சமயப்பற்றற்ற சீர்திருத்தக் கொடியை முதன் முதலாக ஏந்திய துருக்கி நாட்டை எடுத்துகொள்வோம்.
பயங்கரப் போராட்டத்துக்குப்பின் துருக்கி மக்கள் நேச நாடுகளின் கட்டுப்பாட்டுத் தளையிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டனர். ஆனால் அடுத்தகணமே துருக்கித் தலைவர்கள் அங்கு மேனாட்டு அடிப்படையிலான ஒரு ஜனநாயக அரசை அமைத்து விட்டனர். மக்கள் எதிர்பார்த்தது இதுவல்ல. ஆனால் இதனை எதிர்த்து அவர்களுக்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. இராணுவத்தின் பலமான ஆதரவோடு மேனாட்டு வாழ்க்கை முறையையும் பழக்கங்களையும் மட்டுமன்றி உடையைக்கூட அந்நாட்டுத் தலைவர்கள் மக்கள் மீது திணித்தனர். இராணுவத்தைக் கொண்டு மக்கள் அடக்கி வைக்கப்பட்டனர். புது அமைப்பினை எதிர்க்கவியலாமல் அவர்கள் இணங்கிச் சென்றனர். ஆனால் அவர்களின் உள்ளங்களில் எழுந்த எதிர்ப்புணர்ச்சியை அவர்களால் தடுத்துக்கொள்ள முடியவில்லை. அது இன்றும் புகைந்து கொண்டே இருக்கிறது.
தலைவர்கள் பெரும் அபிவிருத்தித் திட்டங்களைத் தீட்டி வைத்துள்ளனர். ஆனால் அவற்றைச் செயல்படுத்துவதில் ஒத்துழைக்க மக்கள் விரும்பவில்லை. இதன் விளைவாக துருக்கி ஏனைய அபிவிருத்தியடையும் நாடுகளை விட பின்தங்கி நிற்கிறது.
தன்னிறைவுள்ள, சுயமாக இயங்கும் ஒரு பொருளாதார அமைப்பினைத் துருக்கி இன்னும் அடையவில்லை. அந்நாட்டின் கைத்தொழில் அபிவிருத்தியடைய முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. பாதகமான வர்த்தகச் சமநிலையும் அங்கு காணப்படுகிறது. அதன் உற்பத்தி, நாட்டுத்தலைவர்கள் குறிப்பிட்டிருக்கும் இலக்கை விட மிகத்தாழ்ந்த நிலையில் இருக்கிறது.
ஏனைய முஸ்லிம் நாடுகளும் வருந்தத்தக்க இந்நிலையிலேயே காட்சியளிக்கின்றன. மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே நிலவும் தகராறு முஸ்லிம் நாடுகளின் பொருளாதாரத்தை நாசப்படுத்துமளவுக்கு அதனைப் பாதித்துள்ளது என்பது தெளிவு. முஸ்லிம்களை இன்று எதிர்நோக்கும் பிரமாண்டமான பிரச்சினை, நாட்டின் அபிவிருத்திக்காக மக்களுக்கும், தலைவர்களுக்குமிடையில் ஒத்துழைப்பு ஏற்படுவதற்குத் தடையாக உள்ள இடர்ப்பாடுகளை நீக்குவதாகும்.
இது தான் இஸ்லாத்தின் இன்றைய நிலை.
முஸ்லிம் உலகின் இன்றைய நிலை பற்றிய இந்த அளவீடு, எமது எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும் என்று நம்புவதற்கு சாத்தியங்கள் எவையேனும் உள்ளனவா எனக்கேட்கத் தூண்டுகிறது. வாய்ப்புகள் நிச்சயம் நல்லவையாகவே இருக்கின்றன. ஆனால் ஓர் உண்மையான இஸ்லாமிய அரசு தாபிக்கப்பட வேண்டுமென்ற மக்களின் ஆவலை ஒவ்வொரு நாட்டு அரசும் நிறைவேற்ற வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலம் ஒளிமிக்கதாய்த் திகழும். அத்தகைய ஓர் அரசு அமைக்கப்பட்டால் நாட்டின் அபிவிருத்திக்கு மக்களும் தலைவர்களும் ஒன்றாக உழைக்கக்கூடிய நிலை தோன்றும்.
அன்றி தலைவர்கள் தமது தற்போதைய கொள்கைகளையே பிடிவாதமாகச் செயல்படுத்த முனைவராயின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக அமையும்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பின்பற்றிய தொடக்ககால முஸ்லிம்களின் இதயங்களில் ஒளிவீசிய நம்பிக்கை-இஸ்லாத்தின் போதனைகள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதில் மாறாத நம்பிக்கை-வேண்டும். அது தான் இன்றைய தேவை. அத்தகைய ஆழ்ந்த நம்பிக்கை, இந்நவீன யுகத்தில் இஸ்லாத்தைச் செயல்படுத்த முடியுமா என்பது பற்றி முஸ்லிம்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகத்தைப் போக்கி விடும். தற்காலத்திற்குப் பொருத்தமான அமைப்பில் தாபிக்கப்படும் ஓர் இஸ்லாமிய அரசு, இஸ்லாம் ஒரு காலத்தில் இருந்தது போலவே இன்றும் பலம் வாய்ந்த ஒரு சக்தியாகவே இருக்கிறது என்பதற்கு மறுக்க முடியாத சான்றாக அமையும்.
முற்றும்.