எந்த ஒரு பொருளும் இலகுவாகவும், அது தாரளமாகவும் கிடைக்கும்போது அதன் அருமை பெருமைகளை மனிதன் பெரும்பாலும் உணருவதில்லை!
ஏன்..? அது தட்டுப்பாடு ஏற்படும்போதும் அல்லது கிடைப்பதில் சிக்கலும் சிரமங்களும் ஏற்படும்போதுகூட அதன் அருமையை உணரக்கூடியவர்கள் மிகவும் குறைவு!
மனிதனின் மிகப்பெரிய பலஹீனம் ஏதாவது ஒரு புதிய சூழ்நிலையை அவனிடம் பழக்கப்படுத்திவிட்டால் சில தினங்களுக்கு மட்டும் பழைய சூழ்நிலையை நினைத்து வருந்துவான் பிறகு அந்தப் புதிய சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்வான்.
ஒரு சிறு குழந்தை ஆசையோடும் மிகுந்த விருப்பத்தோடும் விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்களை கையில் வைத்துள்ளது, ஒருவர் வந்து அந்த குழந்தையிடம் இருந்தப் பொருட்களை சட்டென்று பரித்துக்கொள்கின்றார். உடனே அந்தக் குழந்தை சிறிதுநேரம் வீறுகொண்டு அழுகின்றது, பிறகு வேறு பொருட்களைக் கண்டதும் முன்பு தான் வைத்திருந்த பொருட்களையும் அதன் மதிப்பையும் மறந்துவிட்டு, இப்போது கிடைத்த விளையாட்டுப் பொருள்களுக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்கின்றது. நமது இன்றைய எதார்த்த நிலை இதுதான்.
சரளமாக நமக்குக் கிடைத்துக்கொண்டிருந்த அல்லாஹ்வின் அருள், குறைக்கப்படும்போதும், அல்லது அதைப் பெற்றுக்கொள்ளும் வழிகள் சிரமத்துக்குள்ளாக்கப்படும்போதும் அதைப்பற்றிக் கவலைப்பட்டு மனம் வருந்தி கண்ணீர்விட்டவர்கள் நம்மில் எத்தனை பேர்?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவூதியில் மஸ்ஜிதுகள் திறக்க இருக்கிறது, அதுசமயம் கொரோனோ வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மஸ்ஜிதுகளில் சில ஒழுங்குகள் பேணப்படும். அதில் முன்புபோல் ஓதுவதற்கு மஸ்ஜிதுகளில் (சில நாட்களுக்கு) குர்ஆன் இருக்காது, தொழக்கூடியவர் குர்ஆனை வீட்டிலிருந்து கொண்டுவரவேண்டும் அல்லது தனது ஆன்ராய்டு போனில் உள்ள குர்ஆனை ஓதிக் கொள்ளவேண்டும்.
ஓஹோ.., அப்படியா.., என்று சாதாரணமாகக் கடந்து செல்லும் செய்தியல்ல இது!
தொழுகைக்கு முன்பதாக மஸ்ஜிதுக்குச் சென்று ஓதுவதற்காக ஆயிரக்கணக்கான குர்ஆன் பிரதிகள் கைக்கு எட்டிய தூரத்தில் வைக்கப்படிருப்பதை இங்குதான் (அரபு நாடுகளில்) பார்க்கலாம்.
தொழுகைக்கு முன்பதாகவே நேரம் ஒதுக்கி மஸ்ஜிதுக்குச் சென்று நம்மில் குர்ஆன் ஓதியவர் எத்தனை பேர்? கிடைத்த எந்த வாய்புக்களையும் சரியாகப் பயன்படுத்தாமல் பிறகு அதில் கஷ்டமும் சிரமமும் ஏற்படும் வேளையிலாவது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளனும் தன்னை சுயபரிசோதனை செய்துபார்க்கவேண்டும்.
பல ஆண்டுகள் தொடர்ந்து பள்ளிவாசலின் முன்வரிசையில் தொழும் ஒரு அடியானுக்கு சில நாட்கள் கடைசி வரிசையில் தொழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் அவன் மிகவும் கவலைப்பட்டு மனச்சஞ்சலங்களுக்கு ஆட்படுவான்.
அதே நேரத்தில் தினமும் கடைசி வரிசையில் அதுவும் இரண்டாவது மூன்றாவது ரகஅதில் வந்து சேர்ந்துகொண்டு தொழும் அடியானுக்குச் சில தினங்கள் மஸ்ஜிதுக்குச் செல்லமுடியாமலே போனாலும் அதைப் பற்றி இவர் எந்தக் கவலையும் அடைவதில்லை!
காரணம் தினமும் முன் வரிசையில் தொழுது தொழுது அதன் ருசியை சுவைத்தவர் அவர். இவரோ அதன் ருசியைச் சுவைக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தும் அதைப்பயன்படுத்திக் கொள்ளாதவர்.
கொரோனோவின் அச்சமும் பயமும் முழுமையாகத் தீர்ந்து, இன்ஷாஅல்லாஹ் பழைய நிலை விரைவில் ஏற்படும்போது இந்த நான்கு மாதங்கள் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களை நான்கே நிமிடங்களில் மறந்து விடாமல் அதிலிருந்து படிப்பினை பெற்று, தங்கள் இரட்சகனோடு உள்ள தொடர்பை நாம் ஒவ்வொருவரும் வலுப்படுத்திக் கொள்ளவேண்டும்.
قُلْ هُوَ الْقَادِرُ عَلٰٓى اَنْ يَّبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّنْ فَوْقِكُمْ اَوْ مِنْ تَحْتِ اَرْجُلِكُمْ اَوْ يَلْبِسَكُمْ شِيَـعًا وَّيُذِيْقَ بَعْضَكُمْ بَاْسَ بَعْضٍ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ لَعَلَّهُمْ يَفْقَهُوْنَ
உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்புவதற்கும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை வேறுசிலர் சுவைக்கும்படி செய்வதற்கும் அவன் (அல்லாஹ்) ஆற்றல் பெற்றவன் என்று நபிய நீர் கூறுவீராக. அவர்கள் புரிந்துகொள்வதற்காக நாம் எவ்வாறெல்லாம் வசனங்களை விவரிக்கின்றோம் என்பதையும் நீர் கவனிப்பீராக. (அல்குர்ஆன்:- 06:65)
***
Sulthan Seaport
04/10/1441h