- அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ
ஸகாத்துல் பித்ர் என்பது ஷவ்வால் மாதத் தலைப்பிறை தென்பட்டதில் இருந்து பெருநாள் தொழுகைக்குப் புறப்பட முன் ஒவ்வொரு முஸ்லிமும் நிறை வேற்ற வேண்டிய ஒரு வணக்கமாகும்.
1) பணக்காரர்கள், ஏழை என்ற பாகுபாடின்றி தன் பெருநாள் செலவு போக மேல்மிச்சமான வசதியுள்ளவர்கள் அனைவரும் ஸகாதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கொடுத்தாக வேண்டும்.
முஸ்லிமான ஆண், பெண், பெரியார், சிறுவர், அடிமை,அடிமையல்லாதவர் ஆகிய அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீச்சம்பழம், தீட்டிய கோதுமை ஆகியவற்றில் ஒரு ஸாவு கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரி முஸ்லிம்
2)ஸகாதுல் பித்ரை ஏன் வழங்க வேண்டும்.?
1)நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகளிலிருந்து தூய்மைப் படுத்துவதற்காகவும்.
2) ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை (பித்ராவை) கடமையாக்கினார்கள்.
அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல்கள்:அபூதாவூத், இப்னுமாஜா.
குடும்பத்திலுள்ள நோன்பு நோற்றவர்களுக்கும், நோன்பு நோற்க முடியாத நிலையிலுள்ள குழந்தைகள், மற்றும் சிறியவர்கள், முதியவர்களுக்காகவும், குடும்பத் தலைவராக இருப்பவர் ஸகாத்துல் பித்ராவை கொடுப்பது கடமையாகும்.
3) எதைக் கொடுக்க வேண்டும்?
كُنَّا نُخْرِجُ في عَهْدِ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَومَ الفِطْرِ صَاعًا مِن طَعَامٍ، وقالَ أبو سَعِيدٍ: وكانَ طَعَامَنَا الشَّعِيرُ والزَّبِيبُ والأقِطُ والتَّمْرُ.
الراوي : أبو سعيد الخدري | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு ஸாவு உணவை நோன்புப் பெருநாளில் வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு, தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம் பழம் ஆகியவை தான்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி)
நூல் : புகாரி 1510
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவுப் பொருட்களான தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு, பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாவு, உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்)யில் ஒரு ஸாவு என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி)
நூல் : புகாரி 1506
எங்களின் பிரதான உணவிலிருந்து தலைக்கு ஒரு ஸாஃ என்ற அளவில் ஸகாத்துல் பித்ரை நாம் வழங்கவேண்டும் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு ஸாஃ என்பது 4முத் அளவாகும். இரண்டு கைகளாலும் நான்கு முறை அள்ளிப்போடும் அளவு ஒரு ஸாஃ வின் அளவாகும்.
இன்றைய கிலோ கிராம் அடிப்படையில் பார்தால் இரண்டரை கிலோவுக்கு மேல் மூன்று கிலோவுக்கு இடைப்பட்ட அளவு ஒரு ஸாஃ. அளவாகக் கணிக்கப்படுகின்றது.
4) ஸகாதுல் பித்ரை பணமாகக் கொடுக்கலாமா.?
இக்கேள்விக்கான பதிலை நாம் விரிவாக அலசுவோம். ஸகாத்துல் பித்ரைப் பொருளாக இன்றி அதன் பெறுமதியை வழங்குவது தொடர்பில் அறிஞர்களுக்கிடையே கருத்து முரண்பாடு நிலவுகின்றது. மாலிகீ மத்ஹப் மற்றும் , ஹனபீ மத்ஹப், மற்றும் ஷாபிஈ மத்ஹப் அறிஞர்கள் உட்பட ஷேய்க் இப்னு உஸைமீன் (ரஹ்), ஷேக் பின்பாஸ் (ரஹ்), ஷேக் நாஸிருத்தீன் அல்பானீ (ரஹ்), ஷேக் ஸாலிஹ் அல் பௌஸான் (ரஹ்) , ஷேக் முஸ்தபா அல் அத்வீ (ரஹ்) போன்ற நவீனகால அறிஞர்கள் வரை பலரும் ஸகாத்துல் பித்ரைப் பணமாக வெளியேற்றுவதைக் கூடாது என்று கூறியுள்ளார்கள்.
இமாம் அபூ ஹனீபாவும் ரஹ் அவர்களும் மற்றும் சிலரும் ஸகாத்துல் பித்ரைப் பொருளாக மட்டுமன்றி பெறுமதியாகவும் வெளியேற்றலாம் என்று கூறியுள்ளார்கள். இவர்களின் இந்தக்கருத்துக்குப் பலரும் மறுப்புக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5) ஸகாத்துல் பித்ரைப் பணமாக வழங்கும் சிந்தனை உருவாகக் காரணம் என்ன..?
நபிகளாரின் காலத்தில் பிரதான உணவாக இருந்தவற்றிலிருந்து ஸகாத்துல் பித்ர் வழங்ப்பட்டுள்ளது என்பதை அபூ ஸஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அதேநேரம் பித்ராவின் நோக்கம் பற்றி நபிகளார் சொல்லும் போது பெருநாள் தினத்தில் அது ஏழைகளுக்கு உணவாக இருக்கும் என்ற ஒரு அடிப்படையையும் கூறியுள்ளார்கள் என்பதால் . இந்த இரண்டு ஹதீஸையும் வைத்து ஏனைய பகுதிகளில் உள்ள உணவுப்பழக்கம் மற்றும் மக்களின் தேவைகளைக் கருத்திற் கொண்டு ஒரு நன்நோக்கில் பொருநாள் தினத்தை ஏழைகள் சிறப்பாக மனநிறைவோடு கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் ஸகாத்துல் பித்ரை பணமாக வழங்கலாம். அல்லது பணத்தை வசூலித்து ஆடைகள் முதற் கொண்டு உணவுப் பொருட்கள் உட்பட அனைத்தையும் வழங்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்கள் என்பது இவர்களின் வாதங்களிலிருந்து தெளிவாகின்றது.
6) வணக்கங்கள் எப்போது அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படும்..?
எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் அது அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் ஈமான் ,நல்ல நிய்யத் , இஹ்லாஸ் போன்ற அடிப்படைகளுடன் நாம் செய்யும் காரியத்தில் முற்றுமுழுதாக நபிகளாரைப் பின்பற்றுவது அவசியமாகும். இந்த அடிப்படையை கவனத்தில் கொண்டால் ஸகாத்துல் பித்ரை அதன் பெறுமதியாக வழங்குவதிலுள்ள சிக்கல்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாம் எந்தெந்த வணக்கங்களை எல்லாம் நாள் , நேரம், இடம், பொருள், எண்ணிக்கை, அளவு குறிப்பிட்டு சொல்லி இருக்கின்றதோ அதை அவ்வாறு நிறை வேற்றினால் தான் அதற்கான பூரணக் கூலி கிடைக்கும். அதற்கு மாற்றமாக நாம் செயற்பட்டால் உரிய அமலின் கூலி தப்பிப் போய்விடும் என்பதை பல உதாரணங்களினூடாக நாம் விளங்கலாம்.
1: உழ்ஹிய்யா பிராணியைப் பெருநாள் தொழுகைக்குப் பின்னர் தான் அறுத்தல் வேண்டும்.அதற்க்கு முன் பலியிட்டால் உழ்ஹிய்யாவின் நன்மை கிடையாது. அது ஸதகாவாகப் போய்விடும்.
2: அல் அன்ஆம் என்ற வகைப்பிராணிகளைத்தான் உழ்ஹிய்யாவாகப் பலியிட வேண்டும். அதற்குப்ப பகரமாக மானையோ, கோழியையோ ஒருவர் பலியிட்டால் அது உழ்ஹிய்யாவாக அமையாது.
3: அகீகாவாக ஆட்டைத்தான் வழங்க வேண்டும் . ஒருவர் தன்னிடம் வசதியிருப்பதாலும் அயலவர்களில் பலர் ஏழைகலாக இருப்பதாலும் ஒரு மாட்டை அருத்துப்பலியிட்டு பங்கீடு செய்தால் அது அல்லாஹ் விடம் அகீகாவாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. காரணம் அங்கே நபி வழிக்கு மாற்றமான வடிவங்கள் இந்த அமற்களில் இடம் பெற்றமையாகும்.
இந்த அடிப்படைகளைக் கவனத்தில் கொண்டே ஸகாத்துல் பித்ரை நாம் நிறைவேற்ற வேண்டும்.
7)ஸகாதுல் பித்ர் என்ற வணக்கத்துக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வழங்கிய வடிவம் என்ன..?
1: ஷவ்வால் மாதத் தலைப்பிறை பிறந்து விட்டால் ஸகாத்துல் பித்ர் கடமையாகின்றது.
2:முஸ்லிமான ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், குழந்தைகள், அடிமைகள் என அனைவருக்காவும் ஸகாத்துல் பித்ர் வழங்கப்பட வேண்டும் என்பதை நபிகளார் கடமையாக்கினார்கள்.
3: பிரதாண உணவுகளில் இருந்து நபிகளாரின் காலத்தில் ஸகாத்துல் பித்ர் வழங்கப்பட்டுள்ளது.
4: ஸகாத்துல் பித்ர் பொருளிலிருந்து தலைக்கு ஒரு ஸாஃ அளவு ஒவ்வொரு வரும் வழங்க வேண்டும் என்ற அளவை நபிகளார் நிர்ணயித்தார்கள்.
5: பெருநாள் தொழுகையை நிறைவேற்ற முன் ஸகாத்துல் பித்ரை வழங்குவதை நபிகளார் மார்கமாக்கினார்கள்.
இவை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஸகாத்துல் பித்ர் என்ற அமலுக்குச் சொன்ன அடிப்படைகளாகும்.
8) ஸகாத்துல் பித்ரை பணமாக வசூலிப்ப்போரின் நிலைப்பாடுகள்.
ஸகாத்துல் பித்ரை பணமாக வசூலிப்போர் மூன்று விதமான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனர்.
நிலைப்பாடு: 01
ஒருவர் ஸகாத்துல் பித்ர் பொருளுடைய பெறுமதியை வசூலிப்பவரின் கையில் வழங்கிவிட்டால் போதுமானது கடமை நிறை வேறிவிடும். வசூலிப்பவர் தேவையுடையவர்களுக்கு அந்தப் பணத்தை வழங்கிவிடுவார்.
நிலைப்பாடு: 02
மக்களிடம் ஸகாத்துல் பித்ரின் பெறுமதியைப் பணமாகப் பெற்று அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி (அரிசி, சீனி, தேயிலை, வெங்காயம், இறைச்சி, உப்பு, புடிங்) தேவையுடையோருக்கு விணியோகம் செய்தால் கடமை நிறைவேவிடும்.
நிலைப்பாடு : 03
ஸகாத்துல் பித்ரின் பணம் எத்துனைப் பேரிடமிருந்து வசூலிக்கப்படுகின்றதோ அந்த நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஸாஃ அளவு அரிசி போன்ற உணவுப்பொருளை வசூலிப்பவர் முதல் வாங்க வேண்டும். பின்னர் ஸதகாவாக சிலரிடமிருந்து பணத்தைப் பெற்று அதன் மூலம் சமையலுக்குத் தேவையான சில அத்தியாவசிய பொருட்களை வாங்கி இதனோடு இணைத்துப் பகிரவேண்டும்.
இப்படி மூன்று நிலைப்பாடுகள் ஸகாத்துல்பித்ரை பணமாக வசூலிப்போரிடம் காணப்படுகின்றது. இவற்றில் முதல் இரண்டு நிலைப்பாடுகளும் நேரடியாக ஹதீஸுக்கு மாற்றமான நிலைப்பாடுகளாகும்.
நபிகளார் ஸகாத்துல் பித்ர் என்ற அமலை ஒவ்வொருவரும் தலைக்கு ஒரு ஸாஃ என்ற அளவு உணவுப்பொருளை வெளியேற்றுவதினூடாகத் தான் நிறை வேற்ற வேண்டும் எனக் கூறி இருக்க. ஒருவர் அதன் பெறுமதியை வெளியேற்றுவதின் மூலமோ அல்லது ஸாஃ அளவை கவனத்தில் கொள்ளாமல் மக்கள் விரும்பும் உணவை பித்ராவாக வழங்குவதினூடாகவோ ஸகாத்துல் பித்ரின் நன்மையைப் பெற முடியாது. ஸகாத்துல் பித்ரின் நோக்கம் ஏழைகளுக்கு உணவளிப்பது மாத்திரமில்லை . நாம் ரமழானில் விட்ட தவறுகளை நிவர்த்தி செய்து கொள்ளல் என்ற அடிப்படை அம்சமும் இதில் உள்ளது என்பதை கவனத்திற் கொள்ளல் வேண்டும். ஏழைகளுக்கு நன்மை செய்ய நாடுவது தப்பில்லை அதேநேரம் நபிகளாரை முன்மாதிரியாகக் கொள்ளாத அமற்களை அல்லாஹ் தூக்கி எறிந்து விடுவான் என்ற. அடிப்படையை மறந்துவிடக்கூடாது.
அகீகா விடயத்தில் நபிகளார் ஆட்டைச் சொன்னார்கள். நாம் மாடு கொடுக்க முடியாதது போல ஸகாத்துல் பித்ர் விடயத்திலும் நபிகளார் தலைக்கு ஒரு ஸாஃ அள்ளிப்போடமுடியுமான உணவுப் பொருளை தர்மமாக வழங்கச் சொல்லி இருப்பதால் அதைத்தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பணமாக வசூலித்து வேறு பொருட்களை நாம் வாங்கும் போது பலருடைய ஸகாத்துல் பித்ரின் ஸாஃ அளவு தவறிப்போகின்றது.
உதாரணமாக நீங்கள் ஒருவரிடம் ஒரு ஸாஃ அளவு அரிசியின் பெருமதிக்கு வாங்கும் பணம் 500கிராம் இறைச்சி வாங்கினால் முடிந்து விடுகின்றது . 500 கிராம் இறைச்சி என்பது ஒரு ஸாஃ அளவுடையதில்லை இப்படி ஒரு முப்பது, நாற்பது பார்சல் பண்ணும் போது பலருடைய ஸாஃ அளவு தர்மம் தப்பிப்போகின்றது.
9) ஸகாத்துல் பித்ர் என்ற வணக்கத்தில் ஸாஃ அளவு உணவுப் பொருளை ஒவ்வொருவரும் வெளியேற்றுவது கட்டாயமாகும்.
ஒருவருக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அது ஆண் குழந்தை என்றால் எப்படி இரண்டு ஆடுகளையும் பெண் குழந்தை என்றால் ஒரு ஆட்டையும் அகீகாவாக கொடுக்க வேண்டுமோ அதுபோல் ஒவ்வொருவரும் தலைக்கு ஒரு ஸாஃ அளவு ஸகாத்துல் பித்ர் வழங்க வேண்டும் என்பது ஹதீஸ் சொல்லும் செய்தியாகும். அதற்குப் பகரமாக பெறுமதியை வழங்குவது சுன்னாவுக்கு மாற்றமான செயற்பாடாகும்.
உதாரணமாக வெளிநாட்டில் உள்ள ஒருவர் அவர்சார்பில் ஜந்து மாடுகளை வாங்கி உழ்ஹிய்யா கொடுக்குமாறு எம்மிடம் பணத்தை ஒப்படைத்து விட்டால் . நாம் அந்த உழ்ஹிய்யாப் பணத்தில் நான்கு மாடுகளை மாத்திரம் வாங்கி உழ்ஹிய்யா கொடுத்து விட்டு மீதியாக உள்ள ஒரு மாட்டின் பணத்தை அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களில் ஏழைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வழங்கினால் அது ஏற்புடையதா…? அதை நாம் ஒரு மோசடியாகவே கூறுவோம். அதுபோல் தான் ஸகாத்துல் பித்ர் விடயமும். ஸகாத்துல் பித்ரை பணமாக வசூலிப்போர் முதல் அந்தப்பணத்தை தலைக்கு ஒரு ஸாஃ என்ற அளவு உணவுப்பொருளாக மாற்றுவது அவர்மீது கடமையாகும். பின்னர் ஸகாத்துல் பித்ராவை வினியோகம் செய்யும் போது தேவையுடயோரை இனங்கண்டு எப்படி வேண்டுமானாலும் வழங்களாம்.
10) நபித் தோழர்களில் எவரும் ஸகாத்துல் பித்ராக பெறுமதியை வழங்க வில்லை.
நபிகளார் காலத்தில் பணப்புழக்கம் இருந்தும் கூட மூத்த ஸஹாபாக்கள் முதல் இறுதியாக வபாத்தான நபித்தோழர் வரை யாரும் ஸகாத்துல் பித்ரை பெறுமதியாக வழங்கியமைக்குச் சான்றுகளில்லை. மாறாக அவர்கள் பலவகை பெறுமதிமிக்க பொருட்களை ஸாஃ அளவாக கொடுத்துள்ளார்கள். இதனால் பலரும் பலவகைப் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நிலை அங்கே காணப்பட்டது.
இன்றும் ஸகாத்துல் பித்ருக்குப் பணம் தருவோர் அவர்கள் சாப்பிடக்கூடிய பலவகை அரிசிகளின் (நாட்டரிசி,சம்பா,கீரி சம்பா,பாஸ்மதி) அளவை கணித்து அதன் பெருமதியைப் பணமாக தருவார்கள். ஆனால் வசூலிப்போர் அதைக் கவனிக்க மாட்டார்கள். நாட்டரிசி வழங்கியவரின் பணமும் பாஸ்மதியில் ஸாஃ அளவை கவனித்து தந்தவரின் பணமும் ஒன்றாக கலக்கப்பட்டு மஸ்ஜித் நிர்வாகம் முடிவு செய்யும் வேறொரு வகை அரிசி தான் அங்கே வழங்கப்படுகின்றது. இதுவும் ஸகாதுல் பித்ரை பணமாக வசூலிப்போர் செய்யும் ஒருவகை மோசடியாகும்.
இப்படி பல நடைமுறைச்சிக்கல்கள் நிறைய ஸகாத்துல் பித்ரை பணமாக வசூலிப்பதில் இருக்கின்றது . எனவே நிர்பந்த நிலைகளில் உள்ளோர் தவிர்ந்த ஏனையோரிடம் பணமாக வசூலிப்பதைத் தவிர்பதே பிரச்சினைகளின்றி ஸகாத்துல் பித்ரை நடைமுறைப்படுத்த சிறந்த வழிமுறை என நான் கருதுகிறேன்.
ஸகாத்துல் பித்ர் என்பது ஸகாத்தைப் போன்ற நன்மைகளை ஏழைகளுக்கு பெற்றுக் கொடுக்கும் ஒரு தர்மம் கிடையாது என்பதைப் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதைக் கொண்டு ஸகாத்தை போன்ற நன்மைகளை ஏற்படுத்த சிந்தித்தமையே பல கருத்துமுரண்பாடுகள் உருவாக காரணமானது.
எனவே நபிகளாரின் ஹதீஸில் ஸகாத்துல் பித்ராக எதை எப்படி எந்த அளவு வழங்கவேண்டும் என்பது தொடர்பாகத் தெளிவாக வந்துள்ளதால் அதனோடு நாம் நின்றுகொள்வது தான் சுன்னாவுக்கு மிக நெருக்கமான நிலைப்பாடாகும். எவைகளுக்கு எல்லாம் தெளிவான நஸ் இருக்கின்றதோ அவைகளில் இஜ்திஹாத் என்பது கிடையாது. என்ற கருத்தை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களும் ஸகாத்துல் பித்ர் பற்றி பேசும்போது பத்ஹுல் பாரியில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு:
ஸகாத்துல் பித்ரை பொருளாகப் பெற்று அதனுடன் வேறாக ஒரு ஸதகாவை வசூலித்து இறைச்சி, மரக்கறிவகை போன்றவற்றை அந்த ஸதகாவின் பணத்தில் வாங்கிக் கொடுப்பது சிறந்த ஆலோசனையாகும்.
11) ஷவ்வாலின் தலைப் பிறையை காண முன் ஸகாதுல் பித்ரை வழங்க முடியுமா..?
நபித் தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள்.
அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி
.
பெருநாள் தினத்தன்று கொடுப்பதில் சிரமமிருந்தால் நான்கு ஜந்து நாள் முன் இருந்து கொடுப்பது தவறில்லை.
12) இந்த அமலை கூட்டாக நிறை வேற்றலாம்.
ரமழானின் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3275, 5010
அபூ ஹுரைரா (ரழி) அவர்களிடம் மூன்று நாள் ஷைத்தான் வந்த சம்பவம் ஷவ்வால் தலைப்பிறைக்கு முன் அது சேகரிக்கப்பட்டுள்ளது என்பதற்கு வழுவான இன்னுமொரு சான்றாகும்.
13) ஸகாத்துல் பித்ரை யாருக்கு வழங்க வேண்டும்..?
ஏழை எளியோரைத் தேடிச்சென்று அதை சேகரிப்போர் ஸகாத்துல் பித்ரை வழங்க வேண்டும்.
14) ரமழானை அடைந்து ஷவ்வால் தலைப்பிறையையும் யாரெல்லாம் அடைகின்றார்களோ? அவர்கள் அனைவர் மீதும் ஸகாதுல் பித்ர் கடமையாகும்.
ரமழானை அடைந்து ஷவ்வால் பிறையை அடைய முன் மரணித்தவர் மற்றும் ரமழான் மாத முடிவில் ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டபின் பிறந்த பிள்ளை ஆகியோர் மீதும், கற்பிணியின் வயிற்றில் இருக்கும் பிள்ளைகளின் மீதும் ஸகாத்துல் பித்ர் கடமையில்லை.
அல்லாஹ் மிக அறிந்தவன்
✍நட்புடன்:
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ
இலங்கை
2020/05/19