சிலர் காணாதக் கனவுகளைக் கண்டதாக இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். மக்களுக்கு மத்தியில் நற்பெயரையோ, சிறப்பையோ பெறுவதற்காக, அல்லது பொருளாதார இலாபம் பெறுவதற்காக அல்லது தம் எதிரிகளை அச்சுறுத்துவதற்காக இன்னும் இதுபோன்ற நோக்கங்களுக்காக இவ்வாறு செய்கின்றனர். பெரும்பாலான பாமரர்களுக்கு கனவுகளில் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ளது. அதனால் இப்பொய்க் கனவுகள் மூலம் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். காணாத கனவுகளைக் கண்டதாகக் கூறுகின்றவர்களுக்கு ஹதீஸ்களில் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவன் தன்னுடைய தந்தையை விடுத்து வேறொருவருடன் தன்னை இணைத்துச் சொல்வதும், தான் காணாதக் கனவைக் கண்டதாகச் சொலவதும், அல்லாஹ்வின் தூதர் கூறாததைக் கூறியதாகச் சொல்வதும் மிகப்பெரும் அவதூறாகும்’ அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி), நூல்: புகாரி.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘தாம் காணாத கனவைக் கண்டதாக கூறுபவர் (மறுமையில்) இரண்டு கோதுமை மணிகளைச் சேர்த்துக் கட்டுமாறு வற்புறுத்தப்படுவார். அவரால் அதைக் கட்ட முடியாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (புகாரி). இரண்டு கோதுமை மணிகளைச் சேர்த்துக் கட்டுவதென்பது அசாத்தியமான காரியமாகும். செய்த (பாவத்)தைப் போலவே தண்டனையும் இருக்கும்.