M.A.Hafeel Salafi (M.A)
தொடர் – 02
எதற்காக நன்றி செலுத்த வேண்டும்?
அல்லாஹ் எந்தத் தேவையும் அற்றவன். மனிதன் பல்வேறு தேவைகள் உடையவன். மனிதனின் கற்பனைகளில் கற்பிதம் செய்ய முடியாத அளவு அல்லாஹ் மனிதனுக்குப் பல்வேறு அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அவற்றிற்காக மனிதன் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவற்றிற் சில அருட்கொடைகளை நோக்குவோம்.
நேர்வழியைக் காட்டியதற்காக நன்றி:
ஒரு மனிதனால் பிற மனிதனுக்கு வழிகாட்ட முடியாது. இறை வழிகாட்டலான வஹியின் மூலமாகத்தான் நேர்வழியைப் பெற முடியும். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவரவர் மொழியில் இறை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டு வந்தன. இறுதியாக அல்குர்ஆன் முழு மனித இனத்திற்கும் வழிகாட்டும் அருட்கொடையாக வழங்கப்பட்டது.
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது.) (அல்பகரா: 185)
ஞானத்தை வழங்கியதற்கு நன்றி :
மனிதனுக்கு அல்லாஹ் அறிவை வழங்கினான். மனிதன் விலங்கிலிருந்து வேறுபடும் முக்கிய அம்சமாக அவன் பெற்றுள்ள பகுத்தறிவு விளங்குகிறது. அத்தோடு ஹிக்மத் என்ற ஞானத்தையும் வழங்கியுள்ளான். இதற்காக மனிதன் தன்னைப் படைத்த ரப்புக்கு நன்றி செலுத்த வேண்டும்.
وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ )لقمان
‘அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! நன்றி செலுத்துகிறவர் தமக்கே நன்றி செலுத்திக் கொள்கிறார். யார் (ஏக இறை வனை) மறுக்கிறாரோ, அல்லாஹ் தேவையற்றவன்| புகழுக்குரியவன் என்று (கூறி) லுக்மானுக்கு ஞானத்தை வழங்கினோம். (லுக்மான் : 12-13)
இரவு – பகலை ஏற்படுத்தியதற்காக நன்றி :
وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُون
நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது. (அல்கஸகஸ் :73)
தூய்மையான உணவவை வழங்கியதற்காக நன்றி :
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! (அல் பகரா : 172)
வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்ததற்காக நன்றி :
وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ
பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்! (அல் அஃராப் : 10)
பலப்படுத்தியதற்காக நன்றி :
وَاذْكُرُوا إِذْ أَنْتُمْ قَلِيلٌ مُسْتَضْعَفُونَ فِي الْأَرْضِ تَخَافُونَ أَنْ يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَآوَاكُمْ وَأَيَّدَكُمْ بِنَصْرِهِ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
மக்கள், உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்திட தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.(அல் அன்பால் : 26)
சிரமப்படுத்தாமைக்காக நன்றி :
مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِنْ حَرَجٍ وَلَكِنْ يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.(அல்மாயிதா :06)
நல்ல தண்ணீரைத் தந்ததற்காக நன்றி :
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா? (அல்வாக்கிஆ : 68-70)
நன்றி செலுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கினான்:
وَإِذْ وَاعَدْنَا مُوسَى أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ
ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்! அவருக்குப் பின் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம். (அல்பகரா : 51-52)
நன்றி தெரிவிக்கும் முறை
ஒரு மனிதருக்கு இன்னொரு மனிதரிடம் இருந்து உதவி கிடைக்கும் பொழுது அகமும், முகமும் மலர தன் நன்றியைத் தெரிவிக்கின்றான். இந்த நன்றியுணர்வு ஐந்தறிவு படைத்த விலங்கினங்களிடம் கூட வெளிப்படுகிறது. அவை, தம்மைப் பராமரிப்பவருக்கும், உணவு தருபவருக்கும் நன்றி விசுவாசத்துடன் இருப்பதைப் பார்க்கின்றோம் , இந்தப் பண்பு நம்மிடம் இல்லை என்றால் நாம் ஆறறிவு படைத்தவர்கள் என்று சொல்லத் தகுதியற்றவர்களாகிவிடுவோம். இன்னும் நாம் மனிதர்களே அல்லர் என்ற நிலை கூட ஆகிவிடும். எனவே, அல்லாஹ்விற்கு அதிகம் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். அவனை அதிகம் நினைவு கூறவேண்டும். நாம் அவனை வணங்கி, நினைவுகூறும் போது, அவன் நம்மை நினைத்துப் பாரக்கின்றான்.
நினைவு கூறல் :
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ
எனவே, என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (அல்பகரா : 152)
இணை கற்பிக்காதவனே நன்றி செலுத்தத் தகுதியானவன் :
فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்!(அந்நஹ்ல் : 114)
நன்றிக்கு நன்றி
மனிதனை நன்றி செலுத்துமாறு படைத்தவன் கட்டளையிடுகின்றான். படைப்பாளன் அதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து, மனிதன் செய்யும் நற்காரியங்களுக்கு அவனது அருள் வளங்களை அதிகரித்துக் கொடுப்பதோடு, அவன் மனிதனுக்கு நன்றியும் தெரிவிக்கின்றான் என்பதை பின்வரும் நபி மொழி பிரஸ்தாபிக்கிறது.
حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ سَمِعْتُ أَبِي عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا رَأَى كَلْبًا يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ فَأَخَذَ الرَّجُلُ خُفَّهُ فَجَعَلَ يَغْرِفُ لَهُ بِهِ حَتَّى أَرْوَاهُ فَشَكَرَ اللهُ لَهُ فَأَدْخَلَهُ الْجَنَّةَ صحيح البخاري
‘ஒரு மனிதர் நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதைப் பார்த்தார். பிறகு கிணற்றில் இறங்கி, தன் காலுறையைத் தண்ணீரால் நிரப்பி (மேலே கொண்டு வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ், அவருக்கு நன்றி தெரிவித்து, சுவர்க்கத்தில் நுழைவித்தான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி :173)
ஒரு மனிதன் ஒரு கவள உணவை உட்கொண்டு அல்லாஹ்வைப் புகழும் போதும், ஒரு மிடறு தண்ணீரை அருந்திவிட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழும் போதும் அல்லாஹ் அந்த மனிதன் விஷயத்தில் திருப்திபடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 4915