இஸ்லாமியப் பாரம்பரியத்தில் முஸ்லிம் பெருமக்களுக்குள்ள ஆழ்ந்த பற்றைத் தணிப்பதற்கு அரசியல்வாதிகள் செய்யாத முயற்சி எதுவுமில்லை. மேனாட்டுப் பழக்க வழக்கங்களையும் முறைகளையும் மக்கள் பின்பற்றச் செய்வதற்குக் கடுமையாக வற்புறுத்தப்பட்டனர். தலைவர் எத்துணை தீவிரமாக முயன்றபோதிலும் மக்களுக்கு இஸ்லாத்தின் மீதிருந்த பற்றுக் குறையவில்லை. மக்கள் மீது இஸ்லாத்திற்கிருந்த பிடி தளர்ந்திருக்கலாம்; ஆனால் முற்றாக விடுபடவில்லை.
இதற்குக் காரணம் குர்ஆனின் போதனைகள் மக்கள் உள்ளங்களில் ஆழப்பதிந்திருந்தமையும் அதன் கருத்துக்கள் அவர்களில் ஊடுருவிப் படர்ந்திருந்தமையுமாகும். வாழ்க்கையின் நெருக்கடிகள், அமளிதுமளிகளில் மற்றெல்லாம் மறந்துவிட இஸ்லாமிய போதனைகள்,கருத்துக்கள் மட்டும் மக்கள் மனங்களில் நிலைத்து நின்றன. துன்பம் சூழ்ந்தபொழுது இஸ்லாம் அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. இன்பம் வந்துற்றபோது நன்றியறிதலோடு அவர்கள் இஸ்லாத்தை நோக்கினர். இன்னல், துன்பம், துயரம் அவர்களை வாட்டி வதைத்த போதெல்லாம் இஸ்லாமே அவர்களுக்கு வாழ்வளித்தது.
இஸ்லாம் அவர்களுக்களித்த விலை மதிக்கவொண்ணாத அருட்கொடை இறைவன் தம்மோடிக்கிறான் என்ற நிலை குலையாத ஆழ்ந்த உணர்வாகும். துன்பம் நேர்கையில் தளராத மனவுறுதியும், வெற்றி கிட்டும் போது பணிவும் இஸ்லாமிய போதனைகளால் அவர்களுக்குக் கிடைத்த பெரும் பேறுகளாகும். தோல்வியில் கண்ணியமாகவும், வெற்றியில் தன்னடக்கத்தோடும் நடந்துகொள்ள இஸ்லாம் அவர்களுக்குக் கற்றுத்தந்தது. அன்பும் சகிப்புத்தன்மையும், தர்ம சிந்தையும், இரக்கமும், நன்னம்பிக்கையும், திடசித்தமும், இறுதியாக இறைவனிலும் நன்மையிலும் நம்பிக்கையும்- இவை அனைத்தும் குர்ஆனிலிருந்து அவர்கள் பெற்றுக் கொண்ட அரிய பண்புகளாகும்.
குர்ஆனின் உயர் போதனைகள் பற்றிய விரிந்த அறிவு பொதுமக்களுக்கு இருக்க வில்லை என்பது உண்மையே. எனினும் அவை அவர்களின் உள்ளங்களை ஊடுருவி, அடித்தளத்தை அடைந்திருந்தன. அரசியல்வாதிகளின் கெட்டிகாரத்தனமான விவாதங்கள் மக்களின் உள்ளங்களை ஊடுருவ இயலவில்லை. அவர்களது இதய இழையங்களோடு இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் பின்னிப்பிணைந்திருந்தன. அதனால் அவர்கள் அந்நம்பிக்கைகளை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப அல்லது பணத்திற்காக கைவிடத்தயாராக இருக்கவில்லை.
இஸ்லாத்திற்கு ஈடாக வேறு எதனையும் ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த இயலாது என்பதை அரசியல்வாதிகள் உணர்ந்த போது அவர்கள் தம் தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டனர். திரிக்கும் மறுக்கும் வாதங்களைக் கையாள அவர்கள் தலைப்பட்டனர். இஸ்லாத்திற்கு முரணான நம்பிக்கைகளுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் இஸ்லாமிய வடிவம் கொடுத்து அவற்றை முஸ்லிம்களுக்கு மத்தியில் சாதுர்யமாக புகுத்த முயன்றனர். ஆனால் மக்கள் ஏமாறவில்லை. உண்மை இஸ்லாமிய நம்பிக்கைகளையும் அவற்றிற்கு மாற்றீடாகக் கொண்டு வரப்பட்ட பொய்யான நம்பிக்கைகளையும் பிரித்தறியத் தேவையான விவேகத்தையும் இஸ்லாம் பற்றிய அறிவையும் மக்கள் பெற்றிருந்தனர்.
வளரும் – இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.
//இஸ்லாத்திற்கு ஈடாக வேறு எதனையும் ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த இயலாது என்பதை அரசியல்வாதிகள் உணர்ந்த போது அவர்கள் தம் தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டனர். திரிக்கும் மறுக்கும் வாதங்களைக் கையாள அவர்கள் தலைப்பட்டனர்.//
இப்போது அரசியல்வாதிகள் தம் தோல்வியை உணர்ந்து விட்டனர் என்று நினைக்கிறேன். ஆனால் ஆன்மீக வாதிகள் என்று தம்மை நினைத்துக் கொள்ளும் சிலதுகள் தொடர்நது அவ்வேலையை செய்து கொண்டேயிருக்கின்றனர்.
இன்ஷா அல்லாஹ் இவர்களும் தம் தோல்வியை ஒப்புக்கொண்டு திருந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.