235- நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று ‘நபி (ஸல்) அவர்கள் நோயுற்றபோது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்! நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது ‘பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்’ என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம். அப்போது ‘பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்” என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம். அப்போது ‘பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்” என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை இறைத்தூதர் அவர்களே! அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றோம். அப்போது மக்கள் பள்ளிவாசலில் இஷாத் தொழுகைக்காக நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ஒருவரை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பி மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அம்மனிதர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து ‘நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களுக்குக் கட்டளையிட்டார்கள்’ என்றார்கள். அபூபக்ர் (ரலி) இளகிய உள்ளமுடையவர்களாக இருந்தார்கள். எனவே உமர் (ரலி) அவர்களிடம், ‘உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்றார்கள். அதற்கு, நீங்கள் தாம் தகுதியானவர்கள்’ என்று உமர் (ரலி) கூறிவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற அந்த நாள்களிலே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
பின்னர் நபி (ஸல்) அவர்களுக்குக் கொஞ்சம் சுகம் கிடைத்தபோது, அப்பாஸ் (ரலி) மற்றும் ஒருவரின் உதவியோடு லுஹர் தொழுகைக்காக வெளியே வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வருவதைக் கண்ட அபூபக்ர் (ரலி) தம் இடத்திலிருந்து பின் வாங்கினார்கள். அப்போது ‘பின் வாங்க வேண்டாம்’ என அவர்களுக்கு சைகை செய்தார்கள். தம்மை அழைத்து வந்த இருவரிடமும், ‘என்னை அபூபக்ரின் அருகில் அமர்த்துங்கள்’ எனக் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் உட்காரவும் வைத்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து அபூபக்ர் (ரலி) தொழுதார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து மக்கள் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள். நான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்ததைப் பற்றி ஆயிஷா (ரலி) எனக்கு அறிவித்ததை நான் உங்களுக்குக் கூறவா? என்று கேட்டேன். ‘அதற்கு சொல்லுங்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார். அப்போது ஆயிஷா (ரலி) சொன்னதை அறிவித்தேன். அதில் எதையும் அவர்கள் மறுக்கவில்லை என்றாலும், ‘அப்பாஸ் (ரலி) உடன் நபி (ஸல்) அவர்களை அழைத்துச் சென்ற இன்னொரு மனிதரின் பெயரை ஆயிஷா (ரலி) சொன்னார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை என்றேன். ‘அவர் தாம் அலீ (ரலி)’ எனக் கூறினார்கள்.
புகாரி : 687 ஆயிஷா (ரலி)
236- நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு அவர்களின் வேதனை அதிகரித்தபோது என் வீட்டில் (தங்கி) நோய்க்கான கவனிப்பையும் சிகிச்சையையும் பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கும்படி தம்முடைய மற்ற மனைவிமார்களிடம் கேட்டார்கள். அவர்களும் அனுமதி அளித்து விட்டனர். பின்னர் (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் தம் இரு கால்களும் பூமியில் இழுபட இரு மனிதர்களுக்கிடையே தொங்கிய வண்ணம் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே இருந்தார்கள். அறிவிப்பாளர். உபைதில்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட மனிதர் யாரென்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் தெரியாது என்று பதிலளித்தேன். அவர்கள் அந்த மனிதர் அலீ பின் அபீதாலிப் அவர்கள் தாம் என்று கூறினார்கள்.
புகாரி- 2588: ஆயிஷா (ரலி)
237- (மக்களுக்குத் தலைமை தாங்கித்) தொழுவிக்கும்படி (என் தந்தை) அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு ஏன் கட்டளையிட்டீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் வாதிட்டேன். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அவர்களின் அந்தஸ்தில் செயல்படும் ஒரு மனிதரை மக்கள் விரும்புவார்கள் என்று என் மனத்திற்கு ஒரு போதும்படவில்லை. மேலும் அவர்களின் அந்தஸ்தில் செயல்பட முன்வரும் எவரையும் மக்கள் ஒரு துர்க்குறியாகவே கருதுவார்கள் என்று தான் நான் எண்ணிவந்தேன். ஆகவே அபூபக்கர் (ரலி) அவர்களைவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விலக்கி விட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
புகாரி- 4445: ஆயிஷா (ரலி)
238- ஒரு தடவை நாங்கள் ஆயிஷா (ரலி) இடத்தில் தொழுகையை விடாமல் தொழுவது பற்றியும் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்குச் சில நாட்களுக்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் வந்த பொழுது பாங்கும் சொல்லப்பட்டது. அப்பொழுது மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூபக்ரிடம் சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அபூபக்ர் மென்மையான உள்ளமுடையவர். உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்த அவரால் முடியாது என்று சொல்லப் பட்டது. திரும்பவும் நபி (ஸல்) அவர்கள் முதலில் கூறியவாறே கூறினார்கள். திரும்பவும் அவர்களுக்கு அதே பதிலே சொல்லப்பட்டது. மூன்றாவது முறையும் அவ்வாறே நடந்தது. அப்போது நபி யூஸுபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்களைப் போன்று இருக்கிறீர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் சொல்லுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் மீன்டும் கூறினார்கள். அபூபக்ர் (ரலி) வெளியே வந்து தொழுகை நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமக்குச் சிறிது சுகம் கிடைத்ததை உணர்ந்த போது, இரண்டு ஸஹாபாக்களின் தோள்களின் மீது இரு கைகளையும் போட்டவாறு, கால்களைத் தரையில் கோடிட்டவாறு புறப்பட்டதை நான் பார்த்தேன். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) இமாமுடைய இடத்திலிருந்து பின்வாங்க முயன்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கையினால் உங்கள் இடத்திலேயே இருங்கள் என்று சைகை செய்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வரப்பட்டு அபூபக்ர் (ரலி)யின் பக்கத்தில் அமர்த்தப் பட்டார்கள் என்று கூறினார்.
புஹாரி-664: ஆயிஷா (ரலி)
239- நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது பிலால் (ரலி) வந்து தொழுகை பற்றி அறிவித்தார். மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூபக்ரிடம் கூறுங்கள் எனக் கூறினார்கள். அதற்கு, அபூபக்ர் உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால், அவர்கள் அழுவதன் காரணத்தினால் மக்களுக்குக் குர்ஆனை கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே உமர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும் என நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். உமருக்குக் கட்டளையிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறும்படி ஹப்ஸா (ரலி)இடமும் கூறினேன். அவர், நபி (ஸல்) அவர்களிடம் கூறிய போது நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) தோழிகள் போன்றவர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபக்ர் (ரலி) தொழுகையை துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள், தம் நோய் இலேசாகுவதை உணர்ந்து தரையில் கால்கள் இழுபட இரண்டு மனிதர்களுக்கு இடையே தொங்கிக் கொண்டு பள்ளிக்குச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் வருவதை உணர்ந்து அபூபக்ர் (ரலி) பின்வாங்க முயன்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கிச் சைகை செய்து விட்டு அபூபக்ரின் இடப் புறமாக அமர்ந்தார்கள். அபூபக்ர் (ரலி) நின்று தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள். அபூபக்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். மக்கள் அபூபக்ர் (ரலி)யைப் பின்பற்றித் தொழுதனர்.
புஹாரி-713: ஆயிஷா (ரலி)
240- நபி (ஸல்) அவர்களின் மரண நோயின் போது அபூபக்ர் (ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். திங்கட்கிழமை அன்று தொழுகையில் வரிசையாக நின்று தொழுதுக் கொண்டிருந்த போது, நபி (ஸல்) அவர்கள் நின்றவாறு தங்கள் அறையின் திரையை நீக்கி எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முகம் புத்தகத்தின் காகிதம் போன்று பிரகாசித்தது. பின்னர் அவர்கள் புன்னகை செய்து சிரித்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததனால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் காரணமாக நாங்கள் சோதிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சினோம். நபியைப் பார்த்த அபூபக்ர் (ரலி), நபியவர்கள் தொழுகைக்கு வருகிறார்கள் எனக் கருதித் தமக்குப் பின்னால் உள்ள வரிசையில் சேர்வதற்காகப் பின் வாங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்களுடைய தொழுகையைப் பூர்த்தி செய்யுங்கள் என்று சைகை செய்துவிட்டு அறையின் உள்ளே சென்று திரையைப் போட்டு விட்டார்கள். அன்றைய தினத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்.
புஹாரி-680: அனஸ் (ரலி)
241- நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களாக வெளியில் வரவில்லை. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் அபூபக்ர் (ரலி) தொழுகை நடத்துவதற்கு முன் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது அறையின் திரையை உயர்த்தி பார்த்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தோற்றமளித்த போது அவர்களின் முகத்தை விடவும் மகிழ்ச்சியான எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பார்த்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பார்த்துத் தொழுகை நடத்துமாறு தங்கள் கையினால் சைகை செய்து, திரையைப் போட்டு (விட்டு உள்ளே சென்று) விட்டார்கள். பின்னர் அவர்கள் மரணமடைந்தார்கள்.
புஹாரி-681: அனஸ் (ரலி)
242- நபி (ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அவர்களின் நோய் கடுமையான போது, அபூபக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள் என்றார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர் இளகிய மனதுடையவர், நீங்கள் நின்ற இடத்தில் அவர் நின்றால், அவரால் மக்களுக்குத் தொழுகை நடத்த முடியாது என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அபூபக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள் என்றார்கள். ஆயிஷா (ரலி) தாம் கூறியதை திரும்பவும் கூறினார்கள். அபூபக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்! நிச்சயமாகப் பெண்களாகிய நீங்கள் யூஸுஃப் நபியின் தோழிகளாக இருக்கிறீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபக்ரிடம் ஒருவர் வந்து (சொன்னார்). நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும் போது அபூபக்ர் (ரலி) (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்.
புஹாரி-678: அபூ மூஸா (ரலி)