காட்டில் ஒரு தனி மனிதன்.., அவனை ஒரு சிங்கம் துரத்திக்கொண்டே வந்தது, சிங்கத்திடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அவன் ஓடிக்கொண்டே இருந்தான், நீண்ட தூரம் கழித்து ஒரு பாழடைந்த கிணற்றைக் கண்டான், சிங்கத்திடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்த கிணற்றுக் கயிற்றைப் பிடித்துத்தொங்கிக்கொண்டு சிங்கத்திடமிருந்து தப்பித்துவிட்டோம் என நிம்மதி பெருமூச்சு விட்டான்.
சற்று நேரம் கழித்து கிணற்றின் கீழே பார்த்தான்.., மிகப்பெரிய மலைப்பாம்பு வாயைப் பிளந்த வண்ணம் இவனை எதிர்பார்த்து இருந்தது, மேலே சிங்கம் – கீழே மலைப்பாம்பு இந்நிலையில் தான் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றை இரண்டு எலிகள் துண்டித்துக்கொண்டிருந்தது, அதில் ஒன்று வெள்ளை எலி மற்றொண்டோ கருப்பு எலி!
தான் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றை எலிகள் துண்டிப்பதைக் கண்டு அதிர்ந்துபோய் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கிணற்றின் அருகில் மரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்து சில தேன் துளிகள் சொட்டிக்கொண்டிருந்தது இந்நிலையிலும் தன்னிலையை மறந்து அந்த தேன் துளிகளை தன் விரல்களால் எடுத்துச் சுவைத்த நிலையில்…, ஆஹா நம் வாழ்நாளில் இப்படியொரு தேனைச் சுவைத்ததே இல்லையே என்று மதிமயங்கிப்போனான்.
சுவைத்த அந்தத் தேனின் சுவையால் கிணற்றின் மேலே உள்ள சிங்கத்தையும் மறந்துவிட்டான், கீழே உள்ள மலைப்பாம்பையும் மறந்துவிட்டான், தன்னுடைய உயிர் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றை இரண்டு எலிகள் அறுத்துக்கொண்டிருந்ததையும் மறந்துவிட்டான்…! சுபுஹானல்லாஹ்.., இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள், அவனைத் துரத்திக்கொண்டு வந்த சிங்கம்தான் ”மரணம்” ஒவ்வொரு மனிதனையும் மரணம் துரத்திக்கொண்டே வருகின்றது, ஒருநாள் அந்த மரணம் அவனை அடைந்தே தீரும்.
கிணற்றின் கீழே வாயைப் பிளந்துகொண்டிருந்த பாம்புதான் ”கபுர்” (புதைகுழி) ஒவ்வொரு மனிதனும் அந்த புதைகுழியை அடைந்தே தீருவான். எவர் நன்மை செய்தாரோ அவருக்கு அங்கு இன்பமான வாழ்க்கையும், எவன் பாவம் செய்தானோ அவனுக்குத் துன்பமான வாழ்க்கையும் அங்கு அடைந்துகொள்வான்.
மனிதன் தொங்கிக்கொண்டிருந்த அந்த கயிறுதான் வாழ்க்கை! வெள்ளை எலியும், கருப்பு எலியும் பகலையும் – இரவையும் குறிப்பதாகும் இந்நிலையில்தான் மனிதன் வாழ்க்கையை கழிக்கின்றான். அந்தத் தேன் கூடுதான் இந்த உலகமாகும். மனிதன் இந்த உலகத்தின் இன்பத்தால் தன்னை நோக்கி வந்துகொண்டிருக்கின்ற மரணத்தை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றான். (”வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்” என்ற தலைப்பில் நேற்றைய உரையில் (07/02/2020) அஷ்ஷெய்க். இப்ராஹீம் மதனி அவர்கள் நினைவூட்டியது)
—————-
S.A.Sulthan
14/06/1441-H
Jeddah.