1. பிரச்சினையின் தன்மை.
இஸ்லாத்தின் இன்றைய நிலை பற்றிப் பேசுமாறு என்னைக் கேட்டிருக்கிறார்கள். எனக்குத் தரப்பட்டுள்ள இவ்விடயத்தின் பொருளைத் தெளிவுபடுத்தவும், இவ்விடயம் எவ்வளவு விரிவானது என்பதை வரையறுத்துக் கூறவும், முதலாவதாக ஒரு சில வார்த்தைகளைப் பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ பலவாறாக விளக்கப் பட்டுள்ளது. அதனால் தான் இவ்விடயத்தின் பொருளையும் விரிவையும் வரையறுத்துக் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்துக்குத் தரப்படும் நான்கு கருத்துக்களை நாம் வேறுபடுத்திக் காணலாம்.
இவற்றில் இரண்டு இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆதலால் அவற்றை முழுமையாக நிராகரித்து விடுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மேனாட்டு அறிஞர்களைப் பொறுத்தவரை ‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ என்பதன் பொருள், இன்று தம்மை முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்வோரின் நிலை என்பதாகும். அவ்வறிஞர்கள் இஸ்லாத்தைப்பற்றி ஆராயத்தொடங்கி, இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறுவோரின் நிலைபற்றியே முழு கவனமும் செலுத்துகின்றனர். முஸ்லிம்களின் வாழ்க்கை இஸ்லாத்தைப் பூரணமாகப் பிரதிபலிக்கிறது என்று அவர்கள் கருதுவதாகத் தோன்றுகிறது. ஆதலால் முஸ்லிம்களின் நிலையை அவர்கள் மதிப்பிடுவதைக் கொண்டு இஸ்லாத்தின் நிலையையும் மதிப்பிட்டு விடுகின்றனர். இவ்வாறு மதிப்பிடுவது நியாயமானதல்ல. மக்கள் ஒரு குறிப்பிட்ட சமயத்தை ஏற்றிருக்கலாம். ஆனால் தம் வாழ்க்கையில் அச்சமயத்தின் போதனைகளைச் செயல்படுத்தாமல் விடலாம். எனவே தெளிவான சிந்தனையின் பொருட்டு, இவ்விரு விடயங்களையும் வேறுபடுத்தி அவற்றைத் தனிதனியாக ஆராய்வதே சாலச் சிறந்ததாகும்.
‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ என்பது தற்கால உலகுக்கு இஸ்லாத்தின் தூது என்ன என்பதையும் குறிக்கிறது. இக்கூற்றில் மறைபொருளாக இருப்பது யாதெனில், ‘இஸ்லாத்தின் போதனைகள் தற்கால அறிவின் தாக்கத்தினால் ஒரு வகையான மாற்றம் அடைந்துள்ளன; எனவே இன்றைய உலகுக்கான அதன் தூது, அது ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அராபியருக்குக் கொணர்ந்த அதே தூதினை ஒத்ததல்ல’ என்பதாகத் தோன்றுகிறது. இக்கருத்தினை உண்மை முஸ்லிம் எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இஸ்லாம் எக்காலத்துக்கும் பொருத்தமான உண்மையை தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே எல்லா காலத்துக்கும் பொருந்துவதான உண்மை, காலத்திற்குக் காலம் மாற்றமடையலாம் என நம்புவது நகைப்புக்கிடமானது.
முழுமையான, கலப்பற்ற உண்மை காலத்தால் பாதிக்கப்படுவதில்லை. அனைத்தும் அறிந்த படைப்பாளனால் இவ்வுலகம் படைக்கப் பட்டது. ஆதலால் அதிலுள்ள படைப்பினங்கள் அனைத்தும் இவ்விறைவனின் நோக்கம் நிறைவேறத் துணையாக இருப்பது அவற்றின் கடமையாகும். இக்கூற்று கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வளவு உண்மையானதாகத் திகழ்ந்ததோ இன்றும் அவ்வளவு உண்மையானதாகவே திகழ்கிறது. அது போன்றே இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு இது உண்மையாகவே நின்று நிலைக்கும். நிரந்தரமான உண்மையை வெளிப்படுத்துவதற்கான ஒரு சாதனம் என்ற வகையில் இஸ்லாத்தின் தூது கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும், வருங்காலத்திற்கும் – எல்லாக் காலங்களுக்கும் ஒரே வகையானதாகும். அது இறைவனின் விருப்பத்திற்கு அடி பணிந்து அவனது நோக்கத்திற்கு அமைய இவ்வுலகில் நடக்கவும் வாழவும் வேண்டுமென மனிதனைக் கேட்கிறது.
வளரும் – இறைவன் நாடினால் அடுத்த பதிவில்