அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ
ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற நேரமாகும். இந்த நேரத்தை தேவையற்ற பேச்சுக்கள், மற்றும் வீணான விளையாட்டுக்களைக் கொண்டு வீணடிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை.
இஷாத் தொழுகைக்குப் பின் தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடுவது.
அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதிவரைத் தாமதப்படுத்துவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும், இஷாவுக்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பார்கள்.
(முஸ்லிம் : 1139.)
பகல் நேரங்களைப் பொருத்தவரை அதை அல்லாஹ் இவ்வாறு சொல்கிறான்.
وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
மேலும், நாம் பகலை வாழ்க்கைத் தேவைகளைத் தேடிடும் நேரமாக்கவில்லையா?
(அல்குர்ஆன் : 78:11)
اِنَّ لَـكَ فِى النَّهَارِ سَبْحًا طَوِيْلًا
பகல் நேரங்களிலோ உமக்கு நிறையப் பணிகள் உள்ளன.
(அல்குர்ஆன் : 73:7)
பகல் நேரம் என்பது நாம் வாழ்வாதாரத்தை தேடுவதில், மற்றும் அழைப்புப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற பல காரியங்களில் ஈடுபடும் நேரமாகும்.
இரவு நேரம் என்பது எமக்குக் கிடைக்கும் ஒரு ஓய்வு நேரமாகும். எனவே அந்த ஓய்வு நேரத்தை முழுமையாக உறங்குவதற்கு மாத்திரம் பயன்படுத்தி விடாது வணக்கங்களைக் கொண்டு எம்மைப் படைத்த றப்புல் ஆலமீனை நெருங்குவதற்கான நேரமாகவும் நாம் பயன்படுத்த வேண்டும்.
அல்லாஹ் சொல்கிறான்
كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ
(முத்தகீன்கன்)இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர்களாகவும்
(அல்குர்ஆன் : 51:17)
وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْن
பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள்.
(அல்குர்ஆன் : 51:18)
فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ
எனவே, நீர் ஓய்வு பெறும் போது வணக்க வழிபாட்டின் கடும் உழைப்பில் முனைப்புடன் ஈடுபடுவீராக!
(அல்குர்ஆன் : 94:7)
وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ
மேலும், உம் இறைவனின் பக்கமே ஆர்வம் கொள்வீராக!
(அல்குர்ஆன் : 94:8)
اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّيْلِ سَاجِدًا وَّقَآٮِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ
(இறையச்சமுடையவன்) அவனோ கீழ்ப்படிந்தவனாயிருக்கின்றான்; இரவு நேரங்களில் நின்று வணங்குகின்றான், மேலும், சிரம் பணிகின்றான்; மறுமையையும் அஞ்சுகின்றான்; மேலும், தன் இறைவனின் அருளுக்கு ஆசைப்படுகின்றான். இவர்களிடம் கேளும்:
(இத்தகைய மனிதனின் நடத்தை சிறந்ததா அல்லது அந்த மனிதனின் நடத்தையா?)
“அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்கின்றார்கள்.”
(அல்குர்ஆன் : 39:9)
இரவுத் தொழுகையும் அதன் சிறப்புக்களும்
عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلاَةُ اللَّيْلِ
“ரமழான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்”. என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
இரவில் தொழத் தொடங்கியவர் அதை விட்டுவிடக்கூடாது.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அப்துல்லாஹ்! இரவில் (அதிகமாக) நின்று வணங்கிவிட்டு, இறுதியில் இரவுத் தொழுகையையே கைவிட வேண்டிய நிலைக்கு ஆளான இன்ன மனிதரைப் போன்று நீரும் ஆகிவிட வேண்டாம்.” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2140.
அத்தியாயம் : 13. நோன்பு
1) இஷாத் தொழுகையின் பின் சுன்னத் முதல் சுபஹ் வரை நபிகளார் தொழுத தொழுகைக்கு பல பெயர்கள் உண்டு.
1 : ஸலாத்துல் லைல்.(இரவுத் தொழுகை)
2: கியாமுல் லைல். (இரவில் நின்று வணங்குதல்)
3: வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை)
- தஹஜ்ஜுத் (கண் விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
தராவீஹ்: என்ற இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை. இமாம் புகாரி (றஹ்) அவர்கள் இரவுத் தொழுகைக்கு இட்ட தலைப்பே தராவீஹ் ஆகும்.
2) இரவுத் தொழுகையை எந்த நேரத்தில் தொழ வேண்டும்.?
இரவுத் தொழுகையை
இஷா தொழுகை முடிந்த நேரத்திலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை தொழலாம். நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி தாவூத் அலை அவர்களின் இரவுத் தொழுகை:
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள்விட்டு விடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்’ என்று கூறினார்கள்.
( புகாரி : 3420.)
இரவுத் தொழுகையை முன் இரவில், அல்லது பின் இரவில் தொழுவது.
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறாரோ அவர் (முதலில்) வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கட்டும்!. இரவில் தம்மால் எழ முடியும் என உறுதியாக நம்புகின்றவர் அதன் இறுதியில் வித்ர் தொழட்டும்.! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் குர்ஆன் ஓதும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்.(முஸ்லிம் 1381)
இரவுத் தொழுகையை பிரித்துத் தொழுவது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
என்னுடைய சிறிய தாயாரும் நபி(ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்து அல் ஹாரிஸ்(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை நடத்திவிட்டுப் பின்னர் தம் வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுதுவிட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து ‘பையன் தூங்கிவிட்டானோ?’ அல்லது அது போன்ற ஒரு வார்த்தை கூறி விசாரித்துவிட்டு மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களின் இடப் பக்கமாகச் சென்று நின்றேன். உடனே என்னை அவர்களின் வலப் பக்கத்தில் இழுத்து நிறுத்திவிட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும், பின்னர் இரண்டு ரக்அத்துகளும் தொழுதுவிட்டு அவர்களின் குறட்டையொலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கினார்கள். பிறகு (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டார்கள்.’
(புஹாரி 117)
3) இரவுத் தொழுகையின் ரக்அத்களின் எண்ணிக்கை.
“ரமழானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது.?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன.; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)
நூல்கள்: புகாரீ 1147
இரவுத் தொழுகை தொழ வேண்டிய முறை.
صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்.” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 990
நபி ஸல் தொழுத முறைகள்.
1) (2+2= 4) (2+2=4) +3 =11 ரக்அத்கள்
2)2+2+2+2+2= 10+1=11 ரக்அத்கள்
3) கடைசி ஐந்து ரக்அத்களை வித்ராகத் தொழுவது அதில் இறுதியில் மட்டுமே அமர வேண்டும்.
4) நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரஹ்)
நூல்: புகாரீ 1139
நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோ அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி).
நூல்கள்: நஸயீ 1695, இப்னுமாஜா 1182, அஹ்மத் 25281
நபி (ஸல்) அவர்கள் வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தை தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ
நபிகளாரின் இரவுத் தொழுகை.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். எனவே நான், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?’ என்று கேட்டேன். அவர்கள், ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா?’ என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி(ஸல்) அவர்களின் உடல் சதை போட்டபோது அமர்ந்து தொழுதார்கள். ‘ருகூஉ’ செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிதுநேரம்) ஓதுவார்கள். பிறகு, ‘ருகூஉ’ செய்வார்கள்.
( புகாரி : 4837. )
குறிப்பு:
பதின்மூன்று ரக்அத்கள் தொழுததாக வரும் செய்திகளின் விளக்கம் என்னவெனில் அது இஷாவின் பின் சுன்னத் அல்லது ஸுபஹுடைய முன் சுன்னத் என்றே விளங்க முடிகின்றது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
✍நட்புடன்:
இன்திகாப் உமரீ
அட்டுலுகம
2020/05/09