அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார்கள்.
நபி (ﷺ) அவர்கள் ‘தாத்துஸ் ஸலாஸில்’எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ﷺ) அவர்களிடம் சென்று,
‘மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன்.
“அவர்கள், ‘ஆயிஷா’ என்று பதிலளித்தார்கள்.”
நான், ‘ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள்:
“ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)’ என்று பதிலளித்தார்கள்.”
‘பிறகு யார் (பிரியமானவர்)?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள்:
” ‘பிறகு உமர் இப்னு கத்தாப் ”
தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)’ என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3662.
முஃமீன்களின் அன்னையான நபி (ﷺ) அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ﷺ) அவர்களின் வபாத்துக்குப் பின்னர் 40 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்ந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகளாரின் பிறந்த தினத்தையோ, வபாத்தான தினத்தையோ நினைவு தினமாகக் கொண்டாடினார்களா..? அதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை எனும் போது ஆயிஷா (ரழி) அவர்களை விட நபிகளாரை நேசிப்போரா நீங்கள்..?
நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் வபாத்துக்குப் பின் முஸ்லிம்களின் கலீபாவாகத் தெரிவு செய்யப்பட்டவர் அபூ பக்கர் (ரலி) அவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் மீலாத் தினக் கொண்டாட்டத்தை அரச சட்டமாக்கிப் பெறும் விழாவே ஏற்பாடு செய்திருக்க முடியும், ஆனால் அவர்களோ மீலாத் கொண்டாட்டம் என்ற ஒன்றை உருவாக்க வில்லை. காரணம் மார்க்கத்தின் பெயரில் புதுமைகளை உண்டு பண்ணுவது தனது தோழர் ஹபீப் ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கோபத்தை பெற்றுத்தரும் செயலாக அதை உணர்ந்திருந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களை விட நபிகளாரை நேசிப்போரா நீங்கள்..?
அபூபக்கர் (ரலி) அவர்களின் வபாத்துக்குப் பின் முஸ்லிம்களின் அமீராகத் தெரிவு செய்யப்பட்டவர் அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்கள் . நபிகள் நாயகத்தின் குரலை விட யாருடைய குரல் உயர்ந்தாலும் உத்தரவிடுங்கள் யாரஸுலுல்லாஹ் அவனின் தலையைத் துண்டிக்கிறேன் என்று கூறக்கூடியளவு நபிகளாரைத் தன் உயிரை விடவும் நேசித்தவர். அல்லாஹ் உமர் (ரலி) அவர்களின் மனதில் தோன்றிய கருத்துக்களை வஹியாக அருளி அவர்களை சிறப்பித்தான். இத்தனை சிறப்புக்களைக் கொண்ட உமர் (ரழி) அவர்கள் மீலாத் விழாக் கொண்டாடினார்களா..? அவ்வாறான ஒரு காரியத்தை அறிந்திருந்தார்களா…?
உமர் (ரலி) அவர்களை விட நபிகள் நாயகத்தை நேசிப்போரா நாம்..?
இஸ்லாமியர்களின் மூன்றாம் கலீபா உஸ்மான் (ரலி) அவர்களை விட நபிகளாரை நேசிப்போரா நாம்..? நபிகளாரின் அன்பு மகள் பாத்திமா (ரலி) அவர்களின் அன்புக் கணவர் அலி (ரலி) அவர்களை விட முஹம்மத் நபியை நேசிப்போரா நாம்..? இவர்கள் யாருமே மீலாத் கொண்டாட வில்லையே.?
நபித்தோழர்களான முஹாஜிர்களும், அன்ஸாரிகளும், அவர்களுக்குப் பின் வந்தவர்களும் செய்யும் ஈச்சப்பழத் துண்டளவான தர்மம் நாம் செய்யும் கோடி தர்மங்களை விடச் சிறந்தது. அத்தகைய உத்தமர்கள் செய்த காரியத்தை விடச் சிறந்த காரியத்தை நாம் செய்ய முடியுமா..? அந்த நபித்தோழர்களை விட நபிகள் நாயகத்தை எம்மால் கண்ணியப் படுத்திடத்தான் முடியுமா..? நபிகளாரை எப்படி கண்ணியப்படுத்த வேண்டும்..? என்பதை எல்லா வழிமுறைகளிலும் செயல்வடிவில் செய்து காண்பித்த நபித்தோழர்கள் சிந்திக்காத மீலாத் கொண்டாட்டம் தெளிவான வழிகேடே அன்றி வேறில்லை.
⛔ஹவ்லுல் கவ்ஸரில் கண்மணி நாயகம் (ﷺ) அவர்களின் கரங்களால் நீர் புகட்டப்பட வேண்டுமா..?
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.
‘நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6575.
இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்’
(‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6579.
இறைத்தூதர் (ﷺ)
அவர்கள் கூறினார்கள்’
நான் (மறுமை நாளில்) உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அங்கு யாருக்கு வர முடிகிறதோ அவர் அதை அருந்துவார். அதை அருந்துகிறவருக்கு அதன் பிறகு ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள் அவர்களை அறிவேன்; அவர்களும் என்னை அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.
என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை மக்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தபோது நுஃமான் இப்னு அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, ‘நீங்கள் இவ்வாறுதான் ஸஹ்ல் (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்றீர்களா?’ என்று வினவினார்கள். நான், ‘ஆம்’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் இதை அறிவித்ததற்கு நான் சாட்சி. அவர்கள் தங்களின் அறிவிப்பில் அதிகப்படியாக (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்: ‘அவர்கள் என்னைச் சர்ந்தவர்கள் தாம்’ என்று நபியவர்கள் கூறியதற்கு, ‘உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிதாக உண்டாக்கினார்கள் என்று எங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லப்படும். உடனே நான், ‘எனக்குப் பிறகு (தம் மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அப்புறப்படுத்துவானாக!’ என்று சொல்வேன்.
ஸஹீஹ் புகாரி : 7050 7051.
அல்லாஹ்வின் பெயரில், நபி (ﷺ) அவர்களின் பெயரில் யாரெல்லாம் இட்டுக்கட்டி நூதன வணக்க வழிபாடுகளை உருவாக்குகின்றார்களோ அவர்கள் ஒதுங்குமிடம் நரகமாகும்.
_✍️நட்புடன்:
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ
அட்டுலுகம
இலங்கை
1442/10/13