ஆசிரியர் பக்கம் – ஜனவரி 2020
அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகின்றான் (முஸ்லிம்) என்பது இறைத்தூதர் முஹம்மத்(ச) அவர்களது போதனையாகும். அல்லாஹ்வைப் பற்றி குர்ஆன் அறிமுகம் செய்யும் போது, ”அஹ்ஸனுல் ஹாலிகீன்’ – அழகிய படைப்பாளன்’ (23:14, 37:125) என்று குறிப்பிடுகின்றது. இந்த வகையில் இஸ்லாம் அழகுணர்வை ஆர்வமூட்டக் கூடிய மார்க்கமாகும்.
‘நாம் வானத்தில் கோள்களை அமைத்து, பார்ப்போருக்கு அதனை அலங்கரித்துள்ளோம்;.’ (15:16)
வானத்தில் கோள்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதை அழகாக ஆக்கினோம் என்ற வசனம் பார்ப்பதற்கு ஒரு பொருளை அழகுற வடிவமைப்பது நல்ல செயல் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
பூமியின் மேல் உள்ளவற்றை அதற்கு அலங்காரமாக அமைத்ததாக 18:7 வசனம் கூறுகின்றது.
கோள்கள், நட்சத்திரங்கள் கொண்டு உலகின் வானத்தை நாம் அழகுபடுத்தினோம் (37:6) என அல்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. இதே கருத்து 41:12, 50:6, 67:5 போன்ற பல வசனங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவை அல்லாஹ் அழகை விரும்புகின்றான் என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.
அழகு என்பது வெறுமனே வடிவங்களில் மாத்திரம் அமையக் கூடியது அன்று. வாழ்க்கை வழிமுறைகளிலும் இருக்கின்றது. ஆடு, மாடுகளை மேய்க்கக் கூடியவர்கள் காலை, மாலையில் அவற்றை ஓட்டிச் செல்வதில் கூட அழகு இருப்பதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
‘(அவற்றை) நீங்கள் மாலையில் ஓட்டி வரும் போதும், காலையில் அழைத்துச் செல்லும் போதும் அதில் உங்களுக்குக் கவர்ச்சி இருக்கிறது!’ (16:6)
இந்த வகையில் இஸ்லாம் சொல்லும் போதனை மனித வாழ்வில் மாற்றத்தை உண்டு பண்ணி அவனது பேச்சு, நடத்தை, கொடுக்கல்-வாங்கல் போன்ற அனைத்தையும் அழகுபடுத்துகின்றது. இந்த வகையில் மனிதன் இறைவனுக்குக் கட்டுப்பட்டு அவனது விருப்பத்திற்கு எற்ற விதத்தில் வாழ்வை மாற்றிக் கொண்டால் அவனது அனைத்தும் அழகு பெற்று விடும்.
‘அல்லாஹ்வின் வர்ணத்தைப் (பின்பற்றுங்கள்.) அல்லாஹ்வை விட வர்ணம் தீட்டுவதில் மிக அழகானவன் யார்? நாம் அவனையே வணங்குவோராக இருக்கின் றோம் (எனக் கூறுவீர்களாக!)’ (2:138)
இந்த வசனம் அல்லாஹ்வை அழகிய வர்ணம் தீட்டுபவனாக அறிமுகம் செய்கின்றது. இந்த உலகில் உள்ள கோடான கோடி மலர்கள், மீன்கள், பறவைகள், இயற்கை வஸ்துக்கள் அனைத்தையும் ஒரு முறை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள். அல்லாஹ் எவ்வளவு அழகாக வர்ணம் தீட்டுபவன் என்பது புரியும்! இது மட்டுமன்றி மிகக் கொடிய குணம் கொண்ட, கெட்ட நடத்தையுடைய அரபு சமூகத்தை இஸ்லாம் வர்ணம் தீட்டி எவ்வளவு அழகுபடுத்தியது என்பதை வரலாற்றை வாசிக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி அவர்களின் ‘தேசத்தை அழகுபடுத்தல்’ திட்டத்தினூடாக நாட்டில் காணப்படும் வெற்றுச் சுவர்கள், மதில்கள் என்பன சித்திரங்களினூடாக அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பான்மை சமூக மக்கள் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர். முஸ்லிம்களும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர். அழகு என்பது இஸ்லாம் விரும்பக் கூடிய அம்சம் என்கின்ற வகையில் இதற்கு நாம் தாராளமாக ஆதரவு வழங்கலாம்.
கலைகளில் ஒவ்வொரு சமூகத்தினதும் கலாசாரமும், பண்பாடும் மதமும் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாததாகும். இந்த வகையில் பெரும்பான்மை சமூகத்தின் சுவரோவியங்களில் பௌத்த மதமும், சிங்கள கலாசாரமும் மேலோங்கி நிற்கும் என்பது தவிர்க்க முடியாததாகும்.
பாதையோரங்களில் எல்லாம் பள்ளிகள் அமைந்துள்ளன| பன்சலைகள் இல்லை என ஏங்குகின்றவர்களுக்கு நாடெங்கிலும் பௌத்த சிங்கள கலாசாரத்தை வெளிப்படுத்தும் சித்திரங்கள் ஓரளவு மன நிறைவைக் கொடுக்கும் என்றால் அதில் நாம் குறை காண முடியாது. இந்த சுவரோவியங்களை வரையும் முஸ்லிம்கள் சில விடயங்களில் கரிசனை காட்டுவது நல்லதாகும்.
இஸ்லாம் உயிருள்ள ஜீவன்களை சித்திரமாக வடிப்பதை விரும்பவில்லை. இந்த வகையில் உருவங்கள் வரைவதைத் தவிர்த்து, அழகிய இயற்கைக் காட்சிகளை வரையலாம்.
‘நான் இப்னு அப்பாஸ்(வ) உடன் இருந்த போது ஒருவர் வந்து, ‘அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்’ எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ்(வ), ‘நபி(ச) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். ‘யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது’ என்று நபி(ச) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்’ என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ்(வ), ‘உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!’ என்றார்.’
அறிவிப்பவர்: ஸயீத் இப்னு அபில் ஹஸன்
நூல்: புகாரி: 2225
‘நாங்கள் மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அவர்களுடன் யஸார் இப்னு நுமைர்(ரஹ்) அவர்களின் இல்லத்தில் இருந்தோம். அப்போது யஸார்(ரஹ்) அவர்களின் வீட்டுத் திண்ணையில் சில சிலைகள் இருப்பதை மஸ்ரூக்(ரஹ்) கண்டார்கள். உடனே ‘அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்’ என்று நபி(ச) அவர்கள் கூறியதைத் தாம் செவியேற்றதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(வ) கூற கேட்டேன்’ என்று மஸ்ரூக்(ரஹ்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஸ்லிம் இப்னு ஸ§பைஹ்(ரஹ்)
நூல்: புகாரி: 5950
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என (இடித்து)க் கூறப்படும். என அப்துல்லாஹ் இப்னு உமர்(வ) அறிவித்தார்.’ (புகாரி: 5951)
‘சிலை வணக்கமும் உருவ வழிபாடும் மனித இன வரலாற்றில் உருவாக உருவம் வரையும் செயற்பாடுகளே காரணமாக இருந்தது என்பதால் உருவம் வரைவதை இஸ்லாம் இவ்வளவு கடுமையாகக் கண்டிக்கின்றது. இந்த வகையில் இயற்கைக் காட்சிகளை நாம் வரையலாம். அடுத்து, வெறும் அழகை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாமல்,
போதை எதிர்ப்பு,
அன்பை வளர்த்தல்,
மத, சமூக ஒற்றுமையை உறுதிப்படுத்தல்,
தேச நலன்,
நற்பண்புகளை உருவாக்குதல்,
போன்ற கருத்துக்களை உருவாக்கக் கூடிய சித்திரங்களை வரையலாம்.
இந்த செயற்றிட்டங்களினூடாக நாட்டின் சுவர்கள் மட்டுமே அழகுபெறும். ஆனால், நமது உள்ளங்களில் படிந்துள்ள கறைகளை அகற்றி உள்ளங்களுக்கு வர்ணம் தீட்ட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
முஸ்லிம்கள் மீது சிங்கள, தமிழ் மக்களில் சிலர் வெறுப்பில் உள்ளனர். தமிழர்கள் மீது சிங்கள, முஸ்லிம் மக்களில் சிலர் வெறுப்பில் உள்ளனர். சிங்களவர்களின் மீது தமிழ், முஸ்லிம் மக்களில் சிலர் வெறுப்பில் உள்ளனர்.
இந்த வெறுப்புணர்வுகள் முற்றாகக் களையப்பட வேண்டும். சந்தேகங்கள், ஐயங்கள் களைந்து சமூகங்களுக்கிடையில் பரஸ்பரம், புரிந்துணர்வு, நல்லெண்ணம் என்பன வளர்க்கப்பட வேண்டும். இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி நீங்கி ஒவ்வொருவரும் நல்ல உள்ளங்களுடனும் உணர்வுடனும் உறவாடும் போதுதான் நாம் முழுமையாக தேசத்தை உண்மையான அழகின் மூலம் அலங்கரித்து அழகு படுத்த முடியும். இந்த நாட்டில் இனவாத, மதவாத வெறுப்புக்களை விதைத்ததில் ஊடகங்களுக்கும் அரசியல், மதத் தலைவர்களுக்கும் முக்கிய பங்குள்ளது.
இந்த வகையில் இனவாத, மதவாத சிந்தனைகளை விதைப்பதை விட்டும் ஊடகங்கள் தடுக்கப்பட வேண்டும். இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளியிடுவதை விட்டும் அரசியல் மதத் தலைவர்கள் தடுக்கப்பட வேண்டும்.
ஒவ்வொருவரும் தத்தம் கருத்தின் அடிப்படையில் செயற்பட அனுமதிப்பதுடன் தமக்கு உடன்பாடில்லாவிட்டாலும் அடுத்தவர்களது மத, சமூக சிந்தனைகளை மதித்து நடக்கும் நல்ல கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசம் உண்மையான அழகு பெறும்| நாடும் நலம் பெறும்.
எனவே, அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே!, மதப் போதகர்களே! அரசியல் தலைவர்களே!, புத்தி ஜீவிகளே!, நலன் விரும்பிகளே!… தேசத்தின் உண்மையான அழகிற்கும் நலனுக்குமாக சரியான இலக்கில் முன்னோக்கிப் பயணிக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கைகோர்ப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் எமது நாட்டை சாந்தி, சமாதானம் மிக்கதாக மாற்றியருள்வானாக!