Featured Posts

ரமழானுக்குப் பின்னர் இபாதத்களை எப்படி பேணிப்பாதுகாப்பது?

ரமழானுக்குப் பின்னர் இபாதத்களை எப்படி பேணிப்பாதுகாப்பது?

அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்

இரண்டு விடயங்களை செய்வீராக;
முதலாவது : அதிகமாக அல்குர்ஆனை ஓதுவது,
அல்லாஹுத்தஆலா இந்த குர்ஆனைப் பற்றி கூறும்போது;

لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ‌ؕ

”நாம் இக்குர்ஆனை ஒரு மலையின் மீது இறக்கிவைத்திருந்தால் அல்லாஹ்வின் அச்சத்தினால் அது நடுங்கிப் பிளந்து விடுவதை (நபியே) நீர் காண்பீர்…” (அல்ஹஷ்ர் 59 : 21)

கல்லைவிட மிகவும் கடிமான ஒன்றிருப்பதாக நான் எண்ணவில்லை. அப்படியான ஒன்றின்மீதுகூட இக்குர்ஆன் இறக்கப்பட்டால் அக்கல்கூட அல்லாஹ்வின் அச்சத்தினால் நடுங்கிப் பிளந்துவிடுவதை காண்பீர்.

எனவேதான் இப்னு அப்துல் கவிய்யி (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்;
அல்குர்ஆனை படிப்பதில் நீ பேணுதலாக இரு, நிச்சமாக அது…
ஒரு பாறையைப்பேன்று கடினமான உள்ளத்தைக்கூட மென்மையடையச் செய்துவிடும்.

என்றாலும் உள்ளம் பொடுபோக்காக இருக்கின்ற நிலையில் அல்குர்ஆனை ஓதுவது மாத்திரம்போதுமானது என்ற அர்த்தம் கிடையாது.
மாறாக, அல்குர்ஆன் ஓதுதல் என்பது உள்ளம் சமூகமளித்து, அதனை சிந்தனை செய்கின்ற நிலையில் ஓதுவதைத் தான் குறிக்கும்.

இப்படியான செயற்பாடே நிச்சயமாக உள்ளத்தை மென்மையடைச்செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

இரண்டாவது விடயம் : அல்லாஹ்வை திக்ர் செய்வது,
அத்தஹ்லீல் : ”லா இலாஹ இல்லல்லாஹ்”
அத்தக்பீர் : ”அல்லாஹு அக்பர்”
அத்தஸ்பீஹ் : ”சுப்ஹானல்லாஹ்”
அத்தஹ்மீத் : ”அல்ஹம்துலில்லாஹ்”
இவை போன்றவைகள் (கூறுவது),

என்றாலும் இவைகளைக் கூறும்போது உள்ளமும் – நாவும் ஒன்று பட்டிருக்கவேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகும்.
ஏனெனில், வாழ்வின் சுற்றுப்பாதை உள்ளத்துடன்தான் தொடர்புபட்டுள்ளது. அதாவது, உள்ளம் உயிரோட்டமாக இருந்தால் உடல் உயிரோட்டமாக இருக்கும்.

இதனால்தான் அல்லாஹுத்தஆலா கூறுகிறான் ;

وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا 

”எம்மை நினைவுகூர்வதை விட்டும் எவனது உள்ளத்தை நாம் மறக்கடிக்கச் செய்தோமோ அவனை நீர் பின்பற்றாதீர்… (அல்கஹ்ஃப் 18 : 28)

”எம்மை நினைவுகூர்வதை விட்டும் எவனது நாவை நாம் வீழ்த்திவிட்டோமோ” என்று அல்லாஹுத்தஆலா கூறவில்லை மாறாக, ”எவருடைய உள்ளத்தை மறக்கடிக்கச் செய்தோமோ…” என்றே அல்லாஹ் கூறுகிறான்.

எத்தனையோ மனிதர்களுடைய உள்ளங்கள் சமூகமளிக்காத நிலையில் அவர்களின் நாவுகள் அல்லாஹ்வை திக்ர் செய்கின்றன. இப்படியான சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வை நினைவுகூறுவது பலவீனமானதாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவோ மோசமானதாக இருக்கும்.

என்றாலும் எப்பொழுது உள்ளமும் – நாவும் ஒன்றுசேருகின்றதோ அதன்போதே உள்ளம் உயிர்ப்பெறுவதுடன், மென்மையும் அடையும்.

அல்லாஹுத்தஆலா கூறுகிறான் :

اَللّٰهُ نَزَّلَ اَحْسَنَ الْحَدِيْثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِىَ ‌ۖ تَقْشَعِرُّ مِنْهُ جُلُوْدُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ‌ۚ ثُمَّ تَلِيْنُ جُلُوْدُهُمْ وَقُلُوْبُهُمْ اِلٰى ذِكْرِ اللّٰهِ‌ ؕ ذٰلِكَ هُدَى اللّٰهِ يَهْدِىْ بِهٖ مَنْ يَّشَآءُ

”அல்லாஹ் மிக அழகான செய்தியை வேதமாக இறக்கி வைத்துள்ளான். அவை ஒன்றையொன்று ஒத்ததாகவும், திரும்பத் திரும்ப ஓதப்படுவவையாகவும் இருக்கின்றன. தமது இரட்சகனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்ந்து விடுகின்றன. பின்னர் அவர்களது தோல்களும், அவர்களது உள்ளங்களும் அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் மென்மையடைகின்றன. இது அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன்மூலம் தான் நாடுவோரை அவன் நேர்வழியில் செலுத்துகின்றான்.” (அஸ்ஸுமர் 39 : 23)

வழங்குபவர் : அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்)
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *