இலங்கை, கிழக்கு மாகாணத்தின் மருதமுனையைச் சேர்ந்த அஷ்ஷைய்க் பாசில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா ஜமாலி அவர்கள். மரபு சார்ந்த ஓர் அரிய ஆளுமை. கொள்கை சார்ந்த சமூக மேம்பாட்டைத் தனது இலட்சியமாகக் கொண்டிருந்தார். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அறிவுத் தளத்தில், அதன் கொள்கை மீள் எழுச்சிக்கு தனது எழுத்தாலும் கற்பித்தல் செயல்பாட்டாலும் பெரும் பங்களிப்பை ஆற்றினார்,
இலங்கை முஸ்லிம் சமூகம் கல்வி, மார்க்கம் போன்ற துறைகளில் முற்போக்கற்ற பொறிமுறைக்குள் சிக்கி இருந்தது. தூய மார்க்கம் சில சடங்குகளுக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. நவீன கல்வியில் ஆர்வமற்றுக் காணப்பட்டது. இந்த மந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாச் செயற்பட்டார்.
ஆசாரமான குடும்பத்தில் பிறந்து, சடங்கு சம்பிரதாய மரபுகள் மலிந்துள்ள சூழலில் வளர்ந்து, புனிதமான இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்று, விளங்கி அதை எளிய முறையில் புரிய வைப்பதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் எளிமைப் பண்பியல் நிறைந்த ஆளுமையாகக் அஷ்ஷைக் பாசில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா ஜமாலி அவர்களைக் காணமுடிந்தது.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஏகத்துவ – மத்ரசாக் கல்வி வளர்ச்சியில் நவீன பொறிமுறையை அறிமுகப்படுத்தி, ஆன்மிகம் – உலகியல் ஆகிய இரு துறைக்குமான இணைந்த வழிகாட்டலுக்குரிய ஆழமான பதிவுகளை விட்டுச் சென்றவர்களில், அஷ்ஷைய்க் பாசில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா ஜமாலி அவர்களுக்கு முக்கிய பங்குள்ளது.
பல நூல்களை எழுதியதோடு, மொழிபெயர்த்துமுள்ள அவர் சஞ்சிகை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு அல்குர்ஆனை தமிழில் மொழிபெயர்த்த குழுவில் அங்கம் வகித்தார்.
கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதோடு, எழுதுவது, படிப்பது, வாசிப்பது கற்பித்தலுக்கான குறிப்புகளைத் தயார் பண்ணுவது போன்ற பல்வேறு அம்சங்களில் இவர் தன்னுடைய நேரத்தை முகாமைத்துவப்படுத்திச் செயற்பட்டார்.
பள்ளியில் தொழுவிக்கவும் ஜூம்ஆ உரை நிகழ்த்தவும் மட்டும்தான் ஆலிம்களால் முடியும் என்ற அன்றைய சமூகத்தின் மந்த நிலையை மாற்றி, ஏகத்துவ ஆலிம்களால் உலகக் கல்வியையும் கற்று, இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்று, பல்கலைக்கழகம் சென்று, ஆலிமாகவே உயர் பதவிகளை வகிக்க முடியும் என்ற சிந்தனையை மதுரசாக் கல்வியில் புகுத்தி, ஸலபிய்யாக் கலாபீடத்தை ஓர் உயர் நிலைக்குக் கொண்டுவந்தவர்களில் இவரின் வகிபாகம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. அத்தகைய ஒரு பன்முக ஆளுமையின் ஆன்மிக செழுமை நிறைந்த, ஆடம்பரமற்ற, எளிமைத் தன்மை நிறைந்த வாழ்வையும் தஃவாப் பணியையும் இவ்வாக்கத்தில் சுருக்கமாக முன்வைக்கின்றேன்.