Featured Posts

(தஃப்ஸீர்) விரிவுரை

1893. பனூ இஸ்ராயீல்களுக்கு, ‘(ஊருக்குள் நுழையும்போது) அதன்வாசலில், சிரம் தாழ்த்தியபடியும் ‘ஹித்தத்துன்’ (‘பாவ மன்னிப்புக் கோருகிறோம்’) என்று சொல்லியபடியும் நுழையுங்கள்” என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர்கள் (ஹித்தத்துன்’ என்னும் சொல்லை ‘ஹின்தத்துன் – கோதுமை என்று) மாற்றி விட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்தபடி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய விதை என்று கூறினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3403 அபூஹுரைரா (ரலி).

1894. அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து ‘வஹீ’ (வேத அறிவிப்பை) அருளினான். அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேத அறிவிப்பு (மற்ற காலங்களில் அருளப் பெற்றதைவிட) அதிகமாக இருந்தது. அதற்குப் பின்னரே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

புஹாரி : 4982 அனஸ் (ரலி).

1895. ‘யூதர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம் ‘அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்’ என்றார். அதற்கு உமர் (ரலி) ‘அது எந்த வசனம்?’ எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார் ‘‘இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்தி விட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்” (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர் (ரலி) ‘அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி (ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போது தான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்’.’

புஹாரி : 45 உமர் (ரலி).

1896. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘அநாதை(ப் பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்” (திருக்குர்ஆன் 04:03) என்னும் இறைவசனத்தைக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.

என் சகோதரி மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் (வலீயின்) மடியில் (பொறுப்பில்) வளர்கிற – அவரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் மற்றவர்கள் அவளுக்குக் கொடுப்பது போன்ற மஹ்ரை அவளுக்குக் கொடுக்காமல் – அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் என்னும் நிலையிலிருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செய்யாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும். மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக) தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற பெண்களில் அவர்களுக்கு விருப்பமான பெண்களை மணந்து கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. பிறகு, (இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும்) மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். எனவே அல்லாஹ், ‘பெண்கள் விவகாரத்தில் த
ீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் கோருகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவர்களின் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும் நினைவு படுத்துகிறான். (அதாவது,) எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோ, மேலும், எவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லையோ அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவு படுத்துகிறான்)” என்னும் (திருக் குர்ஆன் 04:127) வசனத்தை அல்லாஹ் அருளினான். மேலும், ‘இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும்…” என்று அல்லாஹ் கூறியிருப்பது, ‘அநாதை(ப் பெண்)களுடன் நீதியுடன் நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால்.” என்னும் (திருக்குர்ஆன் 04:03) இறைவசனத்தைக் குறிப்பதாகும். மேலும், 4:127ம் இறைவசனத்தில், ‘மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லையோ”என்று கூறியிருப்பது, உங்களில் ஒரு காப்பாளர் தன் பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண் ஒருத்தியை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும். (செல்வத்தில் குறைந்தவர்களாக இருக்கும் போது) அந்த (அநாதை)ப் பெண்களை மணந்து கொள்ள அவர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் ‘நீதியான முறையிலே தவிர மணந்து கொள்ளலாகாது’ என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

புஹாரி : 2494 உர்வா பின் ஜூபைர் (ரலி).

1897. ”(அவ்வநாதைகளின் சொத்துக்களுக்குக் காப்பாளராகப் பொறுப்பேற்றவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும்! அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்!” என்ற (திருக் குர்ஆன் 04:06) இறை வசனம், அநாதைகளை (நிர்வகித்து, அவர்களின் செல்வத்தை)ப் பராமரிக்கும் காப்பாளர்களின் விஷயத்தில் அருளப்பட்டது. அவர் ஏழையாக இருந்தால் நியாயமான முறையில் (தம் உழைப்பிற்குக் கூலியாக) அனாதைகளின் பொருளை உண்ணலாம்.

புஹாரி : 2212 ஆயிஷா (ரலி).

1898. ”ஒரு பெண், தன் கணவன் (தன்னை வெறுத்து) முகம் சுளிப்பான் என்றோ (தன்னைப்) புறக்கணிப்பான் என்றோ அஞ்சினால் கணவன் மனைவி இருவரும் (ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறில்லை” என்னும் (4:128) திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் தரும்போது ஆயிஷா (ரலி), ‘ஒரு மனிதன் தன் மனைவியிடம் தனக்கு மகிழ்வைத் தராத வயோதிகம் முதலியவற்றைக் கண்டு அவளைப் பிரிந்துவிட விரும்பும் நிலையில், அவள் ‘என்னை (உன் மணபந்தத்திலேயே) வைத்துக் கொள். (என் உரிமைகளில்) நீ விரும்பியதை எனக்குப் பங்கிட்டுத் தந்து விடு’ என்று சொல்வதை இது குறிக்கும்” என்று கூறிவிட்டு, ‘இருவரும் பரஸ்பரம் ஒத்துப் போய்விட்டார்கள் என்றால் தவறேதுமில்லை” என்று கூறினார்கள்.

புஹாரி : 2694 ஆயிஷா (ரலி).

1899. இது (திருக்குர்ஆன் 04:93 வது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டு விட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்” எனும் இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் அருளப்பட்டது. இதுதான் (இறை நம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் மாற்றி விடவில்லை” என்று கூறினார்கள்.

புஹாரி : 4590 ஸயீத் பின் ஜூபைர் (ரலி).

1900. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்” எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனத்தைப் பற்றியும், ‘மேலும், (கொலை செய்யக்கூடாது என) அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் அவர்கள் கொல்லமாட்டார்கள்” என்று தொடங்கி ‘பாவமன்னிப்புக் கோரி இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிபவர் தவிர” என்று முடியும் (திருக்குர்ஆன் 25:68-70) வசனங்கள் பற்றியும் (விளக்கம்) கேட்கப்பட்டது. நானே அன்னாரிடம் கேட்டேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), ‘இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 25:63-69) இறங்கியபோது (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்காவாசிகள், நாம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோம்; அல்லாஹ் தடைவிதித்த உயிர்களை நியாயமின்றிக் கொலை செய்தோம்; தீயசெயல்கள் புரிந்தோம். (எனவே, இனி நமக்கு மன்னிப்புக் கிடைக்காது போலும்)” என்று கூறிக் கொண்டனர். எனவே, அல்லாஹ் ‘அவர்களில், மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோரைத்தவிர. அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றி விடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான்” எனும் (திருக்குர்ஆன் 25:70 வது) வசனத்தை அருளினான்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 4765 ஸயீத் பின் ஜூபைர் (ரலி).

1901. ஒருவர் தன்னுடைய சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப்பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், ‘அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்று விட்டார்கள். அவரின் ஆட்டு மந்தையையும் எடுத்துக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான். இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவழியில் (அறப்போருக்காக) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறை நம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு ஸலாம் சொல்பவரிடம், நீ இறைநம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லாதீர்கள். (திருக்குர்ஆன் 04:94) (இங்கே ‘உலகப் பொருள்’ என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.

புஹாரி : 4591 இப்னு அப்பாஸ் (ரலி).

1902. அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது ‘உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று. மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். எனவே, வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!” (திருக்குர்ஆன் 02:189) என்ற இறைவசனம் அன்ஸாரிகளாகிய எங்களின் விஷயத்தில் இறங்கியது.

புஹாரி : 1803 அபூ இஸ்ஹாக் (ரலி).

1903. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ‘இந்த இணைவைப்பாளர்கள் யாரை (க்கடவுளர்களாக) அழைக்கின்றனரோ அவர்களே கூட தங்களின் (உண்மையான) இறைவனுக்கு அதிகம் நெருக்கமானவராய் ஆவது யார் என்பதற்காக அவனுடைய நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” எனும் (திருக்குர்ஆன் 17:57 வது வசனம் குறித்து விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்: மனிதர்களில் சிலர் ‘ஜின்’ இனத்தாரில் சிலரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்(டு அல்லாஹ்வை வழிபட்)டனர். (அப்படியிருந்தும்,) இந்த மனிதர்கள் தம் (இணைவைக்கும்) மார்க்கத்தையே (தொடர்ந்து) பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

புஹாரி :4714 இப்னு மஸ்ஊத் (ரலி).

1904. நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘அத்தவ்பா’ எனும் (9 வது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக் கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக் கூட விட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டு விட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள்” என்று கூறினார்கள். நான் அவர்களிடம் , ‘அல் அன்ஃபால்’ எனும் (8 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘பத்ருப்போர் குறித்து அது அருளப்பெற்றது” என்று பதிலளித்தார்கள். நான் ‘அல்ஹஷ்ர்’ எனும் (59 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘பனூநளீர் குலத்தார் குறித்து அருளப் பெற்றது” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 4882 இப்னு அப்பாஸ் (ரலி).

1905. (என் தந்தை) உமர் (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள் மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம் பழம், கோதுமை, வாற்கோதுமை மற்றும் தேன் ஆகியனவே அந்தப் பொருள்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் திரையிடக் கூடியதாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்து விட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு:

1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ, மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவரின் பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?

2. ‘கலாலா’ என்றால் என்ன?

3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்

புஹாரி : 5588 இப்னு உமர் (ரலி).

1906. குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா உபைதா இப்னு ஹாரிஸ் (ரலி) ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே ‘இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்” என்னும் (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம் அருளப்பட்டது.

புஹாரி : 3966 அபூதர் (ரலி).
அல்ஹம்துலில்லாஹ்! இறைவன் அருளால் இனிதே நிறைவுற்றது!!

One comment

  1. அஸ்ஸலாமுஅலைக்கும் நபி (ஸல்) அவர்களுடைய வரலாறும், ஸஹாபிய பெண்மணிகளுடைய வரலாறும் அனுப்பித் தரமுடியுமா முடிந்தால் உதவுங்களேன்
    வஸ்ஸலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *