உலகில் சமாதானமும் சமத்துவமும் மலர இஸ்லாம் அருமையான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் – ஒரு தந்தையின் பிள்ளைகள் என்று ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ நெறியை இஸ்லாம் மிக அழுத்தமாகப் போதித்து, இன ஒற்றுமையையும் மனித சமத்துவத்தையும் ஏற்படுத்துகிறது.
நபி (ஸல்) அவர்களின் போதனைகள் பிரதானமாக மறுமை விமோசனத்தை மையப்படுத்தி இருந்தது. ஆனால், உலகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைக்கும் அவர்கள் தீர்க்கமான தீர்வுகளை முன்வைத்தார்கள்.
‘இஸ்லாம் தனித்துவமாக விளங்குவதற்குக் காரணம் அது மட்டுமே தன்னை அண்டியவர்களுக்கு இந்த மண்ணிலேயே நிறைவேற்றத் தக்க ஒரு சமூகத் திட்டத்தை முன்வைக்கிறது. இஸ்லாம் மறுமையைப் பற்றியும் இறுதித் தீர்ப்புப் பற்றியும் பேசினாலும். அது இந்த உலகத்திலேயே சமத்துவமும் நீதியும் நிறைந்த ஒரு சமூகத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை வைத்து இயங்குகிறது. வருணத்தையும் சாதியையும் தீண்டாமையையும் ஒப்பீட்டளவில் வென்ற ஒரே மார்க்கமாக இஸ்லாம் மட்டுமே உள்ளது.
உலகில் சமத்துவத்தை போதித்து. அதை ஏற்படுத்திக் காண்பித்த ஒரே தலைவராக நபி (ஸல்) அவர்கள் திகழ்கின்றார்கள். வரலாற்று நாயகர்கள் குறித்து நடுநிலையோடும், காய்தல் உவத்தலின்றியும் யார் ஆய்வு செய்தாலும், எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அவரால், செங்கோல் ஆட்சியூடாக கர்வமற்ற எளிமையான வாழ்க்கை மூலம் மனித நேயத்தைப் போதித்து, சமூக நல்லிணக்கத்தை போஷித்து, சமூக நிர்மாணத்தை மேற்கொண்ட நபி (ஸல்) அவர்களுக்குத்தான் முதலிடத்தை வழங்க முடியும் என்பது வரலாறு நெடுகிலும் நிரூபணமாகியுள்ளது.
நபி (ஸல்) தனது ஆரம்ப நாட்களிலும் அதிகார பலம் வந்த நாட்களிலும் அனைத்து மக்களுடன் மிகவும் பணிவாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார்கள். அவர்களது வாழ்வில் உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரி உள்ளது. அந்த முன்மாதிரிகளின் பக்கம் கவனம் திரும்பினால், உலகில் அமைதியும் சமாதானமும் சகவாழ்வும் நிலவும் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடியும் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.