Featured Posts

நயவஞ்சகம் (1)

நிஃபாக் (நயவஞ்சகம்) என்ற அரபு சொல்லுக்கு ஏமாற்றுதல், சதி செய்தல், நன்மைகளை வெளிப்படுத்தி நன்மைக்கு எதிரானவைகளை உள்ளத்திற்குள் மறைத்து வைத்தல் என்று இமாமகள் விளக்கமளித்துள்ளனர்.

ஈமானை (இறை நம்பிக்கையை) நாவினால் வெளிப்படுத்திவிட்டு குஃப்ரை (இறை மறுப்பை) உள்ளத்தில் மறைத்துக் கொள்ளுதல் என்பதாகும்.

இறை நிராகரிப்பாளர்களைப் போன்றே நயவஞ்சகர்களும் சமூகத்தில் எல்லா காலகட்டங்களிலும் இருந்துள்ளனர். செல்வத்தில் செழிப்பாகவும் நாவன்மை மிக்கவர்களாகவும் அவர்கள் இருந்துள்ளதை அல்குர்ஆன் பல இடங்களில் விவரிக்கிறது. இருந்தபோதிலும் அவர்களின் இறுதி முடிவு காஃபிர்களைப் போன்றே நரகமாகும்.

இறை நிராகரிப்பாளர்களையும் அவர்களது செயல்களையும் கண்டித்து அல்லாஹ் வசனங்களை இறக்கியது போலவே நயவஞ்சகர்களைக் கண்டித்தும் அல்லாஹ் தனது நபிக்கு (ஸல்) வஹி அறிவித்தான்.

பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் நாங்கள்தான் சமாதானவாதிகள் என்று கூறுகின்றனர்…, என்று துவங்கும் வசனமும், மற்றமனிதர்கள் (ஸஹாபாக்கள்) ஈமான் கொண்டதுபோலவே நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் மடையர்கள் ஈமான் கொண்டதுபோலவே நாங்களும் ஈமான் கொள்ளவேண்டுமா என்று கூறுகின்றனர். போன்ற ஆயத்துகளெல்லாம் நயவஞ்சகர்களைப் பற்றி பேசுவதாகும்.

அவர்கள் அல்லாஹுவை ஏமாற்ற நினைக்கின்றனர்…, அவர்கள் தொழுகையில் நிற்கும்போது சோம்பேறிகளாகவும், மக்களுக்கு காட்டுபவர்களாகவும் நிற்கின்றனர்… என்ற வசனங்களும் 4:142  நயவஞ்சகர்களைப் பற்றியே அருளப்பட்டது. இன்னும் இவர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள் என்றும் திருமறை குர்ஆன் (4:145) கூறுகின்றது. அவர்களுக்கு ஜனாஸா தொழுகை வைக்கவேண்டாம், அவர்களுக்காக பிரார்த்தனை செய்யவேண்டாம் என்ற அல்குர்ஆன் (9:84) வசனங்களும் நயவஞ்சகர்கள் குறித்தே அல்லாஹ்வின் தூதருக்கு (ஸல்) அருளப்பட்டது!

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அத்தவ்பா” எனும் 9-வது அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள் “தவ்பா அத்தியாயமா? அது நயவஞ்சகர்களை அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தம்மில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் அனைவர் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுவிட்டது என நயவஞ்சகர்கள் எண்ணினார்கள்” என்று கூறினார்கள்.

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்அன்ஃபால்” எனும் (8ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள் “அது பத்ருப்போர் (பற்றிப்பேசும்) அத்தியாயமாகும்” என்றார்கள்.

நான் “அல்ஹஷ்ர்” எனும் (59ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், “அது பனூநளீர் (யூதக்) குலத்தார் குறித்து அருளப் பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்: 5768)

சூரா அல்முனாஃபிகூன், போன்ற அத்தியாயங்களிலும் விவரித்திருக்கின்றான். (நபியே!) நீங்கள் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் கோரா விட்டாலும் இவர்களைப் பொறுத்துச் சமம்தான். அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். பாவிகளான மக்களை அல்லாஹ் ஒரு போதும் நேர்வழியில் செலுத்தமாட்டான் என்று கடும் சொற்களை கொண்ட 63:06 வது வசனங்களும் நயவஞ்சகர்களைப் பற்றியே அருளப்பட்டது. இன்னும் இதுபோன்று ஏராளமான வசனங்கள் நயவஞ்சகர்களை கண்டித்து அல்லாஹ் இறக்கி வைத்துள்ளான்.

(நபியே!) நீங்கள் இவர்களைப் பார்த்தால் இவர்களின் உடல் அமைப்பு உங்களை வியப்பில் ஆழ்த்தும். இவர்கள் பேச ஆரம்பித்தால் நீங்கள் இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருந்து விடுவீர்கள். ஆனால், உண்மையில் இவர்கள் (சுவரில்) சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக் கட்டைகளைப் போன்றவர்கள். இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர்கள் தாம் (கடும்) பகைவர்கள்; இவர்களைக் குறித்து எச்சரிக்கையோடு இருங்கள். அல்லாஹ் இவர்களை நாசமாக்கட்டும்! இவர்கள் எங்கே திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றனர்? (அல்குர்ஆன்:-63:4)

இந்த வசனத்தில் அல்லாஹ் நயவஞ்சகர்களைப் பற்றி கடும் சொற்களால் கண்டித்துவிட்டு  முஃமின்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுகின்றான்:

மதீனாவில் நயவஞ்சகர்கள் மிகவும் பலசாலிகளாகவும், திடகாத்திரமாகவும் இருந்தார்கள். வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு அவர்கள் உடல் அமைப்பைக் கொண்டவர்கள். அவர்கள் பேச்சில் நாவன்மை மிக்கவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் உரையை கேட்டுக்கொண்டே இருக்கும் அளவிற்கு இனிமையான பேச்சு! ஆனால் இவ்வளவு இருந்தும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? அல்லாஹ் இவர்களை மிகவும் அழகான வார்த்தையைக் கொண்டு அடையாளப்படுத்துகிறான். 

كَاَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ 

இவர்கள் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக் கட்டைகளைப் போன்றவர்கள்.

நாம் பல இடங்களில் பார்த்து இருக்கின்றோம், பழைய மரக்கட்டை, பழைய வீட்டில் பிரித்து எடுத்த பயன்படுத்த இயலாத நிலை கதவுகளை வீட்டில் பின்புறம் கொல்லைப் புறம் சுவரில் சாய்த்து வைத்திருப்பார்கள்! அது அடைமழையிலும் நனையும், சித்திரை வெயிலிலும் காயும், கடைசியில் எந்த பயனுமில்லாமல் உளுத்து  இற்றுப்போய்விடும் இவர்கள் எதற்குமே லாயக்கற்றவர்கள் என்பதை சுட்டிக்காட்டவே அல்லாஹ் இந்த உதாரணத்தை குறிப்பிடுகின்றான்.

நயவஞ்சகர்களைப் பொறுத்தவரை கூடவே இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கான சந்தர்ப்பம் வரும்போது அதை நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். நவஞ்சகம் நிறைந்த உள்ளத்தோடு தீய சக்திகள் விரைவாகவே கைகோர்த்துக் கொள்ளும்! மதீனாவில் அல்லாஹுவின் தூதரோடு (ஸல்) இருந்த நயவஞ்சகர்கள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக செயலாற்றுவதற்கு பெரும்பாலும் போர் காலங்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். போரில் கிடைக்கும் கனீமத்து பொருட்களை பங்கீடு செய்யும்போது அவர்களின் கைவரிசையை காட்டினார்கள். உஹதுப்போருக்குப் பிறகுதான் மதீனாவில் இருந்த நயவஞ்சகர்களுக்கு – மக்கத்து இறை நிராகரிப்பாளர்களோடு இருந்த தொடர்பு வலுவடைந்து. யூதர்களும், நயவஞ்சகர்களும் வெளிப்படையாகவே மதீனத்து முஸ்லிமகளை எதிர்க்கத்துவங்கினர். போர்க்காலங்களில் நயவஞ்சகர்கள் செய்யும் குழப்பம்தான் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

இன்ஷாஅல்லாஹ் அடுத்த தொடரில் நயவஞ்சகர்களைப் பற்றிய சில முக்கிய தகவல்களைப் பார்ப்போம்.

oOo

S.A. Sulthan

03-06-1442H

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *