Featured Posts

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் (தொடர்-1)

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற நேரமாகும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இந்த இரவு நேரத்தை பல அமற்களைக் கொண்டு அலங்கரித்துள்ளார்கள். எனவே இவ்வாக்கத்தில் நபிகளாரின் இரவு நேர அமற்களைப் பற்றிய சிறு தொகுப்பை உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன்.

நபிகளாரின் வாழ்நாளில் இஷா தொழுகையின் பின் சுன்னத்துக்குப் பிறகு அவர்கள் செய்துள்ள காரியம் என்ன என்று நாம் தேடினோம் எனில் இரவுத்தொழுகையை அவர்கள் பேணித் தொழுது வந்தமைக்கான சான்றுகளை பெற்றுக்கொள்ள முடியும். நபி ஸல் அவர்கள் இரவுத்தொழுகையை இரவின் ஆரம்ப நேரம் , இரவின் நடுப்பகுதி , இரவின் இறுதிப்பகுதி போன்ற நேரங்களில் தொழுது வந்துள்ளார்கள். இதுவல்லாத இன்னும் சில அமற்களிலும் கவனம் செலுத்தியுள்ளார்கள்.

இரவு நேர வணக்கங்களின் சிறப்புக்கள்.

1) இரவுத்தொழுகை தொடர்ந்து பேணிவருவதின் சிறப்பு.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்)அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு, அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க. ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாவும்இருந்தேன்.

இரண்டு மலக்குகள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணற்றுக்குச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன. இதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று கூறினேன்.

அப்போது வேறு ஒரு மலக்கு என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார்.

இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) யிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலேயே மிகவும் நல்லவர்!” என்று கூறினார்கள். அதன் பின்னர் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

நூல் : புகாரி 1121, 1122

முஃமின்களின் பண்பாக அல்லாஹ் சொல்கிறான்

كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ‏

அவர்கள் இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர்களாகவும்
(அல்குர்ஆன் : 51:17)

وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ‏ 

பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள்.

(அல்குர்ஆன் : 51:18)

பொறாமை கொள்ளத்தக்க அமல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.

  1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.
  2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின்உமர் (ர-), நூல் : புகாரி 5025

ரமழானில் இரவுத் தொழுகை

“யார் நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்.” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 37

சுவனமே கூலி

“ஸலாமைப் பரப்புங்கள்! ஏழைகளுக்கு உணவளியுங்கள்! மக்கள் தூங்கும் போது தொழுங்கள்! (இதனால்) சொர்க்கத்தில் நுழையுங்கள்.” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின்ஸலாம் (ரலி)

நூல் : திர்மிதீ 2409

✍நட்புடன்:
இன்திகாப் உமரீ
2020/05/05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *