எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A)
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் பாதிப்புக்கும் பொருளாதார ரீதியான நெருக்குதல்களுக்கும் ஆளாகினர். ஆங்கிலேயர் இலங்கையை ஆக்கிரமித்த பின்னர், ஆங்கிலேயரின் சில சுதந்திர வர்த்தக நடவடிக்கைகளால் முஸ்லிம்களின் வாழ்வும் வர்த்தகமும் மலர ஆரம்பித்தது. அன்று பொருளீட்டக் கூடிய பல துறைகளில் முஸ்லிம்கள் பரவலாக ஈடுபட்டனர். வர்த்தக முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அளவு முஸ்லிம்கள் வியாபித்து இருந்தனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இருந்த நிலை போன்றல்லாது, முஸ்லிம்களின் சமய – கலாச்சார சுதந்திரங்களும் மீண்டும் மலர்ச்சி பெற ஆரம்பித்ததால், பிரித்தானிய ஆட்சியின் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தை ஆதரித்ததோடு, ஆங்கில அரசுடன் இணங்கிச் செல்லும் நிலைப்பாட்டையும் முஸ்லிம்கள் கடைப்பிடித்தனர்.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின் வர்த்தக மேலாண்மை, சிங்கள வர்த்தக வகுப்பினர் மத்தியில் போட்டி மனப்பான்மையையும் முறுகல் நிலையையும் உருவாக்கியது. இந்த உணர்வு 1915 கலவரத்தில் தாக்கம் செலுத்தியது. அதனால், முஸ்லிம்களின் பொருளாதாரம் இனவாதிகளால் இலக்கு வைத்து அழிக்கப்பட்டது.
அந்நியர் (பிரித்தானிய – ஆங்கிலேயர்) நமது நாட்டை ஆளுகின்றனர் என்ற உணர்வில் முஸ்லிம்களில் சிலர் அவர்களை எதிர்க்கவில்லை. அன்று யார் ஆட்சி செய்கின்றார்கள் என்பது முக்கியத்துவம் பெறவில்லை. எவ்வாறு ஆட்சி செய்கின்றார்கள் என்பதுதான் முக்கிய கவன ஈர்ப்பைப் பெற்றது. எனினும், அன்று, தேசியவாத எழுச்சியை முன்னெடுத்துச் சென்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் இனரீதியான உணர்வை வெளிப்படுத்தினர். முஸ்லிம்களின் வர்த்தக மேலாண்மையை நிறுத்தி, சிங்களவர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்த விரும்பினர். அதனால், தேசிய போராட்டங்களில் கூட இன உணர்வை வெளிப்படுத்தினர். இது முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அத்தோடு, ஆங்கிலேயர், கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயன்ற காரணத்தினால் சிலர் எதிர்த்தனர். இன்னும் அவர்கள் இலங்கை நாட்டு வளங்களைச் சுரண்டியமையும் எதிர்ப்புக்கான ஒரு காரணமாக அமைந்தது. அத்தோடு, இஸ்லாத்தை கலங்கப்படுத்த பல முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர். காதியானிசத்தை அறிமுகப்படுத்தி, போஷித்து வளர்த்தனர். வேறு சில சுதந்திரங்கள் வழங்கப்பட்டாலும் இத்தகையை நடவடிக்கைகள் பிரித்தானியர் மீது முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
சுதந்திர போராட்டம் இந்தியாவில் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. அங்கு முஸ்லிம்கள் பெருமளவு உயிர்த்தியாகங்களைச் செய்தனர். ஆனால், இலங்கையில் சாத்வீகமான போராட்டமாகவே அமைந்தது. அக்காலத்தில் தவ்ஹீத் எழுச்சியை எற்படுத்திய அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) போன்றவர்கள் மாற்றுக் கொள்கைவாதிகளால் எதிர்க்கப்பட்டார்கள். அதனால், ஏகத்துவக் கொள்கையில் உடன்படாத மாற்றுக் கொள்கைவாதிகளுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. எனினும், பிரித்தானியர் அறிமுகப்படுத்திய காதியானிசத்தை தனித்து நின்று தனது ஏகத்துவ கொள்கை அப்போது ஏற்றுக் கொண்ட சிலருடன் இணைந்து எதிர்த்ததன் மூலம் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியதை அவதானிக்கமுடிகிறது.
பொதுவாக ஸலபு அறிஞர்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக களத்தில் ஆயுதப் போராட்டம் நடாத்த முன்வருவதில்லை. அறிவார்ந்த அறிவுரைகள் மூலம் ஆட்சியாளர்களை நெறிப்படுத்த முனைந்துள்ளார்கள். அரிதாக சில ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டும் உள்ளார்கள் என்பதை வரலாற்றின் பதிவுகள் மூலம் அறியலாம். அதேவேளை ஒரு நாட்டை அந்நிய மத சக்திகள் அக்கிரமித்ததை எதிர்த்து பல அறிஞர்கள் போராடியுள்ளார்கள். ஆட்சி விவகாரம் நமக்கு சம்மந்தம் இல்லை என்று அவர்கள் அவதானிகளாக இருக்கவில்லை.
பிரித்தானியர்களால் இலங்கை முஸ்லிம்களுக்கு வர்த்தக, சமய – கலாசார சுதந்திரங்கள் வழங்கப்பட்டதாலும் அன்றைய தேசிய எழுச்சியை முன்னெடுத்த தமிழ் – சிங்கள தலைவர்கள் இனவாதத்தை முதன்மைப்படுத்தியதாலும் பெரும்பான்மை இனத் தலைவர்களின் பாரபட்சமான தேசிய உணர்வு ளெிப்பாடுகளாலும் முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாலும் தேசிய எழுச்சிகளில் முஸ்லிம்கள் பங்கு பற்றாமல் ஒதுங்கி இருந்தனர் எனக் கருத முடிகிறது. எனினும், ஆங்கிலேயரின் சுரண்டல், கிறிஸ்தவ மதப்பிரசாரம், காதியானிஸ ஆதரவு நிலை போன்ற காரணங்களுக்காக முஸ்லிம்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் என்றே கருத முடிகிறது.
முஸ்லிம் ஆட்சியாளர் ஆளுகின்ற தேசங்களில் யார் ஆளுகின்றார்கள் என்று ஸலபுகள் பார்ப்பதில்லை. எத்தகையை ஆட்சி மேற்கொள்கின்றார்கள் என்பதில் கவனம் செலுத்தியுள்ளார்கள். கெட்ட மன்னனுக்கு முன்னால் சத்தியத்தை எடுத்துச் சொல்வதிலும் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர். அந்தவகையில்தான் அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்களும் பிரித்தானியரின் இஸ்லாத்திற்கு எதிரான போக்கை கண்டித்து எழுதியதன் மூலம் அந்த ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துள்ளார். அத்தோடு, அன்று தவ்ஹீத் பிரசாரத்திற்கு அனைத்துத் தரப்பும் எதிராக களம் இறங்கிய காலகட்டத்தில் இவர் தனித்து நின்று காதியானிஸத்தை எதிர்த்ததன் மூலம் ஆங்கில அரசைப் பகைக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று அறிந்தும் துணிகரமாக மேற்கொண்டமை அவரது கொள்கைப் பிடிப்பை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இதை நாம் எமது கட்டுரையில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். ”பிரித்தானியர்கள்தான் காதியானிசத்தை போசித்து வளரத்தார்கள். அந்த நேரத்தில் இலங்கையில் யாரும் அது தொடர்பாக வாய் திறக்க அஞ்சிய காலகட்டத்தில், அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்கள் மிகவும் துணிவாக காதியானிஸத்தை எதிர்த்து உண்மை உதயத்தில் எழுதினார்கள். அன்றைய சூழலில் இஸ்லாமிய இதழ் ஒன்று நடாத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. எனினும், மக்களை எல்லாவகையிலும் சிந்திக்கத் தூண்டி, அறிவு வழியில், மார்க்க நெறியில் பயணிக்கப் பழக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் உண்மை உதயம் என்ற பத்திரிகையை வெளியிட்டார். அதில், காதியானிசத்தையும் எதிர்த்து எழுதியதன் மூலம் பிரித்தானிய ஆதிக்கத்தையும் பக்ரி (ரஹ்) அவர்கள் எதிர்த்துள்ளார்கள் என்று கருதமுடிகிறது.”
அந்நிய சக்திகள் தாம் வாழும் நாட்டை ஆக்கிரமித்து, அதன் வளங்களைச் சுரண்டி, பிறமதத்தைப் பரப்புவதை எதிர்ப்பதை எந்த முஸ்லிமும் தேசிய வாதமாகப் பார்ப்பதில்லை. இத்தைகைய போராட்டங்களை இஸ்லாமிய அறிஞர்கள் தேசியவாத ஜாஹிலியத்தாகப் பார்ப்பதில்லை. தமது நாட்டை பிறமதவாதிகள் கெட்ட நோக்கில் ஆக்கிரமித்து, சுரண்டுவதை எதிர்ப்பது மார்க்கக் கடமை. அத்தகைய கடமையை மேற்கொள்வோரை இஸ்லாமிய அறிவுள்ளவர்கள் யாரும் தேசியவாதியாகப் பார்க்கமாட்டார்கள்.
ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் அரியணையில் இருந்து அவர் சில தவறுகள் விடும் போது, அதைக் கண்டித்து இஸ்லாத்தின் நிழலில் நெறிப்படுத்த ஸலபுகள் முழு முயற்சியையும் செய்துள்ளார்கள். ஆனால், அந்நிய சக்திகள் தாம் வாழும் நாட்டை ஆக்கிரமிப்பதை முறியடிப்பதில் களத்தில் நின்று போராடியும் உள்ளார்கள். எனவே, நல்லறிஞர்கள் ஆட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது இஸ்லாமிய வரலாற்று அறிவற்றோரின் வாதமாகும். முஸ்லிம் உம்மத்தில் தோன்றிய கெட்ட மன்னர்களுக்கு எதிராக சில நல்லறிஞர்கள் போராடியும் உள்ளனர். அந்தப் பின்னணியில்தான் பக்ரி (ரஹ்) அவர்களின் காதியானிஸ எதிர்ப்பையும் நோக்க வேண்டியுள்ளது.
பொதுவாக தவ்ஹீத் பிரசாரத்தை மேற்கொள்வோரை யூதக் கைக் கூலிகள் என்று வரலாற்று அறிவற்றவர்களும் இஸ்லாமிய அகீதாவில் தெளிவற்றோரும் பிரசாரம் செய்துவருகின்றனர். பக்ரி (ரஹ்) அவர்கள் பிரித்தானியரின் ஆட்சியை எதிர்க்காமல் அவர்களின் கைக் கூலியாகச் செயற்பட்டார் என்று சிலர் நிறுவ முயற்சிக்கின்றனர். ஓர் ஆக்கிரமிப்பாளன் அறிமுகப்படுத்திய தவறான கொள்கையை மிகத் தெளிவான வாசங்களால், எழுத்து மூலம் எதிர்த்ததன் மூலம் அவர் இத்தகைய குறுமதி விமர்சகர்களின் போலிப் பிரசாரத்தைவிட்டும் ஆவண ரீதியாகப் பாதுகாக்கப்படுகிறார்.
ஆசிய நாட்டு மக்களின் நம்பிக்கைக் கோட்பாட்டுக்கு விரோதமான, இலங்கை முஸ்லிம்களுக்கு முற்றிலும் அறிமுகமற்ற, இஸ்லாமிய அகீதாவை தகர்க்கக் கூடிய, இறுதித் தூதை நிராகரிக்கக் கூடிய, இஸ்லாத்தின் பூரணத்துவத் தன்மையை சிதைக்கக் கூடிய கொள்கையைான காதியானிஸத்தை அவா் வன்மையாக எதிர்த்துள்ளார். அதேவேளை, இத்தகையை பாரதூரமான காதியானிஸத்தை அறிமுகப்படுத்திய ஆக்கிரமிப்பு சக்தியை எதிர்க்கவில்லை என்பது விசனத்திற்குரியதாகப் பார்க்கப்படும். அத்தோடு, அவர் சுதந்திர அலை மேலெழுந்த காலகட்டத்தில் அதிக நாட்கள் அவர் இலங்கையில் இருக்க வில்லை. அதனால் முழுமையான பங்களிப்பை அவரால் வழங்க முடியாமல் போயிருக்கலாம். எனிலும், அவர் காதியானிஸத்தை வன்மையாக எதிர்த்துள்ளதன் காரணமாக பிரித்தானிய காலனித்துவத்தை எதிர்த்தார் என்றே கருதமுடிகிறது.