A.H. அப்துல்லாஹ் அஸாம்
சமூகத்திற்கு மத்தியில் பெரும் அதிர்வுகளைத் தோற்றுவித்துள்ள பகிடிவதை தொடர்பாக எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.)அவர்களினால் பல்கலைக்கழகங்களைப் பலிபீடமாக்கும் பகிடிவதை என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பை ஹம்னா பதிப்பகம் 2020 மார்ச் மாதம் துவக்கத்தில் வெளியிட்டுள்ளது. பல தசாப்தகாலமாகத் தடுக்க முடியாமல் தொடரும் இவ்வன்கொடுமை தொடர்பில் பெற்றோரும், புதுமுக மாணவர்களும், நாடும் அதிர்ச்சியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், பல்வேறு விளைவுகளைத் தோற்றுவித்து, தற்போது பேசுபொருளாகியுள்ள இப்பிரச்சினை தொடர்பாக ஆழமான ஒரு பார்வையை இந்த நூல் முன்வைத்துள்ளது.
பகிடிவதை என்பது, பல்கலைக்கழகத்திற்குள் வருடாவருடம் புதிதாகப் பிரவேசிக்கும் மாணவர் மீது ஏற்கனவே அங்கு கல்வி பயிலும் சிரேஷ்ட மாணவர்களில் குரூர எண்ணம் கொண்ட ஒரு குழுவினர் மேற்கொள்ளும் ஒருவகைப் பயங்கரவாதச் செயல்தான் இவ்வகைத் தாக்குதல்கள் என வர்ணிக்க முடியும். அத்தாக்குதல்கள் எத்தகையவை என்பதை இந்த நூல் ஆசிரியர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். நூலைப் படிக்கும் போதுதான் பகிடிவதை இத்தனை பயங்கரவாதச் செயற்பாடுகளை உள்ளடக்கிய அபாயகரமான, அங்கீகரிக்க முடியாத கொடுஞ் செயல் என்பதை அறிய முடிகிறது.
தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதும், பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற பெயரில் மனதை நிலைகுலையச் செய்யும் குரூரமான பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. கல்வி நிலையங்களில் நடைபெற்று வரும் அங்கீகரிக்க முடியாத பல கொடூரமான பகிடிவதைச் சம்பவங்கள் பெறுமதியான பல உயிர்களைக் குடித்துள்ளன. கடந்த வருடத்தில் மாத்திரம் பகிடிவதை காரணமாக சுமார் 2000 மாணவர்கள் தமது பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களில் 10 தொக்கம் 20 வீதமானவர்கள் கல்வியை இடைநிறுத்தி இருக்கிறார்கள். இது கடந்த வருடம் மாத்திரம் நடைபெற்ற ஒன்றல்ல. காலத்துக்கு காலம் பகிடிவதைகளினால் மாணவர்கள் கல்வியை இடைநிறுத்துவதும் சிலர் இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து உயிரிழப்பதும் இடம்பெற்று வந்திருக்கிறது. எனினும், இதுவரை இதற்கு பொருத்தமான தீர்வு எட்டப்படவில்லை. அவற்றின் தரவுகளை இந்த நூலின் ஆசிரியர் பட்டியல்படுத்தியுள்ளார்.
பின்வரும் மூன்று வகை பகிடிவதை கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது,
அவை:
1. உடலியல் ரீதியான பகிடிவதை
2. உளவியல் ரீதியான பகிடிவதை
3. பாலியல் ரீதியான பகிடிவதை
இந்த நூலிற்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் குறிப்பிடும் முக்கிய சில அம்சங்கள் பின்வருமாறு அமைந்துள்ளது.
‘பகிடிவதை என்ற அபாயகரமான, அங்கீகரிக்க முடியாத இந்த விளையாட்டு பல மாணவர்களைப் பலி கொண்டுள்ளது. அவற்றுள் சில முக்கியமான சம்பவங்கள் இந்நூலில் பேசப்படுகின்றது. மறைவாகப் பேசிப் பயனில்லை. பெற்றோர்களின் கவனத்திற்கு இவை கொண்டுவரப்பட வேண்டும். இதன் ஆபத்தான தன்மைகள் பற்றி சமூகம் அறிய வேண்டும். முஸ்லிம் மாணவர் – மாணவியரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். பல குற்றச் செயல்களை அவர்கள் தரப்பிலிருந்தும் வரிசைப்படுத்த முடியும்.
யாருக்காக நாம் இரக்கம் காட்டுகின்றோமோ, யாருக்காக நாம் அனுதாபப்படுகின்றோமோ, யாரைப் பாதுகாப்பதற்காக பல்கலைக்கழகமும் சமூகமும் போராடுகின்றனவோ, அந்த முதல் வருட மாணவர்கள்தான் சிரேஷ்ட மாணவர்கள் என்ற தகுதியைப் பெற்றதும், அடுத்த மூன்று வருடங்களுக்கு எந்தக் குறைபாடுகளுமின்றி, வருடா வருடம் இந்தத் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
பல்கலைக்கழகத்தினுள் நடைபெறும் சிரேஷ்ட மாணவர்களுக்கும் புதுமுக மாணவர்களுக்கும் இடையிலான உறவுப் பாலத்தை ஏற்படுத்தும் ஒரு குறுங்கலாசாரமாக ஆரம்பமான இப்பகிடிவதை வன்முறைக் கலாசாரமாக விருட்சமாகி உள்ளது. பல்கலைக்கழக நாகரிக, சுதந்திர எல்லைகளை இன்று அது மீறி உள்ளது.
பகிடிவதையில் ஒன்றுகலந்துள்ள காட்டுவாசிகளின் உணர்வுகளையும், உள விகாரங்களின் பிறழ்வான வெளியீடுகளையும் துன்புறுத்தப்படுவதை நேரில் கண்டு, திருப்தி அடைவதையும், வக்கிர உள நிலையையும் எந்த வகையிலும் ஏற்க முடியாது.’
பல்கலைக்கழக உள்ளக மாணவ அரசியல், சமய, குறுங்கலாசாரத்தின் படையெடுப்பின் முன் அது தலை நிமிர முடியாத நிலை தொடர்கிறது. அரசாங்கங்களும் கையறு நிலையில் இருப்பது தெரிகிறது.
இளையோரின் உள நிலைகளில் அடக்கப்பட்ட பாலியல் உணர்வுகள் தீவிர தன்முனைப்பு, பிறர் துயர்வுறுவதைப் பார்த்து இன்பம் காணுதல், மற்றும் அரசியல், சமய, வல்லாதிக்க உணர்வுகளின் மறைமுக வெளிப்பாடுகள் எனப் பல குழப்பமான உணர்வுக் கொந்தளிப்புக்குள் பகிடிவதை சிக்கியுள்ளது.
பல்கலைக்கழக சமூகத்தில் எவ்வளவு பெரிய நல்ல பண்புகளை நாம் பேசக்கூடியதாக இருந்தாலும், இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வரபிரகாஷ், ரூபா ரத்னசீலி, நாவரசு போன்றவர்களின் மரணம் மன்னிக்க முடியாததாகும். பல்கலைக்கழக கல்விப் பண்பாட்டில் நிகழ்ந்த கரும் புள்ளிகளாக இவற்றைக் குறிப்பிட வேண்டும். இந்த நூலின் முக்கிய தொனிப்பொருளாக இருப்பது, இந்தத் தீமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான நோக்கத்தை வலியுறுத்துவதென்றே நான் நம்புகின்றேன்.
பகிடிவதையினால் பெற்றோரும், புதுமுக மாணவர்களும், நாடும் அதிர்ச்சியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், பகிடிவதையையும் அதை நீக்குவதற்கான பரிந்துரைகளையும் தீவிர கலந்துரையாடலுக்குக் கொண்டுவரும் ஒரு வாய்ப்பை இந்த நூல் உருவாக்கியுள்ளது. பல்கலைக்கழகங்களைப் பலிபீடமாக்கும் பகிடிவதை எனும் இந்த நூல் கலந்துரையாடலுக்கு மட்டுமன்றி, ஆய்வுக்கும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பல முக்கிய விடயங்களை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றது.
இன்று பேசப்பட வேண்டிய, முக்கியமாகப் பகிரப்பட வேண்டிய ஒரு தலைப்பினைத் தெரிவு செய்து, முடிந்தவரை தகுந்த முறையில் இப்பிரச்சினையை அளிக்கை செய்துள்ள ஹபீழ் ஸலபியின் முயற்சி பயன் உள்ளதும் பாராட்டுக்குரியதுமாகும்.’
பகிடிவதை பற்றிய உண்மை நிலையை வாசகர்களுக்கு வழங்குவதோடு, இஸ்லாமிய நோக்கில் பகிடிவதை எத்தகைய பாரதூரமான குற்றச் செயல் என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளது இந்த நூல்.
1. பதவிளக்கம்
2. வரைவிலக்கணம்
3. நோக்கம்
4. பண்புகளை இழக்கும் பகிடிவதை
5. இலங்கையில் பகிடிவதை
6. பதிவாகியுள்ள பாரிய நிகழ்வுகள்
7. இந்தியாவில் பகிடிவதை
8. மனதை நிலைகுலையச் செய்யும் குரூர பகிடிவதை நிகழ்வுகள்
9. தடைச் சட்டம்
10. இன்று நடப்பது என்ன?
11. முடிவு வருவது எப்போது?
12. பகிடிவதையும் உளவியலும்
13. தொடர்ந்து நிகழ்வதற்கான காரணங்கள்
14. பகிடிவதையின் வகைகள்
15. விளைவுகள்
16. முன்மொழிவுகள்
17. பகிடிவதை – ஓர் இஸ்லாமிய நோக்கு
18. மரபுசார் பண்பாட்டுக் கல்வியும் முஸ்லிம் சமூகமும்
19. நெறிப்படுத்தலை வேண்டி நிற்கும் இளமைப் பருவம்
ஆகிய 19 தலைப்புகளில் பகிடிவதையின் மூலம் இலங்கையில் இடம்பெற்ற முதல் படுகொலை தொடக்கம் சமகாலத்தில் நடந்த கொடூர வதை நிகழ்வுகள் வரை பல்வேறு சம்பவங்களை நூலாசிரியர் வரிசைப்படுத்தியுள்ளார்.
‘1975இல், பேராதனைப் பல்கலைக்கழகத்தில், பகிடிவதையிலிருந்து தப்பிப்பதற்காக இராமநாதன் மண்டபத்தின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே குதித்த 22 அகவை நிரம்பிய மாணவியான உரூபா இரத்தினசீலி, இதன் காரணமாக முடக்குநோய்க்கு ஆளானார். இவருடைய பெண்குறியினுள் மேனிலை மாணவர்கள் மெழுகுவர்த்தியைச் செலுத்த முயன்றதால், இவர் விடுதியிலிருந்து வெளியே குதித்ததாகத் தெரியவந்தது, இவர் 2002இல் தற்கொலை செய்துகொண்டார்.” (பார்க்க பக்:34 )
இந்தியாவில் நடந்த பகிடிவதை தொடர்பான கொடூரமான சம்பவங்களையும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளமை நூலின் சிறப்பம்சமாகும்.
”….கொடுமையின் உச்சகட்டமாக தனது அறைக்கு நாவரசை இழுத்துச் சென்று, உடைகளைக் களையுமாறு மிரட்டியிருக்கிறான், ஜான் டேவிட். இதை, நாவரசு மறுக்கவே அடித்து உதைத்திருக்கிறான். பயத்தில் நடுங்கிய நாவரசு உடைகளைக் களைந்து போட, அவனை தப்பான காரியத்துக்கு அழைத்திருக்கிறான்.
நாவரசுவை பலாத்காரம் செய்ய முற்பட்டபோது, நாவரசுவின் உயிர்நிலை நசுக்கப்பட்டு, உயிர் போய்விட்டது. அதன்பின்னர்தான் ஜான் டேவிட்டின் உச்சகட்ட வெறித்தனம் அரங்கேறியது.” (பார்க்க பக்: 48-49)
‘அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்வி முதலாமாண்டு மாணவனான பொன்.நாவரசு 1996 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று அதே கல்லூரியில் பயிலும் இரண்டாமாண்டு முதுநிலை மாணவனான ஜான் டேவிட்டின் பகிடிவதைக்கு இணங்க மறுத்ததால், கொலை செய்யப்பட்டான். அவன் உடல் உறுப்புகளைத் துண்டு துண்டாக வெட்டியெடுத்து, ஆற்றில் வீசியெறிந்தான், ஜான் டேவிட். இக்கொலைச் சம்பவத்திற்காக ஜான் டேவிட்டுக்கு கடலூர் நீதிமன்றம் 1998, மார்ச் 11 அன்று இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. பின் மேல்முறையீட்டின் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தால் அக்டோபர் 8,2001 அன்று விடுதலை செய்யப்பட்டான்.” (பார்க்க பக்: 50)
சில உயிர்களைக் குடித்தும், பலரை முடமாக்கியும், வேறு திறமைவாய்ந்த சிலரை ‘பட்டப் படிப்பும் வேண்டாம், ‘பகிடித்’ தொல்லையும் வேண்டாம்’ என்று கூறி, வேறு துறையை நாடி ஓடவும் வைத்திருக்கிறது. எனவே, இந்தக் கொடுமையை அனைவரும் சேர்ந்து ஒழிக்க முன்வர வேண்டும் என்று நூலாசிரியர் அழைப்புவிடுத்துள்ளார்.
நூல் தேவைப்படுவோர் ஆசிரியரைத் தொடர்பு கொள்ளவும்!
Only Whatsapp : +94770544548
Email : suaadhafeel@gmail.com