261– (கஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) மீது கூஃபா வாசிகளில் சிலர் உமர் (ரலி) இடத்தில் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர் (ரலி) அவரை நீக்கி விட்டு அம்மார் (ரலி) அவர்களை அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து அபூஇஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள். அதற்கு ஸஃது (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே தொழுவித்தேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஒதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன் என்று பதிலளித்தார்கள். உம்மைப் பற்றி நமது கருத்தும் அதுவே என்று உமர் (ரலி) கூறினார்கள். அதன் பின் ஒரு நபரைத் அல்லது சில நபர்களை ஸஃது (ரலி) உடன் கூஃபாவுக்கு அனுப்பி ஸஃதைப் பற்றி கூஃபாவாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். பனூ அப்பாஸ் கூட்டத்தாரின் பள்ளிவாசலில் விசாரித்தபோது அந்த கூட்டத்தை சேர்ந்த அபூஸஃதா எனப்படும் உஸாமா பின் கதாதா என்பவர் எழுந்தார். நீங்கள் விசாரிப்பதால் தான் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தமது படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை. (பொருள்களை) சமமாக பங்கிடுவதில்லை: தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை என்று புகார் கூறினார். இதைக் கேட்ட ஸஃது (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக! மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டு இறைவா! உனது இந்த அடியார் (அவரது புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுவராகவும் இருந்தால் அவரது ஆயுளை அதிகப் படுத்துவாயாக! அவரது வறுமையையும் அதிகப் படுத்துவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். இதன் பிறகு அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால் சோதனைக்காளான முதுபெரும் வயோதிகனாகி விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்து விட்டது எனக் கூறக் கூடியவராகி விட்டார். ஜாபிர் (ரலி) வழியாக அறிவிக்கும் அப்துல் மாலிக் பின் உமைர் அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன். முதுமையில் அவரது புருவங்கள் அவரது கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்கள் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்: இந்த நிலையில் அவரை நான் பார்த்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.
நீதவான்களை புகார் கூறுவதில் பயந்து கொள்ளுங்கள்
புஹாரி-755: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)