பொதுவாக மனிதனின் குணங்கள் இரண்டு வகைப்படும்.
1- நற்குணம்.
2- தீய குணம்.
எல்லா மனிதனிடமும் நற்குணம் சார்ந்த சில பண்புகளும், தீய குணம் சார்ந்த சில பண்புகளும் இருக்கவே செய்கின்றன.
நற்குணம் சார்ந்தவை: பொறுமை, சகிப்புத்தன்மை, பணிவு, விட்டுக்கொடுத்தல், தயாளம், நாணம், மென்மை, வீரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
தீய குணம் சார்ந்தவை: கோபம், பதட்டம், பெருமை, கஞ்சத்தனம், கடுமைத்தன்மை, கோழைத்தனம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
தீய குணங்களை நற்குணங்களாக மாற்றி அமைப்பது இன்று மனிதனுக்கு மிகப்பெரும் சவாலாக ஆகியுள்ளது. பிள்ளைகளிடம் உள்ள தீயகுணத்தை நற்குணங்களாக மாற்றியமைப்பதற்குப் பெற்றோர்கள் படும் சிரமம் ஏராளம். மனைவியிடம் உள்ள தீய குணங்களை நற்குணங்களாக மாற்றுவதற்கு, கணவன் படும் கஷ்டங்களும் ஏராளம். கணவனிடம் உள்ள தீய குணங்களை மாற்றி அமைப்பதற்கு, மனைவி மேற்கொள்ளும் முயற்சிகளையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
மனிதன், சில சமயம் காட்டில் வாழும் ஐந்தறிவு மிருகங்களையோ, அல்லது பறவைகளையோ பிடித்துவந்து அதனிடம் உள்ள தீய குணங்களை மாற்றி அமைத்து, அதற்கு நற்குணங்களைக் கற்றுக்கொடுத்து தன்னோடு சகஜமாகப் பழகும் அளவுக்கு அந்த மிருகத்தை மனிதன் மாற்றிவிடுகின்றான். ஆனால் ஆறறிவு படைத்த மனிதனின் குணங்களை மாற்றி அமைப்பதற்குப் பலவிதமான சிரமங்களை மேற்கொள்கின்றான்.
மனிதனின் இயல்பிலேயே சில குணங்கள் உள்ளது (பிறவிக் குணம்) அதை யாராலும் மாற்ற முடியாது என்ற தவறான நிலைப்பாடும் மக்களிடம் பரவலாக உள்ளது. ஆனால் நற்குணத்திற்கும் ஈமானுக்கு மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது.
இஸ்லாத்திற்கு முன் நபித்தோழர்களின் குணங்களை உதாரணமாகச் சொல்லலாம். கடின சித்தம் கல் நெஞ்சம், இரக்கமற்ற குணம் இது அனைத்தும் இஸ்லாத்திற்கு முன் ஸஹாபாக்களுக்கு நிறைந்திருந்ததாக வரலாறு குறிப்பிடுகின்றது. அல்லாஹுவின் தூதர் வந்தபிறகு அவருக்கு ஈமான் என்ற பிரகாசம் கிடைத்ததும் அவர்களைப் பிறருக்கு முன்னுதாரணமாகச் சொல்லும் அளவுக்கு அவர்களின் குணங்கள் அனைத்தும் நற்குணங்களாக மாறிவிட்டது என்றும் வரலாறு குறிப்பிடுகின்றது. அவர்களுக்கு ஈமான் கிடைத்த பிறகுதான் அவர்களின் உள்ளங்கள் மென்மையடைந்து அவர்களின் இயல்புகள் நளினமடைந்தன. “இறை நம்பிக்கையாளர்களில் முழுமையான இறை நம்பிக்கை உடையவர் அவர்களில் அழகிய குணம் உடையவரே!” (நூல் : அபூ தாவூத்) என்ற நபிமொழிக்கு ஏற்றவாறு அவர்களின் முழு வாழ்விலும் நற்குணங்களைப் பார்க்கமுடியும்.
சிலர் தங்களிடம் உள்ள தீய குணங்களை நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர், ஆனால் அதை மாற்றுவதற்கான வழிமுறைகளை அறியாமல் தவிக்கின்றனர். நற்பண்புகளை அதிகமாக தனக்குள் கொண்டுவருவதன் மூலம்தான் தங்களிடமுள்ள தீய குணங்களை மாற்றியமைக்கமுடியும். குணங்கள் மாறும் தன்மை கொண்டவை நற்குணத்தில் மிகச் சிறந்ததும் முதன்மை வகிப்பதும் ‘பொறுமை’ என்ற குணமாகும். மனதைக் கட்டுப்படுத்தியும், முயற்சி செய்தும், பழக்கப்படுத்தியுமே தவிர நற்குணத்தை அடைய முடியாது.
قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ
தூய்மையான குணங்களைக் கொண்டவன் திட்டமாக வெற்றி பெறுகிறான். (87 : 14)
قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا
அதை (ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். (91 : 09)
அதை (ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். (91 : 09)
நீ எங்கிருந்த போதிலும் உன் இறைவனை அஞ்சிக்கொள்! நீ ஒரு தீமையைச் செய்துவிட்டால் அதைத் தொடர்ந்து ஒரு நன்மையைச் செய்துவிடு அது உன் தீமையை அழித்துவிடும், நீ உன் ரப்பை பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கின்றான், பாவம் செய்தவனில் சிறந்தவன் தவ்பா செய்தவனே…, இது போன்ற நபிமொழிகளின் ஏவல்கள் அனைத்தும் ஒருவனிடம் உள்ள தீய குணத்தை மாற்றி நற்குணத்தைக் கொண்டுவருவதாகும்.
நற்குணம் எந்த அளவுக்கு அவசியமானது என்பதை நபித்தோழர்கள் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கினார்கள் என்பதை ஒரு சம்பவத்தில் மூலம் பார்க்கலாம்.
உம்முத்தர்தா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
(என் கணவர்) அபுத்தர்தா (ரழி) அவர்கள் இரவில் தொழும்போது அழ ஆரம்பித்தவர்களாக “இறைவா என்னுடைய தோற்றத்தை நீ அழகாக்கி விட்டாய். ஆகவே என்னுடைய குணத்தையும் அழகாக்குவாயாக” என்று காலை நேரம் வரும் வரை கூறிக் கொண்டே இருந்தார்கள்.
அப்போது நான் “அபுத்தர்தாவே இரவு முழுக்க குறுகிய நற் குணம் பற்றியே நீங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தீர்களே?” என்று கேட்டேன். அப்போது அபுத்தர்தா(ரழி) அவர்கள் “உம்முத்தர்தாவே ஒரு முஸ்லிமான அடியானின் நற்குணம் அழகியதாக இருப்பின் அவனுடைய அழகிய நற்குணத்தால் சுவர்க்கத்தில் அவனை அது புகுத்திவிடும். அவனின் குணம் தீயதாக இருப்பின் அவனுடைய தீய குணம் அவனை நரகில் புகுத்திவிடும்.
ஒரு முஸ்லிமான அடியான் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் அவனுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்படும்” என்று கூறினார்கள். “அபுத்தர்தாவே ஒருவன் தூங்கிக் கொண்டிருக்க அவனுக்கு எவ்வாறு பாவ மன்னிப்பு வழங்கப்படும்” என்று நான் கேட்டேன். “அவனுடைய சகோதரன் இரவில் நின்று வணங்கி தஹஜ்ஜத் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறான் அல்லாஹ் அவனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்கிறான்.
மேலும் தூங்கிக் கொண்டிருக்கும் தன் சகோதரனுக்காகவும் பிரார்த்தனை செய்கிறான். அவன் விஷயத்திலேயும் அவனது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்கிறான். என்று அபுத்தர்தா (ரழி) கூறினார்கள். நூல்: அல்அதபுல் முஃப்ரத் 290)
நற்குணத்திற்கு நபித்தோழர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வழங்கினார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆனால் இன்றோ பெரும்பாலான இல்லங்களில் கணவன் என்ன பிரார்த்தனை செய்கின்றான் என்பது மனைவிக்கும் தெரியாது, மனைவி என்ன பிரார்த்தனை செய்கின்றாள் என்பது கணவனுக்கும் தெரியாது. நற்குணம் எவ்வளவு அவசியமானது என்பதோடு தூங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு சகோதரனின் பாவங்களும் பிரார்த்தனையால் மன்னிக்கப்படுகின்றது என்பதையும் இந்த சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.
சுவனம் செல்ல நற்குணம் காரணமாக இருப்பதோடு இந்த உலகிலும் ஒருவனுக்குக் கண்ணியத்தையும், நன்மதிப்பையும் பெற்றுத்தருவது நற்குணமாகும். குணங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதன் மூலம்தான் ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளன்) இம்மையிலும், மறுமையிலும் வெற்றியடைகின்றான்.
—————-
S.A.Sulthan
15/05/2019
Jeddah