ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கூறிவிட்டுக் கூறப்பட்டவர்கள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் உதாரணங்களும், எடுத்துக்காட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
படிப்பவர்களும், கேட்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதால் எடுத்துக்காட்டு என்ற யுக்தி (வழிமுறை) கையாளப்படுகின்றது.
அல்குர்ஆனிலும் ஏராளமான உதாரணங்களும், எடுத்துக்காட்டுகளும் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. முன் சென்றுபோன சமுதாயத்தவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் முடிவையும் அல்லாஹ் பல இடங்களிலும் பல உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றான்.
اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ كَانُوْۤا اَكْثَرَ مِنْهُمْ وَاَشَدَّ قُوَّةً وَّ اٰثَارًا فِى الْاَرْضِ فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ
பூமியில் இவர்கள் சுற்றிவந்து தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் முடிவு (இறுதிக்கதி) என்னவானது என்பதைக் காணவில்லையா? அவர்கள் இவர்களை விட அதிக எண்ணிக்கையுடையவர்களாகவும், அதிக பலசாலிகளாகவும் இருந்தனர். மேலும் பூமியில் (இவர்களை விட) பெரும் பெரும் தடயங்களையுடையவர்களாகவும் இருந்தனர். அவர்கள் சம்பாதித்து வைத்திருந்த அனைத்தும் இறுதியில் அவர்களுக்கு என்ன பயனைத் தந்தது? (என்று பார்க்கவில்லையா?) (அல்குர்ஆன்: 40:82)
اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ يَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا ۚ فَاِنَّهَا لَا تَعْمَى الْاَبْصَارُ وَلٰـكِنْ تَعْمَى الْـقُلُوْبُ الَّتِىْ فِى الصُّدُوْرِ
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றை) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றை) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன. (அல்குர்ஆன்: 22:46)
மேற்கண்ட இந்த இரண்டு வசனங்களும் இன்னும் அல்குர்ஆன்: 12:109, 29:20, 35:44, 40:21 ஆகிய வசனங்களும் நமக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் முடிவு என்ன ஆனது என்பதை விளக்குவதோடு அவர்களின் வரலாற்றை சென்று பார்த்துக்கொள்ளுமாறும் கூறுகின்றது.
பூமியில் அல்லாஹுவை ஏற்றுக்கொள்ளாத, இறைவனை மறுக்கக்கூடிய, இறைநிராகரிப்பின் சிகரத்திலிருந்து கொடிகட்டிப்பரந்த பிடிவாதக்கார வம்பர்களுக்கும் இந்த பூமியின் ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ் வழங்கியிருந்தான்.
ஆட்சி அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களை மிகப்பெரிய வல்லரசாகவும் ஆக்கியிருந்தான். பொருளாதாரத்திலும், ஆள் பலத்திலும், படைபலத்திலும் உயர்ந்த நிலையில் அவர்கள் இருந்தார்கள். இன்னும் நீண்ட ஆயுளைக்கொண்டவர்களாகவும் அதிகம் சந்ததிகளைக் கொண்டவர்களாகவும் அல்லாஹ் அவர்களை ஆக்கியிருந்தான் இத்தனையும் இருந்தும் அவர்கள் மீது அல்லாஹ் இறக்கிய தண்டனைகளை அவர்களால் தடுத்துக்கொள்ள இயலவில்லை!
காரணம் அவர்கள் தங்களிடம் இருந்ததைக்கொண்டு மிகவும் பூரிப்படைந்ததோடு இறுமாப்பும் கொண்டார்கள். அவர்களுக்கு இறைத்தூதர்கள் மூலம் விடப்பட்ட கோரிக்கைகளெல்லாம் ஒன்றே ஒன்றுதான் “அல்லாஹ்” ஒருவனைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான். இதைத்தான் அவர்கள் மறுத்தனர், மறுத்ததோடு மட்டுமல்லாது இறைத்தூதர்களோடு விதண்டாவாதம் செய்து பூமியில் குழப்பங்களும் செய்தனர்.
இவர்களின் முடிவு என்ன ஆனது என்பதைத்தான் பூமியில் பிரயாணம் செய்து பாருங்கள் என்று அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் மூலம் இறைநிராகரிப்பாளர்களுக்கு சொல்லப்படுகின்றது.
முன் சென்ற நிராகரிப்பாளர்கள் தங்களின் வழிகெட்ட பிடிவாதக் கொள்கையினால் அவர்கள் அடைந்த முடிவிலிருந்து படிப்பினை பெறாத இந்த நிராகரிப்பாளர்களுக்கு உள்ளம் இருந்தும் அது செத்து மடிந்துபோன உள்ளமாகும். படிப்பினை பெறவேண்டிய கொடுமையான சம்பவங்களைப் பார்க்கும் கண்களும், அதைப்பற்றிக் கேட்கும் செவிகளும், அதைப்பற்றிச் சிந்திக்காத உள்ளமும் இவர்களுக்கு இருந்து என்ன பயன்.
فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْؕ وَمَا كَانَ لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ
அவர்கள் பாவங்கள் செய்த காரணத்தால் அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அப்போது அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை. (அல்குர்ஆன்: 40:21)
அவர்களின் அபாரமான ஆற்றலும், வலிமைமிக்க அரசாங்கமும், செழிமையான பொருளாதாரமும் சிதைந்து சின்னாபின்னமாக்கிப் போவதற்கு அவர்களின் பாவங்கள்தான் மிகப்பெரிய காரணமாகும்.
அவர்கள் செய்த பாவங்களின் முதன்மையானது இறைத்தூதர்களை நிராகரித்ததும் அவர்களைக் கொலை செய்ததும் பூமியில் குழப்பங்கள் செய்ததுமாகும்.
وَلَوْ يُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَّا تَرَكَ عَلَيْهَا مِنْ دَآبَّةٍ وَّلٰـكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَـاْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ
மனிதர்கள் இழைக்கும் அநீதியின் காரணத்தால் அவர்களை அல்லாஹ் (உடனுக்குடன்) தண்டிப்பதாக இருந்தால் பூமிக்குமேல் அவன் எந்த உயிரினத்தையும் விட்டுவைத்திருக்கமாட்டான்; ஆயினும் ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களைத் தாமதப்படுத்தியிருக்கின்றான். அவர்களுக்கான தவணை வந்து விட்டால் அவர்கள் சிறிது நேரம்கூடப் பிந்தவுமாட்டார்கள் முந்தவுமாட்டார்கள். (அல்குர்ஆன்:16:61)
அவர்கள் வரம்பு மீறிப் பாவங்கள் செய்தபோதிலும் அவர்களை அல்லாஹ் உடனுக்குடன் தண்டிக்காமல் அவர்களுக்கு நீண்ட அவகாசம் அளித்திருந்தான். ஆனால் அதுவும் அவர்களுக்குப் பலனளிக்கவில்லை! அவர்களின் தவணை வந்த பிறகுதான் அவர்களை அல்லாஹ் வேரோடு சாய்த்தான்.
ஆகவே அக்கிரமக்கார அதிகார வர்க்கத்தினருக்கு அழிவு வருவதற்கு முன்னர் அவர்களுக்கு அல்லாஹுவைப் பற்றியும், மறுமையைப்பற்றியும் உபதேசிப்பது சக்தியுள்ள முஸ்லிம்கள்மீது கடமையாகும்.
_________
நட்புடன்:
முத்துப்பேட்டை சுல்தான்,
19/07/1441-ஹிஜ்ரி.
(ஆதார நூல்: இப்னு கதீர்)