இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
ஒரு சுருக்கமான பார்வை
அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A)
Part -1
இலங்கை வணிகச் செயற்பாட்டிற்கு தொன்மைக் காலத்திலிருந்தே புகழ்பெற்றிருந்தது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே உலக வியாபாரிகளாக இருந்தவர்களும் கடலில் ஆதிக்கம் உள்ளவர்களும் இங்கு வர்த்தகர்களாக வருகை தந்தனர். அவர்களில் கிரேக்கர்களும் அரபியர்களும் பாரசீகர்களும் மிக முக்கியமானவர்கள். கிறிஸ்துவுக்குப் பின் 4ம் நூற்றாண்டு தொடக்கம் 7ம் நூற்றாண்டு வரைக்கும் இடைப்பட்ட காலப் பிரிவில் இலங்கைத் தீவானது பாரசீகம், எதியோப்பியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வணிகர்கள் ஒன்று கூடும் ஒரு முக்கிய மத்திய வணிகத் தலமாக விளங்கியது என பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
இந்தியாவிற்கு வந்த பன்னாட்டு வணிகர்கள் இலங்கைக்கும் வருகை தந்தனர். ரோமர், பாரசீகர், அபீசீனியர், அரேபியர் ஆகியோர் இந்து சமுத்திர வணிகத்தில் முக்கிய இடம் வகித்தனர் என்று பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தவகையில் அரபு தேசத்துடனான தொன்மையான தொடர்பைக் கொண்டிருந்த இலங்கைக்கு கி.பி 7ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய மார்க்கமும் அறிமுகமானது. ஆரம்பகால வரலாற்றை நோக்கும் போது, இலங்கையில் அல்குர்ஆன் – ஹதீஸ் என்ற இரண்டு மூலாதாரங்களின் அடிப்படையிலான தூய இஸ்லாம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்பற்றப்பட்டுவந்துள்ளது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.
உலகில் அமைதியான பூமியாக இலங்கைக்கு அப்போது வருகைதந்த வணிகர்களால் நோக்கப்பட்டுள்ளது. அரபு நாட்டில் ஏற்பட்ட சில அரசியல் பிரச்சினைகள் காரணமாக, அரபு முஸ்லிம்கள் சிலர் அமைதியான இப்பூமியில் வாழ்வதற்காக அபயம் தேடி வந்துள்ளனர். 7ஆம் 8ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களின் குடியேற்றம் பற்றிய வரலாற்று தகவல்கள் ஆவண ரீதியாகப் பதிவை பெற்றுள்ளதோடு, அது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவும் உள்ளது. மக்காவில் இஸ்லாம் அறிமுகமான போது, அங்கு வாழ்ந்தவர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். அந்தவகையில், எட்டாம் நூற்றாண்டிலேயே குடியேற்றம் இருந்தது என்பதை இலங்கை வரலாற்று ஆய்வாளர்களும், ஐரோப்பிய கிறிஸ்தவ வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
15ம் நூற்றாண்டின் பின்னர் முஸ்லிம்களின் தொடர்பு தென்னிந்தியாவை நோக்கி திரும்பியிருந்தது. அரபுலகத் தொடர்புகள் மெல்ல செல்வாக்கிழந்து சென்றன. தென்னிந்திய முஸ்லிம்களின் மட்டுப்படுத்தப்பட்ட கலாசார, சமய அறிவுடனும் பழைமைவாதத்துடனும் இலங்கை முஸ்லிம்களின் வெளியுலகத் தொடர்புகள் சுருங்கிச் சென்றன. இலங்கை முஸ்லிம்கள் 19ஆம் நூற்றாண்டு முடியும் கட்டத்தில் கூட, சூபித்துவ விவாதங்களிலும் இஸ்லாம் அங்கீகரிக்காத விடயங்களிலும் தமது காலத்தைச் செலவிட்டனர். தங்களுக்குத் தெரிந்திருந்த சமய அறிவிற்கும் அணுகுமுறைகளுக்கும் அப்பால் எதையும் அனுமதிப்பதற்கு மறுத்தவர்களாகவே பலர் இருந்தனர்.
பரந்து விரிந்து காணப்பட்ட இஸ்லாமிய உலகில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் காரணமாக பல்வேறு சிந்தனைகள் இஸ்லாத்தின் பெயரால் உட்புகுத்தப்பட்டன. எனினும், உண்மையான இஸ்லாத்திற்கு எத்தகைய மாசும் ஏற்படாமல் அது இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது.
எனினும், அவ்வப்போது இஸ்லாத்தின் பெயரால் தோற்றம் பெற்ற தவறான சிந்தனைகள், பன்னாட்டு வர்த்தக மையமாகக் காணப்பட்ட இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்களிடமும் தாக்கம் செலுத்தியது. அந்த வகையில் இலங்கையில் மத்ஹபுகள், தரீக்காக்கள் அஹமதிய்யா, ஷீஆ சிந்தனைகள் போன்றன தாக்கம் செலுத்தின.
இலங்கை வரலாற்றை நோக்கும் போது, இங்குள்ள முஸ்லிம்களின் பண்பாடு, நாகரிகம், மார்க்க விடயங்கள், இயக்கச் செயற்பாடுகள் என்பவற்றின் பின்னணியைப் புரிந்த கொள்வதற்கு அவர்களின் வரலாறு பற்றி அறிந்துகொள்வது துணைபுரியும் என்பதால் அவர்களின் வரலாறு சுருக்கமாக இவ்வாக்கத்தில் முன்வைக்கப்படுகிறது.
.
கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.