Featured Posts

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது

ரமழான் மாதம் முடிவடைந்து விட்டாலும் , மரணம் ஏற்படுகின்ற வரை அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது.

وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ

”உமக்கு மரணம் வரும்வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக!” ( அல்ஹிஜ்ர் 15: 99)

அல்லாஹுத்தஆலா அவன்தான் ரமழானுடைய இரட்சகன், இன்னும் அவன் ஷவ்வாலுடைய இரட்சகன். மேலும், அவன்தான் வருடத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாதங்களினதும் இரட்சகன். எனவே, அனைத்து மாதங்களிலும் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்.

மேலும், உங்களுடைய மார்க்கத்தை பேணிப்பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை முழுவதிலும் உங்களுடைய மார்க்கத்தை பேணிப்பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், – அதுதான் அல்லாஹ்விடத்தில் உங்களுடைய மூலதனமாகும். – அதுதான் உங்களை நரகிலிருந்து பாதுகாக்கக்கூடியது.

மேலும் உங்களுடைய மார்க்கத்தை அனைத்து மாதங்களிலும், அனைத்து நேரங்களிலும் பேணிப்பாதுகாப்பதுடன் அதனை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக ரமழான் மாதம் என்பது (ஷுக்ர்) நன்றி செலுத்துவதைக்கொண்டு பின்தொடரப்படும். மேலும் , இஸ்திஃபார் (பாவமன்னிப்பை) க்கொண்டும் பின்தொடரப்படும்.
மேலும், அல்லாஹ்வின் அருளின் மூலம் ரமழானில் நோன்பு நோற்பதற்கும் – நின்று வணங்குவதற்கு வசதிவாய்ப்புக்கள் வழங்கப்பட்ட மகிழ்ச்சியைக்கொண்டும் பின்தொடரப்படும்.

எனவே, நாங்கள் இப்படியான அருட்கொடைகளைக்கொண்டே மகிழ்ச்சியடைகின்றோம், அதுவல்லாமல் இம்மாதம் முடிவடைந்துவிட்டதே என்ற அடிப்படையில் மகிழ்ச்சியடைவதில்லை.
மேலும், நிச்சயமாக நாங்கள் மகிழ்ச்சியடையவதெல்லாம் அல்லாஹ்விற்கான வணக்கங்களை அதிலே பூரணப்படுத்தியதற்காகும்.

(அல்லாஹுத்தஆலா கூறுகிறான்) ;

قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْيَـفْرَحُوْا ؕ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ

”அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது. எனவே) இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது, என்று (நபியே!) நீர் கூறும்.” (யூனுஸ் : 58)

இன்னும் அதிகமான வீண் – விளையாட்டுக்களை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள். மேலும், அதிகமான பொடுபோக்குத்தனம், அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கணிப்பது போன்ற விடயங்களை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்.

ஏனெனில், ஷைத்தான் என்பவன் உங்களின் செயல்களை பாழடிக்கவே மிகவும் வேட்கையாக இருப்பதுடன், நீங்கள் செய்த அனைத்து நல்லமல்களையும் அழித்துவிடவேண்டும் என்றே நாடுகிறான்.
ரமழான் முடிவடைந்துவிட்டால் சிறைச்சாலையிலிருந்து விடுதலைபெற்று வெளியேறுகின்றவனைப்போன்று சுதந்திரவானாக மனிதன் மாறிவிட்டான் என்று ஷைத்தான் சில மனிதர்களுக்கு அழகுபடுத்திக்காட்டுகின்றான்.

எனவே, அவன் (மனிதன்) வீண்-விளையாட்டுக்கள், பொடுபோக்கு, தொழுகையை வீணடிப்பது போன்ற வேறுபாவமான விடயங்களின் பால் செல்கின்றான். எனவே நீங்கள் சம்பாதித்தவைகளை அழித்துவிடவேண்டாம்;

وَلَا تَكُوْنُوْا كَالَّتِىْ نَقَضَتْ غَزْلَهَا مِنْۢ بَعْدِ قُوَّةٍ اَنْكَاثًا

”நூலை உறுதியாக நூற்றபின் அதனைத் துண்டு துண்டாக ஆக்கியவளைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்.” (அந்நஹ்ல் : 92)

அல்லாஹ்வின் அடியார்களே நீங்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்த ஸாலிஹான செயல்களை பேணிப்பாதுகாத்துக்கொள்ளுங்கள். மேலும், உங்களின் குறைபாடுகளுக்கும் தவறுகளுக்கும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோருங்கள். நிச்சயமாக அல்லாஹுத்தஆலா தன்னிடம் பாவமன்னிப்பு கோருபவர்களை மன்னிக்கின்றான்.

அரபியில் : அஷ்ஷைய்க்/ஸாலிஹ் பின் பௌஸான் பின் அல்-பௌஸான் (ஹபிழஹுல்லாஹ்)
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *