Featured Posts

சுவனத்தில் நுழையச் செய்யும் ஈமான்

7- ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்)செயலை எனக்குக் கூறுங்கள்! என்று (அவசரமாகக்) கேட்டார். அப்போது மக்கள், இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது? என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்! என்று (மக்களை நோக்கிச்) கூறி விட்டு, (அந்த மனிதரை நோக்கி) அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதவராக அவனை மட்டுமே நீர் வணங்க வேண்டும்! தொழுகையை நிலை நாட்டவேண்டும்! ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்! உறவைப் பேணிக் கொள்ளவேண்டும்! என்று கூறி விட்டு, உமது வாகனத்தில் புறப்படுவீராக! என்றார்கள். அம்மனிதர் (அப்போது) தமது வாகனத்தில் அமர்ந்திருந்தார் போலும்!

(அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரி(ரலி), நூல்கள்: புகாரி 5983, முஸ்லிம் 14-15)

8. கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்! என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதவராக அவனை மட்டுமே நீர் வணங்கவேண்டும். விதிக்கப்பட்ட தொழுகைகளையும் நிர்ணயிக்கப்பட்ட ஜகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்! ரமலானில் நோன்பு நோற்க வேண்டும்! என்றார்கள். அதற்கவர், என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதை விட எதையும் அதிகமாகச் செய்ய மாட்டேன் என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்! என்றார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி), நூல்கள்: புகாரி- 1397, முஸ்லிம் 16)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *