Featured Posts

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (13)

முடியரசு முஸ்லிம்களிடையே இன உணர்ச்சியை பிறப்பித்து வளர்த்தது. தம் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மன்னர்கள் இனவேறுபாடுகளை, பழி பாவத்திற்கு அஞ்சாமல் பயன்படுத்தினர். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உமையாக்களுக்கும் அப்பாசியருக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தில் அப்பாசியர் பாரசீகர்களின் ஆதரவைப் பெற நாடினர். இதற்காக அரேபிய உமையாக்களுக்கு எதிராகப் புரட்சி செய்யுமாறு அவர்கள் பாரசீகர்களைத் தூண்டினர்.

பல்வேறு முஸ்லிம் குழுக்களுக்கு இடையே நிலவிய பகைமையைப் பயன்படுத்தும் கொள்கையைப் பல நூற்றாண்டுகளாக மன்னர்கள் கடைபிடித்து வந்தனர். இதனால் முஸ்லிம் சமுதாயத்திற்கு அளப்பரிய கேடு விளைந்தது. இக்குழுப் பற்றுகள் முஸ்லிம் சகோதரத்துவ உணர்ச்சியை வலுவிழக்கச் செய்வதோடு சகோதரத்துவத்தைக் குலைத்து விடவும் முடியும் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டியது அவசியமாகும். தொடக்க கால மக்களாட்சிப் பாரம்பரியங்களுக்கு நாம் மீண்டும் உயிரூட்டி முஸ்லிம்களிடையே பிரிவுகளைத் தோற்றுவித்துள்ள எல்லாப் பிரிவினைச் சுவர்களையும் தகர்த்தெறிய வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையேயும் மீண்டும் ஐக்கியம் நிலைபெறச் செய்வதே இன்றைய அவசரத் தேவையாகும்.

தன்னலப்பற்று

எதேச்சதிகார ஆட்சி நிலவிய காலப்பிரிவில் வளர்ந்த மற்றொரு தீமை தன்னலப் பற்றாகும். ஆன்மீக முன்னேற்றத்திற்கு பெருந்தடைக்கல்லாக நிற்பது தன்னலப்பற்று எனக்கூறி தன்னலப்பற்றை நபிமணி அவர்கள் கண்டித்துள்ளார்கள். பொது நலத்தைப் போற்றி வளர்ப்பதிலேயே முஸ்லிம்கள் ஈடுபாடு கொள்ள வேண்டுமென அன்னார் அறிவுறுத்தியுள்ளார்கள். முஸ்லிம்கள் பொது நலனுக்குத் துணையாகவே சுயநலத்தை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இதனால் தன்னலப் பற்றானது ஓர் உண்மை முஸ்லிமுக்கு உகந்த பண்பல்ல என முஸ்லிம்கள் அதனை வெறுத்து ஒதுக்கினார்கள். இறைவனின் உண்மைத் தொண்டனாக வாழ முயலும் ஒரு முஸ்லிம், சுயநல நோக்கங்களை நிறைவேற்றப் பாடுபட்டுத் தன் நிலையைத் தாழ்த்திக் கொள்ளவியலாது. எனவே இஸ்லாமிய சமுதாயத்தின் தொடக்க காலத்தில் எல்லாத் தன்னலப் போக்குகளும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டன. மன்னர்களின் கீழ், மக்கள் உள்ளங்களில் இஸ்லாத்திற்கிருந்த ஆதிக்கம் வலுவிழந்து, தன்னலப் போக்குகள் தடையின்றி வளர்ச்சியடைய இடம் இருந்தது.

முஸ்லிம் சமூகத்தில் தன்னல வேட்கையும் தான் விரும்பியவாறு இன்பத்தில் திளைக்கும் மனப்பாங்கும் அபாயகரமான அளவிற்குப் பரவிற்று. தன்னலப் பற்றும் குடும்பப்பற்றும், சமூகப்பற்றையும் இஸ்லாத்தின் மீதான பற்றையும் மிகைத்து நின்றன. கட்டுப்பாடில்லாமல் வளர்ந்த தன்னல வேட்கை முஸ்லிம் உலகின் ஒருமைப்பாட்டிற்கு உலை வைத்தது.

தான் விரும்பியவாறு இன்பம் அனுபவிக்கும் போக்கு முஸ்லிம்களின் சக்தியை உறிஞ்சிக் குடித்தது. அதேவேளை சுயநலப் போக்கு, எவ்விடயத்திலும் ஐக்கியப்பட்டுச் செயலாற்றவொட்டாமல் முஸ்லிம்களைத் தடுத்து நின்றது. முஸ்லிம்களின் சமுதாயப் பற்று மங்கி மறையும் நிலை தோன்றியதால் சமூகத்தைத் துறந்து செல்லல் ஒரு சர்வசாதாரண நிகழ்ச்சியாகி விட்டது. ஒரு முஸ்லிம் நாடு பகைவர்களால் தாக்கப்பட்டால் மனசாட்சி உறுத்தாமலேயே பகைவர் படையில் சேர்ந்து தம் நாட்டுக்கு எதிராகப் பல முஸ்லிம்கள் போரிட்டனர். அவர்கள் ஒரு முஸ்லிம் நாட்டின் மீது அந்நியர் தம் ஆட்சியைத் திணிப்பதற்கு உதவி புரிந்தனர்.

நம்பிக்கைத் துரோகத்தை இஸ்லாம் மிகக் கொடிய பாவமாகக் கருதுகிறது. இருந்தும் முஸ்லிம் ஐந்தாம் படையினர் தம் மதத்தையும் தம் நாட்டையும் சே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *