256. (நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம். எனும் (17:110ஆவது) இறைவசனம் (பின்வரும் சூழ்நிலையில்) அருளப்பெற்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுதுகொண்டு) இருந்தார்கள். (அவ்வாறு தோழர்களுடன் சேர்ந்து தொழும்போது) குரலை உயர்த்(திக் குர்ஆனை ஒ)துவார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய(இறை)வனையும் அதை (மக்கள் முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். ஆகவே உயர்ந்தோனாகிய அல்லாஹ் நீங்கள் உங்கள் தொழுகையில் இணைவைப்பாளர்களின் காதில் விழும் அளவிற்குக் குரலை உயர்த்தாதீர்கள் (அதற்காக உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்களுக்கே கேட்காதவாறு (ஒரேயடியாய்) குரலை தாழ்த்தியும் விடாதீர்கள். அவர்களுக்குக் கேட்டால் தான் உங்களிடமிருந்து அவர்கள் குர்ஆனைக் கற்பார்கள். ஆகவே இவ்விரண்டிற்கும் இடையே மிதமான போக்கைக் கையாளுங்கள் எனக் கட்டளையிட்டான்.
தொழுகையில் குரலை உயர்த்துதல் பற்றி..
புகாரி-7490: இப்னு அப்பாஸ் (ரலி)