குழந்தை பிறந்ததும், திரும்பவும் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட வேண்டியதாயிற்று. வேறு வழியில்லாமல் எனது ஆட்டோவை விற்று பழைய தொழிலான கருங்கல் உடைப்பதற்கும், மரம் சுமக்கவும் செய்தேன்.
சில நாட்கள் சென்றபோது தலித் விகஸன் கார்ப்பரேஷன், தலித் மக்களுக்காக வீடும் இடமும் வாங்குவதற்கு அரசு பணம் கொடுக்கின்றது என்று கேள்விப்பட்டேன். எனது இப்போதைய ஷெட்டை மாற்றிவிட்டு வீடு கட்டுவதற்கு மனு கொடுத்தேன். அன்றும் நான் BJP யின் ஒரு மெம்பராகத்தான் இருந்தேன். கருத்து வேறுபாடுகள் இருந்தால் கட்சிக்காக வேலை ஒன்றும் செய்ய முற்படவில்லை.
இப்படி இருக்க பிஜேபி யும், ஆர்.எஸ்.எஸ்ஸும் சேர்ந்து எனக்கு கிடைக்கப் போகின்ற அந்த பதவியைத் தடுப்பதற்கு பல வழிகளையும் கையாண்டார்கள். எல்லா வழியிலும் என்னை ஒதுக்க வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தில் அவர்கள் செயல்பட்டார்கள். ஆனால் அரசு எனக்கு சாதகமானதால் அவர்களது திட்டம் நடை பெறாமலும் எனக்கு வீடு கட்டுவதற்கு உதவியும் கிடைத்தது. உடனே வீடு கட்டவும் செய்தேன்.
ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக உயிரைக் கொடுத்து எனது சொந்த வாழ்க்கையைக் கூட பொருட்படுத்தாமல் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளான நான் அவர்களின் உயர் குலத்து பெண்ணை திருமணம் முடித்தற்காக எல்லாவற்றையும் மறந்து கொஞ்சம் கூட நன்றியில்லாமல் எனக்குத் துரோகம் செய்வதற்கு முன்வந்தார்கள் அந்த ஆர்.எஸ்.எஸ்காரர்கள்.
பிஜேபி யும் ஆர்.எஸ்.எஸ்ஸும் எனக்கு ஒரு பிரச்னையாக மாறியவுடன், அவர்களுக்கெதிராக நான் போராட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த சில இளைஞர் குழுவை நியமித்து பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் சதி வேலைகளை இந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்தேன். இதனை அம்பேத்கார் கல்வி மையம் மூலம் வெளிப்படுத்திக் காட்டினேன். சிறிது நாட்களில் நியமித்த அந்த இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ். பயத்தால் என்னை தனிமைப்படுத்தினார்கள். சில சதி வேலைகளில் என்னை சிக்கவைக்க முயற்சிகளைச் செய்தார்கள். அம்பேத்கார் கல்வி மையத்தை ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.
இந்த நேரத்தில்தான் அப்துல் நாசர் மஹ்தனியின் பாபரிமஸ்ஜித் பற்றிய தீப்பொறி பிரசங்கம் நடந்து கொண்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கெதிராக கடுமையான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு நபர் தான் நாஸர் மஹ்தனி என்ற எண்ணம் தான் எனக்கு இருந்தது. அம்பேத்கர் கல்வி மைத்தை சங்கபரிவாரிடமிருந்து மீட்க எனக்கு நாஸர் மஹ்தனியின் உதவி தேவைப்பட்டது. அவரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை என்னை தொற்றிக்கொண்டது.
நான் ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு ஊரில் தனிமையாக நிற்கும் போது ஒரு சில முஸ்லிம் இளைஞர்கள் எனது நண்பர்களானார்கள். எனது வாழ்க்கையில் முதல் முதலாக பழகிய இரண்டு முஸ்லிம் நண்பர்கள்தாம் ரபீக்கும், அஃப்சலும்.
இறைவன் நாடினால் வளரும்.