Featured Posts

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்

எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.)

சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் நடைபெற்ற முதல் போராட்டமான பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான மாற்றத்தையும், புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியோர் சிறு குழுவினராக இருந்து கொண்டே அசத்தியத்திற்காகப் போராடியோரைத் தமது இறை நம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தனர். சத்திய ஒளிக்கும் அசத்திய இருளுக்கும் இடையே நடந்த இப்போரில் இருளை ஒளி வெற்றிகொண்டுவிட்டது.

இஸ்லாமியப் போர்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் அந்நிய மக்களால் முன்வைக்கப்படுகிறது. எனினும், நபி (ஸல்) அவர்கள் சந்தித்த போர்கள் அனைத்தும் நியாயமான காரணங்களுக்காகவே நடைபெற்றன.  நபி (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் யுத்தமான பத்ருப் போர்,   பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இந்த இடம் மதீனாவுக்கு எண்பது மைல் தொலைவிலும், மக்காவுக்கு 280 மைல்களை விட அதிக தூரத்திலும் அமைந்துள்ளது.

போரை முதலில் துவக்கியவர்கள் அநீதி இழைத்து, உரிமைகளைப் பறித்து, சொந்த ஊரைவிட்டு விரட்டிய மக்காக் காபிர்கள். அவர்கள் படை எடுத்து, தாக்க வந்த போது, நபியவர்கள் அதை உரிய முறையில் எதிர்கொண்டு,பதிலடி கொடுத்தார்கள். எனினும், இது மதீனாவுக்கு அருகிலேயே தற்காப்பு நடவடிக்கையாக அமைந்தது.

தங்களின் ஒப்பந்தங்களை முறித்துவிட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா? (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா?) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா?) திருக்குர்ஆன் 9:13

பத்ருப் போர் நிகழ்ந்த ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் திங்கள், பதினேழாம் நாள் இஸ்லாத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவே மதிக்கப்படுகிறது. மிகத் திறமை வாய்ந்த 1000 போர் வீரர்களைக் கொண்டிருந்த குறைஷிகளின் அசத்திய எதிரணியை  எதிர்கொள்ள, ஈமானியப் போராளிகள் மிகக் குறைந்த ஆயுத பலத்துடன், அன்றைய தினம் நோன்பு நோற்றவர்களாகக் காணப்பட்டனர்.

முஸ்லிம்களைவிட காபிர்கள் மூன்று மடங்கு அதிகமாகவே இருந்தனர். எனினும், முஸ்லிம்கள் ஈமானிய பலத்தால் பெரும் படையை மிகைத்து, வெற்றிவாகை சூடினர்.

உலகத்தின் கண்ணோட்டமும் கணக்கும் எப்போதும் காரண காரியத்தொடர்பினூடாக மட்டுமே இருக்கும். ஈமான் இல்லாத உள்ளங்கள் வெறும் காரண காரிய ஒழுங்கினூடாக மட்டுமே போர் நிலைகளை நோக்குகின்றன. பத்ருப் போரையும் அவ்வாறு தான் எடைபோடுகின்றனர்.

உண்மையில் பத்ர் களத்தில் நின்றவர்கள் நோன்பாளிகள், உடலியல் பலம் குறைந்தவர்கள், ஆயுத, படைப்பலம் குன்றிய நிலையில் காணப்பட்டனர். ஏதிரிகளான மக்காக் காபிர்கள் பலமான போர் வீரர்களுடனும், போர்க் குதிரை, தளபாடங்களுடனும் களம் புகுந்தனர். காபிர்களின் படையுடன் ஒப்பிடும் போது, முஃமின்கள் மூன்றில் ஒன்றாக குறைந்தே இருந்தனர். ஒரு சிறுவனிடம் எடைபோடச் சொன்னால் கூட, முஃமின்கள் படை நிச்சியம் தோற்றுவிடும் என்று எவ்விதத் தயக்கமுமின்றியே கூறிவிடுவான்.

ஆனால், அல்லாஹ்வின் அருளில் உறுதியான நம்பிக்கை வைத்த உள்ளங்கள், காரண காரியவாத தொடர்பில் மட்டுமல்லாது, இறை நாட்டத்தினூடாகவும் நிகழ்வுகளை நோக்கும் போது, வெற்றிக்கனிகள் கண்ணில்பட்டு மின்னுகின்றன.

அத்தகைய மன உணர்வோடு பத்ர் யுத்தம் தொடர்பான சுருக்கமான வரலாற்றுப் பின்னணியுடன், அதன் மூலம் நாம் எத்தகைய படிப்பினை பெறவேண்டும் என்பதையும் நோக்குவோம்.

பின்னணி:

நபி (ஸல்) அவர்கள் பத்ர் யுத்தம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) தலைமையில் எண்மர் (8) கொண்ட குழுவை (12 பேர் என்ற குறிப்பும் உண்டு) உளவாளிகளாக, உறையிட்ட கடிதமொன்றைக் கொடுத்து, இரண்டு நாட்கள் பயணித்த பின்னர், அதைப் பிரித்துப் பார்க்கப் பணித்து அனுப்பி வைத்தார்கள். அக்கடிதத்தில் நீங்கள் மக்காவிற்கும் தாயிபிற்குமிடையிலுள்ள நக்லா எனுமிடத்திற்குச் சென்று, அங்கிருந்தவாறு குறைஷிகளின் நடவடிக்கையை உளவு பார்த்து, செய்திகளை அனுப்ப வேண்டும் எனவும், இதற்காக உமது தோழர்கள் எவரையும் நிர்பந்திக்கக் கூடாது என்றும் எழுதப்பட்டிருந்தது.

இரண்டில் ஒன்று:

அபூ ஸுப்யானின் தலைமையில் சிரியாவுக்குச் சென்ற வாணிபக் கூட்டம் திரும்பி வந்து கொண்டிருந்தது. முஸ்லிம்களில் அதிகமானவர்கள் இதை முற்றுகையிடவே விரும்பினர். இதற்குத் தயாரானபோது, மக்காக் காபிர்கள் போருக்குத் தயாராகி மதீனா நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தி நபியவர்களுக்குக் கிடைத்தது.

எனவே, நபியவர்கள் போர் புரிவதையே விரும்பினார்கள். வாணிபக் கூட்டத்தை இடைமறித்தால், அதிக செல்வம் கிடைத்துவிடும் என்றாலும் மக்கா காபிர்கள் மதீனா எல்லைக்குள் பிரவேசித்தால் இழப்புக்கள் அதிகமாகும் என்ற நபியவர்களின் தூர நோக்கு சிந்தனை இதில் வெளிப்படுகிறது.

எனினும், சிலர் போர் புரிவதை விரும்பவில்லை. இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும் படியும் அதில் காபிர்களை வேரறுப்பதையே அல்லாஹ் விரும்பினான் என்பதையும் பின்வரும் வசனங்கள் எடுத்துரைக்கின்றன.

(நபியே! யுத்தப் பொருட்கள் பங்கீடு விசயத்தில் அவர்கள் அதிருப்தியுற்றது) உமதிரட்சகன் உம் இல்லத்திலிருந்து உண்மையைக் கொண்டு உம்மை வெளியேற்றியதை (அவர்கள் விரும்பாததை)ப் போன்றிருக்கிறது. நிச்சியமாக விசுவாசிகளில் ஒரு கூட்டத்தினர் (பத்ர் யுத்தத்தின் போது உம்முடன் வருவதை வெறுக்கக் கூடியவர்களாக இருக்க,நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்து) வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சியமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 08:05-09)

உறுதிவெளிப்பாடு:

நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களின் மனநிலையை அறிவதற்காக முயற்சித்தார்கள். யாரிடம் கேட்டால் போர் புரியச் சொல்வார்களோ அவர்களிடம் கேட்டுப் பார்த்தார்கள். உமர் (ரழி), அபூபக்கர் (ரழி) போன்ற குறைஷிகள் போராடத்தான் வேண்டுமென்றனர். ஆனாலும், நபியவர்கள் மதீனத்து அன்ஸாரிகளின் மனநிலை எவ்வாறுள்ளது என்பதை அறியவே விரும்பினார்கள். இதனை உணர்ந்து கொண்ட ஸஅத் இப்னு உபாத (ரழி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள், எங்கள் எண்ண ஓட்டத்தையே தெரிய விரும்புகிறீர்கள் என நினைக்கிறேன். எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக! கடலில் மூழ்க நீங்கள் கட்டளையிட்டால் அதற்கும் தயார் என்று வீர முழக்கமிட்டார்கள். (முஸ்லிம்)

அதேபோல் மிக்தாம் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நீரும் உமது இறைவனும் சேர்ந்து போரிடுங்கள் என்று மூஸாவின் சமூக் கூறியது போன்று நாங்கள் கூறமாட்டோம். உங்கள் வலது புறமும், இடது புறமும், முன்னாலும், பின்னாலும் நின்று போர் புரிவோம் என்று கூறியபோது, நபியவர்களின் முகம் பிரகாசமடைந்தது. (புகாரி)

அமைதித் தூக்கம்:

முஃமின்களுக்கு அமைதியை வழங்கி, தூக்கத்தைக் கொடுத்து, அவர்களது மனநிலையை அல்லாஹ் உறுதிப்படுத்தினான்.

(விசுவாசிகளே! உங்கள் மனம் மிகக் கூடுதலான எதிரிகளைக் கண்டு பயப்படாது.) அபயம் பெறுவதற்காக அவனிடமிருந்து உங்களுக்கு சிறிய தூக்கத்தை அவன் போட்டான் என்பதை (நினைத்துப் பார்ப்பீர்களா?) (அல்குர்ஆன் 08:11)

மழை மூலம் தூய்மையாக்கல்:

அல்லாஹ்வின் அருளால் அன்று மழை பொழிந்து, முஃமின்களின் முகாம் இறுக்கமடைந்தது. காபிர்களின் தங்குமிடம் சகதியாகி, நிலைத்து நிற்க முடியாமல்போனது. மழை மூலமாக முஃமின்களைத் தூய்மையாக்கி, அவர்களின் பாதங்களை உறுதிப்படுத்தினான்.

(அது சமயம்) உங்களை அதைக் கொண்டு தூய்மைப் படுத்துவதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தை (தீய ஊசலாட்டத்தை)ப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி, அதைக் கொண்டு உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல்குர்ஆன் 08:11)

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை:

யுத்தம் நடப்பதற்கு முதல் இரவு நபியவர்கள் உறங்காது காலை வரையிலும் பிரார்த்தனையில் இருந்தார்கள். நெஞ்சுருக அல்லாஹ்விடம் பின்வருமாறு வேண்டினார்கள்.

இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று! நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! இறைவா! இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்) என நபியவர்கள் பிரார்த்தித்த பின்னர் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான்.

நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்மு) வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சியமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 08:09)

யுத்தம் ஆரம்பம்:

நபி (ஸல்) அவர்கள் தனது உற்ற தோழர்களான போராளிகளை அணிவகுக்கச் செய்து, யுத்த தர்மங்களைப் போதித்து, அறிவுறுத்தினார்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு, ரமழான் மாதம் பதினேழாம் நாள் காலை பத்ருப் போர் நடைபெற்றது. இஸ்லாமியப் போராளிகள் நோன்புடனும், மக்காக் காபிர்கள் ஆபாச களியாட்ட லீலைகளுடனும் களம் புகுந்தனர்.

அன்றைய போர் முறைப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் களம் புகுவதில்லை. ஆரம்பத்தில் சிலர் மோதிக்கொண்டு, யுத்த வெறியை ஏற்படுத்திக் கொள்வர். இதனடிப்படையில் காபிர்கள் சார்பாக மூவர் வந்தனர். முஸ்லிம்கள் சார்பாக அன்சாரிகள் மூவரை நபியவர்கள் அனுப்பியபோது, எங்களுக்கு நிகரான குறைஷிகளை அனுப்புங்கள் என்றனர். அப்போது நபியவர்கள் உபைதா (ரலி), ஹம்ஸா (ரலி), அலி (ரலி) ஆகிய மூவரையும் அனுப்பினார்கள். இவர்கள் மூவரும் காபிர்களில் வந்த பின்வரும் மூவருடன் போரிட்டு அவர்கள் தலைகளை நிலத்தில் உருட்டினர்.

ஹம்ஸா (ரலி)    X    உத்பா

உபைதா (ரலி)    X    வலீத்

அலி (ரலி)          X   ஷைபா

இதன் பின்னர் பாரிய யுத்தம் மூண்டது. யார் யாரை வெட்டினர் என்ற குறிப்பு சரியாகக் கிடைக்கவில்லை. களத்தின் நடுவில் புகுந்து போர் புரிந்ததால், அவற்றை சரியாக கூர்ந்து யாராலும் சொல்ல முடியாது. எனினும், அபூஜஹ்லைக் கொலை செய்த முஆத் பின் அஃப்ரா (ரழி) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ரழி)  ஆகிய பெயருடைய இரு இளைஞர்கள் என்பதற்கான (புகாரி 3141) ஹதீஸ் குறிப்பு ஒன்றுள்ளது.

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களிடையே நான் இருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன்.

அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண் சாடை செய்து என் பெரிய தந்தையே நீங்கள் அபூ ஜஹ்லை அறிவீர்களா? என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரன் மகனே என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர் அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது. (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்) என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது, மற்றொரு சிறுவரும் கண் சாடை காட்டி முதல் சிறுவர் கூறியது போன்றே கூறினார்.

சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்ட படி (அவனை நோக்கி0 சென்று அவனை வெட்டிக் கொன்று விட்டார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லை கொன்று விட்ட செய்தியை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களில் யார் அவனைக் கொன்றது என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் நான் தான் (அவனைக் கொன்றேன்) என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். இருவரும் இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள் (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) அபூ ஜஹ்லுடைய உடல் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹீக்கு உரியவை என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி¬) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ரழி)  அவர்களும் ஆவர். புகாரீ 3141

அல்லாஹ்வின் உதவி:

பத்ரில் கலந்து கொண்ட முஸ்லிம் போராளிகள் குறைவாக இருந்தும், அல்லாஹ் அவர்களுக்கு காபிர்களைக் குறைவாகக் காண்பித்து, முஃமின்களின் தொகையைக் காபிர்களுக்கு அதிகமாகக் காண்பித்தான்.

(நபியே! உம்முடைய கனவில் அல்லாஹ் (எண்ணிக்கையில்) அவர்களைக் குறைத்துக் காண்பித்ததையும், (நினைவு கூர்வீராக) அவர்களை (எண்ணிக்கையில்) அதிகபடுத்தி உமக்குக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியமிழந்து யுத்தம் செய்வதைப் பற்றி உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டு இருந்திருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களைப்) பாதுகாத்துவிட்டான். நிச்சியமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிந்தவன்.

நீங்கள் (இரு படையினரும்) சந்தித்த சமயத்தில் அவர்க(ளுடைய எண்ணிக்கை)களை, உங்கள் கண்களுக்குக் குறைவாக அவன் காட்டியதையும், உங்க(ளுடைய எண்ணிக்கை)களை அவர்களுடைய கண்களுக்கு அவன் அதிகமாகக் காட்டியதையும் (நினைவு கூருங்கள்.) நடந்தேறப்பட வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக (அல்லாஹ் அவ்வாறு செய்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்) மேலும், அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் திரும்பக் கொண்டுவரப்படும். (அல்குர்ஆன் 08:43-44)

வானவர்களின் வருகை:

அல்லாஹுத்தஆலா, தனது உதவியை நேரடியாக வழங்கினான்ளூ வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான்ளூ ஆயிரம் வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான்.

“நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள்! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே, கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்! என்று (முஹம்மதே!) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக!  (அல்குர்ஆன் 08:12)

பத்ர் களத்தில் வானவர்கள் இறங்கி எதிரிகளை நிலை குலையும் அளவு தாக்கினார்கள். அவர்களின் தாக்குதலால் பலர் மாண்டனர். இன்னும் சிலர் புறமுதுகு காட்டிஓடினர்.

அன்ஸரிகளில் ஒருவர் அப்பாஸ் (ரலி) (அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை) அவர்களைக் கைது செய்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்த போது, அப்பாஸ் (ரலி), அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சியமாக இவர் என்னை கைது செய்யவில்லை. அழகிய முகமுடைய தலையில் முடியில்லாத ஒருவர் கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்துடைய குதிரையில் வந்து என்னைக் கைது செய்தார். ஆனால், அவரை இப்போது இக்கூட்டத்தில் நான் பார்க்கவில்லை! என்று கூறினார். அதற்கு, அன்ஸாரித் தோழர் அல்லாஹ்வின் தூதரே! இவரை நான் தான் கைது செய்தேன் என்று கூறினார். நீர் அமைதியாக இரும். கண்ணியமிக்க வானவர் மூலம் அல்லாஹ் (இவரை) உன் கையால் பிடித்துத் தந்துள்ளான் என்று நபி (ரழி) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத்)

(விசுவாசிகளே பத்ருப் போரில் எதிரிகளாகிய) அவர்களை நீங்கள் கொல்லவில்லை. அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (நபியே! விரோதிகளின் மீது) நீர் (மண்ணை) எறிந்த போது (அதனை) நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் (உம் மூலம் அதனை) எறிந்தான். (அதன் மூலம்) அழகான முறையில் விசுவாசிகளுக்கு அருட்கொடையை நல்குவதற்காக (இவ்வாறு அல்லாஹ் செய்தான்.) நிச்சியமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன். (அல்குர்ஆன் 08:17)

சத்தியத்திற்கு வெற்றி:

போரில் கலந்து கொண்ட குறைஷிகளின் முக்கிய தலைவர்களில் 24 பேர் கொல்லப்பட்டனர். (பார்க்க: புகாரி 3976, முஸ்லிம்) மொத்தமாக 70 பேர் கொல்லப்பட்டு, 70 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். மக்காவில் நபியவர்கள் கஃபாவில் தொழும்போது, ஒட்டகக் குடலை கழுத்தில் போட்டு வேதனைப்படுத்தியவர்கள் பத்ரு களத்தில் வேரறுத்த மரங்களாக சரிந்தனர் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

முஸ்லிம்களில் 14 போர் ஷஹீதாகினர். அவர்களில் அறுவர் குறைஷியர் (முஹாஜிர்கள்), எண்மர் அன்ஸாரிகள் ஆவர். எனவே, முஸ்லிம்களுக்கு பத்ர்களத்தில் மகத்தான வெற்றி கிடைத்தது.

அன்றைய காலகட்டத்தில் நிலவிய அராஜக அநியாய, அட்டூழியங்கள் ஒடுக்கப்பட்டு சத்தியமும், நீதியும், சமாதானமும் நிலவச் செய்ய நபியவர்கள் உழைத்தார்கள். நிச்சியம் அந்த பத்ரின் போது, நபிக்கும் முஃமின்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிட்டியது போல், நாம் சிறந்த முஸ்லிம்களாக வாழ்ந்தால் இன்றும் அல்லாஹ்வின் அந்த உதவி கிட்டிக்கொண்டே இருக்கும் (இன்ஷாஅல்லாஹ்)

பத்ரில் (நடந்த யுத்தத்தில்) நீங்கள் (எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும் மிகக்) குறைந்தவர்களாயிருந்த சமயத்தில் நிச்சியமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 03:123)

வெற்றிக்கான காரணிகள்:

•           ஈமானிய பலம்

•           அல்லாஹ்வின் அபரிமிதமான உதவியும் வானவர்களின் வருகையும்.

•           முஸ்லிம் போராளிகளின் ஷஹாதத் வேட்கை.

•           நபி (ஸல் ) அவர்களின் சிறந்த தலைமைத்துவமும் படைக்கட்டுப்பாடும்.

•         புவியியல் காரணிகளும் போர்த் தந்திரங்களும்.

•           காபிர்களின் லோகாயத இலக்கும், ஒழுக்கக் கட்டுப்பாடற்ற தன்மையும்.

விளைவுகள்:

முஸ்லிம்கள் சந்தித்த முதல் யுத்ததிலேயே வெற்றி பெற்றனர். இதன் விளைவை பின்வருமாறு நோக்கலாம்:

•           முஸ்லிம்களின் துன்ப நாட்கள் நீங்கி, தலைநிமிர்ந்து வாழும் நிலை ஏற்படல்.

•           இஸ்லாம் துரித வளர்ச்சியடைதல்.

•           நபி (ஸல்) அவர்கள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை அதிகரித்தல்.

•           மதீனா மிகுந்த செல்வாக்குப் பெற்றமை.

•           ஜாஹிலிய்யத் முகம் குப்பற வீழ்த்தப்பட்டமை போன்றவை பாரிய விளைவுகளாகும்.

இவ்வாறு பல விளைவுகள் ஏற்பட்டதோடு, இஸ்லாம் ஒரு தெய்வீக மார்க்கம் என்ற மனப்பதிவு அனைவர் உள்ளத்திலும் ஏற்பட்டது.

உலகத்தின் மதிப்பீடுகளுக்கு அப்பால் பத்ர் களம் மகத்தான வெற்றியை வழங்கியது. புடைப்பலத்தை மட்டும் வைத்து நோக்குவது ஈமானற்ற சடவாத உள்ளங்களின் நிலைப்பாடாகும். ஈமானிய உள்ளங்கள் முழுமையாக அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து தம்மைத் தயார் படுத்தும். இஸ்லாமிய உலகு புனித ரமழானில் பல படையெடுப்புக்களை சந்தித்துள்ளது. அந்த வகையில் இந்த ரமழான் எமது ஈமானை வலுப்படுத்தி, முழுமையான முஸ்லிமாக வாழக் கூடிய மனப்பக்குவத்தை வழங்கட்டுமாக. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *