Featured Posts

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (6)

இஸ்லாமியப் புரட்சியின் பெறுபேறுகள்

இஸ்லாமியப் புரட்சியின் நேரடி விளைவுகளில் ஒன்று, இஸ்லாமிய உணர்வைக் கொண்ட ஒரு சமூகம் தோன்றியதாகும். இச்சமூகத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சிந்தனைப் போக்கு, வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் என்பன முற்றிலும் இஸ்லாமிய சன்மார்க்க நெறிக்குள் அமைந்தனவாய்த் திகழ்ந்தன. அதன் கொள்கை ஒரே இறைவனைத் தவிர வேறு எதனையும் வணங்குவதைக் கொண்டு மாசுபடுத்தப் படவில்லை. அச்சமூகத்தின் ஒழுக்கப்பண்பாடும் அதன் உறுப்பினர்களது பண்புகளும் இஸ்லாத்தினால் உருவாக்கப்பட்டு அதனால் தூய்மைப் படுத்தப்பட்டவையாகும். அதன் கலாச்சார அம்சத்தில் இச்சமூகம் இஸ்லாமிய கருத்துக்களை பிரதிபலித்தது. அதன் அரசியல் துறை இஸ்லாத்தினை அடித்தளமாகக் கொண்டிருந்தது. ஒவ்வோர் உறுப்பினரும் இஸ்லாத்திற்காகவே வாழ்ந்து அதற்காகவே தன் இன்னுயிரையும் இழக்க சித்தமாக இருந்தனர். இச்சமூகம் இரு வகை குறிகோள்களைக் கொண்டிருந்தது.

முதலாவதாக, அது எங்கெல்லாம் அரசியல் அதிகாரம் பெற முடிந்ததோ அங்கெல்லாம் இஸ்லாமிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அரசுகளை நிறுவுதல்; இரண்டாவதாக, அரசியல் அதிகாரம் இல்லாதவிடங்களில் இஸ்லாத்தைப் பரப்புதல். இவ்விஸ்லாமிய சமூகம் தனது அலுவல்கள் யாவற்றையும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு இணங்கவே நடாத்திற்று. அத்துடன் இஸ்லாமிய பிரச்சாரத்தைத் தனது விசேட பணியாகக் கருதியது. ஒருபுறம் அது இஸ்லாமிய தத்துவங்களை செயல்படுத்தியது. மறுபுறம் அது இஸ்லாமியப் பேரொளியை உலகின் பிற பகுதிகளுக்கும் பரப்பியது.

முதல் நான்கு கலீபாக்கள் காலத்தில் வியக்கத்தக்க அளவில் இஸ்லாம் பரவக் காரணம், நன்கு ஒன்றிணக்கப்பட்ட தொடக்க கால முஸ்லிம் சமூகத்தின் தணியாத செயலூக்கமாகும். இஸ்லாம் விரிவடைந்தது போல வேறெதுவும் விரிவடைந்ததை உலக வரலாற்றில் காண முடியாது. இஸ்லாம் எத்துனை வேகமாகப் பரவியது என்பதை வலியுறுத்துவதற்காக இதனை வரலாற்றாசிரியர்கள் பொதுவாக “வெடி”(Explosion) எனக் குறிப்பிடுவர். பெருக்கெடுத்த ஒரு பெரு நதியைப் போல் அது, ஆப்கானிஸ்தான், மத்தியாசியா முதல் வட ஆப்பிரிக்கா வரை படு வேகமாகப் பரவியது. இவ்வாறு அது வெடித்துப் பரவக் காரணம் யாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. எது எவ்வாறிருப்பினும், அராபியர் உடல் வலிமை மிக்கவர்களோ அல்லது அவர்களின் நாடு இயற்கை வளமிக்கதோ அல்ல. அண்மையில் கண்டுபிடிக்கப் பட்ட பெட்ரோலியத்தைத் தவிர, அங்கு பெறுமதி வாய்ந்த இயற்கை வளங்கள் எதுவும் இல்லை. அன்றியும் அந்நாடு குடிசனச் செறிவுடையதாகவும் இருக்கவில்லை. இன்றுங்கூட அதன் குடிசனத் தொகை ஒரு கோடிக்குக் குறைந்ததாகும். முதற் கலீபாக்களின் காலத்தில் குடிசனத் தொகை இதை விடக் குறைந்ததாகவே இருந்திருக்கும்.

இத்தகைய ஒரு சிறு சமூகம், உலகின் பெரும் பகுதி நிலப்பரப்பைத் தனது ஆதிக்கத்துள் கொண்டுவர முடிந்தமைக்கு வெறும் உடல் வலிமை மட்டும் காரணமாக அமைய முடியாது. இவ்வற்புத சாதனைக்கான காரணத்தை நாம், சமாதான காலத்திலும் போரிலும் முஸ்லிம்களின் முன் மாதிரியான நடத்தை, அவர்களின் நிர்வாகத் திறமை, தம் ஆதிக்கத்தின் கீழ் வந்த மக்கள் இனங்களை சகிப்புத் தன்மையுடனும் அன்பாகவும் நடத்தியமை என்பவற்றிலேயே காண முடியும்.

உரோம, பாரசீக சாம்ராஜ்யங்களின் எல்லைக்குள் வாழ்ந்த மக்கள் பாதை வழியே நடந்து சென்ற அல்லது பொதுமக்களோடு பொது மக்களாக வாழ்ந்த ஆட்சியாளர்களையோ, நீதி கோரியும் தம் குறைத் தீர்க்கக் கோரியும் முறையிட வருவோரைத் தம் கதவுகளைத் திறந்து வைத்துத் தடையின்றி வரவேற்ற ஆட்சியாளர்களையோ ஒரு போதும் கண்டதில்லை. அத்தகைய ஆட்சியாளர் ஒருவர் இருக்க முடியுமென்று அவர்கள் கனவி
ல் கூட காணவில்லை. முஸ்லிம் ஆட்சியின் கீழ் எல்லா விடயங்களிலும் அத்தகைய ஆட்சியாளர் பொது மக்களுடன் கலந்துறவாடி அவர்களின் முறைப்பாடுகளுக்கு அனுதாபத்துடன் செவி மடுத்ததை அவர்கள் கண்டனர்.

முஸ்லிம் படை வீரர்கள், ஒரு நகரைக் கைப்பற்றி விட்டால் அதிக தன்னடக்கத்தோடு நடந்து கொள்வதை கைப்பற்றப்பட்ட நாட்டு மக்கள் கண்டனர். அடிப்படுத்திய நகரின் பிரதான வீதி வழியே முஸ்லிம் படையினர் அணிவகுத்து செல்கையில் வீதியின் இரு மருங்கிலும் அமைந்த வீடுகளின் உப்பரிகையில் பகட்டான ஆடை அணிந்த அழகு மங்கையர் நிறைந்து நிற்பர். ஆனால் உப்பரிகைகளில் நின்ற அந்த ஆரணங்குகள் சைகை காட்டித் தம்மை அழைப்பதைச் சற்றும் கவனியாமலே அப்படை வீரர் நடந்து செல்வர்.

இதைக் கண்ணுற்ற மக்கள் பேரச்சரியமடைவர். காரணம், ஒரு நகரம் வீழ்ச்சியடைந்து விட்டால் அதனை வெற்றி கொண்ட வீரர்கள் அந்நகரிலுள்ள ஒரு பெண்ணைக் கூட விட்டு வைக்க மாட்டார்கள். இதை அவர்கள் கண்ணாரக் கண்டிருந்ததோடு தம் தந்தையர் சொல்லக் கேட்டுமிருந்ததாகும். ஒரு பெண்ணையும் தீண்டாதவர்களும் எந்த ஓர் ஆண் மகனையும் இழிவு படுத்தாதவர்களுமான முஸ்லிம் வீரர்கள் தோல்வியடைந்த மக்களின் இதயங்களை எளிதில் கவர்ந்தனர்.
புதிதாக வெற்றி வாகை சூடியோர் தம் மேன்மையை மற்றொரு வழியிலும் எடுத்துக் காட்டினர். சில வேளைகளில் பகைவரின் நெருக்கம் தாங்காமல் அவர்கள் பின்வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டதுண்டு. அவ்வாறு அவர்கள் ஒரு நகரை விட்டு வெளியேறுகையில் அவர்கள் அந்நகர மக்களிடம் அறவிட்டிருந்த வரிகளை அவர்களுக்கு திருப்பிக் கொடுத்து விடுவர்.

“உங்கள் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பை நாம் ஏற்ற போது இவ்வரிகளை நாம் உங்களிடமிருந்து அறவிட்டோம். இப்பொழுது இப்பொறுப்பை நாம் ஏற்க முடியவில்லை; ஆதலால் உங்களிடமிருந்து பெற்ற பணத்தை உங்களிடமே திருப்பித் தந்து விடுகிறோம்” என்று முஸ்லிம் ஆட்சியாளர் கூறுவர்.

கடந்த காலத்தில் இம்மக்கள் கண்டறிந்த ஆட்சியாளர்களின் நடத்தை இதற்கு நேர்மாறாக அமைந்திருந்தது. ஒரு நகரிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப் பட்டால் அவர்கள் கட்டுப்பாடில்லாமல் அந்நகரைக் கொள்ளையிடுவர். முஸ்லிம்களால் அடிப்படுத்தப்பட்ட நாட்டு மக்கள், தம்மை வெற்றி கொண்ட படை வீரர்கள் ஆத்ம ஞானிகளைப் போன்று நடந்து கொள்வர் என்பதை ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. மிக்க உயர்ந்த ஒழுக்கப் பண்பாடுள்ள மனிதர்களை அவர்கள் கண்டிருந்தனர். ஆனால் அரசாங்க வட்டாரங்களில் ஒழுக்கத்திற்கு இடமில்லை என்றே அவர்கள் நம்பியிருந்தனர்.

வளரும் – இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *