நேசம் என்ற சொல்லுக்கு அரபு மொழியில் المحبة என்று சொல்லப்படும். இது ஒருவனின் உள்ளம் சாந்த விஷயமாகும். அன்பு, பிரியம், விருப்பம் என்ற வார்த்தைகளும் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
ஒருவன் எதை எந்த அளவுக்கு நேசிக்கின்றான் என்பதை, அவனை அழைத்து (Scale) அளவுகோல் வைத்து அளந்துபார்த்துச் சொல்லிவிட முடியாது! அவனது செயல் மூலமாகத்தான் அவனது நேசத்தை அளவிடமுடியும்.
மனிதன் பொருளை நேசிக்கின்றான், செல்வத்தை நேசிக்கின்றான், அவனது தொழிலை நேசிக்கின்றான், அவனது அழகிய இல்லத்தை, அழகிய வாகனத்தை நேசிக்கின்றான், தாய் – தந்தையை நேசிக்கின்றான், மனைவி – மக்களை நேசிக்கின்றான், சொந்த பந்தங்களை நேசிக்கின்றான், ஊரை, நாட்டை, அவனது குலம் – கோத்திரத்தை நேசிக்கின்றான், மொழியை நேசிக்கின்றான், அவன் விரும்பிய தலைவர்களையும் கட்சியையும் நேசிக்கின்றான், நடிகர் – நடிகர்களை நேசிக்கின்றான் இன்னும் இங்குச் சொல்லப்படாத எத்தையோ விஷயங்களை எல்லாம் மனிதன் நேசிக்கின்றான்.
நேசமும் – செயலும் ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையது. மனிதனின் நேசங்கள் அனைத்திற்கும் சாட்சியாக அல்லது ஆதாரமாக இருப்பது அவனது சொல்லும் செயலும் வெளிப்படுத்துவதை வைத்துத்தான் ஒருவனின் நேசத்தை அளவிடமுடியும்.
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களையும் மன்னிப்பான், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும், மிகுந்த கருணையாளனும் ஆவான் என்று (நபியே) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்:03:31)
அல்லாஹ்வை நேசிப்பவர், அல்லாஹ்வின் மீது அன்பு வைத்துள்ளவர் தனது சொல்லாலும், செயலாலும் அவனது நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். தனது செயல்களால் தூதரைப் பின்பற்றாதவரை யாரும் அல்லாஹ்வை நேசிப்பவர் என்று தன்னை சொல்லிக்கொள்ள முடியாது.
ஒருவன் செயல் வடிவம் கொடுக்காதவரை நேசத்தை நிரூபிக்க முடியாது. அதே நேரத்தில் நேசத்திற்கும் – மறுமைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அதற்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கின்றாய்? என்று கேட்டார்கள். அம்மனிதர், “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நான் நேசிக்கின்றேன் என்பதைத் தவிர எதுவுமில்லை” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் தான் நீ (மறுமையில்) இருப்பாய்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் இருப்பாய்” என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்ததில்லை. அனஸ் (ரலி) நூல்:புகாரி 3688
மனிதன் இந்த உலகில் யாரை நேசிக்கின்றானோ அவர்களோடுதான் மறுமையில் இருப்பான் என்பதையும் அந்த நற்செய்தியை நபித்தோழர்கள் கேட்டு எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார்கள் என்பதையும் இந்த நபிமொழி கூறுகின்றது.
ஸஹாபாக்கள் அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களைத்தவிர வேறு யாரையும் நேசிக்கவுமில்லை! அதேபோன்று அவர்கள் அல்லாஹுவின் தூதரைத் தவிர வேறு யாரையும் பின்பற்றவுமில்லை! இதற்கு அவர்களின் தியாகங்களும், அவர்களின் அமல்களும் தக்க சான்றாகும்.
“எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் (حَلاَوَةَ الإِيمَانِ) ஈமானின் சுவையை உணர்ந்தவர் ஆவார். (அவை) அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்ற எதையும் விட அதிக நேசத்திற்கு உரியவர்களாக ஆவது. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திருப்பிச் செல்வதை வெறுப்பது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அனஸ் (ரலி) புகாரி:௦௦16)
ஒரு பொருளின் தன்மையையோ அல்லது உணவின் ருசியையோ அனுபவிப்பவருக்குத்தான் தெரியும் அதன் சுவை. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்ற எதையும் விட அதிக நேசத்திற்கு உரியவர்களாக ஆவது என்ற இந்த சுவையை ருசிப்பதற்கு நபித்தோழர்கள் தங்களுக்குப் போட்டி போட்டுக்கொண்டார்கள். அவர்களுக்குத் தேவையெல்லாம் அல்லாஹ்வின் தூதரின் அன்பு மட்டும்தான். இதற்காக அவர்கள் எதையும் இழக்கத் தயாரானார்கள்.
இந்த நபிமொழியில் கூறப்பட்டுள்ள ஈமானைச் சுவையை ருசித்தவர் யார் என்று நாம் பட்டியலிட்டால் ஸஹாபாக்களைத்தான் குறிப்பிட முடியும். மனிதன் எதையெல்லாம் நேசிக்கின்றான் என்று நாம் மேலே பார்த்தோமோ அவைகளையெல்லாம் நபித்தோழர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல!
இன்று அற்ப உலக ஆதாயங்களுக்காக மக்கள் நேசிக்கும் தலைவர்களால் மறுமையில் மக்களுக்கு எவ்வித பலனும் இல்லை! ஆனால் அல்லாஹ்வின் தூதரை நேசித்து அதற்காகச் செய்த தியாகங்களுக்கு மறுமையில் அதன் பிரதி பலனை அவர்கள் அடைந்துகொள்வார்கள்.
இன்னொரு ஹதீஸில் அல்லாஹ்வின் தூதரே! நான் அதற்கு (மறுமைக்கு) முன்னேற்பாடாகப் பெரிய அளவில் நோன்போ, தொழுகையோ, தர்மங்களோ தயார் செய்து வைத்திருக்கவில்லை. ஆயினும் நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்றேன்” என்று அம்மனிதர் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ யாரை நேசிக்கின்றாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்”
என்று கூறினார்கள். (புகாரி 7153)
இவ்வாறு அல்லாஹ்வின் தூதரை (ஸல்) நேசித்து அவர்களோடு சுவனத்தில் சங்கமித்து இருப்பது பாக்கியங்களிலேயே மிகப்பெரும் பாக்கியம் என்று சர்வ வல்லமையும் படைத்த அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ ۚ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ؕ
யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹுவின் அருள்பெற்ற இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், நல்லவர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள்தான் மிகச்சிறந்த நண்பர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன்:- 04:69)
இந்த வசனம் அருளப்பட்டதன் பின்னணியை பார்ப்போம்:
அன்சாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரின்பால் (ஸல்) மிகவும் கவலையோடு வந்தார், அவரிடம் நபி (ஸல்) அவர்கள் “இன்ன மனிதரே உங்கள் முகத்தில் கவலை தெரிகின்றதே! என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹுவின் தூதரே (ஸல்) நான் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்தித்தேன், (எனக்குக் கவலை ஏற்பட்டுவிட்டது) என்று கூறினார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் எது என்ன விஷயம் என்று கேட்டார்கள். அப்போது அவர், “தற்போது நாங்கள் உங்களிடம் காலையிலும் மாலையிலும் வருகின்றோம்; உங்களின் முகத்தைக் காலையிலும், மாலையிலும் பார்க்கின்றோம், உங்களோடு அமர்கின்றோம் (எங்களுக்கு நிம்மதியாக இருக்கிறது) ஆனால் நாளை மறுமை நாளில் நீங்கள் இறைத்தூதர்களோடு உயர்ந்த இடத்தில் இருப்பீர்கள். அப்போது எங்களால் உங்களிடம் வர முடியாமல் போய்விடுமே என்று கூறி கவலைப்பட்டார்.
சிறிது நேரம் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு எந்த பதிலும் கூறவில்லை. அப்போதுதான் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்த வசனத்தை (04:69) கொண்டுவந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த அன்சாரித் தோழரிடம் ஆள் அனுப்பி இந்த நற்செய்தியை தெரிவித்தார்கள். (ஸயித் பின் ஜுபைர் (ரஹ்) நூல்: தப்ரானி, தஃப்ஸீர் தபரி, இப்னு கஸீர்)
நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களை நேசித்தது இப்படித்தான், அல்லாஹுவின் தூதரோடு இந்த உலகில் இருக்கும் நாம், மறுமையில் அவர்களோடு இருக்கமுடியாமல் போய் விடுமோ என்ற கவலை அவர்களின் நேசத்தின் வெளிப்பாடாக இருந்தது. மறுமையில் நபி (ஸல்) அவர்களோடு இருக்கவேண்டும் என்று நபியை நேசித்தவர்கள் அவர்களை எந்த அளவுக்குப் பின்பற்றியிருப்பார்கள், அவர்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள் சிந்திக்கவேண்டும்.
நேசம் பின்பற்றுவதால் வெளிப்படும், நேசமும் பின்பற்றுதலும் கட்டுப்படுவதை ஏற்படுத்தும். பின்பற்றாதவனும், கட்டுப்படாதவனும் அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அவர்களை நேசித்தவனாக ஆகமுடியாது.
***
S.A. SULTHAN,
30/09/1441H