Featured Posts

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?

“விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்த்த் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்துமதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் என அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் 1000 -த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் அன அறிவிக்கப்பட்டது”.

19/02/1981 இந்திய வரலாற்றில் பொன்னால் குறிக்கப்பட்ட நாள். தாழ்த்தப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட தலித், அரிஜன மக்களின் வரலாற்றில் ஓர் புதிய திருப்பதையும் எழுச்சியையும் கொடுத்த நாள். காலம்காலமாக ஒடுக்கப்பட்டு வாழ்ந்த இந்த சமூகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தருவதை உறுதிப்படுத்த, தமிழ்நாட்டில் மீனாட்சிபுரம் என்ற குக்கிராமத்தில் வாழ்ந்த ஒரு கூட்டம் தாழ்த்தப்பட்ட மக்களால் திட்டமிட்டு உருவாக்கிய வரலாற்றின் சிறப்புமிகு நாள்.

ஆம். இந்திய நாட்டின் சொந்தம் குடிகள் என உரிமை கொண்டாடுவதற்கு தகுதியுள்ள ஒரே இனமான தாழ்த்தப்பட்ட, அரிஜன தலித் மக்கள் தங்கள் வாழ்வின் விடுதலை தேடி பலநூறு ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கும் சூழலில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுமார் 1000 க்கும் மேற்பட்ட தலித் மக்கள் குடும்ப சகிதம் சமத்துவம், சகோதரத்துவத்தை வேண்டி தாங்கள் ஒரு இந்து என பெயருக்கு முத்திரைக் குத்தப்பட்டு காலம்காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்ததிலிருந்து விடுதலை தேடி இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட நாள் தான் இந்த 19/02/1981.

உலகமே தங்களை உற்று நோக்க வைத்த அந்த மக்கள் திடீரென ஏன் இந்த முடிவை எடுத்தனர்? அவர்களின் இந்த திடீர் முடிவுக்கு தூண்டுகோலாக இருந்தது எது? இம்முடிவு திடீரென எடுக்கப்பட்டதா? அல்லது திட்டமிட்டே நிகழ்ந்ததா? பல்வேறு கேள்விகளுடன் இந்தியாவின் அனைத்து பாகங்களிலிருந்தும் அரசியல்வாதிகளிலிருந்து மதத் தலைவர்கள் வரை அனைவரும் மீனாட்சிபுரத்தை நோக்கி படையெடுத்தனர்.

காலம்காலமாக இந்தியாவில் இஸ்லாம் வாளைக் கொண்டு பரப்பப்பட்டது என சங்க்பரிவார இயக்கங்களினால் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில், இந்தியாவில் எந்த முகலாயர்களின் ஆட்சியோ, முஸ்லிம் நிஜாம்களின் ஆட்சியோ அல்லது இந்திய ஜனநாயக சுதந்திர அரசில் முஸ்லிம்களின் எவ்வித பிடியுமோ இல்லாத சூழலில் திடீரென ஒரு கிராமத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட இந்து சமூகத்தைச் சேர்ந்த தலித் மக்கள் இஸ்லாத்திற்கு மாறிய இந்த சம்பவம், மததீயை வளர்த்து அந்த வெப்பத்தில் தங்கள் வளர்ச்சியை வார்த்தெடுத்து வரும் சங்க்பரிவார அமைப்புகளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது என்றால் அது மிகையல்ல.

அதன் பின் அந்த அமைப்புக்களால் முடுக்கி விடப்பட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான் துவக்கத்தில் காணப்படும் பத்தியிலுள்ள முதல் வாசகத்தின் ஊற்றுக்கண். உண்மையில் மீனாட்சிபுரத்தில் நடந்தது என்ன என்பது வெளிவராத நிலையில், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பெரியவர் கி.வீரமணி அவர்கள் நேரடியாக அக்கிராமத்திற்குச் சென்று மதம்மாறிய தலித் மக்களுடனும் அவ்வூரில் வாழும் ஏனைய மக்களோடும் கலந்துரையாடி வந்தார். அப்பொழுது அவர் எடுத்த ஒலிவடிவில் இருந்த பேட்டியை “உண்மை விளக்கம் பதிப்பகம்” பதிப்பகத்தார் சிறுநூல் வடிவில் அதனை வெளியிட்டனர்.

வரும் பதிவுகளில் மீனாட்சிபுரம் மக்களோடு பெரியவர் கி.வீரமணி அவர்கள் கலந்துரையாடிய அந்த சம்பவத்தை காணலாம்.

இறைவன் நாடினால் வளரும்.

2 comments

  1. நெடுங்குழைகாதன்

    பார்ப்பனீய சாதிவெறியின் விளைவுகளை தோலுரித்த சம்பவம். நிறுவனப்படுத்தப்படாத சனாதன ஹிந்து மதத்தை அழிப்பதற்காகவே உடலெடுத்த பார்ப்பனீயத்தின் மோசமான பக்கங்களை திறந்து காட்டுங்கள்.

    பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  2. மரைக்காயர்

    நீங்கள் படித்த பல அரிய புத்தகங்களை இங்கே பகிர்ந்து கொள்வதற்கு நன்றி. தங்கள் முயற்சி பாராட்டுதலுக்குறியது. இதை தொடருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *