எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி.
—
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. தூதர்களில் இறுதியானவராகிய மனித குல வழிகாட்டி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் வழி நடக்கும் நல் உள்ளங்கள், உலக சமாதான விரும்பிகள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக!
ஜனவரி மாதம் சொல்ல வரும் பாடம்
—
இரவும் பகலும் மாறிவருவதால் நாட்கள் பிறக்கின்றன என மனிதன் அறிந்து வைத்துள்ளான்.
கால ஓட்டம் என்பது வானங்கள், பூமி ஆகிய இருபெரும் கோழங்களும் ஏனெய
படைப்புகளும் இறைவனால் படைக்கப்படுவதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே உலக நகர்வுகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி பூரணமாக அறிந்தவனாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கு அமைவாக “கலம்” என்ற எழுதுகோல் மூலம் பதிவேடொன்றில் தீர்மானிக்கப்பட்ட முழுமையான ஆயுள்காலத்தில் இருந்து தரப்படும் சில நொடிகளாகும்.
மனிதன் தாயின் கருவறையில் உருவாகும் நான்கு மாத கால இடைவெளிக்குள் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வரும் வானவர் ஒருவர் மூலம் அவனுக்கான கால அளவு பதியப்படுவதும் ஆரம்பமாக பதியப்பட்ட எழுத்தின் இருந்து தரப்படுவதாகும் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
ۚوَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ ۚ عَلِمَ أَن لَّن تُحْصُوهُ [المزمل/٢٠]
அல்லாஹ்தான் இவரையும் பகலையும் நிர்ணயம் செய்கின்றான். நீங்கள் அதை (கணித்து) அறிந்து கொள்ள மாட்டீர்கள் என்பதை அவன் அறிந்தவன் (73:20)
يُقَلِّبُ اللَّهُ اللَّيْلَ وَالنَّهَارَ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّأُولِي الْأَبْصَارِ -النور
அல்லாஹ்வே இரவையும் பகலையும் மாற்றி அமைக்கின்றான். சிந்தனை உடையோருக்கு நிச்சயமாக அதில் படிப்பினை இருக்கின்றது. ( அந்நூர்/44)
போன்ற அல்குர்ஆன் வசனங்கள் மூலம் இதனை உறுதி செய்து கொள்ள முடியும்.
கால ஓட்டம் உலக நகர்விலும் மனித வாழ்விலும் இரவு பகலாக பரஸ்பரம் மாறி வருவதனால் கால மாற்றம் நிகழ்கின்றது.
பிறந்துள்ள 2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆங்கில புது வருடத் தொடக்கமாக இருப்பது போலவே உலகில் ஏனெய பல்வேறு மொழிசார் மக்களின் மாதமாகவும் மாறிவிட்டது என்பதே உண்மை.
அது சென்ற ஆண்டைப் போல அல்லாஹ்வின் நாட்டத்தால் 2020லும் பிறந்துள்ளது.
உலக அழிவு நாளின் குறித்த நொடி வரும் வரை நாட்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளின் பிறப்பும் காணப்படும் என்பது இஸ்லாம் கற்றுத் தரும் பாடமாகும்.
அதனை ஒருவர் பட்டாசு கொளுத்தி ஆராவாரம் செய்துதுதான் வரவேற்க வேண்டுமானால் நாளின் பிறப்பால் ஆண்டு பிறக்கின்றது என்ற பொதுவிதியின் அடிப்படையில் தினமும் சூரிய உதயத்தோடு அவர் பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரிக்க வேண்டுமல்லவா? அது எவ்வாறு ஏற்புடையது அல்லவோ அவ்வாறே வருடத் தொடக்கத்தில் மகிழ்ச்சியில் மூழ்குவது ஏற்புடையதாகாது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
மனிதன் இலக்கு தொடர்பாக சிந்திக்க வேண்டிய கால மாற்றம்
—
காலம் என்பது சக்கரச் சுழற்சியை ஒத்ததாகும்.
“காலம் சுருங்கும்” என்பது இறைத் தூதர் வாக்காகும்.
அதனால் வரும் காலங்கள் தற்போது இருப்பதை விடவும் வேகமாக ஓடி முடியுமே தவிர தாமதமாக முடிவடையும் என நம்பிக்கை கொள்வது இஸ்லாமிய அடிப்படையில் தவறாகும்.
உலகின் தொடக்கத்திற்கு ஆரம்பம் இருந்தைப் போன்று ஒரு முடிவு நேரமும் உண்டு என்பதும் அதன் பின் படைப்புக்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு மீள எழுப்பப்பட்டு சொர்க்கம், நரகம் என்ற இரண்டில் ஒன்றை அடைவர் என்பதும் உலக அழிவின் பின்னால் உள்ள ரகசியமாகும்.
மனிதன் உலகில் வாழும் சந்தர்ப்பங்களில்
? நான் யாரால்? எதற்காகப் படைக்கப்பட்டேன்?
?என்னையும் இந்தப் பெரும் கோள்களையும் படைத்த அந்த மறைவான உண்மையான படைப்பாளன் யார்?
?உலகில் எவ்வாறான நன்மைகள் செய்வதனால் மரணத்தின் பின்னால் உள்ள நிலையான அந்நாளில் எனக்கு சுவனம் கிடைக்கும்?
? எவ்வாறான செயல்கள் புரிவதனால் நிரந்தர நரக வாழ்வு உரித்தாகும் ?
?உலக மக்களோடு நான் எவ்வாறு நடக்க வேண்டும்?
?நான் மரணிக்கின்ற போதும், மண்ணறையில் மனிதர்களால் தனிமையில் வைக்கப்படுகின்ற போதும் எனது நிலை எப்படி இருக்கப் போகின்றது ?
?பிறரை வஞ்சித்து, அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டி, அவர்களுக்கு அநீதி இழைத்த நிலையில் என்னைப் படைத்த இரட்சகனை நான் சந்திப்பது நல்லதா ?
அல்லது அவனால் பொருந்திக் கொள்ளப்பட்டவனாக அவனை சந்திக்க வேண்டுமா? போன்ற பல்வேறு கேள்விகள் மூலம் தன்னை தினமும் பொதுவாக சுய பரிசோதனை செய்வது போன்று, தனது முழுமையான ஆயுட்காலத்தில் இருந்து மொத்தமாக குறைக்கப்படுகின்ற இது போன்ற சந்தர்ப்பங்களில் குறிப்பாக சுய பரிசோதனை செய்து தனது வாழ்வில் அர்த்தபுஷ்டியான மன மாற்றத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.
இதற்காகவே இரவு பகல்கள் தோன்றி மறைகின்கின்றன.
அவைகளின் மாற்றங்களே மனித வாழ்வில் ஏற்படுகின்ற வாழ்வியல் மாற்றத்தின் அடிப்படைகளாக விளங்கு வேண்டும் என்பது அல்குர்ஆனின் போதனையாகும்.
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَٰكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ. (المؤمنون – 115)
நீங்கள் வீணுக்காப் படைக்கப்பட்டதாகவும் , நீங்கள் நம் பக்கம் (மறுமை நாளில்) மீளமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா? (அல்முஃமினூன்- 115)
எனக் கேட்பதன் இரகசியமும் இதுவாகும்.
ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் சந்திக்கின்ற இது போன்ற புதுவருடப் பிறப்புகள் கூத்தும், கும்மாளமும் போடவா ? என்றால் இல்லை. இல்லவே இல்லை; என்பதே இஸ்லாம் கூறும் யதார்த்தமான நிலைப்பாடாகும்.
மனிதன் சந்திக்கின்ற இது போன்ற கால மாற்றங்கள் அவன், தனக்கும் பிற மக்களுக்கும் படைப்புகளுக்கும் நன்மை செய்து வாழ இறைவனால் தரப்படும் அருள் நிறைந்த பிரத்தியேகமான சந்தர்ப்பங்களில் ஒன்றாகும்.
அதனால் மறுமையில் விமோசனத்தை விரும்புகின்ற ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் அல்லாஹ்வின் போதனைகளுக்கு எதிராகவும் மனிதர்கள் பேரிலும் இழைத்த சாதாரண ஏச்சுப் பேச்சுக்கள் போன்ற அநீதிகளைக் கூட சீர் செய்து வாழ பணிக்கப்பட்டுள்ளான்.
சுய பரிசோதனையின் அவசியம்
—
உலகில் மனிதன் உயரிய நோக்கத்துடன் படைக்கப் பட்டிருக்கின்றான். அந்த இலக்கு மாறாது வாழ வேண்டுமானால் தனது செயற்பாடுகள் தொடர்பாக அவன் தன்னைப் பற்றி தினமும் சுய பரிசோதனை செய்வது அவசியமாகும்.
يٰۤاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ
الَّذِىْ خَلَقَكَ فَسَوّٰٮكَ فَعَدَلَـكَۙ
فِىْۤ اَىِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَؕ
மனிதனே! (கொடையாளனாகிய) சங்கைமிக்க உன் இரட்சகனுக்கு மாறு செய்யும்படி உன்னை ஏமாற்றத்தில் தள்ளியது எது? அவன் எத்தகையவன் என்றால் அவனே உன்னைப் படைத்து, உன்னை அவனே சீராக்கி, செப்பனிட்டான். அவன் தான் நாடிய உருவத்தில் உன்னை (இறுக்கமாகப்)பிணைத்தான்.[82:6,7,8]
يٰۤاَيُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰى رَبِّكَ كَدْحًا فَمُلٰقِيْهِۚ
மனிதனே! நிச்சயமாக உன் இறைவனிடம் நீ சேரும் வரை சிரமப்பட்டு உழைப்பவனாக உழைக்கின்றாய் – பின்னர் அவனை (நன்மை செய்தவனாகவோ, தீமை செய்தவனாகவோ) நிச்சயமாக நீ சந்தித்தே தீர வேண்டும் . [84:6]
مَنْ كَانَ يُرِيْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهٗ فِيْهَا مَا نَشَآءُ لِمَنْ نُّرِيْدُ ثُمَّ جَعَلْنَا لَهٗ جَهَنَّمَۚ يَصْلاها مَذْمُوْمًا مَّدْحُوْرًا
எவர் (மறுமையைப் புறக்கணித்து விரைவில் அழியும்) இவ்வுலக வாழ்க்கையை விரும்புகிறாரோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் நரகத்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார். (17-18)
وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤٮِٕكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُوْرًا
இன்னும் எவர் முஃமினாகவும் இருந்து
மறுமையை நாடி அதற்காகத் தக்க முயற்சி செய்து , முயல்கின்றாரோ, அவர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.(17-18,19)
இது போன்ற பல அல்குர்ஆனியப் போதனைகள் இந்த உலகை மாத்திரம் மனிதன் தேர்வு செய்து அதனைக் குதூகலத் தளமாக எடுத்து இயங்குவதை எச்சரிக்கை செய்வதுடன் இலக்குத் தவறியவனுக்கு மறுமை நாளில் நரகமே கூலி என்றும் எச்சரிக்கை செய்கின்றன.
இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலகை மாத்திரம் தனது இலக்காகக் கொண்டு வாழும் மனிதர்களை கடுமையாக சபித்திருப்பதைப் பார்க்கின்றோம்.
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ، ﻋَﻦِ اﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ اﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ، ﻗَﺎﻝَ: «ﺗﻌﺲ ﻋَﺒْﺪُ اﻟﺪِّﻳﻨَﺎﺭِ، ﻭَﻋَﺒْﺪُ اﻟﺪِّﺭْﻫَﻢِ، ﻭَﻋَﺒْﺪُ اﻟﺨَﻤِﻴﺼَﺔِ، ﺇِﻥْ ﺃُﻋْﻄِﻲَ ﺭَﺿِﻲَ، ﻭَﺇِﻥْ ﻟَﻢْ ﻳُﻌْﻂَ ﺳَﺨِﻂَ، ﺗﻌﺲ ﻭَاﻧْﺘَﻜَﺲَ، ﻭَﺇِﺫَا ﺷِﻴﻚَ ﻓَﻼَ اﻧْﺘَﻘَﺶَ
{أخرجه الإمام في صحيحه }
பொற்காசின் அடிமையும், வெள்ளிக் காசின் அடிமையும், கருப்புத் துணியின் அடிமையும் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் கோபமடைவான். அவன் துர்பாக்கியவானாகட்டும். அவன் மீண்டும் மீண்டும் சறுக்கி விழட்டும். அவனுக்கு முள் தைத்துவிட்டால் அதை எடுக்க ஆளில்லாமல் தவிக்கட்டும் என . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துள்ளார்கள். ( புகாரி- 2887) .
வானவர்களால் பதியப்படும் மனித செயற்பாடுகள்
—
உலகில் மனித செயற்பாடுகள் அனைத்தையும் அல்லாஹ் தனது சங்கைமிக்க வானவர்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்ற என்பது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகும் .
அவ்வாறாயின் ஒரு எந்த முஸ்லிமும் தனக்கும், பிற மனிதர்களுக்கும் நன்மை செய்து வாழ்வதோடு பிறருக்கு தீங்கு செய்யாமாலும் வாழ வேண்டும் .
அதற்காகவே அவனது செயற்பாடுகள் இம்மையில் பதியப்பட்டு மறுமை நாளில் அவனிடம் எடுத்துக் காட்டப்படுகின்றன.
{وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ . كِرَاماً كَاتِبِينَ . يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ} [الانفطار:10-12]
உங்கள் மீது கண்ணியமான பதிவாளர்களான பாதுகாவலர்கள் (வானவர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ اليمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيد مَا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
[ ق: 17-18]
(மனிதனுக்கு) வலதிலும் இடதிலுமாக வார்த்தைகளைக் கவனித்து பதிவு செய்யும் வானவர்கள் இருவர் உள்ளனர். அவன் மொழிகின்ற எந்த வார்த்தையானாலும் அவனிடம் “ரகீப்” “அதீத்” என்போர் இருந்தே அன்றி (அவை அவனால் ) மொழியப்படுவதில்லை. (காஃப்-17-18).
உலகில் மனித செயற்பாடுகள் அனைத்தும் மிகவும் துல்லியமாகப் பதியப்பட்டு மறுமை நாளில் நீதமான தராசில் நிறுக்கப்படும் என்பது மற்றொரு விடயமாகும்.
இவ்வாறு உலகில் பதியப்படுகின்ற மனித செயற்பாடுகள் அனைத்து ம் அவனிடம் கொடுத்து “நீயே வாசித்துப் பார்” என்று வானவர்கள் கூறும்போது தற்போதைய நவீன உலகியல் விஞ்ஞான முன்னேற்றம் என்பது வெறும் பூச்சியம் என்பது அங்கு புலனாகி விடும் போது தனக்கு தீங்கிழைத்த மனிதன் விரல்களைக் கடித்து கைசேத்தை வெளிப்படுத்துதவதால் பயன் கிடைக்கப் போவதில்லை.
وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ عُنُقِهٖؕ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا
ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; மறுமை நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை நாம் வெளிப்படுத்துவோம். அதனை அவன் திறக்கப்பட்ட நிலையில் பெற்றுக் கொள்வான்.
அவனிடம்
اِقْرَاْ كِتٰبَك َؕ كَفٰى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيْبًا ؕ
“நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம். (17:13,14) என அல்லாஹ் எச்சரிக்கை செய்துள்ளான்.
நன்மைகள் செய்து வாழ்வோம்
—–
நமது செயல்களின் பிரதிபலன்கள் நன்மைகளாக இருக்குமானால் நமது வலக்கரத்தில் நமக்கான ஏடுகள் தரப்படும். அதுவே நாம் பெறும் மட்டற்ற மகிழ்ச்சியாகும்.
17:7 اِنْ اَحْسَنْتُمْ اَحْسَنْتُمْ لِاَنْفُسِكُمْوَاِنْ اَسَاْتُمْ فَلَهَا ؕ
நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தாலும் அதுவும் உங்களுக்கே. (17:7)
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ، ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ اﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ:
«ﻣَﻦْ ﻛَﺎﻧَﺖْ ﻟَﻪُ ﻣَﻈْﻠَﻤَﺔٌ ﻷَِﺧِﻴﻪِ ﻣِﻦْ ﻋِﺮْﺿِﻪِ ﺃَﻭْ ﺷَﻲْءٍ، ﻓﻠﻴﺘﺤﻠﻠﻪ ﻣِﻨْﻪُ اﻟﻴَﻮْﻡَ، ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻻَ ﻳَﻜُﻮﻥَ ﺩِﻳﻨَﺎﺭٌ ﻭَﻻَ ﺩِﺭْﻫَﻢٌ، ﺇِﻥْ ﻛَﺎﻥَ ﻟَﻪُ ﻋَﻤَﻞٌ ﺻَﺎﻟِﺢٌ ﺃُﺧِﺬَ ﻣِﻨْﻪُ ﺑِﻘَﺪْﺭِ ﻣَﻈْﻠَﻤَﺘِﻪِ، ﻭَﺇِﻥْ ﻟَﻢْ ﺗَﻜُﻦْ ﻟَﻪُ ﺣَﺴَﻨَﺎﺕٌ ﺃُﺧِﺬَ ﻣِﻦْ ﺳَﻴِّﺌَﺎﺕِ ﺻَﺎﺣِﺒِﻪِ ﻓَﺤُﻤِﻞَ ﻋَﻠَﻴْﻪِ»
{أخرجه الإمام في صحيحه }
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்காக இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து அது எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் (அநீதிக்குள்ளான)
அவரின் தோழரின் தீய செயல்கள் (அவரின் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.
என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி/ 2449)
யா அல்லாஹ் யாருக்கும் சொல், செயல் மூலம் அநீதி செய்யாத நிலையில் உன்னை நாம் மறுமையில் சந்திக்கும் நிலையை ஏற்படுத்தித் தருவாயாக!