அல்லாஹ் அவனது அடியார்கள் மீது பொழிந்துள்ள அவனது கருணையின் காரணமாக ஒவ்வொரு ஃபர்ளான அமலுடனும் அதே போன்ற உபரியான இபாதத்தையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான் ஃபர்ளான தொழுகைக்கு முன் பின் சில சுன்னத்தான நஃபீலான தொழுகைகள் இருப்பதை நாம் அறிவோம் அதே போன்று தான் ஃபர்ளான ரமளான் நோன்பிற்கு முன்னும் பின்னும் சில சுன்னத்தான நஃபீலான நோன்புகள் உள்ளது. இந்த உபரியான இபாதத்களைப்பொறுத்தவரை அது ஃபர்ளான இபாதத்தில் நம்மிடம் ஏற்பட்ட கோளாறுகளையும் குறைகளையும் ஈடுசெய்யக்கூடியதாக உள்ளது. அதன் அடிப்பையில் தான் ஷவ்வால் மாத ஆறு நோன்பை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள் அதன் சிறப்பையும் எடுத்துக்கூறியுள்ளார்கள்.
ரமளானைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்பது விரும்பதக்க சுன்னாவாகும் இது கடமையான நோன்பல்ல என்றாலும் இதற்கென சிறப்பும் கூலியுமுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் ஸஹீஹ் முஸ்லிம் 2159
இந்த நபி மொழிக்கு விளக்கமாக இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் ஈதுல் ஃபித்ரைத் தொடர்ந்து ஆறு நாட்க்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்பது சிறந்ததாகும். அதே போன்றூ அதை பிரித்து ஷவ்வாலின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை நோற்றாலும் ஷவ்வாலின் நோன்பை தொடர்ந்து நோன்பு நோற்றதின் சிறப்பை அடையலாம் என்பது நமது தோழர்கள் கருத்தாகும்.
நூல்: ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்.
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து வரக்கூடிய மாதமான ஷவ்வால் ஆறு நாள் நோன்பு நோற்பது ஒரு வருடம் நோன்பு நோற்பதற்கு ஈடாகும் என்பதை மேற்கூறிய நபிமொழித் தெரிவிக்கிறது. இதற்கான விளக்கத்தை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) இவ்வாறு கூறினார்கள்
ரமளானுக்குப் பிறகு யார் ஆறு நாள் நோன்பு நோற்பார்களோ அது வருடம் முழுமைக்குமான நோன்பாகும் யார் ஒரு நன்மைக் கொண்டு வருவாரோ அவருக்கு அது போன்று பத்து மடங்கு நன்மைகள் வழங்கப்படும்.
அறிவிப்பாளர் ஸவ்பான் நூல் சுனன் இப்னு மாஜா 1715
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒரு(ரமளான்) மாத நோன்பு பத்து மாதத்திற்கு ஈடாகும் அதைத் தொடர்ந்து ஆறு நாள் நோன்பு இரண்டு மாதத்திற்கு ஈடாகும் அது தான் வருடம் முழுமைக்குமானதாகும்.
அறிவிப்பாளர் ஸவ்பான்(ரலி). நூல்: சுனன் தாரமி 1796.
சில ஃபுகஹாக்கள் ரமளானுக்குப் பின் உள்ள ஷவ்வாலின் ஆறு நோன்பு ஒரு வருட ஃபர்ளான நோன்பிற்கு ஈடாகும் என்று கூறியுள்ளார்கள் என்றாலும் இரட்டிப்பான கூலி என்பது ஒரு நன்மைக்கு பத்து மடங்கு கூலி என்ற பொதுவான செய்தியின் மூலம் உறுதியாகியுள்ளது.
ஷவ்வால் நோன்பின் பலனைப் பொறுத்தவரை ரமளானின் ஃபர்ளான நோன்பில் ஏற்பட்டுள்ள குறைகளுக்கும் தவறுகளுக்கும் அது பரிகாரமாகிவிடும் ஏனெனில் மறுமையில் ஃபர்ளான நமது கடமைகளில் நாம் செய்த தவறுகளுக்கு உபரியான வணக்கங்களின் மூலம் தான் ஈடுசெய்யப்படும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நிச்சயமாக மறுமையில் அல்லாஹ் தனது அடியானிடம் அவர்களின் அமலில் முதலாவதாக தொழுகையைக்குறித்துத் தான் விசாரணை செய்வான். அது சரியாக இருந்தால் அவன் ஈடேற்றத்தையும் வெற்றியையும் அடைவான். அது கெட்டுவிட்டால் அவன் நஷ்டமடைந்து விடுவான் அவனது ஃபர்ளுகளில் ஏதாவது குறை ஏற்பட்டால் மேன்மையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் என்னுடைய அடியானுக்கு ஏதாவது உபரியான வணக்கங்கள் உள்ளதா என்று பாருங்கள் அதன் மூலம் ஃபர்ளான வணக்கத்தில் ஏற்பட்ட குறையை நிவர்த்திசெய்யுங்கள் என்று கூறுவான். பின்னர் ஏணைய அமல்களும் அது போன்று தான் இருக்கும்.
அறிவிப்பாளர் அபூஹுரைரா(ரலி).நூல்:ஜாமிஉத் திர்மிதி 413
ஷவ்வால் நோன்பை எப்படி நோற்க வேண்டும்
மக்களில் அதிகமானவர்கள் ஷவ்வால் நோன்பை பெருநாளைத் தொடர்ந்து தொடர்ச்சியாக வைக்க வேண்டுமென்று முஸ்லிமில் இடம் பெற்ற ஹதீஸின் வாசகத்தை வைத்து வாதிடுவதைப்பார்க்கிறோம்.
இது தொடர்பான கேள்வி ஒன்று லஜ்னத்து தாயிமவிடம் கேட்க்கப்பட்டது.
ஷவ்வால் ஆறு நோன்பை ஈத் முடிந்ததும் தொடர்ச்சியாக வைக்கவேண்டுமா? அல்லது ஷவ்வால் மாதத்தில் வேறு நாட்களில் தொடர்ச்சியாக வைக்கவேண்டுமா? இல்லையா?
பதில்: ஷவ்வால் நோன்பை ஈத் முடிந்ததும் உடனடியாக நோற்கவேண்டுமென்பதில்லை மாறாக ஈத் முடிந்து ஒரு நாள் அல்லது சில நாட்களுக்கு பிறகும் அதனை நோற்கலாம். இன்னும் அதனை தொடர்ச்சியாகவும், அல்லது விட்டு விட்டும் அவரவர் வசதிக்கேற்ப ஷவ்வால் மாதத்தில் நோற்றுக்கொள்ளலாம். இதில் விசாலமான போக்கைக்கடைப்பிடிக்க வேண்டும் இன்னும் இது ஃபர்ளான நோன்பல்லா சுன்னத்தான நோன்பாகும். பார்க்க ஃபதாவா அல் லஜ்னத்து தாயிமா 10/391 ஃபத்வா எண் 3475
எனவே இந்த நோன்பை ஷவ்வாலில் எப்போது வேண்டுமானாலும் நோற்றுக்கொள்ளலாம்
ஒருவருக்கு ஷவ்வால் நோன்பு முழுமைப்படுத்த முடியாமல் போனால்…
இமாம் இப்னு பாஸ் அவர்களிடம் ஒருவர் நான் ஷவ்வால் நோன்பை துவங்கினேன் ஆனாலும் எனது சில சூழ்நிலைகள் மற்றும் பணிகளின் காரணமாக அதை முழுமைப்படுத்த முடியவில்லை இன்னும் எனக்கு இரண்டு நோன்பு மீதமுள்ளது நான் என்ன செய்ய வேண்டும் அதை நான் களா செய்ய வேண்டுமா அல்லது என் மீது பாவம் ஏதும் உண்டா?
பதில்: ஷவ்வாலின் ஆறு நோன்பு என்பது விரும்பதக்க சுன்னாவாகும் அது கடமையான வணக்கமல்ல. எனவே உங்களுக்கு நீங்கள் நோற்ற நோன்பிற்கான கூலியுண்டு அதே போன்று நீங்கள் அதனை முழுமைப்படுத்தாமல் இருந்ததற்கு மார்க்கம் அனுமதித்த காரணம் இருந்தால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு முழுமையான கூலி கிடைக்கும் என்று ஆதரவு வைக்கலாம் .
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்கு கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும். நூல் ஸஹீஹுல் புஹாரி 2996
இன்னும் நீங்கள் விட்டு விட்ட நோன்பை களா செய்யத்தேவையில்லை அல்லாஹு போதுமானவன். மஜ்மூஉ ஃபதாவா 5/270
ரமளானின் களா நோன்பா ஷவ்வாலின் ஆறு நோன்பா?
ஒருவர் மார்க்கம் அனுமதித்த காரணத்தால் ரமளானில் சில நோன்பை தவறவிட்டார் என்றால் அவர் அந்த நோன்பை களா செய்ய வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்
உங்களில் ஒருவர் நோயாளியாகவோ பயணியாகவோ இருந்தால் அக்குறிப்பிட்ட நாட்க்களின் நோன்பை பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். (அல்குர்ஆன் 2:185)
ரமளானில் நோன்பை விட்டவர் அதை களாவாக நிறைவேற்ற வேண்டுமென்பதை அல்லாஹ் நமக்கு கடமையாக ஆக்கியுள்ளான் என்பதை மேற்கூறிய வசனம் தெளிவுபடுத்துகிறது. அதே வேளை ஒருவர் ரமளானில் சில நோன்பை விட்டு விட்டார் தற்போது ஷவ்வால் மாதம் வந்து விட்டது இவர் முதலில் ரமளான் நோன்பை களா செய்ய வேண்டுமா அல்லது ஷவ்வால் நோன்பை நோற்கவேண்டுமா என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடுள்ளது.
அறிஞர்களில் ஒரு சாரார் அவர் முதலில் களா நோன்பை நிறைவேற்ற வேண்டும் அதன் பின்னர் தான் ஷவ்வால் நோன்பை நோற்க முடியும் என்று கூறுகிறார்கள்
மற்றொரு சாரார் அறிஞர்கள் களா நோன்பை பிறகு வைத்துக்கொள்ளலாம் ஷவ்வாலில் ஆறு நோன்பைத்தான் முதலில் வைக்க வேண்டுமென்று கூறுகிறார்கள் இக்கருத்தை இமாம் அபூஹனீஃபா(ரஹ்) அவர்களும் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) இக்கருத்தை கூறுகிறார்கள்.
இரண்டு கருத்துக்களில் ஷவ்வால் நோன்பை நோற்ற பின்னர் களா நோன்பை நிறைவேற்றலாம் என்ற கருத்தை ஷேய்க் ஹாலித் பின் அப்துல்லாஹ் அல்முஸ்லிஹ் ஹஃபிளஹுல்லாஹ் அவர்கள் தெரிவித்துள்ளர்கள்.
இதற்கு காரணம் ரமளான் நோன்பு ஷஃபான் வரை அதை களா செய்வதற்கான அவகாசம் உள்ளது. ஆனால் ஷவ்வாலின் சிறப்பை அம்மாதத்தில் தான் பெறமுடியும் என்றாலும் இயன்றவரை களா நோன்பையும் விரைவாக நிறைவேற்றி விட வேண்டும்.
இதற்கு ஆயிஷா(ரலி) அவர்களின் செயலை நாம் மேற்கோள் காட்டலாம்.
ரமளான் நோன்பு என்மீது களாவாக இருக்கும் அதை ஷஃபான் மாதம் வரும் வரை என்னால் நோற்க இயலாது என்று ஆயிஷா அவர்கள் கூறினார்கள். நூல் ஸஹீஹுல் புஹாரி 1950
யஹ்யா(ரஹ்)அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் தூதருக்கு அவர்கள் செய்யும் பணிவிடை காரணமாக அவர்கள் இவ்வாறு செய்வார்கள் என்றார்கள்.
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் கூறினார்கள்
இந்த ஹதீஸ் காரணமிருந்தாலும் இல்லாவிட்டாலும் ரமளான் நோன்பு களா செய்வதை தாமதபடுத்துவது கூடும் என்பதற்கு ஆதாரமாக உள்ளது. ஃபத்ஹுல் பாரி 4/545