
ஆக்கம்: சகோ. குளச்சல் நூர் முஹம்மத்
ஜிஹாத் என்ற வார்த்தையைக் கேட்டால் செவிப்பறையைக் கிழிக்கும் வெடிகுண்டுகளின் ஓசையும், தகர்ந்து விழும் கட்டிடங்களும் அவற்றிலிருந்து உயரும் தூளிப்படலமும், உடலிலிருந்து உருவப்படும் கூர்மையான கத்தியும் அதிலிருந்து வழிந்தோடும் இரத்தமும், அடுக்கடுக்கான உயிரற்ற சடலங்களும் அங்கிருந்து எழும் ஓலக்குரலும்தான் மனதில் கற்பனையாக விரியும் என்று கூறுமளவிற்கு, நிந்திக்கப்படும் ஒரு வார்த்தையாக ஜிஹாத் மாறியிருக்கின்றது.
பெரும்பாலான ஆங்கில அகராதிகள் ஜிஹாத் என்ற பதத்திற்கு “இஸ்லாத்திற்காக மார்க்கக் கடமை என்று எண்ணித் தொடுக்கப்படும் புனிதப் போர்” என்ற பொருளை வழங்குவதைப் பார்க்கிறோம். ஊடகங்களும் அகராதிகளும் பல்வேறு அரசுகளும் ஆதிக்க சக்திகளும் ஜிஹாத் என்ற பதத்திற்குத் தவறான பொருளைத் தருகின்றன. ஆனால் இதில் மிகவும் வியப்பிற்குரிய விஷயம், ஜிஹாத் என்ற பதத்தை மிகவும் தவறாகப் புரிந்து கொண்டவர்களில் முஸ்லிம்களும் இருக்கின்றனர் என்பதுதான்.
ஜிஹாத் – சொல்லின் பொருள்
ஜிஹாத் என்ற வார்த்தை அரபு மொழியின் ‘ஜுஹ்த்’ (جهد) என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்குக் கடுமையாக முயற்சி செய்தல், விடாமுயற்சி என்று பொருள் கொள்ளலாம். போருக்கு அரபு மொழியில் ‘ஹர்ப்’ என்றும் ‘கிதால்’ என்றும் கூறுவார்கள். புனிதப் போரை அரபு மொழியில் ‘அல்-ஹர்புல் முகத்தஸா’ (الحرب المقدسة) என்று கூறலாம். ஆனால் ஜிஹாத் என்ற பதத்திற்குப் புனிதப் போர் என்ற பொருளை அரபு மொழி அகராதிகளில் நம்மால் பார்க்க இயலாது.
திருக்குர்ஆனில் 41 இடங்களில் ஜிஹாத் அல்லது அதன் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்யும்போது, ஜிஹாத் என்பது பரந்த பொருள் தரக்கூடிய ஒரு பதம் என்பது புலனாகும். அதன் பொருளில் போரும் உட்படுமே தவிர, இந்தப் பதத்தைப் ‘புனிதப் போர்’ என்ற ஒரே விளக்கத்திற்குள் அடக்க இயலாது என்பதை நாம் விளங்க வேண்டும். திருக்குர்ஆனில் போருக்காக அதிகம் பயன்படுத்தப்படும் பதம் ‘கிதால்’ என்பதாகும்.
பெற்றோர் வற்புறுத்துவதும் ‘ஜிஹாத்’ எனக் குறிப்பிடப்படுகிறது
திருக்குர்ஆனின் 29ஆம் அத்தியாயம் 8ஆவது வசனம் இவ்வாறு கூறுகின்றது:
தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்ப்படிய வேண்டாம்…
திருக்குர்ஆன் 29:8
இங்கு முஸ்லிமல்லாத பெற்றோர், முஸ்லிமாக இருக்கும் தமது மகனைத் தங்கள் மதத்திற்குத் திரும்புமாறு வற்புறுத்துவதை அல்லாஹ் ‘ஜிஹாத்’ (ஜாஹதாக – جاهداك) என்று குறிப்பிடுவதை நாம் பார்க்கலாம்.
பொருளால் செய்யும் ஜிஹாத்
உடலால் மட்டுமல்லாமல் பொருளாலும் ஜிஹாத் செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆன் 49:15ஆவது வசனம் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகின்றது:
நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் – இத்தகையவர்கள்தாம் உண்மையாளர்கள்.
திருக்குர்ஆன் 49:15
இதன் காரணமாகத்தான் பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டால் முஸ்லிம்கள் தமது செல்வத்தை ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் செலவு செய்து நிவாரணப் பணிகளில் முன்னோடிகளாக இணைகின்றனர். அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செல்வத்தைச் செலவு செய்வதை முஸ்லிம்கள் ஜிஹாதாகக் காண்கின்றனர்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கம்
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக ஜிஹாத் செய்ய வேண்டிய முறைப்படி ஜிஹாத் செய்யுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்…
திருக்குர்ஆன் 22:78
அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்ய வேண்டிய முறைப்படி ஜிஹாத் செய்யுங்கள் என்று அறிவுறுத்தும் இந்த வசனம், “இதுதான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமின் மார்க்கம்” என்று கூறுவதைப் பார்க்கலாம். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் வாளேந்தி எந்தப் போரிலும் ஈடுபடவில்லை. அல்லாஹ்வைப் பற்றிய தவறான நம்பிக்கைகளைக் கொண்டிருந்த அக்காலச் சமூகத்திற்கு அல்லாஹ்வின் ஏகத்துவத்தைப் புரிய வைக்கத் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்கள். மேலும், அவ்வாறு ஏகத்துவப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்போது சந்தித்த அனைத்து இன்னல்களையும் பொறுத்துக் கொண்டார்கள் என்பதை நம்மால் பார்க்க முடியும்.
குர்ஆனைக் கொண்டு ஜிஹாத் செய்யுங்கள்
ஆகவே, (நபியே!) நீர் இந்தக் காஃபிர்களுக்கு வழிபடாதீர்; இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக.
திருக்குர்ஆன் 25:52
இங்கு அல்லாஹ் திருக்குர்ஆனின் மூலம் ஜிஹாத் செய்யச் சொல்கிறான். திருக்குர்ஆன் கூர்மையான ஆயுதமல்ல; அதைக் கொண்டு யாருடைய உடலையும் நம்மால் தாக்க இயலாது. ஆனால், திருக்குர்ஆன் மனிதர்களின் இதயத்தைக் கூர்மையாகத் தாக்கி அவர்களுக்கு உண்மையை உணர வைக்கும் ஆயுதம். இந்த ஆயுதம்தான் உமர் (ரலி) அவர்களை முஸ்லிமாக மாற்றியது; இணைவைப்பின் ஆழத்தில் மூழ்கியிருந்த பல மனிதர்களையும் நேர்வழிப்படுத்தியது. இந்த வசனத்தில் அல்லாஹ், திருக்குர்ஆனை முன்னிறுத்தி மக்களிடையே செய்யப்படும் ஏகத்துவப் பிரச்சாரத்தைத்தான் ஜிஹாத் என்று குறிப்பிடுகின்றான்.
ஜிஹாதின் பிரிவுகள்
கி.பி. 1292 முதல் 1350 வரை வாழ்ந்த சிறப்புக்குரிய இமாம்களில் ஒருவரான இமாம் இப்னுல் கய்யிம் அல்-ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்கள் ஜிஹாதை நான்காக வகைப்படுத்துகிறார்கள்:
- ஜிஹாதுந் நஃப்ஸ் – மனஇச்சைக்கு எதிரான ஜிஹாத் (جهاد النفس)
- ஜிஹாதுஷ் ஷைத்தான் – ஷைத்தானுக்கு எதிரான ஜிஹாத் (جهاد الشيطان)
- ஜிஹாதுல் குஃப்ஃபார் வல் முனாஃபிகீன் – இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களுக்கு எதிரான ஜிஹாத் (جهاد الكفار والمنافقين)
- ஜிஹாது அர்பாபிழ் ழுல்மி வல் பிதஇ வல் முன்கராத் – அநீதி, பித்அத் மற்றும் தீமைகள் புரிவோருக்கு எதிரான ஜிஹாத் (جهاد أرباب الظلم والبدع والمنكرات)
1. ஜிஹாதுந் நஃப்ஸ் (மனஇச்சைக்கு எதிரான ஜிஹாத்)
ஒருவர் தமது ஜிஹாதைச் சுய ஆத்மாவிலிருந்துதான் (நஃப்ஸ்) ஆரம்பிக்கின்றார். தமது ஆசைகள், இச்சைகள் எனும் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று, அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களைப் பின்பற்றி வாழ்வதற்காகச் செய்யப்படும் ஜிஹாத்தான் ஜிஹாதுந் நஃப்ஸ் ஆகும். இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் இதனை நான்காகப் பிரிக்கிறார்கள்:
- இறை மார்க்கத்தின் உண்மையான வழிகாட்டுதலை அறிந்து கொள்ளும் கல்வியை அடைவதற்கான முயற்சி.
- அவ்வாறு முயன்று பெற்ற கல்வியை வாழ்வில் நடைமுறைப்படுத்தும் முயற்சி.
- தான் கற்று, பின்பற்றுகின்ற அந்தக் கல்வியின்பால் மக்களை அழைக்கும் முயற்சி.
- அவ்வாறு அழைக்கும்போது ஏற்படுகின்ற இன்னல்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வது.
“சுய வாழ்வில் தமது ஆசைகள் மற்றும் இச்சைகளுக்கு எதிராக ஜிஹாத் செய்ய இயலாதவர்களால், ஒருபோதும் இறைநிராகரிப்பாளர்களுக்கு எதிரான ஜிஹாத் செய்யவோ அதற்காகப் புறப்படவோ இயலாது” என்று இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாக இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
2. ஜிஹாதுஷ் ஷைத்தான் (ஷைத்தானுக்கு எதிரான ஜிஹாத்)
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் இவ்வகை ஜிஹாதை மேலும் இரண்டாகப் பிரிக்கிறார்கள்:
- ஷைத்தான் இறைநம்பிக்கைக்கு எதிராக ஏற்படுத்துகின்ற சந்தேகங்களுக்கு எதிராக ஜிஹாத் செய்வது.
- ஷைத்தான் ஏற்படுத்தும் சபலங்கள் மற்றும் இச்சைகளுக்கு எதிராக ஜிஹாத் செய்வது.
3. ஜிஹாதுல் குஃப்ஃபார் வல் முனாஃபிகீன்
இவ்வகை ஜிஹாத் நான்கு வழிகளில் செய்யப்படும்:
- இதயத்தால்
- நாவால்
- செல்வத்தால்
- உடலால்
இறைநிராகரிப்பாளர்களுக்கு எதிரான ஜிஹாத் கரங்கள் மூலமும், நயவஞ்சகர்களுக்கு எதிரான ஜிஹாத் நாவு மூலமும் செய்யப்படும் என்று இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
4. ஜிஹாது அர்பாபிழ் ழுல்மி வல் பிதஇ வல் முன்கராத்
அநீதி, அனாச்சாரம் (பித்அத்) மற்றும் தீய செயல்களுக்கு எதிரான இந்த ஜிஹாத் மூன்று படிநிலைகளில் செய்யப்படும்:
- முதலாவதாக – கரத்தால்
- இரண்டாவதாக – நாவால்
- மூன்றாவதாக – இதயத்தால்
மக்கா வாழ்வில் நபி (ஸல்) அவர்களின் ஜிஹாத்
நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து வகை ஜிஹாதுகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மக்கா வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினார்கள். மக்காவில் நயவஞ்சகர்கள் இல்லாத காரணத்தினால் மட்டும் அவர்களுக்கு எதிரான ஜிஹாதில் ஈடுபடவில்லை.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் குர்ஆனைக் கொண்டு ஜிஹாத் செய்தார்கள். அது மக்காவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்டு மக்காவின் இறைநிராகரிப்பாளர்கள் நடுங்கினார்கள்; இந்தப் பிரச்சாரத்திற்கு எதிராக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள். அந்த அடக்குமுறைகளைக் கண்டு முஸ்லிம்கள் அஞ்சவில்லை. “அகிலங்களைப் படைத்தவன் அல்லாஹ்; அவன் ஏகன்; அவனுக்கு இணை துணை இல்லை” என்ற மாசற்ற தவ்ஹீதின் பிரச்சாரப் பேரொலி தடைகளைத் தகர்த்து முன்னேறியது.
நிராகரிப்பாளர்கள் அடுத்த கட்ட முயற்சிகளை மேற்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு அரணாக நின்ற அபூதாலிபைச் சந்தித்து, “பிரச்சாரத்திலிருந்து பின்வாங்குமாறு முஹம்மதை வலியுறுத்துங்கள்; அல்லது உங்கள் பாதுகாப்பிலிருந்து அவரை விடுவியுங்கள்” என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள். ஒரு கட்டத்தில் அபூதாலிப் இந்தக் கருத்துக்களை முஹம்மத் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தபோது, சூரியனையும் சந்திரனையும் கையில் வைத்தாலும் இந்த ஏகத்துவப் பிரச்சாரத்திலிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களைத் தடுக்க இயலாது என்பதை உணர்ந்து கொண்டார்.
அடுத்த கட்டமாக, முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய நிராகரிப்பாளர்கள் திட்டம் தீட்டினார்கள். அதற்கு எதிராகப் பனூ ஹாஷிம் வம்சத்தினர் ஒன்றிணைந்து, முஹம்மத் (ஸல்) அவர்களைப் பாதுகாப்போம் என்று அரண் அமைத்தார்கள். அதன் காரணமாக, முஹம்மத் (ஸல்) அவர்களுடன் முஸ்லிம்களும் பனூ ஹாஷிம் வம்சத்தினரும் அபூதாலிப் பள்ளத்தாக்கில் ஊர் விலக்கு செய்யப்பட்டார்கள். நீண்ட மூன்று ஆண்டுகள் உண்ண உணவு மறுக்கப்பட்டது; பருக நீர் தடுக்கப்பட்டது. ஒட்டகத்தின் தோல்களைச் சுட்டு உண்ணும் நிலையும், பச்சிலைகளை உண்ணும் நிலையும் ஏற்பட்டது. ஆனாலும் முஸ்லிம்கள் சோர்ந்து விடவில்லை. ஊர் விலக்கப்பட்ட நிலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வெளியூர்களிலிருந்து மக்காவிற்கு வரும் மக்களிடம் இந்தச் செய்தியைத் தொடர்ந்து எடுத்து வைத்தார்கள்.
தாயிஃப் பயணம்
பின்னர் ஆறுதலையும் பாதுகாப்பையும் தேடி நபி (ஸல்) அவர்கள் தாயிஃபை நோக்கிப் பயணமானார்கள். எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக அங்குள்ளவர்கள் நபிகளாரை ஏளனம் செய்தார்கள். சிறுபிள்ளைகளை ஏவி, தெருக்களில் கற்களால் எறிந்து, மாசற்ற மாணிக்கம் நபி (ஸல்) அவர்களைத் துரத்தினார்கள்.
உத்பாவின் தோட்டத்தில் அபயம் பெற்ற நபிகளாருக்குத் திராட்சைப் பழமும் நீரும் கொண்டு வந்த கிறித்தவப் பணியாளர் அத்தாஸின் உதவியைப் பெற்றபோதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருக்கவில்லை; அத்தாஸிற்கு இஸ்லாத்தை அழகிய முறையில் எடுத்துரைத்தார்கள்.
மனிதகுல மாணிக்கத்தைத் துன்புறுத்திய தாயிஃப் வாசிகளின் கொடுஞ்செயல் வானத்தின் வாசலைத் திறந்தது. தாயிஃப் வாசிகளை இரு மலைகளுக்கிடையில் நசுக்குவதற்கு அனுமதி கேட்டு வானவர்கள் அல்லாஹ்வின் தூதரைச் சந்தித்தார்கள். கருணையின் வடிவமான நபிகளார், “வேண்டாம்; அவர்களை விட்டு விடுங்கள். அவர்களின் சந்ததியினராவது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் ஆசைப்படுகிறேன்” என்று கூறி அவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றினார்கள்.
மதீனா – போருக்கான அனுமதி
இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அங்கு ஓர் இஸ்லாமிய அரசு உருவானது. மக்காவைத் துறந்த பின்னரும் முஸ்லிம்களை நிம்மதியாக வாழவிட மக்காவின் நிராகரிப்பாளர்கள் தயாராக இல்லை. “முஹம்மதை வெளியேற்றாவிட்டால் உங்களுடன் போர் செய்து, உங்களில் ஆண்களைக் கொன்று பெண்களை அடிமைகளாக்குவோம்” என்று மதீனாவாசிகளுக்குப் போர் எச்சரிக்கை விடப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் போரை அனுமதிக்கும் திருக்குர்ஆனின் முதல் வசனம் இறங்கியது:
போர் தொடுக்கப்பட்டோருக்கு – அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் – (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.
திருக்குர்ஆன் 22:39
அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறிய குற்றத்திற்காக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்குத் தற்காப்பு என்ற அடிப்படையில் போர் செய்யும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த வசனம் இறங்கிய பின்னரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எல்லா நிராகரிப்பாளர்களுடனும் போர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. தங்களோடு போரில் ஈடுபட்ட, தங்களை ஊரிலிருந்து துரத்திய எதிரிகளோடு மட்டுமே போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் சந்தித்த மூன்று பிரிவினர்
மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி உருவான பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விதமான பிரிவினரைச் சந்தித்தார்கள்:
- அஹ்லுஸ் ஸுல்ஹ் – முஸ்லிம்களுடன் ஒப்பந்தத்தில் இருந்தவர்கள். இவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் போர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
- அஹ்லுத் திம்மா – இஸ்லாமிய அரசுக்கு வரி செலுத்தி வாழ்ந்தவர்கள். இவர்களுடனும் நபி (ஸல்) அவர்கள் போர் நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
- அஹ்லுல் ஹர்ப் – இஸ்லாத்திற்கு எதிராகச் சதி செய்து, போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இவர்களுடன் மட்டும்தான் நபி (ஸல்) அவர்கள் போர் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.
போருக்கான வரம்புகள்
திருக்குர்ஆனில் ஜிஹாது தொடர்பான வசனங்களை நாம் பார்க்கும்போது, அவற்றில் சில காரணங்களையும் கட்டுப்பாடுகளையும் வரம்புகளையும் அல்லாஹ் வலியுறுத்துவதை நம்மால் பார்க்க இயலும். குறிப்பாக 22:40ஆவது வசனத்தில், போரை அனுமதிப்பதற்கான காரணமாக “இவர்கள் நியாயமின்றித் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்” என்று அல்லாஹ் கூறுவதைப் பார்க்கலாம்.
உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
திருக்குர்ஆன் 2:190
மேலே குறிப்பிட்ட 2:190ஆவது வசனம், “போர் புரிபவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்” என்று கூறுவதைப் பார்க்கிறோம். ‘வரம்பு மீறுதல்’ என்பது பின்வருவனவற்றைக் குறிக்கும் என்று ஹஸனுல் பஸரீ (ரஹ்), இப்னு அப்பாஸ் (ரலி), உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) ஆகியோர் கூறுகிறார்கள்:
- இறந்தவர்களின் உடல்களைச் சேதப்படுத்துவது
- திருடுவது
- குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், துறவிகளைக் கொல்வது
- விலங்குகளைக் கொல்வது
- மரங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் சேதப்படுத்துவது
திருக்குர்ஆனை ஆய்வு செய்பவர்களுக்கு, இந்த வேதம் மனித உயிர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மிகத் தெளிவாக விளங்க இயலும். நிரபராதிகளின் உயிர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வேதமாகத் திருக்குர்ஆன் இருக்கின்றது.
ஆயத்துஸ் ஸைஃப் (வாளின் வசனம்)
ஸூரத்துத் தவ்பாவின் 5ஆவது வசனம் ‘ஆயத்துஸ் ஸைஃப்’ (வாளின் வசனம்) என்று அழைக்கப்படுகின்றது. இஸ்லாத்தின் எதிரிகள் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி, இஸ்லாம் இறைநிராகரிப்பாளர்களை வாளுக்கு இரையாக்கச் சொல்கிறது என்று கூறுகின்றனர். மறுபுறம், இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் தீவிரவாதத்தைப் போதிப்பவர்களும் இதே வசனத்தை மேற்கோள் காட்டி, “இறைநிராகரிப்பாளர்கள் அனைவரின் இரத்தமும் முஸ்லிம்களுக்கு ஹலால்” என்ற வழிகெட்ட கொள்கையைப் பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம்.
சங்கைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள்; அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்; ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனந்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து, (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால், அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
திருக்குர்ஆன் 9:5
இந்த வசனத்தை விமர்சனம் செய்பவர்கள், இதனை மேற்கோள் காட்டும்போது இதற்கு முந்தைய மற்றும் பிந்தைய வசனங்களைத் தங்களுக்கு வசதியாக மறைத்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம். இந்தியத் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கும் இந்துத்துவவாதிகளின் நிலைப்பாடு இது என்றால், மக்களைத் தனிமையில் அணுகி, தங்கள் தீவிரவாதக் கொள்கைக்கு ஏற்ப அவர்களை மூளைச்சலவை செய்ய முயற்சிக்கும் ‘ஜிஹாத் வியாபாரிகளின்’ நிலையும் இதுதான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த வசனம் இறங்கிய பின்னணி
இந்த வசனம் எந்தச் சந்தர்ப்பத்தில் இறங்கியது? ஏன் இந்த வசனம் கடுமையான செய்திகளைக் கூறுகின்றது? என்பதை நாம் விளங்க வேண்டுமென்றால், இந்த வசனம் இறங்கிய காலகட்டத்தையும் அதோடு தொடர்புடைய வரலாற்றுச் செய்திகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஹுதைபிய்யா உடன்படிக்கை
ஹுதைபிய்யா உடன்படிக்கை இஸ்லாமிய வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த உடன்படிக்கையை முக்கிய ஸஹாபாக்கள் கூடத் தோல்வியாக எண்ணியபோது, அல்லாஹ் இதைத் “தெளிவான வெற்றி” என்று 48ஆவது அத்தியாயத்தின் முதல் வசனத்தில் பிரகடனப்படுத்தினான். பத்து ஆண்டுகளுக்கான போர் நிறுத்த உடன்படிக்கை, இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரத்தில் முஸ்லிம்களுக்குப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
இறைநிராகரிப்பாளர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்று ஒப்பந்தங்களை மீறுவது. ஹுதைபிய்யா ஒப்பந்தத்தை மக்காவின் இறைநிராகரிப்பாளர்கள் மீறத் தொடங்கினார்கள். இதற்கு எதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர் நடவடிக்கையைத் தொடங்கினார்கள்.
மக்கா வெற்றியும் பொது மன்னிப்பும்
ஒரு காலகட்டத்தில் மக்காவிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள், வெற்றி வீரர்களாக மக்காவின் தெருக்களில் பிரவேசித்தார்கள். ஸஹாபாக்களின் மனங்களில், உயிர்நீத்த யாஸிர் (ரலி) குடும்பத்தினர், ஹம்ஸா (ரலி) ஆகியோரின் நினைவுகள் கடலில் எழும் அலைகளைப் போன்று திரும்பத் திரும்ப வந்திருக்கலாம். துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகள், இழந்த செல்வங்கள், ஏற்பட்ட அவமானங்கள் எல்லாம் அலைமோதியிருக்கலாம்.
ஒரு சில ஸஹாபாக்கள் “இன்றைய தினம் பழிவாங்கும் நாள்” என்று பகிரங்கப்படுத்தி முன்னேறிச் சென்றபோது, கருணையின் வடிவான இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உலக வரலாற்றில் ஒப்பற்ற முன்னுதாரணமாக மக்காவாசிகளுக்கு மகத்தான பொது மன்னிப்பைப் பிரகடனம் செய்தார்கள். இதனால், பழிக்குப் பழி வாங்கப்படுவோம் என்று எண்ணித் தமது விதியை எதிர்பார்த்திருந்த மக்காவாசிகள் அலை அலையாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
இஸ்லாத்தை ஏற்காதவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பங்காளிகளாக இருந்து, எவ்வித ஒப்பந்த மீறலிலும் ஈடுபடாத கூட்டத்தார்களின் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அவர்களுடனான ஒப்பந்தம் தொடர்ந்தது.
ஒப்பந்தத்தை மீறியவர்களுக்கு நான்கு மாத அவகாசம்
இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போர் நடவடிக்கைக்காகச் சென்றிருந்த காலகட்டத்தில், மக்காவின் இறைநிராகரிப்பாளர்கள் தமது சுயரூபத்தை வெளிக்காட்டத் தொடங்கினார்கள்; முஸ்லிம்களுக்கு எதிராகப் பல்வேறு சதித்திட்டங்களில் ஈடுபட்டனர். ஒப்பந்தத்தில் இருந்து கொண்டே இஸ்லாமிய அரசுக்கு எதிராகச் சதிச்செயலில் ஈடுபட்ட இந்தப் பாவிகளுடனான ஒப்பந்தத்திலிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர் என்று ஸூரத்துத் தவ்பாவின் முதல் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
ஓர் அரசுக்கு எதிராகச் சதிச்செயல்களில் ஈடுபடுவது இராஜதுரோகக் குற்றமாகப் பார்க்கப்படுகின்றது. இந்தக் குற்றத்திற்கு உலகின் பல நாடுகள் மரண தண்டனையையே வழங்குகின்றன. ஒப்பந்தத்தை மீறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கவும் அரசுகளுக்கு அதிகாரம் இருக்கும் நிலையிலும், இக்குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு அல்லாஹ் நான்கு மாத அவகாசத்தை வழங்குகின்றான். இந்தக் காலத்திற்குள் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டால், மக்காவில் தொடர்ந்து வசிக்கலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டது. நான்கு மாத காலத்திற்குப் பின்னரும் இவர்கள் மக்காவில் வசித்தால், இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று ஸூரத்துத் தவ்பாவின் ஐந்தாவது வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.
முந்தைய, பிந்தைய வசனங்கள் கூறுவது என்ன?
இதற்கு முந்தைய நான்காவது வசனத்தில், யார் ஒப்பந்தத்தை மீறவில்லையோ அவர்களுடனான ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுங்கள் என்று முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுவதன் மூலம், ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுவதன் அவசியத்தையும் அல்லாஹ் கற்றுத்தருவதை நாம் பார்க்கிறோம்.
மேலும், இந்தப் பாவிகளில் யாராவது உங்களிடம் புகலிடம் தேடி வந்தால், அவர்கள் திருக்குர்ஆனைக் கேட்கும் வரை அவர்களுக்குப் புகலிடம் வழங்குங்கள்; அதற்குப் பின்னர் அவர்களைப் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அனுப்பி வையுங்கள் என்று ஸூரத்துத் தவ்பாவின் 6ஆவது வசனத்தில் கட்டளையிடுவதன் மூலம், மனித உயிர்களுக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவத்தைத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துவதை நாம் பார்க்கிறோம்.
ஆக, ஆயத்துஸ் ஸைஃப் முஸ்லிமல்லாதவர்களைக் கண்ட இடத்தில் கொல்வதற்காக இறக்கப்பட்ட வசனமல்ல; மாறாக, இஸ்லாமிய மார்க்கம் மனித உயிர்களை எந்த அளவிற்கு மதிக்கின்றது என்பதற்கான மகத்தான உதாரணம் என்பதை நாம் விளங்கலாம். இந்த வசனம் அனைத்து இறைநிராகரிப்பாளர்களுக்கும் எதிராக வாளேந்திப் போர் புரிவதற்கான பொதுக் கட்டளையல்ல; ஒப்பந்தத்தில் ஈடுபட்ட பின்னர் அதை மீறி இராஜதுரோகக் குற்றத்தில் ஈடுபட்ட பாவிகளுக்கு எதிரான நடவடிக்கைதான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
தனி நபர்களோ குழுக்களோ ஆயுதமேந்தி ஜிஹாத் செய்ய இயலுமா?
இஸ்லாமிய ஜிஹாத் என்பது ஒரு சில இளைஞர்கள் கூடிச் செய்வதோ, ஒரு சில குழுக்கள் இணைந்து நடத்துவதோ அல்ல. இஸ்லாமிய ஜிஹாதிற்கு முறையான காரணங்களும் முறையான அழைப்பும் தேவை. அவ்வாறு அழைப்பவர் (இமாம்) அதிகாரம் கொண்டவராக இருத்தல் வேண்டும். அவருக்குப் பின்னால்தான் முஸ்லிம்கள் அணிதிரள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆட்சித் தலைவர் ஒரு கேடயமே ஆவார். அவருடன் (அவருக்குப் பின்னால் இருந்து) போரிடப்படுகிறது; அவர் மூலம் பாதுகாப்புப் பெறப்படுகிறது. அவர் (தமது தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறையச்ச உணர்வைக் கைகொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்துகொண்டால், அதன் காரணமாக அவருக்கு (பெரும்) நற்பலன் உண்டு. அதற்கு மாற்றமாக (தீமையானவற்றை) அவர் கட்டளையிட்டால், அதனால் ஏற்படும் பாவம் அவர் மீதும் சாரும்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) – நூல்: முஸ்லிம்
இமாம் ஒரு கேடயமாவார்; அவர் மூலம் போர் செய்யப்படுகின்றது.
நூல்: அபூதாவூத்
முஸ்லிம் சமுதாயம் பைஅத் செய்து கொடுத்த உம்மத்தின் தலைவரின் வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் ஜிஹாத் செய்ய வேண்டும். இதைத்தான் குர்ஆனும் ஸுன்னாவும் ஏவியுள்ளன. இவ்விஷயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாவினர் ஏகோபித்துள்ளார்கள். இதைத் தவிர்த்து, இன்று ஜிஹாத் என்ற பெயரில் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளும் அல்லாஹ்வின் கோபத்திற்குரியதும் மறுமையில் பெரும் தண்டனைக்குரியதுமாகும்.
இறைநிராகரிப்பின் காரணமாக மட்டுமே ஒருவரைக் கொல்ல அனுமதி உண்டா?
இவ்வாறு கொல்வதற்கு அனுமதி உண்டு என்று, இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்ற அல்-காயிதா, ஐ.எஸ். போன்ற அமைப்பினர் கூறுகின்றனர். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் நிரபராதிகளான மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வது உட்பட பல்வேறு கோரச் செயல்களை அவர்கள் அரங்கேற்றுகின்றனர். இவர்களின் கருத்தை ஏற்காத முஸ்லிம்களையும் இவர்கள் இறைநிராகரிப்பாளர்களாகவே பார்க்கின்றனர்.
ஆனால், இறைநிராகரிப்பாளர்களை அவர்களின் இறைநிராகரிப்பை மட்டும் காரணமாகக் கொண்டு கொல்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதுதான் சரியான கருத்து. இறைநிராகரிப்பாளர்களைக் கொல்வதுதான் மார்க்க அடிப்படையில் சரியாக இருந்திருக்குமென்றால், மக்கா வெற்றிக்குப் பின்னர் மக்காவாசிகளுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது மன்னிப்பு வழங்கியிருக்க முடியாது. இந்தக் கருத்தைத்தான் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) உட்பட அஹ்லுஸ் ஸுன்னாவின் பெரும்பாலான இமாம்கள் கூறுகின்றனர்.
மனித உயிரின் மதிப்பு
திருக்குர்ஆனைப் படித்துப் பார்ப்பவர்களால், குர்ஆன் மனித உயிர்களை எந்த அளவிற்கு மதிக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள இயலும். பல்வேறு வசனங்களில் திருக்குர்ஆன் இது குறித்துப் பேசுவதை நாம் பார்க்கலாம். இஸ்லாம் கொலையைப் பெரும் பாவமாகப் பார்க்கின்றது (திருக்குர்ஆன் 25:68). நிரபராதிகளைக் கொல்வது மனித சமூகத்தையே கொல்வதற்குச் சமம் என்று திருக்குர்ஆன் 5:32ஆவது வசனம் கூறுகின்றது:
நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ, அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.
திருக்குர்ஆன் 5:32
மேலே குறிப்பிட்ட வசனம், நிரபராதிகளைக் கொல்வது மனிதர்கள் அனைவரையும் கொல்வதற்குச் சமம் என்று கூறுவதோடு நிற்காமல், ஒரு மனிதனை வாழ வைப்பது மனிதர்கள் யாவரையும் வாழ வைப்பதற்குச் சமம் என்று மனிதநேயத்தின் மகத்தான செயல்திட்டத்தை முன்வைக்கின்றது. ஒரு சமூகமும் நாடும் உலகமும் அமைதியாக முன்னேறுவதற்கான அற்புதமான செய்தி இது. பூமியில் இரத்தத்தை ஓட்டுவதற்குப் பதிலாக, பூமியில் அமைதியை ஏற்படுத்துவதை இலட்சியமாகக் கொள்ளுமாறு திருக்குர்ஆன் முஸ்லிம்களை அறிவுறுத்துகின்றது. இதற்கு மாற்றமாக முன்வைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களும் வழிகேடர்களின் கருத்துக்களே என்பதை நாம் விளங்க வேண்டும்.
நிறைவாக
ஜிஹாத் என்ற பதம் விரிவான பொருளைத் தருகின்ற ஒரு பதமாகும். இந்தப் பதத்திற்குக் குறுகிய பொருளைத் தரும் முயற்சிகளை இஸ்லாமிய சமூகம் தடுக்க வேண்டும். இஸ்லாம் பூமியில் அமைதியை நிலைநாட்ட வந்த மார்க்கம். படைத்த இறைவனை மட்டும் வணங்கி வழிபடுவதால்தான் நிரந்தர அமைதியும் வெற்றியும் ஏற்படும் என்ற மகத்தான செய்தியை இஸ்லாம் பறைசாற்றுகின்றது.
இதற்கு மாற்றமாக மக்கள் பயணித்தபோதெல்லாம் அல்லாஹ் இறைத்தூதர்களை அனுப்பினான். தூதர்கள் இறைச்செய்தியின் அடிப்படையில் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்களே தவிர, வாளேந்தியவர்களாகச் சமூகத்தில் நடக்கவில்லை. மக்கள் அல்லாஹ்வை நிராகரித்து அநீதியையும் அக்கிரமத்தையும் தேர்வு செய்து பூமியில் அமைதியின்மையை ஏற்படுத்தியபோதெல்லாம், அல்லாஹ் தன் தண்டனையை வானிலிருந்து இறக்கிய வரலாறுகளைக் குர்ஆன் பேசுகின்றது. நிராகரிப்பாளர்களுக்குரிய தண்டனையாக அல்லாஹ் நிரந்தர நரகத்தையும் படைத்திருக்கின்றான்.
நமது கடமை, அல்லாஹ்வின் பாதையில் மக்களை அழகிய முறையில் அழைப்பது மட்டுமே என்பதை நாம் விளங்க வேண்டும்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library