எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.)
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இஸ்லாமிய மார்க்க அடிப்படைகள் பற்றிய தெளிவற்ற ஒரு மந்த நிலை காணப்பட்ட காலகட்டத்தில், இணைவைப்புக் கோட்பாட்டை எதிர்த்து, ஏகத்துவக் கோட்பாட்டை நிலைநாட்ட அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்கள் அயராது உழைத்தார்கள். அவரது பிரசாரம்தான் இலங்கையில் ஏகத்துவ எழுச்சியின் துவக்கமாக அமைந்தது. அவரது வீரியமான பிரசார அணுகுமுறையால், பெருந்தொகையான மக்கள் மார்க்க விழுமியங்களை அறியத்துவங்கி, அதன் வழி நடக்க ஆரம்பித்தார்கள். இன்று இலங்கையில் பல்வேறு ஏகத்துவ இயக்கங்களின் உருவாக்கத்திற்கும் கொள்கை எழுச்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்களே காரணமாக இருந்துள்ளார்கள்.
பிரித்தானிய ஆதிக்கம் இறுதி அத்தியாயத்தையடைந்து, சுதந்திர அலை வீச ஆரம்பித்திருந்த காலகட்டத்தில், இலங்கையில் அனைத்துவிதமான விடுதலையையும் உள்ளடக்கிய ஏகத்துவ பிரசாரத்தை முன்னெடுக்க ஓர் இயக்கம் தேவை என்ற நிலையில், ஜம்இய்யத்து அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்திய்யாவை அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.
ஏன் இப்பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார்கள் என்ற வரலாற்றை ஆராயும் போது, மிகவும் சுவையான ஒரு சம்பவத்தை அறிய முடிகிறது.
இறுதித் தூதை சுமந்த அரபு தேசம் 17-ம் நூற்றாண்டில் துருக்கிக்கும் குறுநில மன்னர்களின் ஆதிகத்திற்கும் உட்பட்டு, மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. இக்காலகட்டத்தில் மூட நம்பிக்கைகள் மலிந்திருந்தன. இந்த நிலையை அகற்றவும் ஏகத்துவ தீபத்தை மீண்டும் ஏற்றி வைக்கவும் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் அயராது உழைத்தார்கள். இவர் எழுதிய கிதாபுத் தவ்ஹீத் மக்கள் மத்தியில் மிகப் பெரும் தாக்கத்தையும் சிந்தனை மாற்றத்தையும் ஏற்படுத்தி, இஸ்லாத்தின் மீள் எழுச்சியில் பெரும் பங்களிப்பைச் செய்தது.
எனினும், அன்று ஏகத்துவ எழுச்சியை மக்கள் பெருமளவு வன்முறைகளைப் பயன்படுத்தி எதிர்த்தார்கள். எகிப்தை சேர்ந்த ஹாமித் அல் பக்ஹி என்பர், முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் ஏகத்துவக் கருத்துக்களை வன்மையாக எதிர்த்தவர்களில் ஒருவர் ஆவார். இவர் ஒரு தோட்டத்தின் உரிமையாளர். ஓரளவு செல்வ வளம் உடையவர். இவரது தோட்டத்தில் ஒருவர் கூலி வேலை செய்து வந்தார். ஹாமித் அல் பக்ஹி அவர்கள் எப்போதும் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களைத் திட்டிக் கொண்டே இருப்பார். நமது முதலாளி ஏன் தொடர்ந்து ஒருவருக்கு ஏசுகின்றார் என்று, கூலி வேலை செய்து வந்த நபர் சிந்திக்க ஆரம்பித்தார். ஏதாவது காரணம் இருக்கிறதா? அவரைப் பற்றி அறிய வாய்ப்பு இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்.
வரலாற்றில் அதிக எதிர்ப்புணர்வுகள்தான் அன்புணர்வுகளாக பரிணமித்துள்ளன. இது நபிமார்களின் வரலாற்றில் அதிகமாக அவதானிக்கக் கூடியது. இதே நிகழ்வுகள் ஏகத்துவ அறிஞர்களின் வாழ்க்கை நிகழ்வுகளிலும் அவதானிக்க முடிகிறது.
தொழிலாளியின் தேடலில் சிக்கயது கிதாபுத் தவ்ஹீத். வாசிக்க ஆரம்பித்தார். தொழிலாளியும் முதலாளியும் ஏன் அன்றைய முழு எகிப்தும் கொண்டிருந்த இஸ்லாம் பற்றிய கருத்தியலுக்கு மாற்றமாக மிகவும் ஆணித்தரமாக தெளிந்த ஏகத்துவ சிந்தனையை துணிகரமாக அல்குர்ஆன் அஸ்ஸூன்னா ஆகிய மூலாதாரங்களில் இருந்து அடுக்கடுக்கான சான்றுகளை முன்வைத்து அந்த நூல் எழுதப்பட்டிருந்தது. வாசிக்க வாசிக்க ஏகத்துவக் கோட்பாடு பற்றிய மிகவும் தெளிவான விளக்கம் அவருக்குக் கிடைக்கப்பெற்றது. இத்தகையை தெளிவான புரட்சியாளருக்காக நமது முதலாளி ஏசுகின்றார். நமது முதலாளிக்கு எப்படியாவது இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று சிந்தித்தார்.
அட்டையில் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் பெயர் காணப்பட்டது. அதனால், அட்டையைக் கிழித்துவிட்டு அவரது தோட்ட வேலை முடிந்ததும், முதலாளி பார்க்கும் வண்ணம் இந்த நூலை தொடர்ந்து வாசித்து வந்ததார். இதை அந்த முதலாளி ஒவ்வொருநாளும் அவதானித்தார். ஒரு நாள் நீ தொடர்ந்து எதை வாசிக்கின்றாய்? இந்த நூலில் அப்படி என்னதான் இருக்கின்றது? என்று என்று கேட்டார். அப்போது இவர் இந்த நூலை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள் என்று தனது முதலாளியான ஹாமித் அல் பக்ஹியிடம் கொடுத்தார். அன்று இரவு முழுதும் தூங்காது கிதாபுத் தவ்ஹீதை வாசித்தார் அந்த முதலாளி.
யார் இந்த நூலின் ஆசிரியர்? யார் இந்த அறிஞர்? யார் இந்தப் புரட்சியாளர்? என்று மறு நாள் வந்து தொழிலாளியிடம் கேட்டார். அப்போது தொழிலாளி, தினமும் நீங்கள் திட்டித் தீர்க்கும் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) தான் இதன் ஆசிரியர். பெயர் தெரிந்தால் வாசிக்க மாட்டீர்கள் என்றுதான் அட்டையைக் கிழத்துவிட்டுத் தந்தேன் என்றார்.
இந்த மனிதருக்கா நான் ஏசினேன். இவர் எவ்வளவு தெளிவாக அகீதவை முன்வைத்துள்ளார். இவரைப் பற்றி அறியாமல் திட்டிவிட்டேனே என்று கவலைப்பட்டு, ஏகத்துவ பிரசாரத்தை எப்படியும் எகிப்தில் முன்னெடுக்க வேண்டும் என்று ஹாமித் அல் பக்ஹி அவர்கள் 1926 களில் ஜம்இய்யத்து அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்திய்யாவை ஆரம்பித்தார்கள். இவர் மக்காவிற்கு வருகை தந்தபோது, பக்ரி அவர்கள் ஹாமித் அல் பக்ஹி அவர்களை அங்கு ஹரத்தில் சந்தித்தார்கள். அந்த சந்திப்புத்தான் அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்களின் வாழ்வில் இன்னொரு அத்தியாயத்தை ஏற்படுத்துகிறது. இலங்கையில் ஏகத்துவ எழுச்சிக்கும் வித்திட்டது.
ஹாமித் அல் பக்ஹி அவர்களுடனான சந்திப்பு மிகப் பெரிய தாக்கத்தை அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்களின் வாழ்வில் ஏற்படுத்துகிறது. இலங்கையில் அதன் பிரதிபலிப்புதான் 1947ல் ஜம்இய்யத்து அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்திய்யா அவரால் உருவாக்கப்படுகிறது. இந்த சந்திப்பு சர்வதேசிய அறிஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியதோடு, அவர்களின் ஆளுமையினால் தாக்கமுற்றும் உள்ளார்கள்.
1906ம் ஆண்டு ஆட்சிப்பீடம் ஏறிய மன்னர் அப்துல் அஸீஸ் அவர்கள் ஹிஜாஸ் – நஜ்த் என்று இரண்டாகப் பிரிந்திருந்த நாட்டை சவூதி அரேபிய இராச்சியமாகப் பிரகடனப்படுத்தினார். இதன் காரணமாக (مؤسس المملكتين وخادم الحرمين) இரண்டு இராஜ்ஜியத்தின் மன்னர் இரண்டு ஹரம்களின் பணியாளர் என ரஷீத் ரிழா அவர்கள் மன்னர் அப்துல் அஸீஸ் அவர்களைப் புகழ்கின்றார்கள்.
மன்னர் அப்துல் அஸீஸ் அவர்கள் எதையும் தவ்ஹீத் என்ற பெயராலேயே ஆரம்பிக்கும் பண்புள்ளவராக இருந்துள்ளார். 100க்கும் அதிகமான இஸ்லாமிய நூல்களை வெளியிட்டுள்ளார். தாருத் தவ்ஹீத் என்று இவரது காலத்திலே பல கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் கற்றுத் தேரியோர்தான் ஹய்அதில் கிபாரில் உலமா, மஜ்லிஸ் கழா அல் அஃலா போன்ற நிருவனங்களில் உள்வாங்கப்படுகின்றனர்.
அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்களும் சவூதி அரேபியாவின் தலைமை முப்தியாக இருந்த அறிஞர் அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹ்) அவர்களும் நெருங்கிய நண்பர்கள். எனவே, அந்த அறிஞர்களின் ஆளுமை அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்களிலும் இயல்பாகவே பிரதிபலித்துள்ளது.
அத்தோடு. மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் – உஸ்தாத் அப்துல்லாஹ் முராத் அவர்களின் வகுப்பு நண்பராக பக்ரி (ரஹ்) அவர்கள் இருந்துள்ளார்கள். உஸ்தாத் அப்துல்லாஹ் முராத் அவர்கள் ஏகத்துவ சிந்தனையால் ஆகர்சிக்கப்பட்ட இலங்கை மாணவர்களிடம் பக்ரி (ரஹ்) அவர்கள் பற்றி விசாரிப்பவராகவும் அவரைப் பாராட்டிப் பேசுகின்றவராகவும் இருந்துள்ளார். இவ்வாறான பேரறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதோடு. இந்தியா, பாகிஸ்தான், சவூதி அரேபியா, எகிப்து போன்ற பல நாட்டு அறிஞர்களுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்துள்ளார்கள்.
தாருத் தவ்ஹீத் என்ற பெயரில் நாட்டின் பல பாகங்களிலும் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து, ஷிர்க், பித்அத் , மூட நம்பிக்கைகள், காதியானிஸம் போன்ற அனைத்து வழிகேடுகளையும் தயவு தாட்சண்யமின்றி எதிர்த்தார். அவரது அயராத உழைப்பால்தான் இலங்கையில் ஏகத்துவ எழுச்சி வளர்ச்சி கண்டது.
பிரித்தானியர்கள்தான் காதியானிசத்தை போசித்து வளரத்தார்கள். அந்த நேரத்தில் இலங்கையில் யாரும் அது தொடர்பாக வாய் திறக்க அஞ்சிய காலகட்டத்தில், அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்கள் மிகவும் துணிவாக காதியானிஸத்தை எதிர்த்து உண்மை உதயத்தில் எழுதினார்கள். அன்றைய சூழலில் இஸ்லாமிய இதழ் ஒன்று நடாத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. எனினும், மக்களை எல்லாவகையிலும் சிந்திக்கத் தூண்டி, அறிவு வழியில், மார்க்க நெறியில் பயணிக்கப் பழக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் உண்மை உதயம் என்ற பத்திரிகையை வெளியிட்டார். அதில், காதியானிசத்தையும் எதிர்த்து எழுதியதன் மூலம் பிரித்தானிய ஆதிக்கத்தையும் பக்ரி (ரஹ்) அவர்கள் எதிர்த்துள்ளார்கள் என்று கருதமுடிகிறது.
மாஷா அல்லாஹ் சிறந்த தகவல்கள் ஷெய்க் ஹபீல் ஸலபி அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! இந்த தகவல்களுக்கான உசாத்துனைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவீர்கள் என்றால் இன்னும் சிறந்தாக உங்கள் ஆக்கம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஜஸாகல்லாஹு ஹைரன்.