Featured Posts

கட்டாந்தரைகளாக மாறும் விளைநிலங்கள்

ஹதீஸ் தெளிவுரை

– அஷ்ஷைக் எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.)

நிறைவுபெற்ற இறைத் தூதையும் இறுதித் தூதரின் தூதுத்துவப் பணியையும் பற்றிய ஒரு தெளிவான கருத்தியலை இஸ்லாம் முன்வைக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அதனைப் பிரசாரம் செய்வோர் பற்றியும், இஸ்லாத்தை ஏற்காது, தமது மனோ இச்சைகளைத் தெய்வமாக்கிக் கொண்டவர்களைப் பற்றியும் மிகவும் தத்துவார்த்தமாக, நடைமுறை உதாரண, உவமையோடு பின்வரும் நபி மொழி தெளிவுபடுத்துகிறது.

“அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையானது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு, ஏராளமான புற்களையும் செடி கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில, தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயனடையச் செய்தான். அதில் மக்கள் அருந்தினர் (தமது கால்நடைகளுக்குப்) புகட்டினர், விவசாயமும் செய்தனர்.

அந்தப் பெருமழை இன்னொரு நிலத்திலும் விழுந்தது அது, (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கிவைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகளை முளைக்க விடவும் இல்லை.

இதுதான், அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டுவந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து, பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிவிட்டுப் பாராமலும், நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கின்றவனுக்கும் உவமையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா (ரழி) நூல்: புகாரி (79)

ஒரு விவசாய நிலம் எப்படி தன்னில் விதைக்கப்படும் விதையை, மேல் நோக்கி வளரச் செய்து, விவசாயிக்கு அறுவடைப் பயன் வழங்குமோ, அதுபோன்று ஒரு நல்ல உள்ளம் உள்ளவன் தன் உலக வாழ்விலே தென்படும் கொள்கை, கோட்பாடுகள் அனைத்தையும் உற்றுநோக்கி, இஸ்லாத்தின் யதார்த்த தன்மையை மனதால் உளப்பூர்வாக ஏற்று, தனது வாழ்வில் கடைப்பிடித்து, அந்த வளமான வாழ்வின் பக்கம் மற்றவர்களையும் அழைப்பான் என்ற உண்மையை அற்புதமான உத்தானத்தோடும் இலக்கிய நயமாகவும் நம்பியவர்கள் உதாரணப்படுத்தியுள்ளார்கள் என்பது சிந்தனைக்குரியதாகும்.

பூகோள அமைப்பில் பல நாடுகள் உள்ளன. அவை தமக்கே உரிய பல்வேறு அமைவிட, தட்பவெப்ப சூழல் தன்மைகளைக் கொண்டமைந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு நிலமும் பல்வேறு பயிர்களை விளைச்சலாக்கி, அந்த நாட்டிற்குச் சர்வதேசச் சந்தையில் புகழைத் தேடிக்கொடுப்பதோடு, பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொடுக்கின்றன. உலகின் ஒவ்வொரு நாடும் தனது புவி விளைச்சல் மூலமாகப் பொருளாதார வளத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த நிலங்களில் விழும் நீர் தேக்கிவைக்கப்பட்டு, அவற்றின் விளைச்சலுக்குப் பயன்படுகின்றது. இந்த அமைப்பை நாம் நமது நாட்டிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் காண்கின்றோம்.

அதேபோல், நாம் மேலே குறிப்பிட்ட ஹதீஸ், உயிரோட்டமான உவமையை எவ்வளவு அற்புதமாகத் தெளிவுபடுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் அகில உலகிற்கும் முன்மாதிரியாக, இறுதித் தூதராக அனுப்பப்பட்டார்கள். அவர்களின் பிரசாரம் மனித இன வரலாற்றின் ஓட்டத்தில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தியது. அவர்களின் பிரசாரம் 1440 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரை தாக்கம் செலுத்திவருகிறது. பல்லின மக்களையும் ஒரு தாய், ஒரு தந்தை பிள்ளைகள் என்ற பிரகடனம் மூலம் சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் இறுதித்தூதராக அனுப்பப்பட்டதன் மூலம் அல்லாஹ்வின் வேத வழிகாட்டலான தூதுத்துவம் – வஹி நிறைவு பெற்று விட்டது. அல்லாஹுத்தஆலா நபியவர்களை நேர்வழி ஞானத்துடன் அனுப்பினான். அவர்களை ஏற்றவர்களையும் ஏற்காதவர்களையும் பிரித்துக் காட்டும் இருவேறு உவமைகளால் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதாவது, நபி (ஸல்) அவர்கள் தூதராக ஏற்றம் பெற்றவுடன், உறவினர்களுக்கும் ஏனைய மக்களுக்கும் இஸ்லாத்தைப் பிரசாரம் செய்தார்கள். ஆரம்பத்தில் சிலர் ஏற்றுக்கொண்டார்கள். பலர் மறுத்தார்கள். ஏற்றுக் கொண்டவர்கள் தமது வாழ்வில் அதைக் கடைப்பிடித்து ஒழுகியதோடு, மற்றவர்களுக்கும் பிரசாரம் செய்தார்கள். எனவே, அவர்கள் தனக்கும் ஏனையோர்களுக்கும் பயனுள்ளவர்களாக வாழ்ந்தார்கள் என்ற உண்மையை இந்த ஹதீஸ் தத்துவார்த்தமாக விளக்குகிறது. நிலத்தில் விழுந்த பெரும் மழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு, ஏராளமான புற்களையும் செடி கொடிகளையும் முளைக்கச் செய்தன, என்ற தொடர் இஸ்லாத்தை ஏற்று, அதனைத் தனது இதயத்தில் மட்டும் வைத்துக் கொள்ளாமல் தனது பிள்ளைகள், பெற்றோர், மனைவி, சமூகம் ஆகிய அனைத்துத் தளத்திலும் அதன் போதனைகளை எடுத்தியம்புவதைக் கடமை என்பதை வலியுறுத்துகிறது.

கல்வியைப் பெறுவதும் அதனை மற்றவர்களுக்கு வழங்குவதும் சிறப்புக்குரிய அம்சமாகச் சிலாகிக்கப்படுகிறது. இரண்டு விசயங்களில் மட்டும் தான் பொறாமை அனுமதிக்கப்பட்டுள்ளது.

”இரண்டு விடயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை, அவர் நல்ல வழியில் செலவு செய்தல், இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விடயங்கள்” என்று அல்லாஹின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி) நூல்: புகாரி (73)

இஸ்லாத்தைக் கற்று, அதனைப் பிறருக்கு கற்றுக் கொடுப்பவருக்கும், இஸ்லாத்தின் தூதுச் செய்தியை ஏற்காது, அதனைப் பற்றிச் சிந்திக்காது, வாழ்ந்து, மரணிக்கும் மனிதனுக்குமிடையே உள்ள வேறுபாட்டைப் பல நபி மொழிகள் பிரஸ்தாபிக்கின்றன.

ஒரு மனிதனின் அறிவைப் பார்த்துப் பிரமித்து, இந்த அறிவுச் செல்வம் எனக்கும் கிட்ட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து இம்மை – மறுமை இன்பம் பெற வேண்டுமே என்ற அங்கலாய்ப்பு ஒரு மனிதனின் உள்ளத்தில் ஏற்பட இஸ்லாத்தில் அனுமதி உண்டு. அறிவுக்கும், அதனைப் போதிப்பதற்கும் எவ்வளவு சிறப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. அத்தகைய அறிவாளிகளைப் பற்றி அடுத்த தொடர் பேசுகிறது ”வேறு சில, தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை மக்களுக்கு இறைவன் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர், (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர். விவசாயமும் செய்தனர்.

”அல்லாஹ் யாருக்கேனும் நன்மை செய்ய நாடினால், மார்க்கத்தில் விபரமுள்ளவராக அவரை ஆக்குவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதரின் போதனைகள் ஆழமாகக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களை இது குறிக்கிறது. அவர்கள் இஸ்லாமிய அறிவைப் பெருக்கிக் கொண்டனர். அவர்களை நாடி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அறிவமுதம் பெற்றனர். வற்றாத அறிவுச் சுணையாக அவர்கள் விளங்கினர் என்ற ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.

இன்னும் சிலர் இருக்கின்றனர் அவர்கள் இஸ்லாத்தைக் கற்றிருப்பார்கள். ஆனால், அவர்கள் வாழ்வில் இஸ்லாமியப் போதனைகளைக் கடைப்பிடிக்கமாட்டார்கள். ஆன்மிக வறுமையில் திளைத்திருப்பர். எனினும், அவர்களிடம் மக்கள் வந்து அறிவுச் செல்வத்தைப் பெற்றுச் செல்வார்கள். இஸ்லாம், அறிவு, நம்பிக்கை சார்ந்த வாழ்க்கை நெறியும் கூட. எனவே, கற்றவற்றை தமது வாழ்வில் முதலில் செயற்படுத்தவும் வேண்டும்.

நீரை எடுக்காமல், தேக்கி வைத்த நிலம் இவர்களுக்கு ஒப்பானதாகும். அந்த நீரில் பிறர் பயன் பெறலாம். நிலம் பயன் பெறாது. இன்று சிலரை அறிவாளிகளாக மக்கள் நம்பிச் செல்கின்றனர். அவர்களின் சுய விளக்கங்களை வேதவாக்க நம்புகின்றனர். அதற்காக மற்றவர்களை அவமதிக்கின்றனர். ஆனால், இவர்கள் அறிவாளியாக நம்பும் சிலர் அன்றாட தொழுகை கூட இல்லாத எழுத்திலும் பேச்சிலும் ஏட்டிலும் முஸ்லிமாகவும் தனது தனிப்பட்ட வாழ்வில் நாத்திகத்திலும் உள்ளனர்.

அடுத்ததாக, நபி (ஸல்) அவர்களின் பிரசாரத்தை ஏற்காத, அதன் படி வாழாத, அதன்பால் அழைப்பு விடுக்காத மனிதனுக்கு உவமை கூறப்படுகிறது. ”அந்தப் பெருமழை இன்னொரு நிலத்திலும் விழுகிறது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை.”

மனிதனுக்கு அல்லாஹ் பகுத்தறிவை வழங்கியுள்ளான். அதனைப் பயன்படுத்தி, எது சரி? எது தவறு? என்று கண்டு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றான். சரியையும் பிழையையும் பிரித்தறிவிக்க காலத்திற்குக் காலம் இறைத் தூதர்களையும் அனுப்பி அருளினான். ஆனால், பகுத்தறிவு வாதம் பேசுவோரும், விதண்டாவாதம் புரிவோரும் உண்மையில் தமது பகுத்தறிவைச் சரியான வழியில் பயன்படுத்தவில்லை. அவர்களிடம் நேர்வழி எனும் இறைத்தூது சென்றது. அதனை அவர்கள் சிந்தித்து ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான், நபி (ஸல்) அவர்கள் அத்தகையவர்களை எதற்கும் உதவாத கட்டாந்தரை என்று இழித்துரைத்துள்ளார்கள். இத்தகையவர்களைப் பற்றி அல்குர்ஆனும் இழித்துரைக்கிறது.

”நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம். அவர்களுக்கு மூளை இருக்கின்றது. ஆனால், அதைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெறமாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு. ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனைகளைக்) கேட்கமாட்டார்கள். இத்தகையவர்கள் கால் நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றைவிடவும் மோசமானவர்கள். இவர்கள் தாம் (நமது வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (அல்குர்ஆன் 7:179)

மனிதன், பகுத்தறிவு உள்ளதனால் மட்டும் சிறந்தவனாகிவிட முடியாது. அதனைப் பிரயோகித்து நல்லதை – இஸ்லாத்தை – ஏற்று அதன்படி வாழ்வதனாலும் அதனைப் பிறருக்கு அறிமுகப்படுத்துவதனாலும் சிறந்தவனாகின்றான். இல்லை என்றால், அவன் வனவிலங்குகளை விடக் கீழானவனாக ஆகிவிடுகின்றான். அதேபோல், அவன் இஸ்லாத்தைக் கற்று அதனை மறைக்காது, நபிவழியில் ஏற்றத்தாழ்வு காண்பிக்காமல் உள்ளதை உள்ளபடி கூறவும் வேண்டும்.

”கல்வி சம்பந்தமாகக் கேட்கப்படும்போது, யாரேனும் மறைத்தால், அவன் மறுமை நாளில் நெருப்புக் கடிவாளம் இடப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: திர்மிதி

இஸ்லாமியக் கல்வி மிக உயர்வானது. அது ஓர் இறைவணக்கமாகக் கொள்ளப்படுகிறது. அதனைக் கற்று, தஃவாப் பணி புரியும் போது, மக்கள் ஏற்பார்களோ, ஏற்க மாட்டார்களோ என்று விளைவுகளைப் பற்றி அஞ்சாது, உள்ளதை உள்ளவாறு சொல்ல வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் கட்டளை. இதற்கு மாற்றமாக யாராவது இஸ்லாத்தின் போதனை ஒன்றை மறைத்தால், அல்லது திரிபுபடுத்திக் கூறினால் அவருக்கு நரக வேதனை உண்டு என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நம்மில் பலர் விளைவுகளை வைத்துக் கொள்கையை மாற்றிக் கொள்கின்றனர். அது இவ்வுலகை மட்டும் நம்பியவர்களின் நிலை. ஆனால், ஓர் உறுதியான இஸ்லாமியப் பிரசாரகனுக்கு அந்த முடிவு உகந்ததல்ல. அவன் தனது பணியை மனிதன் திருப்திக்காக அல்லாமல், அல்லாஹ்வின் திருப்தி ஒன்றுக்காகவே ஆக்கிக் கொள்கின்றான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதை நன்மை என்று அடையாளம் காட்டினார்களோ, அதன் பால் மக்களை அழைத்துக் கொண்டிருப்பதே உண்மையான அழைப்பாளனின் கடமை. அவனது, எண்ணங்களும் செயல்களும் தூய்மை உடையதாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் திருப்தியும் கருணையும் கிருபையுமே பிரசாரகர்களுடைய ஒரே பலமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நாமும் வெறும் கட்டாந்தரையாகி விடுவோம். இந்த இழிநிலையிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

அதேவேளை, நாம் குறைவாக தஃவாப் பணி புரிந்தாலும் தொடராகச் செய்ய வேண்டும். தொடராக ஆற்றும் பணியை அல்லாஹ்வும் அதிகமாக விரும்புகிறான். சிறிது காலம் அதிகமாகச் செய்து விட்டு, களைப்படைந்து, நீண்ட நாட்களுக்கு தஃவாப் பணி செய்யாமல் விடுவதால் எத்தகைய பயனும் கிட்டுவதில்லை.

தஃவாப் பணி என்பது சுகமான பணி. அது கருமை நிற மேகங்கள் சூழ்ந்த, கரடு முரடான, பலத்த சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டிய பாதை. இஸ்லாமிய அகீதாவில் ஆழமான விளக்கமும், கொள்கைத் தெளிவும், உறுதியும், தொலை நோக்கும், திட்டமிடும் மதியூகமும், செயற்திறனும், சரியான அணுகு முறையும் நமக்குத் தேவை. நமது சுயநலனை விட அல்லாஹ்வின் மார்க்கம் உயர்வானது என்ற மனப்பதிவு நம்மில் ஏற்பட வேண்டும். இல்லையென்றால், நபி (ஸல்) அவர்கள் சிலாகிக்கும் நன்நிலங்களாக நாம் இருக்க முடியாது.

”இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டுவந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப்பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கின்றவனுக்கும் உவமையாகும் என்று ஹதீஸின் இறுதிப் பகுதி முடிவடைகிறது.

இஸ்லாத்தைக் கற்று, அதனைப் பிரசாரம் செய்து வாழ்பவன் சமூகத்திற்குப் பிரயோசனமுள்ளவனாகின்றான். விவசாயத்திற்குத் தரிசு நிலம் பயன்படுவது போன்று, இவன் இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய உம்மத்திற்கும் பயனுள்ளவனாகின்றான். அதேவேளை, இஸ்லாத்தைக் கற்க முயலாது, பிறமத கலாசார மத அனுஷ்டானங்களில் தேங்கி, அதிலிருந்து வெளிவர முடியாது தவிப்பவன், வெறுமையான கட்டாந்தரைக்குச் சமமானவன். அத்தகையவனால் சமூகத்திற்கு எத்தகைய பயனும் இல்லை.

எனவே, நாம் அனைவரும் அல்லாஹ்வின் இறுதித்தூதுச் செய்தியான அகிலத்தின் அருட்கொடையான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் துறைபோகக் கற்று, இஸ்லாத்தின் தூதைத் தவறாகப் புரிந்துள்ள ஆயிரமாயிரம் சகோதர இன நெஞ்சங்களுக்கும் எடுத்துச் சென்று அவர்களையும் இந்த உன்னத வாழ்வின் இன்பத்தை உணரச் செய்ய முனைப்புடன் அயராது, அர்ப்பணத்துடன் உழைக்க வேண்டும்.

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ, அவருடைய இதயத்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக விசாலமாக்குகின்றான். யாரை அவன் வழிகெடுக்க நாடுகிறானோ, அவருடைய இதயத்தை வானத்தில் ஏறுபவன் இதயத்தைப் போல் இறுகிச் சுருங்கும்படி செய்கின்றான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125)

எனவே, கட்டாந்தரைகள் எல்லாம் விளை நிலங்களாக மாற வேண்டும். விளை நிலங்கள் கட்டாந்தரைகளாக மாறிவிடக் கூடாது. இது சமூகத்திற்கும் தேசத்திற்கும் பாரிய இழப்பை ஏற்படுத்திவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *