Featured Posts

கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 3

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey)

சென்ற தொடர்களில் கொரோனா போன்ற கொடிய நோய் தொடர்பாக இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எடுத்துரைத்த முக்கிய சில நபி மொழிகள் மற்றும் வழிகாட்டல்கள் பற்றி முன்வைத்தோம்.

இத்தொடரில்…

  • தாஊன் என்ற பிளேக் நோய் எப்போது?
  • ஏன் தோன்றியது?
  • தொற்று என்பது உண்டா?
  • அது தொடர்பாக இறைத் தூதர் அவர்களைத் தொட்டும் மாறுபட்ட கருத்துக்களாக விளங்கும் நபி மொழிகளை முரண்பாடின்றி அறிஞர்கள் எவ்வாறு அணுக வேண்டும் என அறிவுரை கூறியுள்ளனர்.
  • மேலும் சில ஒழுங்குகள் பற்றியும் இங்கு நாம் பார்க்கவிருக்கின்றோம்.

தொற்று நோய் இல்லை; அல்லது உண்டு என்ற இரு செய்திகளை எவ்வாறு புரிந்து கொள்வது?

இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய நபி மொழிகள் பலவீனமான காரணிகள் களையப்பட்டு முதல் தர ஆதாரத்தைக் கொண்டவை என்ற நபிமொழிகள் சிலதில் முரண்பாடு போன்ற வெளித் தோற்றப்பாடு காணப்படுவதாக உறுதி செய்யப்படும் போது அந்த துறை சார்ந்த அறிஞர்களின் தீர்ப்பே சமூகத்திற்கு முக்கியமானதாகும்.

கவனிக்க:
?
ஹதீஸ் அணுகுமுறை ஒழுங்குகளில் பாதையோர, அல்லது அங்காடி வியாபாரிகள், செவிவழிக் கல்வியாளர்கள், மற்றும் 100% பீ.ஜே. தக்லீது முகவர்கள் போன்றவர்களின் மனோ இச்சை அடிப்படையிலான காணல்நீர் ஆதாரங்கள் முழுமையாக உதாசீனம் செய்யப்படல் வேண்டும்.

இப்போது தொற்று நோய் உண்டு, அல்லது இல்லை என்ற பிரதான செய்திகளுக்கு வருவோம்.
?
தொற்று நோய் இல்லை என்ற பொருள் தரும் நபி மொழி.

عَنْ أبِي هُريْرَةَ، حِينَ قالَ رَسُولُ اللهِ ﷺ: «لا عَدْوى ولا صَفَرَ ولا هامَةَ» فَقالَ أعْرابِيٌّ: يا رَسُولَ اللهِ فَما بالُ الإبِلِ تَكُونُ فِي الرَّمْلِ كَأنَّها الظِّباءُ، فَيَجِيءُ البَعِيرُ الأجْرَبُ فَيَدْخُلُ فِيها فَيُجْرِبُها كُلَّها؟ قالَ: «فَمَن أعْدى الأوَّلَ؟»

“தொற்று நோய் கிடையாது; ஸஃபர் மாத பீடை, ( அல்லது ஒரு வகை நோயும் ) கிடையாது; (இறந்தவரின் எலும்பு ஆந்தையாக மாறிப் பறப்பதாகக் கருதும்) ஆந்தை பற்றிய நம்பிக்கையும் உண்மையுமில்லை’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியமாக) இருந்த ஒட்டகங்களுக்கிடையே சிரங்கு பிடித்த ஒட்டகம் ஒன்று கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே?’ என்று கேட்டதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ‘முதல் ஒட்டகத்திற்கு (அதை)த் தொற்றச் செய்தது யார்?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.”
இதனை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி : 5770, முஸ்லிம் ).

முஸ்னத் அஹ்மத் மற்றும் திர்மிதி போன்ற கிரந்தங்களில் இடம் பெறும் செய்தியில்

قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال : لا يًعْدِي شيء شيئا ، فقام أعرابي فقال : يا رسول الله…؟

எதுவும் எதையும் கடத்திச் செல்வதில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய போது கிராமப்புற மனிதர் ஒருவர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! ஆரோக்கியமான ஒட்டகம் நோய் பிடித்த ஒட்டகத்தோடு சேர்ந்தால் தொற்று நோய் ஏற்படுகின்றதே எனக் கேட்ட போது மேற்படி பதிலைக் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

அதனால்தான் பின் வருமாறு அறிவுரையும் கூறி உள்ளார்கள்.

عن أبِي هُرَيْرَةَ قالَ: قالَ رَسُولُ اللَّهِ ﷺ: («لا يُورِدَنَّ مُمْرِضٌ عَلى مُصِحٍّ»).

“ஆராக்கியமான ஒட்டகத்தை வியாதி பிடித்த ஒட்டகத்துடன் கொண்டு வந்து சேர்க்க வேண்டாம்.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இதையும் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி , முஸ்லிம்)

தொற்று நோய் உண்டு என்பதை உணர்த்தும் நபி மொழி

ورَوى البُخارِيُّ فِي «صَحِيحِهِ» تَعْلِيقًا مِن حَدِيثِ أبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ أنَّهُ قالَ: («فِرَّ مِنَ المَجْذُومِ كَما تَفِرُّ مِنَ الأسَدِ»).

“சிங்கத்தில் இருந்து வெருண்டோடுவது போன்று குஷ்டரோகம் பிடித்த மனிதனை விட்டும் வெருண்டோடு.” (புகாரி)

இரண்டாம் கலீஃபாவின் முடிவு

ஹிஜ்ரி பதினெட்டாம் ஆண்டு இரண்டாவது கலீஃபா உமர் (ரழி) அவர்கள் காலத்தில் ஷாம் தேசத்தில் ஏற்பட்ட பாரிய பிளேக் நோயோடு எவ்வாறு நடந்து கொள்வது என்ற காரசாரமான ஆலோசனையின் பின்னால் பிளேக் நோய் ஏற்பட்ட ஊருக்கு செல்ல வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதனை நேரடியாகக் கிடைக்காத போதும் அங்கு நாம் சென்று நோயைத் தேடிக் கொள்ள வேண்டுமா? இறை விதி என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு போவது நல்லதா? என்ற கேள்வியின் பதிலாக அங்கு செல்லாது மதீனா திரும்ப முடிவெடுத்து திரும்பும் வழியில் ;

… فَجاءَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ – وكانَ مُتَغَيِّبًا فِي بَعْضِ حاجَتِهِ – فَقالَ: إنَّ عِنْدِي فِي هَذا عِلْمًا، سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: «إذا سَمِعْتُمْ بِهِ بِأرْضٍ فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ، وإذا وقَعَ بِأرْضٍ وأنْتُمْ بِها فَلاَ تَخْرُجُوا فِرارًا مِنهُ» قالَ: فَحَمِدَ اللَّهَ عُمَرُ ثُمَّ انْصَرَفَ .[أخرجه البخاري]

“…ஒரு தேவை நிமிர்த்தமாக வெளியில் சென்றிருந்த அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் (அங்கு) வந்தார்கள். அவர்கள், “இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது” எனக் கூறி; ‘ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டும்) வெளியேறாதீர்கள்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்ல கேட்டேன்’ என்று கூறியதும் கலீஃபா அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தனது முடிவில் தொடர்ந்தார்கள் என இடம் பெற்றுள்ளது.” (புகாரி)

எவ்வாறு அணுக வேண்டும்?

இறைத் தூதரின் பொன்மொழிகளைப் பகுப்பாய்வு செய்த முஸ்லிம் உம்மத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலை சிறந்த ஹதீஸ் துறை அறிஞர்கள் ஒருவர் கூட தொற்று உண்டு, இல்லை என இடம் பெறும் ஹதீஸ்கள் பலவீனமானவை என்றோ, அல்லது அவற்றில் ஒன்றை மற்றொன்று மாற்றிவிட்டது அதாவது
ناسخ الحديث ومنسوخه
என்றோ தீர்ப்பளிக்காது மாற்றமாக அவை ஸஹீஹ் தரத்தில் அமைந்தவையே எனக் குறிப்பிட்டுள்ளதோடு, அவை اختلاف الحديث ஹதீஸ்களில் காணப்படும் முரண்பாடுகள் வகை சார்ந்தவைகள் என்றும் வகைப்படுத்தி, அவ்வாறான ஹதீஸ்களை அணுகும் படித்தரங்களையும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

?முதலாவது செய்தியை இரண்டாவது கூறப்பட்ட செய்தி மாற்றி உள்ளது.

? அல்லது முரண்பாட்டில் உடன் பாடு காண்பது.

? அல்லது அது பற்றிய முடிவுகளை இடை நிறுத்தி வைப்பது.

மேற்படி அடிப்படையில் இரு முரண்பட்ட கருத்துக்களைக் கொண்ட இரு நபி மொழிகளில் ஒன்றை மாற்றக் கூடியது, மற்றது மாற்றப்பட்டது என்ற தெளிவான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அதனை இணைத்து விளங்க வேண்டும் என நபிமொழியியல் துறையில் தேர்ச்சி பெற்ற அறிஞர்கள் குறிப்பிடுவதை கவனத்தில் கொண்டு அதனை விளங்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.

☝அதற்கு மாறாக தொற்று நோயே இல்லை என்பதே சரி. மற்றது பலவீனமான செய்தி என்றோ,

☝அல்லது அதனை மாற்றி தொற்று நோய் உண்டு, தொற்று இல்லை என்பது பிழையான வாதம் என்பதோ, மற்றது பலவீனமான செய்தி என்றோ உளரக் கூடாது. ஹதீஸ் துறை வல்லுனர்கள் இவ்வாறு அணுகியதும் கிடையாது.

அந்த அணுகுமுறை அங்காடிகளின் அணுமுறை என்பதை நாம் முன்னர் சுட்டிக் காட்டி உள்ளோம்.

يقول الحافظ: أن قوله: (لا عدوى): نهي عن الاعتقاد بأنَّ العدوى لا تحدث بقدر الله سبحانه وتعالى. انظر: فتح الباري [ 10/ 158- 163الحافظ بن حجر ]

அல்லாஹ்வின் நாட்டத்திற்கு அப்பால் தொற்று ஏற்படுகின்றது என்ற தவறான நம்பிக்கை பிழையானது என்பதே
لا عدوى
“தொற்று நோய் கிடையாது” என்ற சொல்லாடல் வேண்டி நிற்கும் பொருளாகும்; என இமாம் இப்னு ஹஜர் (ரஹி) அவர்கள் சுட்டிக் காட்டும் விளக்கம் இங்கு கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

قال ابن عبد البر : أما قوله : ” لا عدوى ” فمعناه أنه لا يُعْدِي شيء شيئا ، ولا يُعْدِي سقيم صحيحا ، والله يفعل ما يشاء ، لا شيء إلا ما شاء .

இமாம் இப்னு அப்தில் பர் (ரஹி) அவர்கள்
لا عدوى
“தொற்று நோய் கிடையாது” என்பதன் விளக்கம் : ஒன்று மற்றொன்றைக் கடத்தவோ, அல்லது நோயாளி நோயற்றவருக்கு கடத்துவது என்பதோ பொருள் அல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடியதைச் செய்வான். அவன் நாடாமல் எந்த ஒரு விஷயமும் நடப்பதில்லை என்பதாகும். (இமாம் இப்னு அப்துல் பர்)

ஆம். தொற்று இல்லை என்றால் ஏன் பிளேக் போன்ற கொள்ளை நோயில் இருந்து வெருண்டோடச் சொன்னார்கள்? தொற்று நோய் இருப்பதால்தானே அவ்வாறு கூற முடியும் என்ற கேள்வி நவீன கால நடைமுறைக்கும் பகுத்தறிவிற்கும் பொருந்தும் நடைமுறையாக உள்ளது.

எனவே தொற்று இல்லை என்பதை ஏற்க முடியாது என்றும் ஒரு சாரார் வாதிடலாம்.

தொற்று நோய் இல்லை என்ற தொடக்க நபி மொழியின் இறுதியில் அந்த தொற்று கலப்பதால் அல்ல. இறைவனின் நாட்டத்தாலேயே அதுவும் இரண்டாவது மூன்றாவதாக எனப் பலரைத் தொற்றிக் கொள்கின்றது. இறை நாட்டம் இல்லாத போது அது தொற்றுவதில்லை என்பதை உணர்த்தவே நோயற்ற ஒட்டகத்தோடு நோய் உள்ளது சேர்ந்த பிறகு தானே நோய் ஏற்படுகின்றது என நபித்தோழர் கேட்ட போது

«فَمَن أعْدى الأوَّلَ؟»

“முதலாவது ஒட்டகத்திற்கு கடத்தியது யார்” என இறைத் தூதர் கேட்டார்கள்.

இது வஹியைப் புறம் தள்ளி பகுத்தறிவை முன்னிலைப் படுத்தி தீர்ப்பு வழங்குவோர் சிந்திக்க வேண்டிய பகுதியாகும்.

சரி தொற்று நோயே இல்லை என வைத்துக்கொண்டால் கலீஃபா உமர் (ரழி) அவர்கள் ஷாம் தேச மக்களை சந்திக்காது மதீனா திரும்பியது, பிளேக் நோய் ஏற்பட்ட போது அம்று பின் ஆஸ் (ரழி) அவர்கள் போன்ற பெரிய நபித்தோழர்கள் ஈராக்கிய நகரமான கூஃபா நகர தாஊனிலிருந்து தப்பிக்க குழந்தைகள், குடும்பங்களைக் கூட்டிச் சென்று மலை உச்சியில் ஒதுங்கியதாகக் கூறப்படுவது இறை விதிக்கு மாற்றமில்லையா? இறைவிதியை நம்பி தொற்று நோயை நம்பாமல் சிரியாவுக்கு வரலாமே என்ற தளபதி அபூஉபைதவின் கேள்வி நியாயமானதே!

இந்தக் கேள்வி முஸ்லிம்களின் தளபதி உபூ உபைதா (ரழி ) அவர்களால் உமர் (ரழி) அவர்கள் ஷாம் தேச ஸரஃக் நகரில் இருந்து திரும்பும் வேளை முன்வைக்கப்பட்டது என்பதை அது பற்றிய வரலாற்றில் கூறப்பட்டு அதற்கான பதிலும் கலீஃபாவால் பின்வருமாறு கூறப்பட்டது.

இங்கு கவனியுங்கள் ???

மக்களை இந்த நோயில் கொண்டு சேர்க்காமல் நீங்கள் மதீனா திரும்ப வேண்டும் என்ற மக்களின் கருத்தை செவிமடுத்த கலீஃபா அவர்கள்

فَقالوا: نَرى أنْ تَرْجِعَ بالنّاسِ ولا تُقْدِمَهُمْ على هذا الوَباءِ، فَنادى عُمَرُ في النّاسِ: إنِّي مُصَبِّحٌ على ظَهْرٍ فأصْبِحُوا عليه. قالَ أبُوعُبَيْدَةَ بنُ الجَرّاحِ: أفِرارًا مِن قَدَرِ اللَّهِ؟ فَقالَ عُمَرُ: لو غَيْرُكَ قالَها يا أبا عُبَيْدَةَ؟ نَعَمْ نَفِرُّ مِن قَدَرِ اللَّهِ إلى قَدَرِ اللَّهِ، أرَأَيْتَ لو كانَ لكَ إبِلٌ هَبَطَتْ وادِيًا له عُدْوَتانِ، إحْداهُما خَصِبَةٌ، والأُخْرى جَدْبَةٌ، أليسَ إنْ رَعَيْتَ الخَصْبَةَ رَعَيْتَها بقَدَرِ اللَّهِ، وإنْ رَعَيْتَ الجَدْبَةَ رَعَيْتَها بقَدَرِ اللَّهِ؟ قالَ: فَجاءَ عبدُ الرَّحْمَنِ بنُ عَوْفٍ – وكانَ مُتَغَيِّبًا في بَعْضِ حاجَتِهِ – فَقالَ: إنَّ عِندِي في هذا عِلْمًا، سَمِعْتُ رَسولَ اللَّهِ ﷺ يقولُ: إذا سَمِعْتُمْ به بأَرْضٍ فلا تَقْدَمُوا عليه، وإذا وقَعَ بأَرْضٍ وأَنْتُمْ بها فلا تَخْرُجُوا فِرارًا منه قالَ: فَحَمِدَ اللَّهَ عُمَرُ ثُمَّ انْصَرَفَ.

ஆகவே, உமர் (ரலி) அவர்கள் மக்களிடையே “நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படப்போகிறேன்; நீங்களும் காலையில் பயணத்திற்குத் தயாராகுங்கள்” என்று அறிவிப்புச் செய்தார்கள்.
அப்போது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?” என்று கேட்க, உமர் (ரலி) அவர்கள், “அபூ உபைதாவே! உங்களைத் தவிர வேறு எவரேனும் இவ்வாறு கூறியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். (உமர் (ரலி) அவர்கள், தமக்கு மாறாகக் கருத்துக் கூறுவதை வெறுப்பார்கள்.) ஆம். நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறு பக்கம் வறண்டதாகவும் உள்ள இருகரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?” என்று கேட்டார்கள்.

அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அங்கு) வந்து, “இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்த ஊருக்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து தப்புவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

உடனே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தமது முடிவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப அமையச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு (மதீனாவுக்கு)த் திரும்பிச் சென்றார்கள்.”
(முஸ்லிம் : 4461)

இந்தச் செய்தி பல உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றது.

((1)) மக்களின் தலைவர் என்ற வகையில் மக்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்புக் கூறும் கடமை நாட்டுத் தலைவரின் கடமையாகும்.

((2)) இவ்வாறான நிலைகளில் கலந்தாலோசனை செய்து தீர்க்கமான முடிவு எடுத்தல்.

((3))பேணுதல் அடிப்படையில் மக்களை வழிநடத்துல்.

((4)) தற்காப்பு நடவடிக்கை எடுத்தல். இது தற்காப்புக்கான காரணிகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

((4)) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இல்லாத முக்கிய விஷயமாக இது இருப்பதால் அது பற்றிய அறிவும் அனுபவமும் உள்ள மக்களைக் கலந்தாலோசித்து முடிவிற்கு வருவதில் உள்ள சமூக நலன் போன்ற இன்னோறன்ன பல விளக்கங்கள் இதில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.

இதைத் தான் கலீஃபா அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்பதை மேற்படி வரலாற்றில் இருந்து புரிந்துக் கொள்ள முடியும்.

இருந்தாலும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்து அவன் எழுதியதே தனக்கு நிகழும் என்ற அசையாத நம்பிக்கையோடு அவ்வாறு நோய்ப்பட்ட மனிதர்களோடு கலந்து உண்ணுவதை மார்க்கம் தடை செய்யவில்லை.

ஏனெனில் பிளேக் நோய் ஏற்பட்ட ஒரு மனிதனோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு அருந்தினார்கள். அப்போது அவரிடம் :

كُل بِاسْمِ اللَّهِ ثِقَةً بِاللَّهِ وتَوَكُّلًا عَلى اللَّهِ

அல்லாஹ் மீது நம்பிக்கையும் உறுதியும் வைத்து அல்லாஹ்வின் திருநாமத்தால் உண்ணு. எனக் கூறினார்கள். ((அபூதாஊத்)).

قوله: (فر من المجذوم)، في مسند ابن عمر، وهذا على وجه الإباحة، فأما الفضيلة فهو مع أكله مع المجذوم ومقاربته، وقد كان عمر بن الخطاب رضي الله عنه يؤاكل المجذوم، وإنما قلنا: الفرار منه مباح؛ لئلا يظن ضعيف الإيمان إن عرض له أمر أن ذلك على وجه العدوى

இது குஷ்டரோக நோயால் பாதிக்கப்பட்டவனிடமிருந்து தூர வெருண்டோடு என்ற செய்தியில் காணப்படுகின்ற கட்டளை சார்ந்த பிரோயகத்தில் சற்று தளர்வை உணர்த்துகின்றது. அதாவது, தூர விலக நினைத்தால் விலகிக்கொள் என்ற விருப்பத் தெரிவை உணர்த்தும் சொற்பிரயோகம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பலவீனமான இறை நம்பிக்கை உள்ளவர்கள் நான் நோய்பட்டவர்களோடு கலந்ததன் காரணமாகவே தமக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது என்று உணராமல் இருக்க இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
((والله أعلم ))

தாஊன் எப்போது உருவானது?

வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைப்பதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்னால் இறைவிதியில் எழுதப்பட்டவை அனைத்தும் உலகில் நிகழ்ந்தே தீரும்.

அவனது தீர்ப்பில் இருப்பதைத் தவிர வேறு எதுவும் இங்கு நடப்பதில்லை. ஒன்று தண்டனையாக, அல்லது சோதனையாகவோ அவை நிகழலாம்.

அவை நிகழும் காரணம், காலம், நிலைமை, சூழல், நாடு, பிரதேசம் என்பதைப் பொறுத்து மனிதர்கள் மத்தியில் அவற்றின் பெயர்களும் வேறுபடுகின்றன.

இறைவனை மறுத்து, இறைத் தூதர்களைக் கொலை செய்த இஸ்ரவேலர்கள் மீது அனுப்பப்பட்ட தண்டனையாக இருந்துள்ளதை நபி மொழிகள் இனம்காட்டுவதை உலகுக்கு அறியச் செய்வதன் மூலம் அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான், அடியார்கள் அவனுக்கு கீழ்படிந்து கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற செய்தியினை உலகுக்கு சொல்ல வேண்டும்.

وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْىِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِ‌ۚ (آل عمران : ٤٩)

“(மாலைக் கண்) குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்.” (3:49) . என ஈஸா நபி (அலை) அவர்கள் பற்றி குர்ஆன் குறிப்பிடுகின்றது.

வெண்குஷ்டம் மற்றும் கருங்குஷ்டம் பிடித்த மனிதர்களையும் அல்லாஹ்வின் உத்தரவின்படி நபி ஈஸா (அலை) அவர்கள் நீக்குவார்கள் என்ற குர்ஆன் வசனத்தின் மூலம் இது இஸ்ரேலிய சமூகத்தில் காணப்பட்ட ஒரு நோயாக இருந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது .

இவை அவர்கள் பூமியில் இருந்து வானின் பக்கம் உயர்த்தப்படுவதற்கு முன்னால் நடை பெற்ற உண்மை நிகழ்வுகளாகும்.

அவ்வாறு இன்றும் நடப்பது போன்று ஈஸா நபி -ஏசுநாதர்- அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெயரில் மக்கள் ஏமாற்றப்படுவதை மேற்படி வசனங்கள் போதிக்கவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நோய் நபிமார்களையும் அவர்கள் வழிநடந்த அப்பாவி முஸ்லிம் மக்களையும் கொலை செய்த இஸ்ரவேலர்கள் மீது அல்லாஹ் அனுப்பிய தண்டனையாக இருந்துள்ளதை மறுக்க முடியாது.

عَنْ عائِشَةَ، زَوْجِ النَّبِيِّ ﷺ، أنَّها أخْبَرَتْنا: أنَّها سَألَتْ رَسُولَ اللَّهِ ﷺ عَنِ الطّاعُونِ، فَأخْبَرَها نَبِيُّ اللَّهِ ﷺ: «أنَّهُ كانَ عَذابًا يَبْعَثُهُ اللَّهُ عَلى مَن يَشاءُ، فَجَعَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ …»

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியரான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்க அது, அல்லாஹ் தான் நாடியவர்களின் மீது அனுப்புகிற வேதனையாகும்.” (புகாரி)

الطاعون رِجْزٌ أُرسِل على بني إسرائيلَ أو على مَن قبْلَكم {صحيح ابن حبان }

“காலரா (தாஊன்) நோயானது இஸ்ரேலின் சந்ததியினர் மீது அல்லது உங்களுக்கு முன்பிருந்தவர்கள் அனுப்பப்பட்ட தண்டையாகும்” என இடம் பெற்றுள்ளது.( இப்னு ஹிப்பான் )

மேற்படி செய்தியில் பிளேக், காலரா போன்ற கொடிய நோய் அக்காலத்தில் இருந்ததனாலேயே இவ்வாறான கேள்வியும் பிறந்திருக்கின்றது என்ற உண்மையை உணர முடிகிறது.

அவ்வாறே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மரணத்தின் பின்னால் நடைபெறும் என முன்னறிவிப்புச் செய்த செய்தியில்

… ثُمَّ مُوتَانٌ يَأْخُذُ فِيكُمْ كَقُعَاصِ الْغَنَمِ 》{رواه البخاري في صحيحه}

“…ஆடுகளுக்கு (மூக்கில்) வருகிற (ஒரு வகை) நோயைப் போன்று நிகழும் கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போவார்கள் ) எனக் கூறினார்கள்.” (புகாரி- 3176)

இந்த முன்னறிவிப்பில் பிளேக் போன்ற பலரைக் காவு கொள்கின்ற மரணம் என்று புரிந்து கொள்ள முடியும்.

இந்த முன்னறிவிப்பானது இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி: 18 (கி பி.639) ல் நடந்த மிகக் கொடூரமான நிகழ்வாகக் காணப்படுகின்றது.

இதனால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத மக்களும் இறந்து போனார்கள்.

அது பாலஸ்தீன நகரங்களில் ஒன்றான அம்வாஸில் முதலாவதாக நிகழ்ந்த காரணத்தினால் அது “طاعون عمواس” (தாஊன் அம்வாஸ்) “அம்வாஸ் பிளேக்” நோய் என வரலாற்றில் அடையாளப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறு பார்க்கின்ற போது அந்தக் கால மக்கள் மத்தியில் தற்போதைய வைரஸ் குடும்பப் பெயர் போன்ற பெயரில் நோய்கள் ஏற்பட்டு பல லெட்சம் மக்கள் மரணித்துள்ளனர்.

அது ஒரு சாராருக்கு அருளாகவும் மற்றொரு சாராருக்கு இறை தண்டனையாகவும் இருந்துள்ளது என்பது இறைத் தூதர் அவர்களின் போதனையாகும்.

வரும் தொடர்களில்,,,

  • இவ்வாறான கொடிய நோய்கள் ஏற்படக் காரணம் என்ன?
  • அதற்கான தீர்வை எவ்வாறு எட்டலாம்? போன்ற விடயங்களை இஸ்லாமிய வழிகாட்டல்கள் ஊடாக முன்வைக்க உள்ளோம்.

மேலதி தேடலுக்காக: ?

(1)https://www.saaid.net/Doat/assuhaim/fatwa/200.htm

(2)https://www.alukah.net/sharia/0/47401/

தொடரும் -இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *