Featured Posts

சொர்க்கத்திற்குத் தகுதியான முஸ்லிமான ஆன்மா!

71- அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், இவர் நரகவாசிகளில் ஒருவர், என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்த போது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து, இவர் நரகவாசிகளில் ஒருவர், என்று குறிப்பிட்டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்து விட்டார் என்று கூறப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர் நரகத்திற்கே செல்வார் என்று (மீண்டும்) கூறினார்கள். மக்களில் சிலர் (நபி(ஸல்) அவர்களின் இந்தச் சொல்லை) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது, அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை.ஆயினும்,அவர் கடும் காயத்திற்கு ஆளானார். இரவு வந்த போது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கபட்டது. அப்போது அவர்கள்,அல்லாஹ் மிகப்பெரியவன் . நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறுகிறேன் என்று கூறினார்கள். பிறகு பிலால்(ரலி) அவர்களுக்கு கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, முஸ்லிமான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும் அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகின்றான். என்று பொது அறிவிப்புச் செய்தார்கள்.

புகாரி-3062: அபூஹூரைரா(ரலி)

72- நபி(ஸல்) அவர்களும் இணைவைப்போரும் (கைபர் போர்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்று விட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்)போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர்,படையிலிருந்து விலகிப்போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர்,பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித்தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார்.(அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித்தோழர்கள்,இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தீரப் போரிடவில்லை என்று (வியந்து )கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அவரோ நரகவாசியாவார் என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் நான் அவருடன் இருக்கிறேன். (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு) என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்றபோதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார்.(ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி,அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன். என்று சொன்னார். நபி(ஸல்)அவர்கள், என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அவர் சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி, அவர் நரகவாசி என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்) உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்துவர) நான் அவருடன் போய் வருகிறேன் என்று கூறிவிட்டு,அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி வாளின் பிடிமுனையைத் தன் இரு மார்ப்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார், என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால்,அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார்.மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருமனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார் என்று சொன்னர்கள்.

புகாரி-2898: சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ(ரலி)

73- ஜூன்தப்(ரலி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை) அவர் காயமடைந்தார். அவரால் வலி பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ் என் அடியான் தன் விஷயத்தில் (அவசரப்பட்டு) என்னை முந்திக் கொண்டான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி (அதை அவன் நுழையத் தடை செய்யப்பட்ட இடமாக ஆக்கி) விட்டேன் என்று கூறினான்.

புகாரி-3463: ஜூன்துப் பின் அப்துல்லாஹ்(ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *