117- நபி (ஸல்) அவர்கள் (சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின் வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்பான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் அது நிரம்பியதைப் போன்று அவருக்குத் தோன்றும் உடனே அவர் திரும்பி வந்து என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன், என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள் என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்கும் தோன்றும். ஆகவே அவர் திரும்பி வந்து என் இறைவா! அது நிரம்பி இருக்கக் கண்டேன் என்று கூறுவார். அதற்கு அவன் நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள் ஏனெனில் உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு அல்லது உலகத்தைப் போன்று பத்து மடங்கு (இடம் சொர்க்கத்தில்)உனக்கு உண்டு, என்று சொல்வான். அதற்கு அவர் அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா? அல்லது என்னை நகைக்கின்றாயா? என்று கேட்பார். இதைக் கூறிய போது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன். அறிவிப்பாளர் ஒருவர் கூறுகிறார்: இவரே சொர்க்கவாசிகளில் குறைந்த அந்தஸ்து உடையவர் ஆவார் என்று கூறப்பட்டுள்ளது.
குறைந்த அந்தஸ்து உடைய சொர்க்கவாசி
புகாரி-6571: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி)