கடந்த காலங்களில் பார்க்காத மிக அசாதாரணமான சூழலை இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலகத்திலே பல துன்பங்களையும் போர்கால நிலைகளையும் இயற்கை சீற்றங்களையும் கலவர பூமியையும் நாம் கண்டோம். ஆனால் இந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு நாம் ஆளாகவில்லை ஏனென்றால் அப்போதெல்லாம் பள்ளிவாசல்கள் திறந்தே இருந்தன
இன்றுமோ பள்ளிவாசல்கள் மூடப்பட்டு இருப்பதுதான் நமது மன உளைச்சலுக்கு, நெருக்கடி நிலைக்கு காரணம். நமது வாழ்வில் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பள்ளிவாசல்கள் தான் அருமருந்து என்று நாம் ஓடோடி வந்தோம் நமது தேவைகளை அல்லாஹ்விடத்தில் முன்வைத்து அந்த பிரச்சினைகளிலிருந்து வெளியேற ஈடேற்றம் பெற பள்ளிவாசல்களை நாம் வசீலாவாக, ஏணிகளாக, உந்துசக்தியாக பயன்படுத்திக் கொண்டோம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காற்று இடி மின்னல் மழை சூரிய சந்திர கிரகணங்கள், அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்து இன்ப துன்ப நிகழ்வின் போதும் கூட நபியவர்கள் பள்ளிவாசலுக்கு விரைவாக வந்து தொழுது அல்லாஹ்விடத்தில் உதவி தேடுவார்கள் அல்லது நன்றி செலுத்துவார்கள் எப்போதும் பள்ளிவாசலோடு இணைந்தே இருப்பார்கள். அந்த அடிப்படையில்தான் நாமும் பள்ளிவாசல்களை நமது வாழ்வின் ஒரு அங்கமாகவும் ஈமானிய அடையாளமாகவும் பார்க்கிறோம்.
இறை இல்லத்திற்கு ஏதேனும் ஒன்றென்றால் கொதித்துப் போகிறோம் இது ஈமானிய வெளிப்பாடு.
யார் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகின்றாரோ அது உள்ளத்தில் இருக்கும் தக்வாவின் அடையாளமாகும் (22:32) என்று அல்லாஹ் கூறுகிறான்.
மஸ்ஜிதுகளின் தொடர்பைவிட்டு பிரிந்த காரணத்தால் நாம் இழந்த நன்மைகளும் ஏராளம்..
இந்த பூமியிலேயே அல்லாஹ்விற்கு பிடித்த இடம் பள்ளிவாசல்கள் ஆகும்
(நூல்: முஸ்லிம்) அப்படிப்பட்ட பாக்கியம் மிக்க இடங்களை நாம் பிரிந்திருக்கின்றோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் காலையிலும் மாலையிலும் பள்ளிவாசலுக்கு சென்றால் சொர்க்கத்தில் அவருக்கு உரிய இடத்தை அல்லது விருந்துபச்சாரத்தை அல்லாஹ் அவருக்காக தயார் செய்கிறான்.
(நூல்:புகாரி, முஸ்லிம்.)
தொழுகை விஷயத்தில் அதிகம் நன்மை கூறியவர் மிக நீண்ட நீண்ட தூரம் நடப்பவர் மேலும் ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்து இமாமுடன் தொழுபவருக்குதனியாக தொழுதுவிட்டு தூங்குகின்றவரை விட அதிகம் நன்மை உண்டு. என ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி, முஸ்லிம்.)
நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் அரிஷினுடைய நிழலை கொடுக்கின்றான் அதில் ஒருவர்தான் அல்லாஹ்வின் இல்லத்தோடு தன் உள்ளத்தை இணைத்துக் கொண்டவர்.
(நூல்: புகாரி)
நாம் கல்வி கற்பதும் தடைபட்டுவிட்டது
மாலிக் இப்னு ஹூவைரிஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் நாங்கள் சமவயதுடைய வாலிப தோழர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து இருபது நாட்கள் பள்ளியிலேயே தங்கியிருந்து மார்க்கம் படித்தோம். (நூல்: புகாரி)
அனைத்து பள்ளிவாசல்களிலும் மக்தப் மதரசாக்கள், தீனியாத் பயிற்சி வகுப்புகள், அரபி கல்லூரிகளும் இயங்கி வந்தன அனைத்தும் தடைபட்டு போய்விட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எந்த ஒரு கூட்டமாவது இறை இல்லத்தில் ஒன்றுகூடி குர்ஆனை ஓதி பிறருக்கும் கற்றுக் கொடுக்கின்றார்களோ அவர்கள் மீது சகீனத் எனும் அமைதி இறங்கும், இறை அருள் அவர்களை மூடிக்கொள்ளும், மலக்குமார்கள் அவர்களை சூழ்ந்து கொள்வார்கள் (நூல்: முஸ்லிம்)
ஜும்மா தொழுகை தடைபட்டதின் காரணமாகவும் நாம் இழந்த நன்மைகள்
இமாம் மிம்பரில் ஏறி குத்பாவை ஆரம்பிப்பதற்கு முன்பதாக யார் பள்ளிவாசலுக்கு வருகின்றாரோ அவர் மலக்குமார்களுடைய பட்டியலிலே நமது பெயர் இடம் பெறும் அந்த நன்மையை இழந்தோம்.
ஜும்மா தொழுகைக்கு முதன்மையாக யார் யாரெல்லாம் பள்ளிவாசலுக்கு வருகிறார்களோ அவர்களெல்லாம் கால்நடைகளை குர்பானி கொடுத்த நன்மையை அடைந்தார்கள் அதனை இழந்தோம்.
ஒரு ஜும்மாவில் இருந்து மற்றொரு ஜும்ஆ இடைப்பட்ட நாட்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும் அந்த நன்மையையும் நாம் இழந்தோம்
பள்ளிவாசலை இழந்ததின் காரணமாக பல நன்மைகளை நாம் இழந்தோம்.
இத்தகைய நன்மைகளை இழந்ததற்கே நாம் வருத்தப்படுகிறோம் கைசேதப்படுகின்றோம் இதே நிலை நீடித்தால் (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) அடுத்தது நாம் எதிர்நோக்கும் மகத்தான நன்மைக்குறிய மாதம்தான் ரமலான். அத்தகைய ரமலானை அடைவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது.
பள்ளி இல்லாமல் நமது நோன்புகளும் இபாதத்துக்களும் இல்லை உடல் ஆரோக்கியத்தோடும் நிம்மதியான சூழலோடும் நாம் அந்த ரமலானை அடைய வேண்டும்
யா அல்லாஹ்.. சங்கையான ரமலானை எங்களுக்கு (இபாதத் செய்ய) நீ அடைய செய்வாயாக என்று நாம் அதிகமதிகம் துஆ செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.
அல்லாஹ்வை தொடர்படியாக வணங்க வேண்டும் அவனை வணங்குவதில் எனக்கு எந்தத் தடையும் வரக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இந்த பிரார்த்தனையை ஒவ்வொரு தொழுகை முடிந்த பிறகும் கேட்பார்கள்
اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك
யா அல்லாஹ் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக. (நூல்:அபூதாவூது)
படைத்த இறைவனை வணங்குவதே அல்லாஹ் நமக்குத் தந்த மிகப்பெரிய நிஃமத் ஆகும் எப்படி ஈமானை அருட்கொடையாக நாம் பார்க்கிறோமோ அதேபோல அவனை வணங்குவதற்குண்டான வாய்ப்புக்களை அல்லாஹ் ஏற்படுத்தித் தருவதும் அவனது அருட்கொடையாகும் அந்த அருள் கொடை நம்மை விட்டு நீங்க விடக்கூடாது.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ
யா அல்லாஹ் உனது அருள் முற்றாக நீங்குவதை விட்டும் உனது நன்மை (தீமையாக) மாறி விடுவதை விட்டும் உனது தண்டனை திடீரென வருவதை விட்டும் உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்பு கோருகின்றேன். (நூல்:முஸ்லிம்)
இதுபோன்ற பிரார்த்தனைகள் தான் இன்று அதிகமதிகம் கேட்கப்பட வேண்டும்.
இழந்த நன்மைகளை அடைவதற்கு வாய்ப்புக்களையும் அல்லாஹ் நமக்கு எழுதியிருக்கிறான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்:- ஒரு அடியான் ஆரோக்கியமானவனாகவும் ஊரில் இருக்கும் போதும் செய்யும் நற்செயல்களுக்கு கிடைப்பது போன்ற அதே கூலி அவன் நோயுற்று விடும்போதும், பயணத்தில் இருக்கும் போதும் (அவன் பாவம் எதுவும் செய்யாமல் இருக்கும் வரை) அவனுக்கு எழுதப்பட்டு விடும்.
(நூல்: புகாரி-2996.)
ஒவ்வொரு மனிதர்களும் தன் எண்ணத்திற்கேற்ப செயல்படுவார்கள் அந்த எண்ணத்தின் அடிப்படையில் தான் அல்லாஹ் கூலிகளையும் வழங்குகின்றான்.
எண்ணங்களின் அடிப்படையில்தான் செயல்களும் அமைகின்றன என ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: புகாரி)
எனவே நாம் ஒவ்வொரு வணக்கங்களையும் செய்வதற்கு முன்னரே நமது எண்ணங்களை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
ரமலான் மாதம் நமது இறையச்சத்தை அதிகரிக்கும் மாதமாகும் நன்மைகள் அதிகமதிகம் செய்யவும் பாவங்களை விட்டு விலகி இருக்கவும் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் நரகத்தின் வாயில்கள் மூடப்படும் மாதமாகும் பாவமன்னிப்பு வழங்கப்படும்
ஆகத்தகுதியான சங்கைக்குரிய மாதமாகும்.
ரமலான் மாதத்திலும் பள்ளிகள் பூட்டப்பட்டிருந்தால் நமது நிலை என்னவாகும் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்
ஸஹர், இப்தார், கியாமுல் லைல், தஹஜ்ஜத், இஃதிகாஃப், ஸதக்கா, ஸக்காத், திக்ர், திலாவத்துல் குர்ஆன் போன்ற பல நன்மைகளை நாம் இழக்க நேரிடும்.
இமாம் இப்னுல் கையூம் அல்ஜவ்ஸி (ரஹ்) அவர்களிடத்தில்..
பள்ளியில் சுன்னத் மற்றும் நஃபிலான வணக்கங்களை செய்யாத ஒரு மனிதரைப் பற்றி கேட்கப்பட்டது
உன்னுடைய வீட்டில் உனக்கு பிடிக்காத விருந்தாளி வந்தால் நீ என்ன செய்வாய் என்பதாக இமாமவர்கள் கேட்டார்கள், அதற்கு அந்த மனிதர் நான் உடனடியாக அவரை என் வீட்டை விட்டு வெளியேற்றுவதற்குரிய வேலையை பார்ப்பேன் என்றார்
அதேபோன்றுதான் அல்லாஹுத்தஆலா யார் மீது நேசம் கொள்ளவில்லையோ அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றி விடுவதற்காக இவ்வாறு செய்கின்றான் என்று பதிலளித்தார்கள்.
இன்று நாம் அல்லாஹ்வுடைய நேசத்திலிருந்து அருளிலிருந்து தூரமாக விட்டோமா.?
அல்லாஹ் நம்மின் மீது அருள்புரிய அன்பு வைக்க அதிகமதிகம் பாவ மன்னிப்புக் கோருவோம்,இறை திருப்தியை பெற்றுத் தருகின்ற அமல்களை செய்வோம்.
எதிர்வரும் ரமலானில் பள்ளியில் சங்கமிப்போம். இன்ஷா அல்லாஹ்..!
நாம் இறையில்லத்திற்கு வருவதற்கான தடையை அல்லாஹ் நீக்குவானாக..! ஆமீன்.
ஆக்கம் தாஹா ஃபைஜி – சென்னை