன் உலகில் மனிதனை படைத்த நோக்கம் பற்றி அல்குர்ஆன் பேசும்போது: ‘என்னை வணங்குவதற்காகவேயன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை.’ (51:56)

இறைவன் குறிப்பிடுவது போல எமது வணக்கத்தை சரியாக நிறைவேற்ற வேண்டுமெனில் இஹ்லாஸ் கட்டாயமானது. பேனாவால் பல பூச்சியங்களை எழுதி விட்டு அதற்கு பெறுமானததை வழங்க வேண்டுமென்றால் அந்த பூச்சியங்களுக்கு முன்னால் ஒன்று என்ற இலக்கத்தை இட வேண்டும். மாறாக ஆயிரக்கணக்கான பூச்சியங்களை எழுதி விட்டு அதற்கு முன்னால் ஒன்று இல்லாவிட்டால் அனைத்து பூச்சியங்களும் பெறுமதியற்றதாக அமைந்துவிடும். அதுபோல் இஹ்லாஸ் இல்லாமல் நாம் எண்ணிலங்காத இபாதத்துக்களை செய்து, வணக்கங்களைப் புரிந்து, எமது உடல், பொருளாதாரம், ஆரோக்கியம் போன்ற அனைத்தையும் வணக்கத்திலேயே நிலைநிறுத்திருக்கச் செய்தாலும் அனைத்து இபாதத்துக்களும் அல்லாஹ்விடத்தில் பெறுமதியற்றதாகவே அமையும்.

இஹ்லாஸின் முக்கியத்துவம் :
நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்கா நகரில் தமது ஏகத்துவப் பிரச்சாரத்தை எத்தி வைத்துக் கொண்டிருந்த வேளையில் குறைஷிக்காபிர்களின் துன்புறுத்தலுக்கு நபியவர்களும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஸஹாபாக்களும் உள்ளாக்கப்பட்டார்கள். இந்த வேளையில் குறைஷியர்களின் துன்பம் மேலோங்கி தாங்கி கொள்ள முடியாத நிலையில் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மதீனா நகருக்கு ஹிஜ்ரத் சென்றார்கள் என்ற வரலாற்றுச் சம்பவத்தை நபியவர்களின் ஸீராவில் நாம் காணலாம். ஹிஜ்ரத் எனும் புனித பயணத்தை நபியவர்களும், ஸஹாபாக்களும் மேற்கொண்டபோது சில ஸஹாபாக்கள் மதீனாவுக்கு நாம் சென்றால் அழகான பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள். இதை கேள்வியுற்ற நபி صلى الله عليه وسلم அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

‘நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது உண்டு. அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் ஒருவனின் ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) ஆகிவிட்டால் அவனது ஹிஜ்ரத் அல்லாஹ்விற்காகவும், அவனது தூதரிற்காகவுமே அது ஆகிவிடும். ஒருவனின் ஹிஜ்ரத் உலகத்தை அடைவதற்காக அல்லது ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக என்று ஆகிவிட்டால் அவர் ஹிஜ்ரத் எதற்காக செய்தாரோ அதற்காகவே அமையும்.’
(புஹாரி: 1,54 , முஸ்லிம்: 1907)

புனிதமான ஹிஜ்ரத் பயணத்தில் கூட அல்லாஹ்விற்கு என்ற தூய்மையான எண்ணம் இடம்பெற வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து எம்மால் அறியமுடிகிறது. அந்த அடிப்படையில் நாம் வாழ்வில் எதையெல்லாம் இபாதத், வணக்கம் என்று செய்கிறோமோ அவையனைத்தும் அல்லாஹ்வுக்காக என்ற இஹ்லாஸோடு நிறைவேற்ற வேண்டும். இபாதத்துக்களில் இஹலாஸ் இருந்தாலே தவிர அதற்கு கூலி வழங்கப்படமாட்டாது என்பதை மனதில் பசுமரத்து ஆணி போல பதியவைத்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

இஹ்லாஸின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் மேலும் ஒரு ஹதீஸ் புஹாரி, முஸ்லிமில் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒருவர் வீரத்திற்காக போரிடுகிறார், ஒருவர் ரோசத்திற்காக போரிடுகிறார், ஒருவர் பிறர் போற்றிட போரிடுகிறார். இதில் எவர் இறைவழியில் போரிடுபவர் என்று கேட்கப்பட்டது. அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள்: அல்லாஹ்வின் வார்த்தை உயர்ந்திட வேண்டி ஒருவர் போர் செய்தால் அவரே இறைவழியில் உள்ளவர் என்று பதிலளித்தார்கள்.’
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு
நூல்: புஹாரி – 7458, முஸ்லிம் – 1904

மேற்கண்ட ஹதீஸில் கேள்விகேட்ட தோழர் நபி صلى الله عليه وسلم அவர்களின் காலத்தில் இடம்பெறும் யுத்தங்களை அடிப்படையாக வைத்து கேள்வியை தொடுத்தார். நபி صلى الله عليه وسلم அவர்களின் காலத்தில் முஸ்லிம்களுக்கும், காபிர்களுக்குமிடையில் யுத்தம் நடைபெற்றால் அதை கண்களால் பார்ப்பதற்கு கூட எம் உள்ளம் அஞ்சப்படும். நாம் கால் பதித்திருக்கின்ற 21ம் நூற்றாண்டில் இடம்பெறும் யுத்தத்தைப் போல புற்புதர்களுக்குள் அல்லது நீர்நிலைகளுக்குள் மறைந்திருந்து எதிரியை தாக்கும் போரைப் போல் ஸஹாபாக்கள் போரிடவில்லை. மாறாக எதிரியை நேருக்குநேர் சந்தித்தார்கள். ஒண்டிக்கு ஒண்டியாக எதிரியோடு வாளால் அல்லது ஈட்டியால் சில நேரம் எந்நவித ஆயுதமுமில்லாமல் கைகளால் கூட போரிட்டனர். அந்த போர்க்களத்தின் நிலையை பார்ப்பதற்கே பயங்கரமானதாக இருக்கும். ஒருபுறம் கைகள் வெட்டப்பட்டு துடித்துக் கொண்டிருக்கும். இன்னொரு புறம் தலைகள் வெட்டப்பட்டு போர்க்களமே இரத்தத்தால் மூழ்கியிருக்கும். இப்படியான பயங்கரமான களத்தில் இஸ்லாத்துக்காக போரடுகின்ற ஒரு தோழர் அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து இஹ்லாஸோடு போரிடவில்லையென்றால் அவர் அந்த இடத்தில் தனது வீரத்தை, ஆளுமையை நிருபிப்பதற்கு போரிட்டு தனது உயிரைக்கூட மாய்த்துக் கொண்டால் அல்லாஹ் அதற்கு எந்த கூலியும் கொடுப்பதில்லையென்பதை எம்மால் அறியமுடிகிறது.

ஆக, இஹ்லாஸுடைய முக்கியத்துவத்திற்கு புனிதமான இரண்டு வணக்கங்களான ஹிஜ்ரத் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல் போன்றவைகளை உதாரணமாக கண்டோம். இந்த புனித இபாதத்துக்கள் கூட அல்லாஹ்விடத்தில் இஹலாஸ் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படாது என்றால் நாம் செய்கின்ற வணக்கங்களின் தாத்பரியத்தை உணர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

எம் வணக்கங்கள் இஹ்லாஸோடு அமையப்பெற வேண்டும் என்பதற்கான சான்றுகள் சில:

01. தொழுகைக்காக தக்பீர் கட்டியவுடன்

‘اى صلات و سًن وهحياي وهوات لله رب العالويي’ (الأ عًام 261)

‘எனது தொழுகை, எனது வணக்கவழிபாடுகள், எனது வாழ்க்கை, எனது மரணம் ஆகியவை அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வுக்கே.’ என்று கூறுகிறோம். அப்படியாயின் எம்முடைய தொழுகை உட்பட வாழ்க்கையில் அனைத்து அம்சங்களும் தூய்மையான எண்ணத்தோடு நிறைவேற்றப்பட வேண்டுமென்று மேற்கண்ட வசனம் கற்றுத்தருகிறது.

02) ஜனாஸாத்தொழுகையை தொழுகின்றோம். இதிலும் இஹ்லாஸ் வெளிப்பட வேண்டும் என்று பின்வரும் நபிமொழி சுட்டிக்காட்டுகிறது.

‘هي اتبع ج اٌزة هسلن إيوا اً واحتسابا وماى هعه حت يصل عليها ويفرغ هي دف هٌا فإ هً يرجع هي الأجر بقيراطيي … ‘

‘ இறை நம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் (இஹ்லாஸ் என்ற தூய்மையான எண்ணம்) முஸ்லிமின் ஜனாஸாவில் கலந்து கொண்டு அதற்காக தொழுது, அதை அடக்கம் செய்யப்படும் வரை ஒருவர் இருந்தால் அவர் இரண்டு ‘கீராத்’ நன்மைகளை கூலியாக பெற்றுத் திரும்புகிறார்…’
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு
நூல்: புஹாரி – 47

மேலுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இபாதத்துக்கள் அனைத்தும் அது எப்படிப்பட்ட இபாதத்தாக இருந்தாலும் அதற்கு இஹ்லாஸ் மிக அவசியமானது. ஏனெனில் இபாதத்தும், இஹ்லாஸும் நகமும், சதையும் போல பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளது.

இஹ்லாஸின் பிரதிபலன்:

இஹ்லாஸுடைய பிரதிபலனை எடுத்துக்காட்டுவதற்கு ஒரு ஆதாரத்தை மட்டும் கோடிட்டு காட்டினால் போதுமாக இருக்கும் என எண்ணுகிறேன். ஷைத்தானைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அல்லாஹ்வை வழிபட்டு, இஸ்லாத்தை தூய்மையான முறையில் பின்பற்றி, தவ்ஹீதை அடிப்படையாக கொண்டு வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமையும் வழிகெடுப்பதே அவனது இலட்சியம். இதைத்தான் அல்லாஹுத்தஆலா ஷைத்தானை விரட்டும் போது அல்லாஹ்விடம் ஷைத்தான் சவால் விட்டான். இந்த வரலாற்று சம்பவத்தை அல்குர்ஆனில் சூரா ஸாத் என்ற அத்தியாயத்தில் 71 – 85 வரையிலான வசனங்களில் காணலாம்.

ஷைத்தான் அல்லாஹ்விடம் கூறும்போது:

‘قاه فبعستل لأغىي هٌن اجوعيي’

‘உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான் அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன் எனக் கூறினான்.’ (ஸாத்: 82)

உன்னைக் கட்டுபட்டு, உனக்கு மட்டுமே கீழ்படிந்து இபாதத் செய்கின்ற அடியார்களை வழிகெடுப்பேன் என்று கூறிய ஷைத்தான் ஒரு இடத்தில் சரிந்துவிடுகிறான்.

‘إلا عبادك ه هٌن الوخلصيي’

‘அவர்களில் தேர்வு செய்யப்பட்ட உனது அடியார்களைத் தவிர (இஹ்லாஸுடைய உனது அடியார்களைத்தவிர)’ (ஸாத்: 83)

உலகையே படைத்து, பரிபாலித்து, உணவளித்துக் கொண்டிருக்கும் இரட்சகனிடம் சவால் விட்ட ஷைத்தான் உனக்காகவேண்டி உன்னுடைய கூலியை மட்டும் எதிர்பார்த்து வணக்கம் புரிகின்ற அடியார்களை என்னால் எதுவும் செய்யமுடியாது என்று விலகி கொள்கிறான்.

ஆக, அல்லாஹ்வுக்கு மட்டுமே இபாதத் செய்கின்ற அவனின் கூலியை மட்டுமே எதிர்பார்த்து நல்லறம் புரிகின்ற அடியார்களின் வாழ்க்கை இவ்வுலகிலும், மறுவுலகிலும் சிறப்பாக அமையும் என்பதை மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தின் மூலம் எம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. எம்முடைய வணக்கங்களை இஹ்லாஸோடு அமைத்து நாளை மறுமையில் முஹ்லஸீன்களோடு சுவனத்தில் இருப்பதற்கான பாக்கியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *