Featured Posts

அல்-குர்ஆனோடு சங்கமிப்போம்

– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி- இலங்கை

அல்குர்ஆன் இறைவேதமாகும். அது இறைவேதம் என்பதை மனிதர்கள் சந்தேகப்படத் தேவையில்லாத அளவு அதனை இறக்கிய அல்லாஹ்வே நிரூபித்துக் காட்டி விட்டான்.

ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், துறைசார் நிபுணர்கள் என உலகில் அனைத்து கல்வியலாளர்களும் ஒன்றிணைந்து அதைப் பொய்ப்பிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைய, இறுதியில் அவர்களோ வியந்து சரண்டராகி அல்குர்ஆனோடு சங்கமித்த வேதமாகும் .

https://islamstory.com/ar/artical/

http://www.kaheel7.com/ar/index.php/2010-02-02-22-33-29/1856-2015-11-24-23-38-59

போன்ற தளங்கள் ஊடாக இது பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அல்குர்ஆன் மனிதர்களின் உலக மற்றும் மறுமை தொடர்பான பல நூறு வழிகாட்டல்கள் நிரம்பிய அற்புத வேதமாகும்.

முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாட நடைமுறையில் காணப்படுத்துகின்ற உழு, தொழுகை, நோன்பு, தலாக், இத்தா, ஹிஜாப், தடுக்கப்பட்ட பார்வை, தடை செய்யப்பட்ட திருமண முறைகள், தடை செய்யப்பட்ட உணவுப் பழக்கம் என பல்வேறு விஷயங்களை விஞ்ஞான அறிவுடன் உட்படுத்தி அவை நவீன அறியலோடு நெருங்கி இருப்பதும் மனித நலனைக் கருத்தில் கொள்ளப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

https://www.alukah.net/sharia/0/124384/

https://islamhouse.com/ar/books/93257/

மனிதர்கள் தமது குறுகிய பகுத்தறிவின் மூலமாக அல்குர்ஆனை விமர்சனம் செய்வதால் அல்குர்ஆனின் நோக்கங்களை எட்ட முடியாத அளவு பலநூறு ஆச்சரியங்கள் அதில் புதைந்து கிடக்கின்றன.

அதனை ஏழு வாங்களுக்கும் மேலால் அர்ஷின் மீதிருக்கின்ற அகில உலக இரட்சகன் அல்லாஹ், ஜிப்ரீல் (அலை) என்றழைக்கப்படும் வானவர் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நாற்பதாவது வயதில் “படிப்பீராக” எனத் தொடங்கும் வசனத்தொடர் மூலம் மக்கா காஃபிர்கள் ஜாஹிலிய்யா என்ற அறிவியல் மற்றும் பண்பாட்டு வீழ்ச்சியில் மூழ்கிப் புரண்டு கிடந்த போது கல்வியின் அவசியத்தை உணர்த்தி இறக்கி வைத்ததன் மூலம் குர்ஆனியக் கல்வியே மனித சமூகத்தை அழிவில் இருந்து பாதுகாக்க வல்லது என்பதை அல்லாஹ் உணர்த்திய அற்புத வேதமாகும்.

எனவே அதன் கல்வியே மனித சமூகத்தின் ஈடேற்றத்தின் பிரதானமாகும்.

?அல்குர்ஆன் அனைவருக்குமானது?

தற்காலிகமாக உலகில் ஆட்சி அதிகாரத்தில் பயணிக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தமது சட்டமே மேன்மையானது, நாம் சொல்வதையே உலகம் கேட்டு நடக்க வேண்டும் என திமிறாகப் பேசி நடந்து கொள்கின்ற போது விஞ்ஞானிகளே வியக்கும் உலகையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ் உண்மையான ஒரு வேதத்தை இறக்கி அதுவே மனித சமூகத்தின் ஈடேற்றத்திற்கான எல்லாக் காலத்திற்கும் சமூகத்திற்கும் பொருத்தமான சரியான சட்டம் என பிரகடனப் படுத்தி, அதனை பின்பற்றி நடக்குமாறு கட்டளை பிறப்பிப்பதில் என்ன தவறு இருக்கின்றது?

அல்குர்ஆனை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரிமை கொண்டாட முடியாதவாறு அவன் அதனை இறக்கிய முதல் இரவே அது
“மனிதர்களுக்கு நேரான வழிகாட்டியாகும்”; (அல்பகரா- 185 ) எனப் பொது மாமறையாக அறிவித்துள்ளான்.

எனவே நாம் மாத்திரம் சொந்தம் கொண்டாடாமல் பிறருக்கும் அதை அறிமுகம் செய்வது நம்மீதுள்ள தார்மீகக் கடமையாகும்.

?அல்குர்ஆன் உலகப் பொதுமறையாகும்?

அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்குமான பொது வேதம் என விளக்கும் பல வசனங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு எடுத்து நோக்குவோம்.

அதனால் அல்குர்ஆனை முஸ்லிம்களின் வேதம் எனக் கூறுவது தவறாகும். மனித சமூகத்தின் வேத நூல் எனக் கூறுவதே சரியான பிரயோகமாகும்.

وَإِنًهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ (الحاقة – 48)

நிச்சயமாக அது (குர்ஆன்) இறையச்சமுள்ளவர்களுக்கு நினவூட்டலாகும். அல்ஹாக்கா- 48)

وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ (القلم/ ٥٢)

அது (குர்ஆன்) அகிலத்தாருக்கு நினுவூட்டலே தவிர இல்லை. ( அல்-கலம்:48).

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ (التكوير/٢٧)

அது (குர்ஆன்) அகிலத்தாருக்கு நினுவூட்டலே அன்றி இல்லை.(அத்தக்வீர்-27).

.. وأُرْسِلْتُ إلى الخَلْقِ كافَّةً، وخُتِمَ بيَ النَّبِيُّونَ ( أخرجه مسلم من حديث أبي هريرة رضي الله عنه )

நான் படைப்புக்கள் அனைவருக்கும் பொது இறைத் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன். என்னைக் கொண்டே நபித்துவம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. (முஸ்லிம்)

அல்குர்ஆன் உலகப் பொதுமறை என்பதை 350 ற்கும் மேற்பட்ட இடங்களில் பறைசாட்டுவதுடன், அது அகில மக்களுக்குமான அறிவுரையே அன்றி வேறில்லை என்ற மட்டுப்படுத்தப்பட்ட வார்த்தைகள் ஊடாக தெளிவான பொருளில் நான்கு இடங்களில் உணர்த்துவதன் மூலம் அது மனித மற்றும் ஜின்கள் ஆகிய இரு இனத்தவரும் இதில் உள்ளடங்கப்படுவதையும் தெளிவுபடுத்தி விட்டது.

எனவே அதன் போதனைகள் பற்றிய தேடலும் அதன் பிரகாரம் நடப்பதும் அனைத்துலக மக்கள் மீதும் அல்லாஹ் விதித்துள்ள கட்டளையாகும்.
 
அல்குர்ஆனில் இடம் பெறும் العالمين அல்ஆலமீன் என்ற வார்த்தை மனித, மற்றும் ஜின் ஆகிய இரு வர்க்கத்தினரையும் குறிக்கப்பயன்படும் சொற்பிரயோகமாகும் என தஃப்ஸீர் அறிஞர்கள் பலர் சுட்டிக்காட்டுவதை இங்கு நாம் கவனத்தில் கொண்டால் குர்ஆனை நம்பிக்கை கொள்ளாமல் ஒருவர் மரணிப்பது பெரும் குற்றமாகும் என்பதை விளங்க முடியும்.

?இறைத் தூதரும் பொதுவானவரே?

அல்குர்ஆன் எப்படி பொதுமறையோ அவ்வாறே அதைக் கொண்டு வந்த இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அனைவருக்கும் பொதுவான வழிகாட்டியாகும்.

அது மாத்திரமின்றி, அவர்கள் மனித கண்களுக்குத் தெரியாது உலகில் வாழ்கின்ற மற்றொரு படைப்புக்களான “ஜின்” சமூத்தாருக்கும் சேர்த்து இறுதி இறைத் தூதராக வந்த காரணத்தினால் குர்ஆன் ஜின்களுக்கும் உரிய வேதமாகும்.

﴿ وَمَا أَرْسَلْنَاكَ إِلاَّ رَحْمَةً لِلْعَالَمِينَ ﴾ [الأنبياء: 107].

நபியே அகிலத்தாருக்கு அருளாகவே அன்றி உம்மை நாம் அனுப்பி வைக்கவில்லை.( அல்அன்பியா- 107).
 
என்ற வசனத்தை விளக்குகின்ற அறிஞர் இப்னு ஆஷூர் (ரஹி) அவர்கள்: இந்த வசனம் இறைத் தூதரின் புகழ், அவரை அனுப்பிய அல்லாஹ்வின் புகழ், மனித சமூகத்திற்கு பொதுவான தூதுத்துவ அறிவிப்பு, படைப்புக்களின் மீதுள்ள அல்லாஹ்வின் கருணை ஆகியவற்றுடன் அதி உயர்ந்த சுருக்கமான சொல்லாடல் மூலம் இந்த வசனம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக இதன் சிறப்பைக் குறிப்பிடுகின்றார்கள்.

அவர்கள் மேலும் விளக்குகின்ற போது: இந்த வசனத்தில் இடம் பெறும் இடைச் சொல் போக (24) இருபத்தி நான்கு எழுத்துக்களில் ரத்தனச் சுருக்கமாக இறைத் தூதர், அவரை தூதராக அனுப்பிய அல்லாஹ், அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மக்கள், தூதுத்துவம் ஆகிய நான்கு பண்புகள் உணர்த்தப்படுவதோடு இதில் அனைவருக்குமான தூதர் என விளக்கியதுடன், அதில் “ரஹ்மத்தன்” என்ற பொதுவான பொருள் தரும் வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் அனைத்து வகையான அருளையும் குறிக்கின்றவாறு அல்லாஹ் அந்த அருளை அனைத்து படைப்புகளுக்கும் பொதுவானதாகக் குறிப்பிட்டு அருளி இந்த வசனத்தின் சிறப்பம்சத்தை விளக்கி இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் விளமளித்துள்ளார்கள். (தஃப்ஸீர் – இப்னு ஆஷூர்)

இந்த வசனத்தின் செயல் வடிவமாகவே இறைத் தூதர் அவர்கள் முஸ்லிம்களோடும் முஸ்லிம் அல்லாத மக்களோடும் அன்பாக வாழ்ந்தார்கள் என்பதற்கு இஸ்லாமிய வரலாற்றில் நூற்றுக்கணக்கான சான்றுகளைக் காண முடியும்.

அன்னை ஆயிஷா சித்தீகா (ரழி) அவர்களிடம் இறைத் தூதரின் பண்பு பற்றி வினவப்பட்ட போது

كان خلقه القرآن. (مسلم)

குர்ஆனே அவர்களின் பண்பாடாக விளங்கியது எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

எனவே முஸ்லிம் மக்களாகிய நாமும் குர்ஆனை ஓதுவதன் மூலமாக மாத்திரம் இல்லாது அதன் போதனைகளை நமது வாழ்வில் எடுத்து நடப்பதன் மூலமும் பிறர் மீது தாக்கம் செலுத்த வேண்டும்.

?அல்குர்ஆன் சந்தேகமற அல்லாஹ்வின் வேதமாகும்?


அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகளாகும். அது முஹம்மது (நபி) அவர்களால் கற்பனையாக வடித்துக் கூறப்பட்டதில்லை.

அவர்கள் (உம்மி) எழுத, வாசிக்கத் தெரியாத ஒருவராக இருந்தும் இத்துணை பெரும் ஆச்சரியம் நிறைந்த தகவல்களை வேத வசனங்களாக மக்கா மக்கள் மத்தியில் ஓதிக் காண்பித்தார்கள் என விறைத்துப் போகும் ஆய்வாளர்கள் :

{ وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰ إِنْ هُوَ إِلاَّ وَحْيٌ يُوحَىٰ * عَلَّمَهُ شَدِيدُ ٱلْقُوَىٰ (النجم/ ٣- ٥)

அவர் தனது மனோ இச்சைப் பிரகாரம் பேசுவதில்லை. அவர் -வஹி- இறைச் செய்தியாக அறிவிக்கப்பட்டதைத் தவிர பேசுவதில்லை. அதனை அவருக்கு சக்திமிக்கவரான (ஜிப்ரீல்) கற்றுக் கொடுத்தார். (அந்நஜ்ம்-3-5) என்ற இறை மறை வசனத்தை இறுதியில் ஏற்றுக் கொள்ளவே செய்கின்றனர்.

?குர்ஆனோடு சங்கமித்தல் என்றால் என்ன??

குர்ஆனின் பக்கங்களோடு ஒன்றரக் கலந்து வாழ்வதையே குர்ஆனோடு சங்கமித்தல் எனக் கூறுவது.

உலகில் ஏதோ ஒன்று அற்புதமானதாக நமது அறிவுக்கு உட்பட்டு தெரிகின்ற போது, அது பற்றி சமூக வலைத்தளங்களிலும் பத்திக்கைகளிலும் பரப்புரை செய்வோரை நம்பி நாமும் மொய்யான செய்திகளாக நம்பி பரப்புகின்றோமே.

அப்படியானால் ஆச்சரியங்களும் நமது வெற்றியின் ரகசியங்களும் 100% உண்மைப்படுத்தப்பட்ட அல்லாஹ்வின் வேதத்தை பரப்ப வேண்டுமே. அதை நாம் ஏன் செய்வதில்லை?

அதனை நமக்கு

? உச்சரிக்கத் தெரியாது,

?ஓதத் தெரியாது, 

?அதைப் படிப்பதில்லை, 

?அதன் சட்டங்களை எடுத்து நடப்பதில்லை

? மொத்தத்தில் நமது வாழ்க்கையில் குர்ஆன் கூறும் வாழ்க்கை இல்லை.  கைசேதமே! 

அப்போது நாம் எப்படி மன நிம்மதியை அடைய முடியும்.

طه مَا أَنْزَلْنَا عَلَيْكَ الْقُرْآنَ لِتَشْقَىٰ ﴿٢ طه﴾

தாஹா- நபியே இந்தக் குர்ஆனை நீர் துர்ப்பாக்கியம் பெற நாம் உம்மீது இறக்கி வைக்க வில்லை. ( தாஹா- 1-2)
அல்லாஹ்வின் மேற்படி அறிவிப்பின் மூலம் நற்பாக்கியமே குர்ஆனில் இருக்கின்றது என்பதை அல்லாஹ்வே நமக்கு உணர்த்தியும் நமக்கு இந்த நிலை என்றால் உண்மையில் கைசேதமே!

وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنتُ بَصِيرًا كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى (طه/١٢٤-١٢٦)

யார் எனது இந்த நினைஊட்டும் வேதத்தைப் புறக்கணிக்கின்றானோ நிச்சயமாக அவனுக்கு ( இவ்வுலகில்) நெருக்கிடியான வாழ்க்கை உண்டு. மறுமை நாளில் அவரை நாம் குருடராகவே எழுப்புவோம். அப்போது அவன் எனது இரட்சகனே தெளிவான கண்பார்வை உள்ளவனாக இருந்த என்னை நீ ஏன் குருடனாக எழுப்பினாய் எனக் கேட்பான். அவ்வாறுதான்( நடக்க வேண்டும்) உனக்கு நமது அத்தாட்சிகள் உம்மிடம் வந்தன. நீ அவற்றை மறந்து( குருடனாக) வாழ்ந்தாய் என அல்லாஹ் பதில் கூறுவான். (தாஹா-124-126).

இது குர்ஆனைப் புறக்கணித்தவனுக்கு மறுமை நாளில் கூறப்படும் என்றால் அந்தக் கேவலத்தை நாமும் சுமக்க தயாராக வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.

முதல் மனிதர், ஆதம் நபி (அலை) அவர்கள் தவறு செய்து சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போதும் அல்லாஹ் அவர்களிடம்

فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَىٰ ﴿١٢٣ طه﴾

உங்களுக்கு என்னிடமிருந்து நிச்சயமாக நேர்வழி வரும். எவர் எனது நேரான வழியைப் பின் பற்றி நடக்கின்றாரோ அவர் வழி தவறவும் மாட்டார், துற்பாக்கியம் அடையவும் மாட்டார் ( தாஹா-123 ) எனக் கூறியதை அடிப்படையாகக் கொண்டு நமது வாழ்க்கை ஈருலகிலும் செழிப்பாக இருக்க குர்ஆனோடு உள்ளத்தால் காதல் கொள்வோம். இறை திருப்தி பெறுவோம்.


ரிஸ்வான் மதனி

20/04/2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *