243- அம்ர் பின் அவ்ப் குடும்பத்தாரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் சென்றிருந்த போது, அங்கு தொழுகையின் நேரம் வந்து விட்டது. அப்போது முஅத்தின், அபூபக்ர்(ரலி) இடம் சென்று, நான் இகாமத் சொல்லட்டுமா? நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அபூபக்ர்(ரலி) ஆம்! என்று கூறிவிட்டுத் தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுதுக் கொண்டிருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் வரிசைகளை விலக்கிக் கொண்டு முன் வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (இமாமுக்கு நினைவூட்டுவதற்காக) கை தட்டினார்கள். இமாமாக நின்ற அபூபக்ர்(ரலி) தம்முடைய தொழுகையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மக்கள் அதிகமாகக் கை தட்டிய போது திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நபி(ஸல்) அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள், அபூபக்ர்(ரலி)யைப் பார்த்து, உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள் என்று சைகை செய்தார்கள். தமக்கு நபி(ஸல்) அவர்கள் இந்த அனுமதியை வழங்கியதற்காக அபூபக்ர்(ரலி) தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். பின்னர் அபூபக்ர்(ரலி), பின் வாங்கி முன் வரிசையில் நின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும், அபூபக்ரே! நான் உங்களுக்கு கட்டளையிட்ட பின்னரும் நீங்கள் ஏன் உங்கள் இடத்தில் நிற்காமல் பின் வாங்கி விட்டீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அபூகுஹாபாவின் மகனான அபூபக்ர் அல்லாஹ்வுடைய தூதரின் முன் நின்று தொழுகை நடத்துவது சரியில்லை என அபூபக்ர்(ரலி) கூறினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து, நீங்கள் எதற்காக அதிகமாக கை தட்டினீர்கள்? ஒருவருக்கு அவருடைய சந்தேகம் ஏற்படுமானால் அவர் சுப்ஹானல்லாஹ் என்று கூறட்டும். அவ்வாறு தஸ்பீஹ் சொல்லும் போது சொன்னவர் பக்கம் (இமாம்) திரும்பிப் பார்க்க வேண்டும். கை தட்டுவது பெண்களுக்கு தான் என்று கூறினார்கள்.
இமாம் தொழுகைக்கு வரப்பிந்தினால்…
புஹாரி-684: ஸஹ்ல் பின் ஸஃது அஸ்ஸாயிதி (ரலி)