Featured Posts

எழுச்சியுற்ற ஜல்லிகட்டு

கடந்த வாரங்களில் தென்னிந்தியாவில் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அனைவரின் பார்வையையும் தமிழ்நாட்டை நோக்கி குவியச்செய்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பண்டைக்கால இந்துத் தமிழர்களின் பண்பாட்டுத் தளமாகக் கருதப்படுகின்ற மதுரையிலுள்ள அலங்காநல்லூரில் சிறு குழுவின் பங்குபற்றலுடன் சாதாரணமாக ஆரம்பமான ஜல்லிக்கட்டுத் தடைக்கான எதிர்ப்புப் போராட்டம், மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரையும் பங்குபற்றச் செய்து, முக்கிய நகரங்களுக்கும் பரவி, ஜாதிய்ய வேறுபாட்டை மறக்கச் செய்து, தமிழகத்தையும் கடந்து உலகெங்கும் தமிழர்கள் வாழ்கின்ற பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகச் சென்று, இந்திய மத்திய அரசையும் அதிரவைத்தது.

இந்திய சுதந்திரப் போராட்டம் வெற்றிபெற்ற பின்னர், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ் நாட்டுக்கான பகுதிகள் பறிபோகாமல் காப்பதற்கான பெரும் போராட்டத்தைத் தமிழகம் சந்தித்தது. அதற்கு ஒத்த ஒரு போராட்டம் என கருதப்படும் நிலையை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆா்ப்பாட்டம் தோற்றுவித்துள்ளது. 

அன்றைய தமிழ் மொழிக்கான போராட்டத்தில் பெண்கள் பங்களிப்பு மிகக் குறைவானதாக இருந்துள்ளது. தற்போதைய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் அதிகளவு படித்த, பல்கலைக்கழக மாணவிளான பெண்கள் தன்னிச்சையாகக் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும் தமிழரின் அடையாளம் காக்கப்பட வேண்டும், பாரம்பரியம் பேணப்பட வேண்டும், கலாசாரம் காக்கப்பட வேண்டும், ஜல்லிக்கட்டு என்பது எவ்வகையிலும் மிருகவதை அல்ல என்ற உணர்வு மேலோங்கிக் காணப்பட்டதோடு, அவ்வுணர்வே அவர்களை  ஒண்றிணைத்துமுள்ளது.இது அன்றைய தமிழகத்தின்  மொழிப்போர் உணர்வின் தொடர்ச்சி என்று அவதானிகளால் அர்த்தப்படுத்தப்படுகிறது.

இந்துத்துவத்தின் உயர்வு – தாழ்வு ஜாதி வேறுபாட்டு அடையாளங்களைத் துறந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவர்கள் என்ற பெயரில் தமிழர்கள் தங்களது கலாசாரப் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்தார்கள். இப்போராட்டம் இலங்கைத் தமிழர்களிடையே, குறிப்பாக அந்த இனத்தின் இளையோர் மத்தியில் வித்தியாசமான மனநிலையை தோற்றுவித்துள்ளதை அவதானிக்க முடிந்தது. பல்வேறு உயர்வு தாழ்வு நிலை கற்பிக்கப்பட்டு, சாதிய்ய வேறுபாடுகளால் பிரித்தாள்கைக்குட்பட்டு அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் இந்து மக்கள் மத்தியில், ஜல்லிக்கட்டுக்கான அவ்வினத்தின் ஆதரவுப் போராட்டம் தமிழினம் என்ற ஒற்றை உணர்வினை உச்ச அளவிற்கு உலகெங்கும் கொண்டு சென்றிருப்பதை  அவதானிக்கமுடிந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்பு நடைபெறும் போது, தமிழகத்திலுள்ள சினிமாக் கூத்தாடிகளால், அரசியல் கட்சிகளால்  போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இதனை இங்குள்ள தமிழ் கட்சியரசியல் சார்ந்தோர் அதை அரசியல் நாடகம் என்றும் அவர்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்றும்   அதை ஆதரிக்காத  குரல் எழுப்பிவந்த நிலை முற்றிலும் மாறி, இன்று, தமிழகத்தின் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கைத் தமிழர்கள் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு என்று பல பாகங்களிலும் திரண்டெழுந்துள்ளமை அனைவர் மத்தியிலும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளால்  அழைப்பு விடுக்கப்பட்டுக் கூட கூட்ட முடியாத மக்கள் கூட்டத்தை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஓர் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் தன்னார்வத்துடன் திரண்டு வந்தமை தமிழ் அரசியல் களத்தையே ஒரு கனம் அதிர வைத்துள்ளது. அத்தோடு,இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழ்நாட்டுத் தமிழர்கள் இனிவரும் காலங்களில் அழுத்தமாகக் குரல் கொடுப்பதற்கான அடித்தளமொன்றை ஜல்லிக்கட்டுக்கான தமது ஆதரவுப்  போராட்டம் மூலம் இலங்கைத் தமிழர்கள் உருவாக்கியுள்ளனர்.

இப்போராட்டம் மூலம் தமிழ் மொழியையும் தமிழ் மக்களின் கலாசாரத்தின் தொன்மையையும் அழித்து, அடையாளம் இழக்கச் செய்வதற்கு தொடர்ந்தும் முயற்சிகள் நடப்பதாக தமிழ் சமூகம் உணர ஆரம்பித்து அதைப் பாதுகாக்க களம் இறங்கியுள்ளது என்பதின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இப்போராட்டத்தின்  பின்புலத்தில் நின்று  நோக்கும் போது, ஒரு சாதாரண கிராம விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏன் இன்று தமிழகம் கொந்தளிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் இலங்கையின் பல பாகங்களில் மாட்டு வண்டில் பந்தயம் நடைபெறுவது தொன்மைக் கலாசாரப் பாரம் பரிய நிகழ்வு. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அது ஒரு மிருகவதை என்ற காரணம் கற்பிக்ப்பட்டு, இலங்கையில் தடைசெய்யப்பட்டது. இத்தடைக்காக சிங்கள இனம் எந்த ஆர்பரிப்பையும் மேற்கொள்ளவில்லை. அதனால், தமிழ், சிங்கள புத்தாண்டு கால இந்த ஒற்றை மாட்டு வண்டிப் பந்தயம் இன்று இலங்கையில் காணாமல் போய் விட்டது.

ஏறுதழுவல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மைக் குடிகளான ஆயர்களின் (இடையர்,யாதவர்) மரபுவழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகவே கருதப்பட்டுவந்தது. பண்டைய காலத்தில் ஆயர்களின் திருமணதில் கலந்த ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, அல்லது காளை அடக்குதல் எனப்படுகின்ற ஓர் இனத்தின் சாதாரண ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு, உலகின் அத்தனை தமிழ் உள்ளங்களிலும் எழுச்சி நிறைந்த உணர்வலையைத் தோன்றுவித்து, அரசியல் தளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதை ஒரு சாதாரண விடயமாகக் கருதிவிடமுடியாது.

1965 மொழிப் போரின் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரும் இளைஞர் எழுச்சியாக ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தைக் பாரக்கமுடிகிறது.

அதீத சினிமா மோகத்திலும், டிஜிட்டல், செல்போன் பயன்பாட்டிலும் மூழ்கிப்போன தமிழ் இளைஞர்களுக்கு ஒரு கிராமிய விளையாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற தாளாத வெறி சடுதியாக ஏற்பட்டு, சில நாட்களில் உச்சத்தைத் தொட்டது என்றால், இதன் பின்னால் மிக நுனுக்கமாகத் திட்டமிடப்பட்ட சர்வதேசிய நிகழ்ச்சி நிரல்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை யூகிக்க முடிகிறது.

தமிழ் மொழிக்காக தமிழகம் தழுவி நடைபெற்ற நான்கு கட்ட மொழிப்போர் வரலாற்றையும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுப் போராட்டத்தையும் ஒப்பிட்டு நோக்கும் போது, மொழிப்போர் வன்முறை கலந்ததாகவே இருந்துள்ளது. பலர் உயிரிழந்தனர். ஆனால், ஜல்லிக்கட்டுப் போராட்டம் வித்தியாசமாக நடைபெறுவது, பலத்த சந்தேகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை, புதுச்சேரி, கோவை, மதுரை, திருச்சி என பல நகரங்களில் பெருந்திரளான மக்கள் – குறிப்பாக தமிழ் இளைஞர்கள் – கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் வன்முறையைத் தூண்டக் கூடிய விதத்தில் அல்லாமல் சாத்வீகமாக இருந்துள்ளது.

எனினும் தமிழக அரசு, தற்காலிகமாக மின்சாரத்தை துண்டித்து, கைபேசிகளை செயலிழக்கச் செய்தது, நடமாடும் கழிப்பிட வசதிகளை அளிக்க மறுத்து பல்வகையில் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டபோதும், ஜல்லிக்கட்டு அதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் போராட்டத்தை வீரியமாகவே நகர்த்திக்கொண்டிருந்தார்கள்.

இப்போராட்டங்களுக்கு தமழகத்தின் எந்த அரசியல் கட்சியும் நேரடியாகத்  தலைமை தாங்கவில்லை. போராட்ட வலயத்துக்குள் நுழைந்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தமது கட்சி அடையாளங்களைத் துறந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவர்கள் என்ற நிலையில் மட்டுமே கலந்துகொண்டமை இதுவரை தமிழக போராட்ட மரபில்  மாற்றங்களை அடையாளப்படுத்தியதோடு, சந்தேகங்களையும் வலுக்கச் செய்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு எழுச்சிக்குப் பின்னால் ஏதோ வலுவான சர்வதேசிய நிகழ்ச்சி நிரல் ஒன்று மிகத் திட்டமிடப்பட்ட முறையில் செயற்பட்டுள்ளது என்பதை அவதானிகள் சுட்டிக்காட்டத்தவறவில்லை.

மிகப்பெரிய விடயங்களுக்கு இந்தளவு போராட்டம் நடத்தாத தமிழ் மக்கள், ஓர் இனத்துவப் பிரிவின் அடையாளத்தைக் காண்பிக்கும் சாதாரண ஜல்லிக்கட்டு விவகாரத்திற்காக பாரிய ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, சாலை மறியல், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம், உச்ச நீதிமன்றின் சட்ட மறுப்பு என்றெல்லாம் போராட்டம் பரிமாணம் பெற்று,பல்வேறு வடிவங்களில் தமிழ்நாடு கொந்தளித்துப் போனது ஏன் என்ற கேள்வி இங்கு தவிர்க்க முடியாததது.

மோடியின் சிவில் சட்டம் தொடர்பான முஸ்லிம்களின் அதிருப்தி வன்மையாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஜெயலலிதாவின் மரணம் சந்தேகத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதனைத் தொடரந்து, 500-1000 ரூபா நோட்டுத் தாளின் செயல் இழப்பு மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி மத்திய அரசின் மீது பெரும் அதிருப்தியையும் கொந்தளிப்பை உருவாக்கியது.   

தற்போது ஆட்சியிலுள்ள பாஜக மத்திய அரசின் தமிழினப் புறக்கணிப்பு நடவடிக்கைளால் தமிழ்நாட்டு மக்கள்  சீற்றம் கொண்டிருந்தனர். அது ஜல்லிக்கட்டுவடிவில் எரிமலையாக வெடித்துள்ளதா? என்ற கேளவியும் தவிக்க முடியவில்லை. நரேந்திர மோடி அரசு பதவியேற்றதன் பின்னர் காவிரி நீர்ப் பங்கீடு, தமிழ்நாட்டை உதாசீனப்படுத்துதல் என்ப மோடி அரசின் மீது அதிருப்தி வலுத்துவந்துள்ள நிலையை வெளிப்படுத்துகிறது.  எனவேதான், ஜல்லிக்கட்டு ஆதரவும் போராட்டத்தின் போது, மத்திய அரசு மீதான வெறுப்பு வெளிப்படுத்தப்பட்ட பதாகைகளைக் பார்க்க முடிந்தது.

வாழ்வாதாரப் பிரச்சினைக்கு வழங்கப்பட்ட முக்கியத்தவத்தைவிட  ஜல்லிக்கட்டை  உச்சநீதிமன்றம் தடை செய்தமைக்காக தமிழக மக்கள் இத்தனை தூரம் கிளர்ந்தெழுந்துள்ள நிலைமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்ட அதிர்வுகள் தமிழக அரசியலை மட்டுமல்லாது, ஆசியாவில் பெரிய மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியலை எத்திசை நோக்கி நகர்த்துமென்ற  பரபரப்பு நிலவிக் கொண்டிருக்கிறது.

அல்ஜீரியா, ஓமான் மெக்சிகொ, கலிபொனியா,ஸ்பெயின் போன்ற உலகின் சில நாடுகளில் எருது அடக்குதல் என்ற ஜல்லிக்கட்டு விழாக்கள் நடக்கின்றன. ஆனால், அவை அங்கு விளையாட்டாகவே காணப்படுகிகிறது. தமிழகம் போன்று கலாசாரத்தின் அல்லது வாழ்வியலின் வெளிப்பாடாக அங்கு பார்க்கப்படவில்லை.அதற்கான போராட்டமும் அங்க நடத்தப்படவில்லை.

 மனித உயிர் பெறுமதியானது.விலைமதிப்பற்றது. ஜல்லிக்கட்டு என்ற  வீரவிளையாட்டால் பாதிக்கப்படுவது மாடுகள் மட்டுமல்ல சில மனித உயிர்கள் சிலபோது பறிக்கப்படுவதுண்டு. அத்தோடு உடற்சேதங்களும் ஏற்படுகின்றன என்ற காரணத்தால் இதைத் தடைசெய்ய வேண்டும் என்று பீட்டாவும் விலங்கு நல ஆர்வலர்களும் குரல் கொடுத்துவருகின்றனர். ஆதரிப்போரும் எதிர்ப்போரும் தமது நிலைப்பாட்டை நிலை நிறுத்த மாறுபட்ட வாதங்களை முன்வைத்தாலும் சர்வதேசிய நிகழ்ச்சிநிரலும் அரசியலும் வனிகமும் இதன்  பின்னணியில் உள்ளதை மறுக்க முடியாது.

ஜல்லிக்கட்டு மூலம் வாயற்ற ஜீவனான காளை மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்று விலங்குகள் நலன் பேணும் ‘பீட்டா” என்ற அமைப்பு  ஆதங்கம் தெரிவித்துவருகிறது. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இதை மறுக்கின்றனர். மாடுகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன.எத்தனையோ பிராணிகள் சட்ட திட்டங்களால் தடுக்க முடியாதபடி துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறிருக்கையில், ஜல்லிக்கட்டை மாத்திரம் தடைசெய்வதென்பது தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களைச் சிதைப்பதற்கு மத்திய அரசு மேற்கொள்கின்ற சதியாகும் என்று அவர்கள் எதிர்வாதம் வைத்து வழக்காடுகின்றனர்.

தற்போது,போராட்டம் முடிவுக்கு வந்துள்ள அதேவேளை அதில் ஈடுபட்டுள்ளவர்கள் பின்வரும் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

  1. ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கத்துக்கான நிரந்தர சட்ட நகலை உரிய அங்கீகார முத்திரையுடன் வழங்க வேண்டும்.
  2. போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும்.
  3. காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தில் வெகுண்டெழுந்துள்ள மக்களின் உணர்வுகளுக்கு முன்னால், ‘பீட்டா” வின் கருத்துகளோ, நீதிமன்ற உத்தரவோ எத்தகைய தாக்கத்தை செலுத்தப் போகிது? என்பது அவதானத்திற்குரியது.

இப்போராட்டம்  எதிர்காலத்தில் தமிழக அரசியலிலும் மத்திய அரசிலும்  எத்தகைய மாற்றத்தையும் திருப்பத்தையும் ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *